போர்ட்

Port [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

கீமோத்தெரபி, IV ஊட்டத்சத்து மருந்துகள், மற்றும் திரவங்கள் போன்ற மருந்துகளை உட்புகுத்த, போர்ட் கருவி மேலும் சௌகரியமாகவும், வசதியாகவும் இருக்கிறது.

போர்ட் கருவி என்றால் என்ன?

போர்ட் கருவி என்பது, நரம்புமூலமாக மருந்தை உட்செலுத்துவதற்காக, உடலினுள்ளே வைக்கப்படும் விசேஷமான ஒரு மெல்லிய குழாயாகும் (IV). இது, நீண்ட காலங்களுக்கு IV சிகிச்சை தேவைப்படும் பிள்ளைகளுக்கு உபயோகிக்கப்படுகிறது.

ஒரு போர்ட் கருவி 2 பாகங்களைக் கொண்டிருக்கிறது:

  • போர்ட் கருவி என்பது ஒரு மென்மையான சிலிகோன் மூடியைக்கொண்ட, உலோகத்தாலான ஒரு சிறிய அறையாகும். இது உங்கள் பிள்ளையின் தோலின் கீழ் கிடையாக வைக்கப்பட்டிருக்கும். தோலினூடாக ஒரு ஊசியை போர்ட் கருவியினுள் செலுத்துவதன்மூலம் உங்கள் பிள்ளை IV சிகிச்சையைப் பெற்றுக்கொள்வான்.
  • இரண்டாவது பாகம் ஒரு நீண்ட, மென்மையான, மெல்லிய, வளையக்கூடிய குழாயைக் கொண்டிருக்கும். இது கதீற்றர் குழாய் என்றழைக்கப்படும். கதீற்றர் குழாயின் ஒரு முனை போர்ட் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும்; மற்ற முனை இதயத்துக்குப் போகும் பெரிய நரம்புகள் ஒன்றினுள் உட்புகுத்தப்பட்டிருக்கும். போர்ட் கருவியும் கதீற்றர் குழாயும் இரத்த ஓட்டத்தினுள் மருந்து கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்கும்.
போர்ட் ஒரு பிள்ளையின் நெஞ்சிலுள்ள பெரிய நாளத்தினுள்ளும் தோலின் கீழும் அமைந்திருக்கும் சிலிக்கன் மேல்தட்டு, அறை மற்றும் சிறிய ஒடுங்கிய குழாயை அடையாளப்படுத்தல்
போர்ட் என்பது தோலுக்கு அடியில் செருகப்படும் ஒரு விசேஷித்த நரம்பு வழி (ஐவி) குழாயாகும். இரசாயன மருத்துவம் மற்றும் ஐவி மருந்து ஆகியவற்றை வழங்க, செளகரியமான மற்றும் வசதியான ஒரு வழியை இது வழங்குகிறது.

சில மருந்துகள் வழக்கமான IV குழாய்கள் மூலம் கொடுக்கப்படமுடியாது மற்றும் சில மருந்துகள் அடிக்கடி வலியை ஏற்படுத்தும் ஊசியினால் ஏற்றப்படவேண்டிய தேவையிருக்கிறது. கீமோத்தெரபி, IV ஊட்டச் சத்து மருந்துகள், மற்றும் திரவங்கள் போன்ற மருந்துகளை உட்புகுத்த, போர்ட் கருவி மேலும் சௌகரியமான, வசதியான வழியாக இருக்கிறது. இரத்த மாதிரிகள் எடுத்துக் கொள்ளவும் இது மேலுமான வசதியை அளிக்கிறது.

செய்ற்பாட்டுக்கு முன்னர்

செயற்பாட்டுக்கு முன்னர், போர்ட் கருவியை உட்செலுத்தும் மருத்துவர் உங்களைச் சந்தித்து , செயற்பாடு பற்றி விளக்கமளிப்பார்; உங்கள் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்; உங்கள் அனுமதியையும் பெற்றுக்கொள்வார்.

