உடல் வெப்பநிலையை அளவிடுதல்

Temperature taking [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒரு பிள்ளையின் அல்லது குழந்தையின் உடல் வெப்பநிலையை எப்படி அளவிடுவது என்பதைப் பற்றி இந்தப் பக்கம் விபரிக்கிறது.

பிள்ளைகளுக்குக் காய்ச்சல் இருக்கும்போது அவர்களைத் தொடும்போது பெரும்பாலும் அவர்களுடைய உடல் சூடாக இருக்கும். ஆனால், உங்களுடைய பிள்ளைக்குச் காய்ச்சல் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு, வெறுமனே உங்களுடைய பிள்ளையின் நெற்றியில் கை வைத்தால் மாத்திரம் போதாது. உங்களுடைய பிள்ளைக்குக் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்வதற்கு, உங்களுடைய பிள்ளையின் உடல் வெப்பநிலையை அளக்க ஒரு உடல் வெப்பமானியை உபயோகிக்கவும். இதைச் செய்வதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன.

உடல் வெப்பமானியின் வகைகள்

உங்களுடைய பிள்ளையின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு மிக எளிய வழி டிஜிடல் உடல் வெப்பமானியை உபயோகிப்பதாகும். இவை, பெரும்பாலான மருந்துக்கடைகளில் கிடைக்கும். கண்ணாடிக்குள் பாதரச வகை, காது (செவிப்பறைச் சவ்வு சார்ந்த) உடல் வெப்பமானிகள், அமைதிப்படுத்தும் வகை உடல் வெப்பமானிகள் உட்பட, வேறு வகையான உடல் வெப்பமானிகளும் இருக்கின்றன.

பெரும்பாலான கண்ணாடி உடல் வெப்பமானிகள் நச்சுத்தன்மையுள்ள பாதரசத்தைக் கொண்டிருக்கின்றன. பாதரசத்தைக் கொண்டிருக்கும் ஒரு உடல் வெப்பமானியை உபயோகிக்கவேண்டாம்.

உங்களுக்கு ஒரு கண்ணாடி உடல் வெப்பமானி மாத்திரம் தான் கிடைக்கும் எனின், மிகவும் விசேஷித்த கவனம் எடுக்கவும். உடல் வெப்பமானிகள் எவ்விதத்திலும் உடைந்திருந்தாலோ அல்லது சேதப்படுத்தப்பட்டிருந்தாலோ அதை உபயோகிக்கவேண்டாம். சேதமடையாத ஒரு கண்ணாடி உடல் வெப்பமானியும் கூட உங்களுடைய பிள்ளைக்கு ஆபத்தானதாக இருக்கலாம். உங்களுடைய பிள்ளை அந்த உடல் வெப்பமானியை கடித்து விடுவான்(ள்) என நீங்கள் கருதினால், வாய் வழியாக உடல் வெப்பநிலையை அளவிடுவதற்காக அதை உபயோகிக்கவேண்டாம்.

ஒரு பிள்ளையின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான நான்கு இடங்கள் பின்வருமாறு:

  • வாய்க்குள்
  • மலவாசலுக்குள்
  • அக்குளுக்குக் கீழ்
  • காதுக்குள்

மலவாசலூடாக அளவிடும் ஒரு உடல் வெப்பமானியை வாய்க்குள் வைக்கவேண்டாம் அல்லது வாய் வழியாக அளவிடும் ஒரு வெப்பமானியை மலவாசலுக்குள் வைக்கவேண்டாம். எப்போதும் எந்தவொரு உடல் வெப்பமானியையும் உபயோகிப்பதற்கு முன்னரும் உபயோகித்த பின்னரும் சோப்பினாலும் வெந்நீரினாலும் கழுவவும்.

வெப்பநிலையை அளவிடுவதற்கு மிகச் சிறந்த விதம் உங்களுடைய பிள்ளையின் வயதைச் சார்ந்து இருக்கிறது

ஒரு உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான பல்வேறு விதங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

புதிதாகப் பிறந்த குழந்தை தொடக்கம் 2 வயது வரையுள்ள பிள்ளைகள் வரை

ஒரு குழந்தையின் உடல்வெப்ப நிலையை அளவிடுவதற்கான அதிக பட்சத் துல்லியமான விதம் உடல் வெப்பமானியை அவனு(ளு)டைய மலவாசலினூடாக (மலவாசலின் உடல்வெப்பநிலை) உட்செலுத்துதல் ஆகும். இது சாத்தியமாகாவிட்டால், அக்குள் முறையை உபயோகிக்கவும்.

