அசெட்டமினோஃபென்

Acetaminophen [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை அசெட்டமினோஃபென் எனப்படும் மருந்தை எடுக்க வேண்டும்.

அசெட்டமினோஃபென் எனப்படும் மருந்தை உங்கள் பிள்ளை எடுக்கவேண்டும்​. அசெட்டமினோஃபென் எவ்வாறு செயற்படுகிறது, அதைக் கொடுப்பது எப்படி, அதைப் பிள்ளை உபயோகிக்கும்போது என்ன பக்க விளைவுகளை அல்லது சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பனவற்றை இந்தத் தகவல் விளக்குகின்றது.

இது என்ன மருந்து?

அசெட்டமினோஃபென் காய்ச்சலைக் குறைப்பதற்காகவும் வலி நிவாரணம் அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும்.

டைலெனோல்® அல்லது டெம்ப்றா® போன்ற பிரான்டு பேர்களாலும் அசெட்டமினோஃபென் அழைக்கப்படுகின்றது. வில்லைகள், உமிழக்கூடிய வில்லைகள், நாக்கில் கரையும் வில்லைகள், கப்சூல்ஸ்கள், திரவம், மல வாசலில் சொருகும் மருந்து போன்ற பல வடிவங்களில் அசெட்டமினோஃபென் கிடைக்கப்பெறுகிறது.

வலி மற்றும் தலைவலி, அத்தோடு இருமல் மற்றும் தடிமலுக்கான அறிகுறிகள் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க அசெட்டமினோஃபென் வேறு மருந்துகளுடனும் கலந்து கொடுக்கப்படலாம்.

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தைக் கொடுப்பதற்கு முன்…

அசெட்டமினோஃபென்னுக்கு ஒவ்வாமையிருந்தால் அதை உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். 

பின் வரும் நிலைமைகளில் ஏதாவது உங்கள் பிள்ளைக்கு இருந்தால் பிள்ளையின் மருத்துவரிடம் அல்லது மருந்தாளுனரிடம் பேசவும். கீழ்க்காண்பன பிள்ளைக்கு இருந்தால் இந்த மருந்து பாவனையின்போது முன்னெச்சரிக்கை தேவை:

  • ஈரல் நோய்
  • கடுமையான சிறுநீரக சிக்கல்கள்
  • ஃபெனில்கீடோன்யூரியா (PKU)

இந்த மருந்தை பிள்ளைக்கு எவ்வாறு நீங்கள் கொடுக்கவேண்டும்? 

  • உங்கள் மருந்துவர் அல்லது மருந்தாளுனர் சொல்லும் விதமாகவே அசெட்டமினோஃபெனை பிள்ளைக்கு கொடுக்கவும்.
  • உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளுனர் சொல்கின்ற, அல்லது மருந்துப் பொதியில் எழுதியுள்ள அசெட்டமினோஃபென் அளவை மட்டுமே கொடுங்கள். அதிக அளவான அசெட்டமினோஃபென் பிள்ளைக்கு தீங்கு விளைவிக்கலாம். 
  • 24 மணி நேரங்களில் பிள்ளைக்கு 5 டோஸ்களுக்கு மேற்பட்ட அசெட்டமினோஃபினைக் கொடுக்க வேண்டாம். குறைந்தது 4 மணி நேர இடைவெளியில் இந்த டோஸ்களைக் கொடுக்கவும்.
  • வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தினால், அசெட்டமினோஃபெனை உணவுடன் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளை அசெட்டமினொஃபென் திரவத்தை உட்கொண்டால், டோசைச் சரியாக அளப்பதற்கு மருந்தாளுனர் கொடுத்த கரண்டியை அல்லது சிறிஞ்ஜை உபயோகிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு மல வாசலில் சொருகும் சப்போசிட்டரி எனப்படும் அசெட்டமினோஃபென் தேவைப்பட்டால், மல வாசலூடாக இந்த மருந்தைக் கொடுப்பது பற்றிய விபரத்தை சப்போசிட்டரி உடன் வரும் விவரப்பத்திரிகையில் பார்க்கவும்.  

உங்கள் பிள்ளை ஒரு டோசை எடுக்கத் தவறினால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  • உங்களுக்கு ஞாபகம் வந்த உடனேயே, எடுக்கத் தவறிய டோசை பிள்ளைக்குக் கொடுங்கள்.
  • அடுத்த டோசுக்கான நேரம் நெருங்கிவிட்டதென்றால், தவறிய டோசை விட்டுவிடுங்கள். அடுத்த டோசை வழக்கமான நேரத்திற்கு கொடுங்கள்.
  • ஒரு தவறிய டோசைச் சரிக்கட்டுவதற்காக உங்கள் பிள்ளைக்கு இரண்டு டோசை ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டாம்.

இந்த மருந்தினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் யாவை?

சாதாரண பாவனையின்போது அசெட்டமினோஃபென் மிக அரிதாகவே பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்கள் பிள்ளைக்கு அளவுக்கதிகமான அசெட்டமினோஃபென் கொடுத்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், மருத்துவரை அல்லது மருந்தாளுனரை அழைக்கவும்.