உங்கள் பிள்ளை ஒரு பொதுவான மயக்கமருந்து என்றழைக்கப்படும் “நித்திரைக்கான மருந்தை”ப் பெற்றுக்கொள்வான். எனவே, மயக்கமருந்து மருத்துவரை, அதாவது உங்கள் பிள்ளைக்கு நித்திரைக்கான மருந்து கொடுக்கும் ஒரு மருத்துவரையும் நீங்கள் சந்திப்பீர்கள்.

செயற்பாடு பற்றி கலந்து பேசுங்கள்

எந்த செயல்பாட்டின் முன்பும், என்ன சம்பவிக்கும் என்பது பற்றி உங்கள் பிள்ளையுடன் அவன் விளங்கிக் கொள்ளும் விதத்தில் அவனுடன் கலந்து பேசுவது முக்கியம். பிள்ளைகளுக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்திருக்கும்போது அவர்களுடைய கவலைகள் குறையும். நேர்மையாக இருக்கவேண்டியது முக்கியம். உங்கள் பிள்ளை செயற்பாட்டின்போது விழித்தெழமாட்டான்; ஆனால் அதன் பின்புதான் விழித்தெழுந்திருப்பான் என்பதை அவனுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளையின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திராவிட்டால், உங்கள் யூனிட்டிலுள்ள சைல்ட் லைஃப் ஸ்பெஷலிஸ்ட்டிடம் அதாவது பிள்ளை நல்வாழ்வு நிபுணரிடம் உதவி கேளுங்கள்.

இரத்தப் பரிசோதனைகள்

உங்கள் பிள்ளைக்கு, செயல்பாட்டுக்கு வருவதற்குமுன் இரத்தப் பரிசோதனகள் செய்யப்படவேண்டியிருக்கலாம். இது உங்கள் பிள்ளையின் பாதுகாப்புக்கானது. உங்கள் பிள்ளையின் மருத்துவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்.

உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் பானங்கள்

உங்கள் பிள்ளையின் வயிறு, மயக்க மருந்து கொடுக்கப்படும்போதும் அதன் பின்னரும் வெறுமையாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். வயிறு வெறுமையாயிருப்பது, வாந்தியெடுத்தல் மற்றும் மூச்சு திணறும் சந்தர்ப்பங்களையும் குறைக்கும்.

நித்திரை மருந்து (தூக்கக் கலக்கம் செய்யும் அல்லது பொதுவான மயக்க மருந்து) கொடுக்கப்படுவதற்குமுன் உங்கள் பிள்ளை எவற்றை உண்ணலாம் அல்லது பருகலாம்

செயற்பாட்டுக்கு முன்புநீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை
செயற்பாட்டிற்கு முந்திய நள்ளிரவு

திடமான உணவு எதுவும் கொடுக்கப்படக்கூடாது. இது சுவிங்கம் அல்லது கன்டியையும் உட்படுத்தும்

பால், ஓரஞ் ஜுஸ், மற்றும் தெளிந்த திரவங்கள் போன்ற பானங்களை உங்கள் பிள்ளை இன்னும் பருகலாம். தெளிந்த திரவங்கள் என்பது, நீங்கள் ஊடாகப் பார்க்கக்கூடிய, அப்பிள் ஜூஸ், ஜிஞ்ஜர் ஏல், அல்லது தண்ணீர் போன்ற திரவங்கள் ஆகும்.

உங்கள் பிள்ளை ஜெல்-ஒ அல்லது பொப்ஸிகிள்ஸ் என்பனவற்றையும் சாப்பிடலாம்.

6 மணி நேரங்கள்

பால், ஃபொர்ம்யூலா, அல்லது பால், ஓரஞ் ஜூஸ், மற்றும் கோலா போன்ற, நீங்கள் ஊடாகப் பார்க்க முடியாத பானங்களைக் கொடுக்கவேண்டாம்.

4 மணி நேரங்கள் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தவும்.
2 மணி நேரங்கள்

தெளிவான பானங்கள் கொடுப்பதை நிறுத்தவும். அதாவது அப்பிள் ஜுஸ், தண்ணீர், ஜிஞ்ஜர் ஏல், ஜெல்-ஒ, அல்லது பொப்ஸிக்கிள் கொடுப்பதை நிறுத்தவும்.