2 முதல் 5 வயது வரையுள்ள பிள்ளைகள்

2 வயது முதல் 5 வயதுவரையுள்ள நடை குழந்தைகளுக்கு, மலவாசல் மூலமாக உடல் வெப்பநிலையை அளவிடுவதுதான் அதிக பட்சத் துல்லியமானதாக இருக்கும். காது வழியாக அல்லது அக்குள் வழியாக உடல் வெப்பநிலைகளை அளவிடும்முறைகளையும் உபயோகிக்கலாம்.

5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள்

5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு, வாய் வழியாக உடல் வெப்பநிலையை அளவிடவும். காது வழியாக அல்லது அக்குள் வழியாக உடல் வெப்பநிலைகளை அளவிடும்முறைகளையும் உபயோகிக்கலாம்.

வாய் மூலமாக (ஓரல்) உடல் வெப்பநிலையை அளத்தல்

உடல் வெப்பமானியைத் தங்களுடைய நாக்கின் கீழாக வைத்திருக்கவும் அதைக் கடிக்காதிருக்கவும் போதிய வயதுள்ள பிள்ளைகளுக்கு வாய் வழியாக உடல் வெப்பநிலையை அளவிடுவது பயனளிக்கும். உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை உங்களுடைய பிள்ளை குளிரான அல்லது சூடான பானங்கள் எதையுமே அருந்தாதிருப்பதற்கு நிச்சயமாக இருக்கவும்.

  • துல்லியமான அளவைப் பெற, வெப்பமானியின் முனையை உங்கள் பிள்ளையின் நாக்கிற்குக் கீழ் கவனமாக வைக்கவும்.
  • வாய் வழி வெப்பநிலைவாய் வழி வெப்பநிலை
  • உதடுகளை வெப்பமானியைச் சுற்றி இறுகப் பற்றுவதன் மூலம் அதனை ஒரே இடத்தில் வைத்திருக்கும்படி பிள்ளையிடம் சொல்லவும். அவன் வெப்பமானியை கடிக்காமல் இருக்கும்படி பார்க்கவும். அவனால் மூக்கின் மூலமாக சுவாசிக்க முடியாவிட்டால், இந்தப் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள வேறு முறைகள் ஒன்றை உபயோகிக்கவும்.
  • நீங்கள் கண்ணாடி வெப்பமானியை உபயோகிப்பதானால், அதை மூன்று நிமிடங்கள் வரை அவனுடைய வாயில் விட்டுவைக்கவும். நீங்கள் டிஜிட்டல் வெப்பமானியை உபயோகிப்பதானால், பீப் என்ற சத்தம் கேட்கும்வரை அதை அவனுடைய வாயில் விட்டுவைக்கவும்.
  • வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை கவனமாக வாசிக்கவும்.
  • உடல் வெப்பமானியைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவும். முனையை சோப்பினாலும் வெந்நீரினாலும் (கொதிக்கும் நீரல்ல) கழுவி, அல்ககோல் உபயோகித்துத் துடைக்கவும். நன்கு உலர வைக்கவும்.
  • உங்கள் பிள்ளையின் உடல் வெப்பநிலை 37.5°C க்கு மேல் என்றால் அவனுக்கு காய்ச்சல் இருக்கிறது.

வாய் வழியான உடல் வெப்பநிலை 37.5°C(99.5°F) க்கு மேற்படுவது காய்ச்சல் எனப்படும்.

மலவாசல் (ரெக்டல்) மூலமாக உடல் வெப்பநிலையை அளவிடுதல்

குழந்தைகளுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் மலவாசல் முறையை உபயோகிக்கும்போது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். வளர்ந்த பிள்ளைகள் தங்களுடைய மலவாசலினூடாக எதையாவது உட்செலுத்தப்படுவதை எதிர்க்கலாம்.

