குடல்வால் அழற்சி

Appendicitis [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

குடல்வால் அழற்சி என்றால் என்ன? குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல் வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பாகும். அது உங்கள் குழந்தையின் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் அமைந்திருக்கிறது. அதற்கு உடலில் அறியப்பட்ட செயற்பாடுகள் ஏதுமில்லை.

​​

குடல்வால் அழற்சிக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

உடலில் பெருங்குடல் மற்றும் குடல் முளை அமைவிடம் மற்றும் அடைப்புள்ள, வீக்கமடைந்த குடல் முளையின் சித்தரிப்பு
குடல்வால் அடைக்கப்பட்டு வீங்கும்போது குடல்வால் அழற்சி உண்டாகிறது.

குடல்வால் அழற்சி பின்வரும் அறிகுறிகளால் காண்பிக்கப்படும்:

  • தொப்புழைச் சுற்றி அல்லது வயிற்றின் வலதுகைப்பக்க அடிப்பாகத்தில், வலி; அந்தப் பகுதியை இலேசாக அழுத்தும்போது, ஆழமாக சுவாசிக்கும்போது, மற்றும் அசையும்போது வலி அதிகரிக்கும்
  • பசியின்மை
  • குமட்டுதல்
  • வாந்தி
  • காய்ச்சல்

குடல்வால் வெடித்தால், உங்கள் பிள்ளை, அடிவயிறு முழுவதிலும் தொடர்ச்சியான, கடும் வலியை உணருவான்.

காரணங்கள்

குடல்வால் அடைக்கப்படும்போது குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. குடல்வாலில் தொற்றுநோயும் ஏற்படலாம். அடைப்பு அல்லது தொற்றுநோய் குடல்வாலை வீங்கச் செய்யலாம்; அப்போது வலியை உண்டாகும். குடல்வால் வெடிப்பதற்கான ஆபத்தும் அங்கிருக்கிறது.

ஆபத்தான காரணிகள்

பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் குடல்வால் அழற்சிப் பாதிப்பு ஏற்படலாம். 2 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் இது அரிதாகச் சம்பவிக்கும். குடல்வால் அழற்சி, வளரும் இளமைப் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை மிகவும் பொதுவாகப் பாதிக்கும்.

சிக்கல்கள்

வீக்கமடைந்த அல்லது தொற்றுநோய் ஏற்பட்ட குடல்வால்களுக்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குடல்வால் வெடிக்கலாம். இது வயிற்றறையின் உட்புற உறையில் மரணத்தை விளைவிக்கக்கூடிய தொற்றுநோயை ஏற்படுத்தலாம்.

நீங்கள் மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

உங்கள் பிள்ளைக்கு கடுமையான அடிவயிற்றுவலி அல்லது விபரிக்கமுடியாத தொடர்ச்சியான காய்ச்சல் அல்லது உறுத்தல்கள் இருந்தால், அவனை மருத்துவரிடம் எடுத்துச் செல்லவேண்டும். குடல்வால் ஏற்கனவே வெடித்துவிட்டது என நீங்கள் சந்தேகித்தால், உங்கள் பிள்ளையை உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்.

குடல்வால் அழற்சியுள்ள உங்கள் பிள்ளைக்கு மருத்துவர் எப்படி உதவி செய்யலாம்

உங்கள் பிள்ளையின் மருத்துவர் உங்கள் பிள்ளையைப் பரிசோதிப்பார். குடல்வால் அழற்சி இருப்பதாகச் சந்தேகப்பட்டால், உங்கள் பிள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவான். நோயை உறுதிப்படுத்துவதற்காக, மருத்துவர் அல்லது தாதி, ஒரு நரம்பூடாக மருந்து செலுத்தும் ஊசி (IV), இரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் அல்லது சிடி ஸ்கான் செய்யும்படி கேட்பார். அதன்பின்னர் குடல்வாலை வெளியே எடுப்பதற்காக உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சைக்குட்படுவான். இந்த அறுவைச் சிகிச்சை குடல்வாலெடுப்பு என அழைக்கப்படும். இது ஒரு சாதாரண, எளிய செயற்பாடு.

மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து குடல்வாலெடுப்பு ஐ வாசிக்கவும்.

குடல்வால் வெடிக்காமல் மற்றும் சிக்கல்கள் ஏதுமில்லாவிட்டால், உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் 12 முதல் 24 மணி நேரங்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருப்பான். பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் பிள்ளை வீட்டுக்குப் போகலாம்:

  • அவனது இதயத்துடிப்பு வேகம், சுவாசித்தல், இரத்த அழுத்தம், மற்றும் உடல் வெப்ப நிலை சாதரணமானது.
  • வாந்தி எடுக்காது அவனால் உணவு மற்றும் பானங்களை அருந்த முடியும்.

உங்கள் பிள்ளையின் குடல்வால் வெடித்திருந்தால், அவனுக்கு அன்டிபையோடிக் மருந்துகள் எழுதிக் கொடுக்கப்படும். தொற்றுநோய் நிவாரணமடையும்வரை அவன் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை ஒரு சாதாரண உணவை உண்ணலாம். பெரும்பாலான பிள்ளைகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களின் பின்னர் தங்கள் வழமையான நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம்.

குடல்வால் அழற்சியுள்ள உங்கள் பிள்ளைக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்

உங்கள் பிள்ளை அனுபவிக்கும் வேதனையைப் பற்றி விபரிக்கும்படி அவனிடம் கேட்கவும். நீங்கள் குடல்வால் அழற்சி இருப்பதாகச் சந்தேகித்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

முக்கிய குறிப்புகள்

  • தொற்றுநோய் ஏற்பட்ட அல்லது அடைக்கப்பட்ட ஒரு குடல்வாலினால் குடல்வால் அழற்சி ஏற்படுகிறது
  • அறிகுறிகள் பெரும்பாலும் தொப்புளைச் சுற்றி அல்லது அடிவயிற்றின் வலதுகைப் பக்கத்தின் கீழ் அடிவயிற்று வலியை உட்படுத்தும்.
  • குடல்வால் அழற்சிக்கு உடனே சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குடல்வால் வெடிக்கலாம்.
  • உங்கள் பிள்ளைக்கு குடல்வால் அழற்சி இருப்பதாக சந்தேகித்தால் நீங்கள் அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.
  • 2 வயதுக்குக் கீழ்பட்ட பிள்ளைகளுக்கு மிகவும் அரிதாகவே குடல்வால் அழற்சி ஏற்படும்.
  • குடல்வால் அழற்சி இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், குடல்வாலை அகற்றுவதற்காக உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.
Last updated: ربيع الأول 19 1431