காற்றுக்குழல் அழற்சி (கிரப்)

Croup [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளை காற்றுக் குழல் அழற்சி என்பது குழந்தை சுவாசிக்கும் போது சப்தத்தை ஏற்படுத்தக்கூடிய காற்றுக்குழாய் எரிதலை விளைவிக்கும் ஒரு வைரஸ் தொற்றுநோய்.

காற்றுக் குழல் அழற்சி (கிரப்) என்பது என்ன?

காற்றுக்குழல் அழற்சி என்பது வைரஸால் ஏற்படுத்தப்படும் ஒரு பொதுவான சிறுபிராய சுகவீனமாகும். இந்த வைரஸ் குரல் பெட்டி மற்றும் மூச்சுப்பெருங்குழாய் உட்பட்ட மேல் காற்றுக்குழாய் வழிகளை வீங்கச் செய்யும்.

வீக்கமானது உங்கள் பிள்ளையின் குரலில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு சுவாசிப்பதையும் சிரமமாக்கும். குழந்தைகளினதும், இளம் பிள்ளைகளினதும், மூச்சுக் குழாய்கள் சிறியதாக இருப்பதால் இது அவர்களில்தான் விசேஷமாக ஏற்படும் சாத்தியமிருக்கின்றது.

மூக்கழற்சி (கிரப்)குரல் நாண்கள் மற்றும் குரல்வளையுடனான காற்றுக்குழல் மற்றும் வீக்கமடைந்த குரல் நாண்களுடனான குரல்வளையும் அவற்றைச் சூழவுள்ள கட்டமைப்புகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன
குரூப் அல்லது காற்றுக்குழல் அழற்சி என்பது, குரனாண், குரல்வளை (குரற்பெட்டி), மூச்சுப் பெருங்குழாய் ஆகியவற்றை தாக்கும் நோய்தொற்றாகும். இது குரனாண் மற்றும் காற்றுக்குழாயின் வீக்கத்திற்கு வழிநடத்தும்.

காற்றுக்குழல் அழற்சியின் அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • கடுமையான “குரைப்பது” போன்ற இருமல்
  • சுவாசிக்கும்போது சத்தம் (ஸ்ரைடர்)
  • சுவாசிப்பதில் சிரமம்
  • கரகரப்பான குரல்
  • தொண்டையில் சிறிது வலி
  • மூக்கோட்டம் அல்லது மூக்கடைப்பு
  • காய்ச்சல்

ஸ்ரைடர் என்பது குறுகிப்போன காற்றுக் குழாய் வழியாக சுவாசிக்கும்போது ஏற்படும் ஒரு உயர்சுருதிச் சத்தமாகும். காற்றுக் குழாய் அழற்சி கடுமையற்றதாக இருக்கும்போது உங்கள் பிள்ளை அழும்போது அல்லது இருமும்போது மட்டுமே இச் சத்தம் கேட்கும். காற்றுக் குழாய் அழற்சி மோசமடைகையில், இளாப்பாறி இருக்கையில் அல்லது நித்திரை கொள்ளுகையிலும்கூட உங்கள் பிள்ளை சுவாசிக்கும்போது சத்தம்வருவதோடு சுவாசிக்கவும் சிரமப்படலாம்.

காற்றுக் குழல் அழற்சி வழக்கமாக 1 வாரம் வரை நீடிக்கலாம்

காற்றுக் குழல் அழற்சியை ஏற்படுத்தும் வைரஸுகள் வழக்கமாக 1 வாரம் வரை நீடிக்கலாம். குரைக்கும் இருமலும் சுவாசிக்கும்போது சத்தமும், வழக்கமாக முதல் 2 அல்லது 3 நாட்களுக்கும், எப்போதும் இரவிலும் மோசமாக இருக்கும்.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

அநேகமான பிள்ளைகளுக்கு, காற்றுக் குழல் அழற்சியை வீட்டில் சமாளிக்கக்கூடிய ஒரு சிறிய சுகவீனாமாகும். உங்கள் பிள்ளை நலமாக உணர உதவுவதற்கு சில வழிகள் இதோ:

குளிர் நீராவி

சுவாசிக்கும்போது சத்தத்தை அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் காற்றுக் குழாய்களில் உள்ள வீக்கத்தைக் குறைக்க குளிர்ந்த, ஈரப்பதமான காற்று உதவக்கூடும். ஒரு குளிர் நீராவி சாதனம் அதாவது கூல் மிஸ்ட் வெப்பரைசர் அருகில உங்கள் பிள்ளையை வைப்பது மிகப்பொருத்தமானது. உங்களிடம் கூல் மிஸ்ட் வெப்பரைசர் இல்லையென்றால், பிள்ளையின் அறையில் ஒரு சாதாரண ஈரப்பதமூட்டி (ஹியூமிடிஃபையர்) இருப்பதும் உதவிநிறைந்ததாக இருக்கலாம். மாரி காலத்தில் பிள்ளையின் படுக்கையறை ஜன்னல்களை கொஞ்சம் குளிர்காற்று உள் வரக்கூடியதாக திறந்து வைக்கலாம் அல்லது இரவின் குளிர்ந்த காற்றை சுவாசிப்பதற்காக உங்கள் பிள்ளையை சிறிது நேரம் வெளியே அழைத்துச் செல்லலாம்.

