சிப்றோஃப்ளொக்ஸசின் (Ciprofloxacin)

Ciprofloxacin [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

சிப்றொஃப்ளொக்ஸசின் என்பது  அன்டிபையோடிக் என்றழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள் பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளால் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன.

சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து, சிப்றோ® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து மாத்திரை, நீண்ட காலம் செயற்படும் மாத்திரை, திரவம், மற்றும் ஊசி மருந்து போன்ற வடிவங்களில் கிடைக்கும்.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:

  • சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்துக்கு அல்லது வேறு குயினொலோன் அன்டிபையோடிக் மருந்துகளுக்கு ஒவ்வாமை

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகளை எடுக்கவேண்டும்:

  • காக்காய் வலிப்பு அல்லது வலிப்பு நோய்களுக்கான ஒரு வரலாறு
  • குளுக்கோஸ்–6- பொஸ்ஃபேட் டிஹைட்ரோஜினேஸ் (G6PD) குறைபாடு
  • சிறுநீரக அல்லது கல்லீரல் நோய்
  • மயஸ்தேனியா கிராவிஸ் (தசை நோய்) அல்லது தசை நாண் அழற்சியின் ( தசையையும் எலும்பையும் இணைக்கும் திசுக்களில் வீக்கம்) ஒரு வரலாறு

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • உங்கள் பிள்ளைக்கு சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிடுவது போல சரியாக, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.
  • உங்கள் பிள்ளைக்கு சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் கொடுக்கவும். மருந்து கொடுக்கும் நேரத்தைத் தவறவிடாதிருப்பதற்காக, உங்களுக்கு வசதியான ஒரு நேரத்தைத் தெரிவு செய்யவும்.
  • உங்கள் பிள்ளைக்கு சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் கொடுக்கவும். ஆயினும், இந்த மருந்து வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தினால் அதை உணவுடன் சேர்த்துக் கொடுக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு நீண்ட காலம் செயற்படும் மாத்திரைகள் எழுதிக்கொடுக்கப்பட்டிருந்தால், இந்த நீண்ட காலம் செயற்படும் மாத்திரைகளை அவன்(ள்) முழுமையாக விழுங்க வேண்டும். நசுக்கப்படவோ அல்லது மெல்லப்படவோ அல்லது உடைக்கப்படவோ கூடாது.

சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்துடன் சேர்த்து பால், பாற்பொருட்கள், அல்லது கல்சியத்தைக் கொண்டிருக்கும் ஏதாவது பழரசத்தைக் கொடுக்கவேண்டாம். அத்துடன், அமில நீக்கிகள், இரும்புச் சத்து, கல்சியம், நாகம், அல்லது மல்டிவிட்டமின்களின் துணை உணவுகளையும் சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்துடன் சேர்த்துக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளை, இந்தப் பொருட்களை உட்கொள்ளுவதற்கு குறைந்த பட்சம் 2 மணி நேரங்களுக்கு முன்பு அல்லது 6 மணி நேரங்களுக்குப் பின்னர் சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை உட்கொள்ளலாம்.

உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் திரவ மருந்தை உட்கொள்வதாக இருந்தால், அதை குளிர்ச்சாதனப் பெட்டியில் அல்லது அறை வெப்பநிலையில் வைக்கவும். உங்கள் பிள்ளைக்கு ஒவ்வொரு வேளைமருந்து கொடுப்பதற்கு முன்னரும் போத்தலை நன்கு குலுக்கவும். ஒவ்வொரு வேளைமருந்தையும் மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி, அல்லது பீச்சாங்குழாயினால்(ஓரல் ஸ்ரிஞ்ச்) அளக்கவும்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காதுவிடவும். அடுத்த வேளை மருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?

உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை உட்கொள்ளத்தொடங்கிய உடனேயே முன்னேற்றமடைவதை உணரத் தொடங்கலாம். ஆனால், முழுப் பலனைக் காண்பதற்கு மேலும் அநேக நாட்கள் எடுக்கலாம்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் பக்கவிளைவுகளில் சிலவற்றைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

  • வயிற்றுக் குழப்பம், வாந்தி, இலேசான வயிற்றுப்போக்கு ( மலம் தண்ணீர் போல கழிதல்), மற்றும் வயிற்றுவலி
  • களைப்பு மற்றும் மயக்க உணர்வு
  • தலைவலி

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • மூச்சுவாங்குதல்/ மார்பு இறுக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
  • முகம், உதடுகள், நாக்கு, அல்லது தொண்டையில் வீக்கம்
  • ஒழுங்கற்ற அல்லது சீரற்ற இதயத் துடிப்பு
  • மயக்கமடைதல் அல்லது நினைவிழத்தல்
  • மங்கலான பார்வை போன்ற கண்பார்வையில் மாற்றங்கள்
  • வலிப்புகள்
  • தசைகளில் அல்லது மூட்டுக்களில், குறிப்பாக கால்களில் கடுமையான வேதனை/வலி

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை உட்கொள்ளும்போது சூரிய ஒளியினால் தோலில் ஏற்படும் நிறமாற்றம் வழக்கத்தைவிட இலகுவாக ஏற்படும். சூரிய ஒளியினால் தோலில் ஏற்படும் நிறமாற்றத்தைத் தடுப்பதற்கு உதவியாகப் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • நேரடியான சூரிய ஒளியை, விசேஷமாக காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை, தவிர்க்கவும்.​
  • சன்லாம்புகள், பிரகாசமான உள்ளரங்கு மின் விளக்குகள், மற்றும் டானிங் படுக்கைகள் என்பனவற்றைத் தவிர்க்கவும்.
  • அகலமான விளிம்புள்ள தொப்பி, நீண்ட சட்டைக் கைகள், நீண்ட காற்சட்டைகள், அல்லது பாவாடையை வெளியில் செல்லும்போது அணியவும்.
  • SPF 15 அல்லது அதற்கு மேலான ஒரு சன் பிளொக் லோஷனை உபயோகிக்கவும்.

உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை உட்கொள்ளும்போது போதியளவு நீராகாரங்களைப் (தண்ணீர் அல்லது பழரசம், ஒரு நாளில் 6-8 கோப்பைகள்) பருகவேண்டியதும் முக்கியம்.

சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து மிகவும் அரிதாக வீக்கம், சிவத்தல், வலி, அல்லது தசை நாண்கள் (தசைகளையும் தோல்களையும் இணைக்கும் நாண்) கிழிதல் என்பனவற்றை ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளைக்கு விளையாடியபின்னர் அல்லது உடற்பயிற்சி செய்த பின்னர் திடீரெனக் கணுக்கால், முழங்காலின் பின்பகுதி, தோள், முழங்கை, அல்லது மணிக்கட்டில் வலி உண்டானால் உங்கள் மருத்துவரை அணுகவும்.

சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாத சில மருந்துகள் இருக்கின்றன அல்லது சில நிலைமைகளில் சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து அல்லது வேறு மருந்துகள் அளவுகள் தேவையானபடி சரி செய்யப்பட வேண்டும். உங்கள் பிள்ளை பின்வரும் மருந்துகள் உட்பட, வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மற்றும் மூலிகை மருந்துகள்) உட்கொள்வதாக இருந்தால், உங்கள் மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் தெரிவிப்பது முக்கியம்:

  • இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகள் ( உதாரணமாக, வோஃபரின், குமடின்)
  • அன்டி டிப்ரெஸன்ட்ஸ்
  • சைக்ளோஸ்போரின்
  • தியோஃபிலைன்
  • மெத்தொட்ரெக்ஸேட்
  • கிளைபுரைட்

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

சிப்றொஃப்ளொக்ஸசின் மாத்திரகளை அறை வெப்பநிலையில், குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம். திரவ மருந்து குளிர்ச்சாதனப் பெட்டியில் அல்லது அறை வெப்பநிலையில் வைக்கப்படலாம். உபயோகிக்காத திரவத்தை 2 வாரங்களின் பின் எறிந்துவிடவும்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

மருந்துக் குறிப்பில் எழுதப்பட்ட சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்துகள் முழுதையும் உட்கொண்டு தீர்ப்பதற்காகப் போதியளவு சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்துகளை எப்போதும் கைவசம் வைத்திருப்பதற்கு நிச்சயமாயிருங்கள். தேவைப்பட்டால், உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: February 19 2009