உணவு உண்பதையும் பானங்கள் பருகுவதையும் பற்றி உங்களுக்கு மேலுமான அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றை இங்கே எழுதவும்:

போர்ட் கருவி எப்படி உட்செலுத்தப்படுகிறது

ஒரு இன்டிரவென்ஷன் ஊடுகதிர்வீச்சியல் மருத்துவர் அல்லது அறுவை மருத்துவர் ஒருவர், இமேஜ் கைடட் தெரபி (IGT) பிரிவில் , அல்லது அறுவைச் சிகிச்சை செய்யும் அறையில் வைத்து உங்கள் பிள்ளைக்கு போர்ட் கருவியை உட்புகுத்துவார். கடந்தகாலங்களில் பாரம்பரிய அறுவைச் சிகிச்சையில் செய்யப்பட்ட செயற்பாடுகளை தற்போது IGT பிரிவு விசேஷ உபகரணங்கள் உபயோகித்துச் செய்கிறார்கள்.

செயற்பாட்டின்போது , இரத்த ஓட்டம் விரைவாக இருக்கும், இதயத்துக்கு சற்று மேலேயுள்ள ஒரு பெரிய நரம்பில் போர்ட் கருவி வைக்கப்படும். இந்த வைப்பு, மருந்துகள் மற்றும் நரம்பூடாகச் செலுத்தப்படும் திரவங்களை நன்கு கலக்க உதவும்.

கதீற்றர் குழாயின் மற்ற முனை, பொக்கெட் என்றழைக்கப்படும் ஒரு சிறிய இடைவெளி(வெட்டு) உண்டாக்கப்பட்ட இடம்வரை ஒரு குறுகிய தூரத்துக்கு தோலுக்கடியில் வைக்கப்படும். தோலுக்குக் கீழ் போர்ட் கருவி வைக்கப்பட்ட இடம் தான் பொக்கெட் எனப்படுகிறது. திசுக்களும் தோலும் பின்னர் தையலிடப்பட்டு மூடப்படும்.

அல்ட்டிராசவுண்ட் மற்றும் ஃபுலோரோஸ்கொபி (ஒரு விசேஷ ஊடுகதிர் வீச்சு ) போன்ற உபகரணங்கள் செயற்பாட்டின்போது உபயோகிக்கப்படலாம். செயற்பாட்டின்பின்னர், போர்ட் கருவி சரியான நிலையில் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள ஒரு மார்பு ஊடுகதிர்வீச்சுப் படம் எடுக்கப்படும்.

போர்ட் கருவியை உட்புகுத்த 1 முதல் 1.5 மணி நேரங்கள் வரை செல்லும்.

செயல்பாட்டின்போது, காத்திருக்கும் பகுதியில் காத்திருக்கும்படி நீங்கள் கேட்கப்படுவீர்கள். செயல்பாடுமுடிந்தபின் மற்றும் உங்கள் பிள்ளை விழிப்படையத் தொடங்கும்போது, நீங்கள், உங்கள் பிள்ளையைப் போய்ப் பார்க்கலாம். போர்ட் கருவி புகுத்தப்பட்டவுடன், மருத்துவர் அல்லது தாதி வெளியே வந்து செயல்பாட்டைப் பற்றி உங்களுடன் பேசுவார்.

செயற்பாட்டின் போதும் அதன் பின்னரும் கொடுக்கப்படவேண்டிய வலி நிவாரணி

உங்கள் பிள்ளைக்கு ஒரு பொது மயக்க மருந்து கொடுக்கப்படும், ஆகவே செயற்பாட்டின்போது அவன் செவிப்புலன் மந்தமாகிவிடும், மற்றும் அவன் எதனையும் உணரமாட்டான்.

செயற்பாட்டின்பின், முதல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு, சில பிள்ளைகள் கழுத்து அல்லது மார்புப் பகுதியில் இலேசான வலி அல்லது அசௌகரியத்தை உணருவார்கள். இது சம்பவித்தால், உங்கள் பிள்ளைக்கு வலி நிவாரணி மருந்து ஏதாவது கொடுக்க முடியுமா என்று உங்கள் தாதி அல்லது மருத்துவரைக் கேட்கவும்.