நீராவி நிறைந்த குளியலறை

நீங்கள் குளியலறையின் கதவுகளை மூடிக்கொண்டு சூடான நீரை ஷவர்மூலம் ஓடவிட்டு குளியலறையை நீராவியால் நிரப்ப முயற்சி செய்யலாம். நீராவி நிறைந்த குளியலறையில் குறைந்தது 10 நிமிடங்களுக்காவது உங்கள் பிள்ளையோடு அமர்ந்திருங்கள்.

காய்ச்சல் மற்றும் வலி மருந்துகள்

காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க அசெட்டமினோஃபென் (டைலெனோல் அல்லது டெம்ப்ரா) அல்லது ஐபியூபுரோஃபென் (மோட்ரின் அல்லது அட்வில்) உபயோகிக்கலாம். ASA ( அசெடில்சாலிசிலிக் அசிட் அல்லது ஆஸ்ப்ரின்) உங்கள் பிள்ளைக்கு கொடுக்கவே வேண்டாம்.

உங்கள் பிள்ளையின் இருமலுக்கு உதவுதல்

இருமல், காற்றுக் குழல் அழற்சியின் ஒரு அறிகுறியாகும். இருமலை விரைவாகப் போகச் செய்வதற்கு உங்களால் செய்யக்கூடிய எதுவுமே இல்லை. வைரஸ் அதன் ஓட்டத்தை ஓடி முடித்தபின் இருமல் முன்னேற்றமடையும்.

இருந்தபோதிலும், காற்றுக் குழல் அழற்சியை ஏற்படுத்தும் வைரஸுகள் ஆஸ்துமா இருக்கும் பிள்ளைகளில் மூச்சிரைப்பைத் தூண்டுவதோடு சிலவேளைகளில் நெஞ்சிலும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளையின் இருமல் கடுமையாகக் காணப்பட்டால் அல்லது பிள்ளை நன்கு இலகுவாக சுவாசிப்பதற்கு குளிர் நீராவி உதவவில்லை என்றால் உங்கள் பிள்ளையை மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

மருந்துக்குறிப்பில்லாத மற்றும் மருந்துக்குறிப்புள்ள மருந்துகள் வழக்கமாக பிள்ளைகளுக்கு உதவுவதில்லை. பெரும்பாலான இருமல் மருந்துகள் பொதுவாக பாதுகாப்பானவையாக இருந்தாலும்கூட அவை தூக்கம் அல்லது தலைச் சுற்று போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அவை அரிதான ஆனால் தீவிரமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். பிள்ளைக்கு இருமல் மருந்துகளை கொடுப்பதற்கு முன், விசேஷமாக உங்கள் பிள்ளை வேறு மருந்துகளை எடுப்பதாக அல்லது வேறு சுகநல பிரச்சனைகளைக் கொண்டதாக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசவும். உங்கள் பிள்ளை 1 வயதுக்கும் குறைவானதாக இருந்தால் இருமல் மருந்துகளை ஒரு போதும் கொடுக்க வேண்டாம்.

உங்கள் பிள்ளையை கவனமாக கண்காணியுங்கள்

காற்றுக் குழல் அழற்சியுள்ள பிள்ளைகளுக்கு திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம், இது பலமுறை நடக்கக்கூடும். உங்கள் பிள்ளைக்கு காற்றுக் குழல் அழற்சி இருக்கும்போது நீங்கள் பிள்ளையின் அறையிலேயே நித்திரைகொள்ள விரும்பலாம். இதன் மூலம் இரவில் ஏற்படக்கூடிய எந்த பிரச்சினையையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

காற்றுக்குழல் அழற்சி உள்ள பிள்ளைக்கு உங்கள் மருத்துவர் செய்யகூடியதென்ன?

ஸ்டேரொயிட் மருந்துகள்

வாய் வழியாக எடுக்கப்படும் ஒரு ஸ்டேரொயிட் மருந்துக் குறிப்பை உங்கள் மருத்துவர் தரக்கூடும். இந்த மருந்து மூச்சுக் குழாய்களின் வீக்கத்தைக் குறைக்க உதவும். ஸ்டேரொயிட் மருத்து முழுமையாக வேலை செய்ய சில மணிநேரங்கள் எடுப்பதோடு அதன் விளைவு 24 லிருந்து 36 மணிநேரம்வரை நீடிக்கும். வழக்கமாக 1 அல்லது 2 வேளை மருந்து மட்டுமே தேவைப்படும்.

