உயரம் மற்றும் எடை அளவீடுகள் உங்கள் குழந்தையின் ஆரோக்கிய நிலையை மதிப்பிடுவதில் முக்கிய கூறுகளாகும். ஒவ்வொரு வருகையிலும் உங்கள் குழந்தையின் தற்போதைய உயரம் மற்றும் எடை அளவீடுகளை அவர்களின் சுகாதார பராமரிப்பு வழங்குநர்களுக்கு கொடுக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த அளவீடுகள் பெரும்பாலும் மருந்து அளவுகள் அல்லது ஊட்டச்சத்து தேவைகளை கணக்கிட பயன்படுகிறது.
உயரத்தையும் எடையும் அளவிடத் தயாராதல்
உங்கள் குழந்தையின் உயரத்தையும் எடையையும் துல்லியமாக அளவிட, உங்களுக்கு பின்வரும் பொருட்கள் தேவைப்படும்:
- உங்கள் குழந்தை படுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரின் உயரத்தை அளவிட ஒரு நேரான சுவரை அல்லது கட்டிலில் தலையைச் சாய்த்துக்கொள்ளும் பகுதியை ஒட்டி இருக்கும் ஒரு தட்டையான, கடினமான மேற்பரப்பு; அல்லது
- உங்கள் குழந்தையின் உயரத்தை அவர் எழுந்து நிற்கும்போது அளவிட ஒரு தட்டையான, கம்பள விரிப்பு இல்லாத தளம் மற்றும் நேரான சுவர் (அடிப்பலகைகள் இல்லாமல் இருப்பது விரும்பப்படுகிறது).
- நேரான அளவுகோல்.
- அளவிடும் நாடா.
- ஒரு துல்லியமான அளவீட்டை உறுதிப்படுத்த, அளவிடும் நாடாவில் பூஜ்ஜியம் எங்குள்ளது என்பதைச் சரிபார்க்கவும். சில நாடாக்கள் பூஜ்ஜியத்தில் தொடங்குகின்றன, மற்றவை சிறிது தலைப்பு இடத்தைக் கொண்டுள்ளன.
- ஒரு பென்சில்.
- ஒரு ஒட்டுக் குறிப்பு. நீங்கள் சுவர் அல்லது கடினமான மேற்பரப்பில் குறிக்க விரும்பவில்லை என்றால் இது விருப்பத்தேர்வானது.
- டிஜிட்டல் எடையிடும் அளவுகோல்.
உயரத்தை அளவிடுதல்
உங்கள் குழந்தைக்கு இரண்டு வயதுக்குக் கீழ் இருந்தால், அவரது உயரத்தை அளவிடுதல்
உங்கள் குழந்தை ஒரு கைக்குழந்தை அல்லது இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தை எனில், அவரது உயரத்தை அவர் படுத்திருக்கும் வேளையில் அளவிட வேண்டும். இது உங்கள் குழந்தை படுத்திருக்கும் போது அவரது தலையின் மேலிருந்து உள்ளங்கால்கள் (குதிகால்) வரையிலான தூரத்தின் அளவீடாகும். இந்த அளவீடு இரண்டு பராமரிப்பாளர்களின் உதவியுடன் எடுப்பதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் குழந்தை படுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது உயரத்தை வீட்டிலேயே துல்லியமாக அளவிடுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:
- ஒரு தட்டையான, உறுதியான மேற்பரப்பில் உங்கள் குழந்தையை மல்லார்ந்து படுக்க வையுங்கள். உங்கள் குழந்தை டயப்பர் அணிந்திருக்கலாம், ஆனால் அவரது பருமனான ஆடைகளை நீங்கள் அகற்ற வேண்டும். உங்கள் குழந்தையின் தலையின் மேற்பகுதி நேரடியாக ஒரு தட்டையான சுவரை அல்லது கட்டிலில் தலையைச் சாய்த்துக்கொள்ளும் பகுதியை ஒட்டி இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
- அளவிடுவதற்கு இரண்டு பராமரிப்பாளர்கள் உடனிருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் உயரத்தை துல்லியமாக அளவிட இரண்டு பேர் தேவை; ஒருவர் உங்கள் குழந்தையின் தலையை நேராகவும், சுவரை ஒட்டியும் பிடித்துக்கொள்ள வேண்டும், மற்றொருவர் உங்கள் குழந்தையின் கால்களை முழுமையாக நீட்டச் செய்ய வேண்டும்.
- உங்கள் குழந்தையின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் தட்டையான மேற்பரப்பில் அளவிடும் நாடாவை வைக்கவும். அளவிடும் நாடாவை படுக்கை மேற்பரப்பில் வைத்து அளவிடுவது எளிதானதாக இருக்கும்.
- உங்கள் குழந்தையின் தலையின் மேலிருந்து அவரது உள்ளங்கால்கள் (குதிகால்) வரையிலான தூரத்தை அளவிடவும்.
- அருகாமையில் உள்ள 0.1 செமீ-க்கு உயரத்தை அளவிட்டுப் பதிவு செய்யவும்.
குறிப்பு: படுத்திருக்கும் வேளையில் இருக்கும் உயரத்தின் அளவிற்கும் நிற்கும் வேளையில் இருக்கும் உயரத்தின் அளவிற்கும் 2.5 செமீ வேறுபாடு இருக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு இரண்டு வயது அல்லது அதற்கு மேல் இருந்தால், அவரது உயரத்தை அளவிடுதல்
உங்கள் குழந்தைக்கு இரண்டு வயது அல்லது அதற்கு மேல் இருந்தால் மற்றும் அவரால் ஒரு சுவரில் சாய்ந்து சரியான நிமிர்ந்த தோரணையில் அசையாமல் நிற்க முடியும் என்றால், அவரை நின்ற நிலையில் அவரது உயரத்தை அளவிடுவதன் மூலம் அவரது உயரத்தைத் தீர்மானிக்க வேண்டும்.