பிள்ளைகளின் கழுத்தில் பன்டேஜ் கட்டப்பட்டிருப்பதால் , அவர்கள் தங்களுக்கு கழுத்து விறைப்பு இருப்பதைப் போல உணருவார்கள். உங்கள் பிள்ளை தன் கழுத்தை வழக்கம்போல அசைப்பது நல்லது மற்றும் பாதுகாப்பானது.

உங்கள் பிள்ளை முழுமையாக நிவாரணமடைந்தவுடன், போர்ட் கருவியினால் எந்த வலியையோ அல்லது அசௌகரியத்தையோ உணரமாட்டான்.

செயற்பாட்டுக்குப் பின் எவற்றை எதிர்பார்க்கலாம்

உங்கள் பிள்ளையில் 2 பன்டேஜ் இருப்பதைக் காண்பீர்கள்; கழுத்தில் 1 சிறிய பன்டேஜும் மார்புப் பகுதியில் 1 பெரிய பன்டேஜும் இருக்கும். இந்த பன்டேஜுகள் கிருமியழிக்கப்பட்டதாயிருக்கும். அதாவது, போர்ட் கருவி உட்புகுத்தப்பட்ட பகுதியை முடிந்தளவுக்கு கிருமிகளற்றதாக வைத்திருப்பதற்காக அவை விசேஷமான முறையில் அணிவிக்கப்பட்டிருக்கும்.

கழுத்தில் போடப்பட்ட பன்டேஜ் , ஒரு துணியைப் போலிருக்கும். இது சில மணி நேரங்களில் அகற்றப்பட்டுவிடலாம். போர்ட் கருவி மற்றும் உள்வெட்டுக்காயத்தின் மேல் ஒரு பன்டேஜ் இருக்கும். இந்த மருந்துக் கட்டின் கீழ் சிறிதளவு இரத்தம் காணப்படுவது சாதாரணமானது. சிறிய, மெல்லிய, வெள்ளை பான்ட்-எய்ட் பட்டைகள் கழுத்திலும் மார்பில் வெட்டுக்கீறல் உள்ள இடங்களிலும் காணப்படும். இந்தப் பட்டைத் துண்டுகளை எடுத்துவிட வேண்டாம். 2 வாரங்களுக்குள் அவை தாமாகவே விழுந்துவிடும்.

வெட்டுக் கீறல் உள்ள பகுதியை சுத்தமாக, உலர்ந்ததாக, மற்றும் பன்டேஜால் மூடப்பட்டதாக, 5 முதல் 7 நாட்களுக்கு அல்லது புண் நன்கு ஆறும்வரை வைத்திருக்கவும். வெட்டுக் கீறல் காயங்கள் ஆறியதும், அதன்மேல் எந்த வித மருந்துக்கட்டும் போடத் தேவையில்லை அல்லது போர்ட் கருவி போடப்பட்ட இடத்தை மூடிவைக்கத் தேவையில்லை. ஏனென்றால் அது தோலின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

போர்ட் கருவி உட்செலுத்துவதிலுள்ள ஆபத்துக்கள்

எந்த செயல்பாடும் சில ஆபத்துக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு செயல்பாடும் உங்கள் பிள்ளைக்கு கிடைக்கப்போகும் நன்மைக்கு எதிராக , செயற்பாட்டால் வரக்கூடிய ஆபத்தை ஒப்பிட்டுப்பார்த்து தீர்ப்பு சொல்லப்படுகிறது. குறைந்த ஆபத்திலிருந்து அதிக ஆபத்துவரை, செயல்பாடுகள் வித்தியாசப்படுகின்றன. மரணம் கூட உட்படலாம்.

போர்ட் கருவி உட்புகுத்தல் சிகிச்சை பெரும்பாலும் மிகக் குறைந்த ஆபத்து உடையதாகக் கருதப்படுகிறது. செயற்பாட்டின் ஆபத்து, உங்கள் பிள்ளையின் நிலைமை, வயது மற்றும் பிள்ளையின் அளவு, மற்றும் அவளுக்கிருக்கும் வேறு பிரச்சினைகளைப் பொறுத்து வித்தியாசப்படும்.