  • ஒரு கண்ணாடி உடல் வெப்பமானி உபயோகிப்பதானால், அதன் மேல் முனையைப் பிடித்துக்கொண்டு, கோடு 37.2°C (99°F) க்குக் கீழ் இறங்கும் வரை நன்கு குலுக்கவும். நீங்கள் டிஜிடல் வெப்பமானியை உபயோகித்தால், அதை இயக்கத் தொடங்கவும்.
  • பிள்ளையின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு முன், அவள் அமைதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். கட்டில் அல்லது சோஃபா போன்ற செளகரியமான ஒரு இடத்தில் உங்கள் பிள்ளையை குப்புறப் படுக்கவைக்கவும்.
  • வெப்பமானியை உள்ளே செலுத்துவதற்கு முன்பு, அது சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தவும். சோப்பும் இளம் சூட்டு நீரும் கொண்டு அலசவும். பின்பு பெற்ரோலியம் ஜெலியை அதன் முனையில் பூசவும். இது உட்செலுத்துவதை இலகுவாக்கும்.
  • உங்களுடைய பிள்ளையின் மலவாசலினூடாக, உடல் வெப்பமானியின் 2 செமீ (1 அங்குலம்) வரை மென்மையாக உட்செலுத்தவும். அங்கு தடை ஏதாவது இருந்தால், உடல் வெப்பமானியை சிறிதளவு பின்னோக்கி இழுக்கவும். எதாவது தடையைத் தாண்டுமாறு உடல் வெப்பமானியை ஒருபோதும் பலமாக உள்ளே தள்ளவேண்டாம். இது குடலின் சுவர்களைச் சேதப்படுத்தக்கூடும்.
  • உடல் வெப்பமானி உள்ளே இருக்கும்போது, உங்களுடைய பிள்ளையை அசையாது வைத்திருக்கவும்.
  • ஒரு கண்ணாடி உடல் வெப்பமானியை உங்களுடைய பிள்ளையின் மலவாசலிலிருந்து வெளியே எடுப்பதற்கு முன்பு, 2 நிமிடங்கள் உள்ளே வைத்திருக்கவும். நீங்கள் டிஜிடல் உடல் வெப்பமானியை உபயோகித்தால், நீங்கள் சமிக்ஞையை (பெரும்பாலும் ஒரு பீப் ஒலி அல்லது தொடர்ச்சியான பீப் ஒலிகளை) கேட்கும் போது அதனை வெளியே எடுக்கவும்.
  • உடல் வெப்பநிலையின் அளவை வாசிக்கவும். நீங்கள் ஒரு கண்ணாடி உடல் வெப்பமானியை உபயோகித்தால், கோடு முடிவடையும் இடத்தைப் பார்க்கும் வரை உடல் வெப்பமானியை திருப்பவேண்டியிருக்கலாம்.
  • உடல் வெப்பமானியைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவும். முனையை சோப்பினாலும் வெந்நீரினாலும் (கொதிக்கும் நீரல்ல) கழுவி, அல்ககோல் உபயோகித்துத் துடைக்கவும். நன்கு உலர வைக்கவும்.

மலவாசல் வழியான உடல் வெப்பநிலை 38.0°C (100.4°F) க்கு மேற்படுவது காய்ச்சல் எனப்படும்.

அக்குள் வழியாக (அக்சிகள்) உடல் வெப்பநிலையை அளவிடுதல்

அக்குள் வழியாக உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு, உங்களுடைய பிள்ளையால் தனது கையை உடலுடன் சேர்த்துப் பிடித்து 4 அல்லது 5 நிமிடங்கள் அசைக்காது வைத்திருப்பது சாத்தியமாகவேண்டும்.