உங்கள் குழந்தை நின்று கொண்டிருக்கும் வேளையில் அவரது உயரத்தை வீட்டிலேயே துல்லியமாக அளவிடுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:
- உங்கள் குழந்தையை ஒரு தட்டையான, கம்பள விரிப்பு இல்லாத தரையில் கால்களை ஒன்றுசேர்த்து நன்றாகப் படிய வைத்து, ஒரு செங்குத்தான சுவரில் சாய்ந்து நிற்க வையுங்கள். அவரது தலையின் பின்புறம், தோள்பட்டை எலும்புகள், பிட்டங்கள் மற்றும் குதிகால்கள் சுவரில் சாய்ந்திருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த உடல் வடிவத்தைப் பொறுத்து, எல்லா புள்ளிகளும் சுவரைத் தொடாமல் இருக்கலாம்.
- உங்கள் குழந்தையின் கால்கள் நேராகவும், கரங்கள் அவரது பக்கவாட்டுப் பகுதிகளில் இருப்பதையும், அவரது தோள்கள் ஒரே மட்டமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை முடிந்தவரை அசையாமல் நிற்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- உங்கள் குழந்தை முன்னோக்கி நேராகப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
- உங்கள் குழந்தையின் தலையின் மீது அளவுகோலை வைக்கவும் (மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்).
- உங்கள் கண்களை அளவுகோலின் அதே மட்டத்தில் வைத்திருங்கள்.
- அளவுகோலின் அடிப்பகுதி சுவரைச் சந்திக்கும் இடத்தில் குறிக்கவும். தரையின் அடிப்பகுதியில் இருந்து சுவரில் குறிக்கப்பட்ட அளவீடு வரை அளவிடுவதற்கு ஒரு அளவீட்டு நாடாவைப் பயன்படுத்தவும்.
- அருகாமையில் உள்ள 0.1 செமீ-க்கு உயரத்தை அளவிட்டுப் பதிவு செய்யவும்.
பயனுள்ள குறிப்புகள்
- அவரது காலணிகள், காலுறைகள், பருமனான ஆடை மற்றும் தலையில் அணியும் உபகரணங்களை அகற்றவும்.
- உங்கள் குழந்தையின் தலைமுடி படிய சீவப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (எ.கா., போனிடெயில், பன்ஸ் போன்ற பாணிகள் கூடாது).
- சுவர் அல்லது கடினமான மேற்பரப்புக்குப் பதிலாக, குறிப்பதற்கு ஒரு ஒட்டும் குறிப்பைப் பயன்படுத்தவும்.
- எல்லா அளவீடுகளும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த குறைந்தது இரண்டு முறை அளவிடவும்.
- நீங்கள் சென்டிமீட்டரில் அளவிடுகிறீர்களா அல்லது அங்குலங்களில் அளவிடுகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.
எடையை அளவிடுதல்
வீட்டில் துல்லியமாக எடையை அளவிடுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:
- டிஜிட்டல் அளவுகோலைப் பயன்படுத்தவும். சுருள்வில்-ஏற்றப்பட்ட குளியலறை அளவுகோல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கம்பள விரிப்பின் மீது அல்லாமல் உறுதியான தரையின் மீது அளவுகோலை வைக்கவும்.
- உங்கள் குழந்தையின் காலணிகள் மற்றும் கனமான ஆடைகளை அகற்றவும்.
- உங்கள் குழந்தை அளவுகோலின் மையத்தில் முடிந்தவரை அசையாமல் நிற்க/படுக்க வைக்கவும்.
- உங்கள் குழந்தையின் எடையை அருகாமையிலுள்ள தசம பின்னத்திற்கு (எ.கா., 0.1 கிகி, 0.1 அவுன்ஸ், 0.1 பவுண்டு) முழுமையாக்கிப் பதிவு செய்யுங்கள்.
உதவிக் குறிப்புகள்
- உங்கள் குழந்தை மிகவும் இளையவராக இருந்தால் அல்லது அளவுகோலின் மீது உதவியின்றி நிற்க முடியாதவராக இருந்தால், நீங்கள் முதலில் உங்கள் எடையைத் தனியாக அளவிட்டு, பின்னர் உங்கள் குழந்தையை உங்களுடன் வைத்துக்கொண்டு எடையை அளவிடவும். எடை வித்தியாசத்தை அறிய, உங்களின் கூட்டிணைந்த எடையிலிருந்து உங்களின் தனிப்பட்ட எடையை நீங்கள் கழிக்கலாம்.
- உதாரணமாக: பராமரிப்பாளர் மற்றும் குழந்தை இருவரின் எடை - பராமரிப்பாளரின் எடை = குழந்தையின் எடை மட்டும்
- எல்லா அளவீடுகளும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த குறைந்தது இரண்டு முறை அளவிடவும்.
- நீங்கள் பவுண்டுகளில் அளவிடுகிறீர்களா அல்லது கிலோகிராம்களில் அளவிடுகிறீர்களா என்பதை சரிபார்க்கவும்.
மேற்கோள்கள்
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC). குழந்தைகளின் உயரத்தையும் எடையையும் வீட்டிலேயே துல்லியமாக அளவிடுதல். இங்கிருந்து பெறப்பட்டது: https://www.cdc.gov/healthyweight/assessing/bmi/childrens_bmi/measuring_children.html