போர்ட் கருவி உட்புகுத்தலிலுள்ள ஆபத்துக்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • போர்ட் கதீற்றர் குழாயை ஏற்றுக்கொள்ளக்கூடிய திறப்புள்ள நரம்பைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கலாம்.
  • இரத்தக் கசிவு அல்லது நசுக்கப்பட்ட காயம்.
  • தொற்றுநோய்
  • இரத்தம் கட்டி படுதல்
  • நுரையீரல் அல்லது நரம்புகளினுள் காற்று உட்புகுதல்
  • இரத்தக் குழாய் வெடித்தல்
  • அசாதாரண இதயத் துடிப்பு
  • மரணம் (மிக, மிக, அரிது)

போர்ட் கருவி எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது

உங்கள் பிள்ளைக்கு மருந்து தேவைப்படும்போது, தோலினூடாக போர்ட் கருவிக்குள் ஒரு ஊசி செலுத்தப்படுகிறது. இது போர்ட் கருவியை சென்றடைதல் என்று அழைக்கப்படுகிறது. போர்ட் கருவிக்கு மேலுள்ள ஊசி உட்புகுத்தப்படும் தோல் மரத்துப் போவதற்காக ஒரு உணர்ச்சி நீக்கி கிறீம் பூசப்படலாம்.

அநேக பிள்ளைகள் இந்தக் கிறீம், ஊசி குத்துவதால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவுவதாகக் கண்டிருக்கிறார்கள். நீங்கள் இந்தக் கிறீமை உபயோகிக்க விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் அதை வரவழைத்துத் தரும்படி கேட்கவும்.

தாதி உங்கள் பிள்ளையின் தோலை சுத்தப்படுத்தி, ஊசியைத் தோலினூடாக போர்ட் கருவியினுட் செலுத்துவார். ஊசி சுத்தமாகவும், அதன் நிலையில் இருப்பதற்காகவும் பன்டேஜால் மூடப்பட்டிருக்கும். தாதி மருந்துகளை ஊசி மூலமாக போர்ட் கருவிக்குட் செலுத்துவார்.

உங்கள் பிள்ளைக்கு மருந்துகள் உட்செலுத்தப்பட்டு முடிந்தவுடன், ஹெபரின் என்றழைக்கப்படும் மருந்து போர்ட் கருவியினுள் பாய்ச்சப்படும். ஹெபரின் மருந்து போர்ட் கருவி அடைபடுவதைத் தவிர்க்கும்; அதனால் நீங்கள் மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு முறையும் அது நன்றாக வேலை செய்யும்.

போர்ட் கருவை வெளியே விழுந்து விடாது

போர்ட் கருவி விழுந்துவிட அல்லது இழுக்கப்பட முடியாது. ஆயினும், ஊசி ,போர்ட் கருவியை சென்றடையும்போது தவறுதலாக இழுக்கப்பட்டு விடலாம். ஊசி ,பகுதியாக அல்லது முழுவதுமாக இழுக்கப்பட்டுவிட்டால், அது போர்ட் கருவி அடைக்கப்படக் காரணமாகலாம். இதனால், போர்ட் கருவியிலிருந்து மருந்துகள் அதைச் சுற்றியுள்ள தோலில் கசிந்துவிட்டால் ஒருவித தோல் அரிப்பு ஏற்படலாம். இதைத் தடுப்பதற்காக, போர்ட் கருவியின் ஊசி பன்டேஜால் மூடப்பட்டு, ஊசியின் குழாய் உங்கள் பிள்ளையின் உடலுடன் சேர்த்து வார்ப்பட்டையிட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வது முக்கியம்.