குழந்தையின் அக்குளில் வெப்பமானி ஒன்று வைக்கப்பட்ட நிலையில் அவர் நிமிர்ந்து படுத்திருத்தல்
  • ஒரு கண்ணாடி உடல் வெப்பமானி உபயோகிப்பதானால், அதன் மேல் முனையைப் பிடித்துக்கொண்டு கோடு 37.2°C (99°F) க்குக் கீழ் இறங்கும் வரை நன்கு குலுக்கவும். நீங்கள் டீஜிடல் வெப்பமானியை உபயோகித்தால், அதை இயக்கத் தொடங்கவும்.
  • உடல் வெப்பமானியை உங்களுடைய பிள்ளையின் உலர்ந்த அக்குளுக்குக் கீழே வைக்கவும். வெள்ளி முனை தோலைத் தொடவேண்டும்.
  • உடல் வெப்பமானியின் மேல் முனையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றக் கையால் உங்களுடைய பிள்ளையின் கையைப் பிடித்துக்கொள்ளவும்.
  • ஒரு கண்ணாடி உடல் வெப்பமானியை உபயோகித்தால், அதை அகற்றுவதற்கு முன்பாக 4 அல்லது 5 நிமிடங்கள் காத்திருக்கவும். நீங்கள் டிஜிடல் உடல் வெப்பமானியை உபயோகித்தால், நீங்கள் சமிக்ஞையை (பெரும்பாலும் ஒரு பீப் ஒலி அல்லது தொடர்ச்சியான பீப் ஒலிகளை) கேட்கும் வரை காத்திருக்கவும்.
  • உடல் வெப்பமானியைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவும். முனையை சோப்பினாலும் வெந்நீரினாலும் (கொதிக்கும் நீரல்ல) கழுவி, அல்ககோல் உபயோகித்துத் துடைக்கவும். நன்கு உலர வைக்கவும்.

அக்குள் வழியான உடல் வெப்பநிலை 37.3°C (99.1°F) க்கு மேற்படுவது காய்ச்சல் எனப்படும்.

காது (செவிப்பறைச் சவ்வு சார்ந்த) உடல் வெப்பமானியை உபயோகித்துக் காது வழியாக உடல் வெப்பநிலையை அளவிடும் முறை

காது (டிம்பானிக் தெர்மமீட்டர்) உடல் வெப்பமானிகள் ஒரு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்குச் சிபாரிசு செய்யப்படவில்லை. இந்த வெப்பமானிகள், உங்களுடைய பிள்ளையின் செவிப்பறையிலிருந்து உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு அகச்சிவப்பு ஒளியை உபயோகிக்கின்றன. உபயோகிப்பதற்கு முன்பு எப்போதும் உடல் வெப்பமானியின் முனையை சுத்தம் செய்து உற்பத்தியாளரின் அறிவுரைகளைக் கவனமாகப் பின்பற்றவும்.

  • காதை முன்னும் பின்னும் அசைத்து மென்மையாக இழுக்கவும். இது காதின் கால்வாயை நேராக்கி காதின் உட்பகுதியிலிருந்து செவிப்பறை வரை ஒரு தெளிவான பாதையை உருவாக்கும்.
  • காதின் கால்வாய் முழுமையாக மூடப்படும் வரை உடல் வெப்பமானியை மென்மையாக காதினுட்செலுத்தவும்.
  • ஒரு செக்கனுக்கு நசுக்கி பொத்தானைப் அழுத்திப் பிடிக்கவும்.
  • உடல் வெப்பமானியை வெளியே எடுத்து உடல் வெப்பநிலையை வாசிக்கவும்.

காது வழியான உடல் வெப்பநிலை 38.0°C (100.4°F) க்கு மேற்படுவது காய்ச்சல் எனப்படும்.

உடல் வெப்பமானியின் மற்ற வகைகள்

டிஜிட்டல் எலெக்ட்ரோனிக் பசிஃபையர் உடல் வெப்பமானிகள்

டிஜிடல் எலெக்ட்ரோனிக் பசிஃபையர் உடல் வெப்பமானிகள், சிறு பிள்ளைகளின் வாய் வழியாக உடல் வெப்பநிலையை மதிப்பீடு செய்ய உபயோகிக்கப்படலாம். ஒரு காய்ச்சலை உறுதிப்படுத்துவதற்காக வேறு முறையை உபயோகிக்கவும். உடல் வெப்பமானியை இயக்கி, உங்களுடைய பிள்ளையின் வாய்க்குள் வைத்து சமிக்ஞைக்காகக் காத்திருக்கவும்.

ஒரு டிஜிடல் பசிஃபையர் உடல் வெப்பமானியை உபயோகிக்கும் போது, உடல் வெப்பநிலை 37.5°C (99.5°F) க்கு மேற்படுவது காய்ச்சல் எனப்படும்.

