லமொட்ருஜீன் (Lamotrigine)

Lamotrigine [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை லமொட்ருஜீன் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். லமொட்ருஜீன் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும்.

உங்கள் பிள்ளை லமொட்ருஜீன் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். லமொட்ருஜீன் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

லமொட்ருஜீன் மருந்து சில வகையான வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக உபயோகிக்கப்படுகிறது.

லமொட்ருஜீன் மருந்து, லமிக்டல்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். லமொட்ருஜீன் மருந்து கப்சியூல், மெல்லும் வில்லை, மற்றும் திரவ வடிவங்களில் கிடைக்கும்.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு…

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:

  • லமொட்ருஜீன் மருந்துக்கு ஒவ்வாமை இருக்கிறது.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

  • இதய நோய்
  • சிறுநீரக நோய்
  • கல்லீரல் நோய்
  • தலசஸ்ஸீமியா ( இரத்தச் சிவப்பு அணுக்களின் ஒரு மரபுப் பிரச்சினை)

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?

  • உங்கள் பிள்ளைக்கு லமொட்ருஜீன் மருந்தை உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடியே சரியாகக் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளை லமொட்ருஜீன் மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் கொடுக்கலாம்.
  • உங்கள் பிள்ளை வழக்கமான மாத்திரைகளை உட்கொள்வதாக இருந்தால், மற்றும் அவற்றை முழுமையாக விழுங்கமுடியாவிட்டால், அவற்றை வெட்டி, அல்லது நசுக்கி மற்றும் புடிங் அல்லது அப்பிள்சோஸ் போன்ற மென்மையான உணவுகளின் மேல் தூவி விடலாம்.
  • உங்கள் பிள்ளை முழுமையாக உட்கொண்டுவிட்டதை நிச்சயப்படுத்த, மிகச் சிறிய அளவு மென்மையான உணவை உபயோகிக்கவும்.
  • உங்கள் பிள்ளை மெல்லக்கூடிய/ கரைக்கக்கூடிய மாத்திரைகளை உட்கொள்வதாயிருந்தால், அவைகள் முழுமையாக விழுங்கப்படவேண்டும், மெல்லப்பட வேண்டும், அல்லது மிகச் சிறிதளவு திரவத்தில் (தண்ணீர் அல்லது பழரசம்) கலக்கப்பட்டு உடனேயே விழுங்கப்படவேண்டும்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?

லமொட்ருஜீன் மருந்து அதன் முழுப்பலனை அடைவதற்கு பல வாரங்கள் செல்லலாம்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை லமொட்ருஜீன் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

  • தலைவலி
  • மயக்க உணர்வு
  • சோர்வு
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • நித்திரை செய்வதில் பிரச்சினை
  • வயிற்றுக் குழப்பம்
  • வாய் உலர்தல்

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பக்க விளைவுகளில் ஏதாவது இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரை அலுவலக நேரத்தில் அழைக்கவும்:

  • இரட்டைப் பார்வை அல்லது தெளிவற்ற பார்வை
  • அசாதாரணமான ஒழுங்கின்மை
  • மனோபாவம் அல்லது மன நிலையில் மாற்றங்கள்

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • தோற்படை
  • காய்ச்சல் மற்றும் ஃபுளூ போன்ற அறிகுறிகள்
  • வலிப்பு அதிகரிப்பு
  • சுவாசிப்பதில் சிரமம்LI>
  • முகம், வாய், கைகள், மற்றும் பாதங்களில் வீக்கம்
  • அசாதாரண இரத்தப்போக்கு அல்லது நசுக்குக் காயம்

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

லமொட்ருஜீன் மருந்து வேறு மருந்துகளுடன் இடைத்தாக்கம் புரியக்கூடும் மற்றும் உங்கள் மருத்துவர் லமொட்ருஜீன் மருந்தின் வேளைமருந்தை மாற்ற விரும்பக்கூடும். உங்கள் பிள்ளை பின்வரும் மருந்துகளையும் உட்கொள்வதானால் உங்கள் மருந்துவர் அல்லது மருந்தாளர் அதை அறிந்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்:

  • வல்ப்ரொயிக் அசிட் ( டெபகென்®, எப்பிவல்®)
  • ஃபினொபர்பிட்டல்
  • ஃபினைட்டொயின்(டிலன்டின்®)
  • பிரிமிடோன்(மைஸொலின்®)
  • கார்பமஸெபைன் (டெக்ரெடொல்®)
  • ஒக்ஸ்கார்பஸெபைன்(ட்ரிலெப்டல்®)

அத்துடன், உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

லமொட்ருஜீன்மருந்து உங்கள் பிள்ளையின் தோலில் சூரிய ஒளியினால் ஏற்படும் நிறமாற்றத்தை (சன்பெர்ன்) அதிகளவு ஏற்படுத்தலாம். சூரிய ஒளியினால் தோலில் ஏற்படும் நிறமாற்றத்தைத் தடுப்பதற்கு உதவியாகப் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • அதிகளவு நேரம் சூரிய ஓளி நேரடியாகப் படுவதைத் தவிர்க்கவும்.
  • வெளியே போகும்போது உங்கள் பிள்ளையின் தோலையும் தலையையும் துணி மற்றும் தொப்பியால் மூடவும்.
  • SPF 15 அல்லது அதற்கும் அதிகமாக உள்ள சன்பிளொக் கிறீமைப் பூசவும்
  • சன்லாம்ப் மற்றும் டானிங் படுக்கைகளைத் தவிர்க்கவும்.

உங்கள் பிள்ளையின் உடலில் ஏதாவது தோற்படைக்கான அறிகுறிகளை அவதானித்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசும் வரை லமொட்ருஜீன் மருந்தின் அடுத்த வேளைமருந்தை நிறுத்தி வைக்கவும். வேறு ஏதாவது காரணங்களுக்காக லமொட்ருஜீன் மருந்தைக் கொடுப்பதைத் திடீரென நிறுத்தவேண்டாம். ஏனென்றால் அது உங்கள் பிள்ளையின் வலிப்பு நோயை அதிகரிக்கலாம். மருத்துவர், அதை முற்றிலுமாக நிறுத்திவிடுவதற்கு முன்பாக மருந்தின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கவிரும்பலாம்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு லமொட்ருஜீன் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

லமொட்ருஜீன் மருந்தை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்க வேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

லமொட்ருஜீன் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான லமொட்ருஜீன் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது லமொட்ருஜீன் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. லமொட்ருஜீன் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: جمادى الأولى 17 1430