செஃபலெக்ஸின் (Cephalexin )

Cephalexin [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை செஃபலெக்ஸின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.

உங்கள் பிள்ளை செஃபலெக்ஸின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். செஃபலெக்ஸின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

செஃபலெக்ஸின் என்பது அன்டிபையோடிக் என்றழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள் பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளால் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன.

செஃபலெக்ஸின் மருந்து, கெஃப்லெக்ஸ்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். செஃபலெக்ஸின் மருந்து மாத்திரை மற்றும் திரவ வடிவத்தில் கிடைக்கும்.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு...

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:

  • செஃபலெக்ஸின் மருந்து, செஃபலொஸ்போரின் அன்டிபையோடிக் மருந்துகள், அல்லது பென்சிலின் அன்டிபையோடிக் மருந்துகளுக்கு ஒவ்வாமை

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

  • சிறுநீரக நோய்

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?

  • உங்கள் பிள்ளைக்கு செஃபலெக்ஸின் மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிடும் காலம் வரை, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளை செஃபலெக்ஸின் மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் கொடுக்கவும். ஆயினும், செஃபலெக்ஸின் மருந்து வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அதை உணவுடன் சேர்த்துக் கொடுப்பது அந்த அசெளகரியத்தைத் தடுப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
  • உங்கள் பிள்ளையால் மாத்திரைகளை விழுங்கமுடியாவிட்டால், மருந்து திரவ வடிவில் கிடைக்கும். உங்கள் பிள்ளை செஃபலெக்ஸின் திரவ மருந்தை உபயோகிப்பதாக இருந்தால், உங்கள் பிள்ளைக்கு ஒவ்வொரு வேளைமருந்து கொடுப்பதற்கு முன்னரும் போத்தலை நன்கு குலுக்கவும். ஒவ்வொரு வேளைமருந்தையும் மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி, அல்லது பீச்சாங்குழாயினால்(ஓரல் ஸ்ரிஞ்) அளக்கவும்.
  • ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில், ஒழுங்கான இடைவெளியில், உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்ட சரியான நேரத்தில் மருந்தைக் கொடுக்கவும். மருந்து கொடுக்கும் நேரத்தைத் தவறவிடாதிருப்பதற்காக, உங்களுக்கு வசதியான ஒரு நேரத்தைத் தெரிவு செய்யவும்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?

உங்கள் பிள்ளை முன்னேற்றம் காண்பதற்கு, இந்த மருந்தை உட்கொள்ளத்தொடங்கிப் பல நாட்கள் செல்லலாம். முழுப் பலனைக் காண்பதற்கு மேலும் அநேக நாட்கள் எடுக்கலாம்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை செஃபலெக்ஸின் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளில் சிலவற்றைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

  • வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், மலம் தண்ணீர் போல கழிதல் (வயிற்றுப்போக்கு), வாந்தி உட்பட வயிற்றில் அசௌகரியம்

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • முகம், உதடுகள், நாக்கு, அல்லது தொண்டையில் வீக்கம்
  • கடுமையான மயக்க உணர்வு அல்லது மயக்கமடைதல்
  • சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம், மூச்சு வாங்குதல் அல்லது மோசமான இருமல்
  • கடுமையான குமட்டல் அல்லது வாந்தி அல்லது கடுமையான நீர் போன்ற வயிற்றுப்போக்கு இரத்தம் அல்லது இரத்தக் கோடுகளைக் கொண்டிருக்க்கூடும்
  • அசாதாரண நசுக்குக் காயம் அல்லது இரத்தக் கசிவு
  • கடுமையான தோற்படை அல்லது தோலரிப்பு

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

செஃபலெக்ஸின் மருந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு அல்லது காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு ஒரு மோசமான தொற்றுநோய்க்கான அறிகுறியாகலாம். வயிற்றுப்போக்குக்கான எந்த மருந்தைக் கொடுப்பதற்கு முன்பாகவும் உங்கள் மருத்துவருடன் பேசவும்.

உங்கள் பிள்ளைக்கு நீரிழிவு நோய் இருந்தால் மற்றும் சிறுநீர் குளுக்கோஸ் பரிசோதனைகள் செய்தால், சில பரிசோதனைகள் பொய்யான அல்லது தவறான முடிவுகளைக் கொடுக்கலாம். எனவே, வேறு என்ன குளுக்கோஸ் பரிசோதனைகள் செய்யலாம் என்பதைப் பற்றி உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளை செஃபலெக்ஸின் மருந்தை உட்கொள்பவனா(ளா)க இருந்தால் வோர்ஃபரின் அல்லது ஹெபரின் போன்ற இரத்ததின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகள் சரியான முறையில் வேலை செய்யாது.

செஃபலெக்ஸின் மருந்தை உட்கொள்ளும்போது, மற்றும் அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொண்டு தீர்க்கப்பட்டபின் 7 நாட்களுக்கு, குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகள் சரியான முறையில் வேலை செய்யாது. உங்கள் பிள்ளை குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொள்வதாக இருந்தால், தயவு செய்து அவளின் மருத்துவருக்கு / மருந்தாளருக்குத் தெரிவிக்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

பரிந்துரைக்கப்படும் காலம் வரை நீடிக்க்கூடியவாறு போதியளவு செஃபலெக்ஸின் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

செஃபலெக்ஸின் மாத்திரகளை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் செஃபலெக்ஸின் மாத்திரைகளை வைக்கவேண்டாம்.

செஃபலெக்ஸின் திரவ மருந்தை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும். இந்த மருந்தை உறை நிலையில் வைக்கவேண்டாம். உபயோகிக்காத எந்தத் திரவத்தையும் 2 வாரங்களுக்குப் பின்னர் எறிந்து விடவும்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

செஃபலெக்ஸின் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான செஃபலெக்ஸின் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது செஃபலெக்ஸின் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. செஃபலெக்ஸின் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: ربيع الأول 17 1429