போர்ட் கருவி உட்செலுத்தப்பட்டபின் எவற்றை எதிர்பார்க்க வேண்டும்

பின்வருவனவற்றுள் எதையாவது நீங்கள் அவதானித்தால் உங்கள் சமுதாயப் பராமரிப்பு தாதி, மருத்துவமனையிலுள்ள வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவை அல்லது உங்கள் மருத்துவர் அல்லது மருத்துவமனைத் தாதியைத் தொடர்பு கொள்ளுங்கள்:

  • உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம் இருந்தால்
  • உங்கள் பிள்ளையின் போர்ட் கருவி அல்லது கழுத்தைச் சுற்றி இரத்தக் கசிவு, சிவந்திருத்தல், அல்லது வீக்கம் இருந்தால்
  • உங்கள் பிள்ளையின் போர்ட் கருவியில் கசிவு அல்லது நீர் வடிதல் இருந்தால்
  • உங்கள் பிள்ளையின் போர்ட் கருவிக்கு திரவத்தைப் பாய்ச்சுவதில் கஷ்டமிருந்தால் அல்லது பாய்ச்சவே முடியாதிருந்தால்
  • போர்ட் கருவியை உபயோகிக்கும் போது உங்கள் பிள்ளைக்கு வலி இருந்தால்

ஒவ்வொரு பிள்ளையின் நிலைமையும் வித்தியாசப்படும். எனவே, உங்கள் பிள்ளைக்கு எதாவது குறிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் இருக்கின்றனவா என்று நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கேட்கவேண்டும். இருந்தால், அவற்றைக் கீழே எழுதவும்:

 

போர்ட் கருவியைப் பராமாரித்தல்

உங்கள் பிள்ளை, போர்ட் கருவி உட்புகுத்தப்பட்டபின் நிவாரணமடைந்தவுடன், அதன்பின்பு வீட்டில் எந்த விசேஷ பராமாரிப்பும் தேவைப்படாது. ஊசி இருக்கவேண்டிய இடத்தில் இல்லாவிட்டால் போர்ட் கருவியுள்ள பகுதியை பன்டேஜால் மூடிவிடத் தேவையில்லை. நீண்ட காலங்களுக்கு உங்கள் பிள்ளைக்கு போர்ட் கருவியினூடாக மருந்து உட் செலுத்தவேண்டிய தேவை இல்லாவிட்டால், போர்ட் கருவியை ஊசி செலுத்தி ஒவ்வொரு 4 முதல் 6 வாரங்களுக்கு புதிய ஹெபரின் மருந்து பாய்ச்சிக் கழுவப்படவேண்டும்.இது போர்ட் கருவி அடைக்கப்படுவதைத் தடுக்கும். இது சில வேளைகளில் வீட்டில் செய்யப்படலாம் அல்லது மருத்துவமனையில் செய்யப்படலாம். இது உங்கள் மருத்துவர் அல்லது தாதியினால் ஏற்பாடு செய்யப்படும்.

நடவடிக்கைகள்

போர்ட் கருவி உட்செலுத்தப்பட்டபின் உங்கள் பிள்ளை பெரும்பாலான நடவடிக்கைகளில் திரும்பவும் ஈடுபடலாம். இது பாடசாலைக்கோ அல்லது பகல் நேர பராமரிப்பு நிலையத்துக்கு செல்வதையோ மற்றும் சைக்கிள் ஓட்டுதல் அல்லது டெனிஸ் போன்ற போட்டி விளையாட்டுக்களையும் மற்ற விளையாட்டுக்களையும் விளையாடுவதையும் உட்படுத்தும். உங்கள் பிள்ளை, போர்ட் கருவி செலுத்தப்பட்ட இடங்களில் மோதக்கூடிய முரட்டுத்தனமான விளையாட்டுக்களைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் , இது போர்ட் கருவியை சேதப்படுத்திவிடும்.

வெட்டுக் கீறல் காயங்கள் ஆறியவுடன், அங்கு ஊசி அதனிடத்தில் இல்லாததால்,உங்கள் பிள்ளை நீச்சல் மற்றும் தண்ணீர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஊசி அதனிடத்தில் இருக்கும் போது உங்கள் பிள்ளை நீச்சலடிக்கக்கூடாது; பன்டேஜ் உலர்ந்ததாக வைக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். போர்ட் ஊசி ஈரமானால், உங்கள் பிள்ளைக்கு தொற்றுநோய் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

எவ்வளவு காலத்துக்கு போர்ட் கருவி உள்ளே வைத்திருக்கப்படலாம்

ஒரு போர்ட் கருவியை பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு உள்ளே வைத்திருக்கலாம்.