எப்பினெஃப்ரின்

உங்கள் பிள்ளை சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டால், எபினெஃப்ரின் என்றழைக்கப்படும் மருந்து, அதை பிள்ளையின் மூச்சுக் குழாய்களுக்குள் தெளிக்கும் முகமூடியுடன் சேர்த்து பிள்ளைக்குக் கொடுக்கப்படலாம். இந்த மருந்து, பிள்ளையின் காற்றுக் குழாய்களில் இருக்கும் வீக்கத்தை மிக விரைவாகக் குறைக்கும். அதன் விளைவு சுமார் 4 மணிநேரங்கள் வரை நீடிக்கும். 4 மணி நேரங்களுக்குப்பின் வீக்கம் மீண்டும் வரக்கூடும் என்பதோடு பிள்ளை சுவாசிக்கவும் அதிக சிரமப்படலாம். எபினெஃப்ரின் தேவைப்படுமானால், சுவாசித்தல் அமைதியாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக பிள்ளை 4 இலிருந்து 6 மணிநேரங்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கும் படி மருத்துவர் விரும்பலாம்.

காற்றுக்குழல் அழற்சி சுலபமாக பரவலாம்

விசேஷமாக ஆரம்ப நாட்கள் சிலவற்றின்போது காற்றுக் குழல் அழற்சியை ஏற்படுத்தும் வைரஸுகள் தொற்றும்திறனுடையவையாக இருக்கும். காய்ச்சல் போகும்வரையும் குரைப்பதுபோன்றா இருமல் குணமாகி வரும் வரையும் உங்கள் பிள்ளையை பகல்நேர பராமரிப்பு நிலையம் அல்லது பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருங்கள். இளம் குழந்தைகளிடமிருந்து (2 மாதத்திற்கும் குறைந்த வயதுடைய) உங்களால் கூடியவரையில் உங்கள் பிள்ளையை தொலைவிலே வைத்துக்கொள்ளுங்கள்.

பெரியவர்கள்கூட தங்கள் பிள்ளைகளுக்கு காற்றுக் குழல் அழற்சியை ஏற்படுத்திய அதே வைரசால் சுகவீனமடையலாம். ஆனாலும் பெரியவர்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும் வழக்கமாக பெரிய காற்றுக் குழாய்கள் இருப்பதால் இந்த சுகவீனம் வழக்கமாக, கடுமையற்றதாகவும் ஒரு சாதாரண தடிமல் போலவும் காணப்படலாம்.

உங்கள் பிள்ளைக்கு உடல்நல பராமரிப்பு வழங்குவோரை எப்போது தொடர்புகொள்ளவேண்டும்

பின்வரும் நிலைமைகளின்போது உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழையுங்கள்:

  • காய்ச்சல் 3 நாட்களுக்கும் மேலாக நீடிக்கின்றது
  • இருமல் 1 வாரத்துக்கும் மேலாக நீடிக்கின்றது
  • உங்கள் பிள்ளை சுவாசிக்கும்போதுசத்தம்கேட்கின்றது
  • உங்கள் பிள்ளை காதுவலிக்கின்றதென முறையிடுகின்றது
  • உங்களுக்கு வேறு கவலைகள் அல்லது கேள்விகள் இருக்கின்றன

பின் வருவனவற்றின்போது பிள்ளையை உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் செல்லுங்கள், அல்லது அவசியப்பட்டால் 911 ஐ அழையுங்கள்:

  • குளிர் நீராவி கரகரப்பு மூச்சோட்டத்தை 15 நிமிடங்களுக்குள் தெளிவாக்கவில்லை
  • உங்கள் பிள்ளைக்கு கரகரப்பு மூச்சோட்டம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றது
  • சுவாசிக்கும்போது உங்கள் பிள்ளையின் நெஞ்சு அல்லது வயிறு உள் இழுக்கப்படுகின்றது
  • உங்கள் பிள்ளையின் உதடுகள் நீலம் அல்லது உதா நிறமாகக் காணப்படுகின்றது
  • உங்கள் பிள்ளை வீணிவடிக்க அல்லது துப்ப ஆரம்பிக்கின்றது, விழுங்குவதற்கு சிரமப்படுகின்றது அல்லது பருக மறுக்கின்றது
  • உங்கள் பிள்ளைக்கு கழுத்து வலி அல்லது கழுத்து விறைப்பு இருக்கின்றது
  • உங்கள் பிள்ளை மிகுந்த நித்திரை மயக்கமாக அல்லது சினம் கொள்ளுவதாக காணப்படுகின்றது

முக்கிய குறிப்புகள்

  • காற்றுக் குழல் அழற்சி வைரஸால் ஏற்படுத்தப்படும் ஒரு பொதுவான சிறுபிராய சுகவீனமாகும்.
  • அநேகமான பிள்ளைகளுக்கு, காற்றுக் குழல் அழற்சி வீட்டில் சமாளிக்கக்கூடிய ஒரு சிறிய சுகவீனாமாகும். வைரஸை விரைவில் போகவைக்கக்கூடிய மருந்துகள் ஏதுமில்லை, ஆனால் உங்கள் பிள்ளையை அதிக சௌகரியமாக வைத்திருப்பதற்கு வழிகள் இருக்கின்றன
  • காற்றுக் குழல் அழற்சி மிகவும் கடுமையானதாக இருந்தால், பிள்ளையை மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள்.
Last updated: October 16 2009