உடல் வெப்பநிலை வார்ப்பட்டைகள்

திரவப் படிக வார்ப்பட்டைகளை நெற்றியில் வைப்பது, உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான துல்லியமான முறை அல்ல. ஒரு காய்ச்சலைக் கண்டுபிடிப்பதற்காக வேறு முறையை உபயோகிக்கவும்.

தொடுதல் மூலமாக

உங்களுடைய பிள்ளையின் நெற்றியை அல்லது கழுத்தைத் தொடுவது, காய்ச்சலைச் சோதிப்பதற்கான ஒரு நம்பத்தகுந்த முறை அல்ல. அவ்வாறு கண்டுபிடிப்பதற்கு ஒரு பிள்ளைக்கு மிக உயர்ந்த உடல் வெப்பநிலை இருக்கவேண்டும். எப்போதும் மேலே விளக்கப்பட்டிருக்கும் முறைகளை உபயோகித்து ஒரு உண்மையான அளவீட்டை எடுக்கவும்.

உங்களுடைய பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால், உங்களுடைய மருத்துவரை அல்லது வேறு உடல்நலப் பராமரிப்பளிப்பவரை அழைக்கவும்:

  • உங்களுடைய பிள்ளை 6 மாதத்துக்குக் குறைந்த வயதுடையவனா(ளா)க இருந்து வனு(ளு)க்கு ஒரு காய்ச்சல் இருக்கிறது.
  • 72 மணி நேரங்களுக்கு (மூன்று நாட்கள்) மேலாக ஒரு காய்ச்சல் இருக்கிறது
  • மிகவும் எரிச்சலும் கோபமும் அடைகிறான்(ள்)
  • அதிக தூக்க நிலையில் எந்தப் பிரதிபலிப்பையும் காண்பிக்காதிருக்கிறான்(ள்)
  • மூச்சிரைத்தல் அல்லது இருமல் இருக்கிறது
  • ஒரு காய்ச்சலும் ஒரு தோலரிப்பு அல்லது வேறு வழக்கத்துக்குமாறான அறிகுறிகளும் இருக்கின்றன.

முக்கிய குறிப்புகள்

  • உங்களுடையை பிள்ளைக்கு ஒரு காய்ச்சல் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அவனு(ளு)டைய நெற்றியில் கை வைத்துப் பார்ப்பது சரியான ஒரு முறையல்ல.
  • எவ்வாறு மிகச் சிறந்த முறையில் உங்களுடைய பிள்ளையின் உடல் வெப்பநிலையை அளவிடுவது என்பது அவனி(ளி)ன் வயதைச் சார்ந்தது.
  • எப்போதும், உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு முன்பும் பின்பும் உடல்வெப்பமானியைக் கழுவவும்
  • உங்களுடைய பிள்ளையின் உடல் வெப்பநிலை மிக உயர்ந்த அளவில் இருந்தால், அல்லது மூன்று நாட்களாக நீடிக்கும் உடல் வெப்பநிலை இருந்தால் அல்லது உங்களுடைய பிள்ளை 6 மாத வயதை விடக் குறைந்த வயதுடையவனா(ளா)க இருந்து அவனு(ளு)க்கு ஒரு காய்ச்சல் இருந்தால் உங்களுடைய மருத்துவரை அழைக்கவும்.
  • ஒரு பாதரசக் கண்ணாடி உடல் வெப்பமானியை உபயோகிக்கவேண்டாம்.

ஃபரனைட் (°F) செல்சியஸ்(°C) மாற்றுதல்

உடல் வெப்ப நிலைகள் பாகை செல்சியஸ் (°C) அல்லது பாகை ஃபரனைட்டில்(°F) அளவிடப்படுகின்றன. கீழேயுள்ள அட்டவணை செல்சியஸுக்கு சமனான ஃபரனைட் வெப்பநிலையைக் காண்பிக்கிறது:

செல்சியஸ்ஃபரனைட்
37°செ98.6°ஃப
37.2°செ99°ஃப
37.5°செ99.5°ஃப
37.8°செ100°ஃப
38°செ100.4°ஃப
38.3°செ101°ஃப
38.9°செ102°ஃப
39.5°செ103°ஃப
40°செ104°ஃப
40.6°செ105°ஃப
41.1°செ106°ஃப
41.7°செ107°ஃப
Last updated: جمادى الآخرة 06 1432