போர்ட் கருவியை அகற்றுதல்

உங்களுக்கு போர்ட் கருவி இனி மேற்கொண்டு தேவைப்படாது என்று உங்கள் மருத்துவக் குழு உறுதியாக நம்பினால், அதை அகற்றிவிடுவதற்கு ஏற்பாடுகள் செய்வார்கள். பொது மயக்கமருந்தை உபயோகித்து அதை அகற்றிவிடுவார்கள். இந்தச் செயல்பாடு ஏறக்குறைய 1 மணி நேரம் நடைபெறும். இந்த செயற்பாட்டுக்காக,உணவு உண்பது பானங்கள் குடிப்பதில் கட்டுப்பாடு மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட சோதனைகளுக்கு தயாராதல் என்பன, போர்ட் கருவி உட் செலுத்தப்பட்ட நாளில் செய்யப்பட்டது போலவே செய்யப்படவேண்டும்.

உங்கள் பிள்ளையின் போர்ட் கருவி பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை

உங்கள் பிள்ளையின் போர்ட் கருவி பற்றிய சில விபரங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது முக்கியம். உங்களுக்கு பிரச்சினை இருந்து, நீங்கள் சமுதாயப் பராமரிப்பு தாதியை அல்லது வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவையை அழைக்க வேண்டியிருந்தால், உங்கள் பிள்ளையின் போர்ட் கருவி பற்றியும், பிரச்சினைகள் பற்றிய தகவல்களையும் தெரிந்திருப்பது , பின்வரும் தகவல்களை அவர்களுக்கு வழங்க உதவியாயிருக்கும். பின்வரும் தகவல்களைப் பூர்த்தி செய்யுங்கள்:

போர்ட் கருவி உட்புகுத்தப்பட்ட திகதி:

போர்ட் கருவியின் வகை (பொருத்தமான ஒன்றை வட்டமிடவும்):

  • ஒற்றைத் துவாரம்
  • இரட்டைத் துவாரம்

போர்ட் கருவி பின்வருவனவற்றிற்காக உபயோகிக்கப்பட்டது (பொருத்தமான எல்லாவற்றையும் வட்டமிடவும்):

  • குருதிப் பொருட்கள்
  • கீமோத்தெரப்பி
  • டி பி என்
  • மருந்துகள்
  • மற்றவை:

போர்ட் கருவி பற்றிய குறிப்புகள்

கேள்விகள் அல்லத கவலைகள்

உங்கள் பிள்ளையின் போர்ட் கருவி சம்பந்தமாக எதாவது கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், பின்வரும் நபர்களுள் ஒருவரை அழைக்கவும். எண்களை இங்கே எழுதவும்:

சமூகப் பராமரிப்பு தாதி:

வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவை:

உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதி:

மற்றவை

முக்கிய குறிப்புகள்

  • போர்ட் என்பது உடலின் உள்ளே நரம்புக்குள் வைக்கப்படுமொரு விசேஷ குழாயாகும் (IV). கதீற்றர் குழாயின் முனை கழுத்திலுள்ள ஒரு நரம்பினூடாகச் செலுத்தப்பட்டு இதயத்துக்கு சற்று மேலிருக்கும் பெரிய நரம்புக்குள் வைக்கப்படுகிறது.
  • போர்ட் கருவி, மேலும் சௌகரியமாக மருந்துக்களை உட்செலுத்தவும் இரத்த மாதிரிகளை வெளியே எடுக்கவும் உதவி செய்கிறது.
  • உங்கள் பிள்ளைக்கு ஒரு பொது மயக்க மருந்து கொடுக்கப்படும். எனவே, செயற்பாட்டின்போது அவன் செவிப்புலன் மந்தமாகிவிடும்; அவன் எதனையும் உணரமாட்டான்.
  • உங்கள் பிள்ளைக்கு போர்ட் கருவி செலுத்தப்பட்டு, நிவாரணமடைந்தபின், அவனுக்கு வீட்டில் செய்யப்படவேண்டிய விசேஷ பராமரிப்பு எதுவுமில்லை.
Last updated: رمضان 28 1431