பின்வரும் பக்கவிளைவுகளில் அநேகமானவை சாதாரணமானவையே, ஆனால் கடுமையான சிக்கலின் அறிகுறியாக அவையிருக்கலாம். கீழ்க்காணும் பக்கவிளைவுகளில் ஏதாவதொன்று உங்கள் பிள்ளைக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அழைக்கவும் அல்லது பிள்ளையை அவசரப் பிரிவிற்கு எடுத்துச் செல்லவும்:

  • வயிற்றோட்டம்
  • பசியின்மை
  • வயிற்றுவலி அல்லது பிடிப்பு
  • தோலில் சொறி, தடிப்பு அல்லது அரிப்பு
  • முகம், உதடு, நாக்கு அல்லது தொண்டையில் வீக்கம்
  • வியர்வையில் அதிகரிப்பு
  • மஞ்சள் நிறக் கண்கள் அல்லது தோல்

பிள்ளை இந்த மருந்தை உபயோகிக்கும்போது எத்தகைய பாதுகாப்புப் படிகளை நீங்கள் எடுக்க வேண்டும்?

நீங்கள் பிள்ளையின் வலிக்கு அசெட்டமினோஃபென் கொடுக்கும்போது வலி மோசமடைந்தால், புதிய வலி ஏற்பட்டால் அல்லது வலிக்கும் பகுதி சிவந்தால் அல்லது வீங்கினால் மருத்துவரை அழைக்கவும்.

நீங்கள் பிள்ளையின் காய்ச்சலுக்கு அசெட்டமினோஃபென் கொடுக்கும்போது 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், காய்ச்சல் மோசமடைந்தால், அல்லது சிவத்தல் அல்லது வீக்கம் போன்ற அடையாளங்கள் இருந்தால் மருத்துவரை அழைக்கவும்.

வேறு மருந்துகள் (மருந்துக் குறிப்பு உள்ளது, குறிப்பில்லாதது, மூலிகை அல்லது இயற்கைத் தயாரிப்புகள்) கொடுக்கும் முன்பு மருத்துவர் அல்லது மருந்தாளுனரிடம் பேசவும்.

வேறு சில மருந்துகளிலும் அசெட்டமினோஃபென் இருக்கக்கூடும். பிள்ளைக்கு அளவுக்கதிகமான அசெட்டமினொஃபென் கொடுப்பதைத் தவிர்ப்பதற்கு எப்போதும் உட்பொருட்களைப் பற்றி வாசிக்கவும், அல்லது மருந்தாளுனருடன் பேசவும்.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேறு முக்கிய தகவல்கள் என்ன?

பிள்ளை உபயோகிக்கும் மருந்துகள் எல்லாவற்றினதும் பட்டியல் ஒன்றை வைத்திருந்து அதை மருத்துவரிடம் அல்லது மருந்தாளுனரிடம் காண்பிக்கவும்.

அசெட்டமினோஃபென் வெவ்வேறு வகைகளில் மற்றும் வீரியங்களில் கிடைக்கின்றது. உங்கள் பிள்ளையின் வயதுக்கும் நிறைக்கும் பொருத்தமான டோஸ் எது என்பதில் நிச்சயமாயிருங்கள். சரியான டோஸ் எது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் மருத்துவர் அல்லது மருந்தாளுனரிடம் பேசவும்.

மற்றவர்களுடன் பிள்ளையின் மருந்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றவர்களின் மருந்தையும் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டாம்.

அசெட்டமினோஃபெனை குளிரான உலர்ந்த இடத்தில் சூரிய வெளிச்சம் படாமல் அறை வெப்ப நிலையில் வைக்கவும். குளியலறையில் அல்லது சமையலறையில் மருந்தை வைக்க வேண்டாம்.

காலாவதியான எந்த மருந்தையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியாகிவிட்ட அல்லது எஞ்சியிருக்கும் மருந்தை வீசுவதற்கு சிறந்த வழி எது என்பதை மருந்தாளுனரிடம் கேட்கவும்.

அசெட்டமினோஃபெனை பிள்ளைக்கு கைக்கும் கண்ணுக்கும் எட்டாத தூரத்தில் பாதுகாப்பான இடத்தில் மூடிவைக்கவும். பிள்ளை அளவுக்கதிகமான அசெட்டமினோஃபெனை உட்கொண்டுவிட்டால், கீழ்க்காணும் இலக்கங்கள் ஒன்றில் ஒன்டாரியோ பொய்சன் சென்டரை அழைக்கவும். இவை இலவசமான இலக்கங்கள்.

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்பவரென்றால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வேறு எங்காவது வாழ்பவரென்றால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்பவரென்றால், உள்ளூர் நஞ்சேற்ற தகவல் நிலையத்தை அழைக்கவும்.

பொறுப்புத் துறப்பு: இந்த குடும்ப மருந்து-உதவி தகவல் பதிப்பின்போது துல்லியமானது. இது அசெட்டமினோஃபென் பற்றிய சுருக்கத்தைக் கொண்டிருக்கின்றது ஆனால் இந்த மருந்து பற்றிய எல்லாத் தகவலையும் உள்ளடக்கியதல்ல. எல்லாப் பக்கவிளைவுகளும் இங்கு பட்டியலிடப்படவில்லை. அசெட்டமினோஃபென் பற்றி உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிகத் தகவல்கள் தேவைப்பட்டால், உடல்நலப் பராமரிப்பு வழங்குபவர் ஒருவரிடம் பேசவும்.

Last updated: March 25 2008