அரிவாள் உயிரணுச் சோகை நோயிற்கான ஹைட்ராக்ஷியூரியா மருந்து

Hydroxyurea for sickle cell disease [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் குழந்தை ஹைட்ராக்ஷியூரியா (hydroxyurea) என்ற மருந்தை உட்கொள்ள வேண்டும். ஹைட்ராக்ஷியூரியாஎவ்வாறு செயல்படுகிறது, அது உங்கள் குழந்தைக்கு எப்படிக் கொடுக்கப்படுகிறது என்பதை இந்தத் தகவல் தாள் விளக்குகிறது. மேலும் உங்கள் குழந்தை இந்த மருந்தை உட்கொள்ளும்போது அவருக்கு என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பது குறித்தும் இது விளக்குகிறது.

ஹைட்ராக்ஷியூரியா என்றால் என்ன?

ஹைட்ராக்ஷியூரியா என்பது ஒரு கீமோதெரபி மருந்து, இது அரிவாள் உயிரணுச் சோகை நோய் உட்பட பல உடல்நலக் கோளாறுகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ராக்ஷியூரியா மருந்தை எடுத்துக் கொள்ளும் அரிவாள் உயிரணுச் சோகை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி பின்வருவனவற்றைத் தெரிவிக்கிறது:

  • ஹைட்ராக்ஷியூரியா உட்கொள்ளாத நோயாளிகளில் பாதிபேர் வலிதரும் சூழ்நிலைகளின் காரணத்தினால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்
  • சிலருக்கு கடுமையான மார்பு நோய்க்குறி நிலை ஏற்படும்
  • அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் இரத்தம் ஏற்றுவதற்கான தேவை குறைவாக இருக்கும்

ஹைட்ராக்ஷியூரியா மருந்தை ஹைட்ரியா என்ற அதன் பிராண்ட் பெயரால் அழைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஹைட்ராக்ஷியூரியா காப்ஸ்யூல் வடிவத்தில் கிடைக்கிறது.

ஹைட்ராக்ஷியூரியா உங்கள் குழந்தைக்குப் பின்வரும் நிலைகளின்போதும் கொடுக்கப்படக்கூடும்

  • கடந்த 12 மாதங்களில் பெரும் வலி ஏற்பட்டதினால் அவர்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருத்தல்
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான மார்பு நோய்க்குறியினால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை இரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருத்தல்
  • வலிமிகுந்த நிலைகள் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் பள்ளி அல்லது வேலையிலிருந்து அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்தல்

உங்கள் குழந்தைக்கு ஹைட்ராக்ஷியூரியா கொடுப்பதற்கு முன்பாக

உங்கள் குழந்தைக்கு ஹைட்ராக்ஷியூரியா அல்லது அதன் கலவையின் ஒரு கூறு எடுத்துக்கொள்வதால் ஒவ்வாமை ஏற்பட்டால் அல்லது உங்கள் குழந்தைக்கு ஏதாவது நோயெதிர்ப்பு அல்லது இரத்தக் கோளாறு இருந்தால் (அரிவாள் உயிரணுச் சோகை நோய் தவிர) உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் அதுகுறித்துத் தெரிவிக்கவும்.

உங்கள் குழந்தைக்குப் பின்வரும் நிலைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் குழந்தையின் மருத்துவர் அல்லது பார்மஸிஸ்ட்டிடம் பேசவும். உங்கள் குழந்தைகளுக்குப் பின்வரும் சூழ்நிலைகளில் இந்த மருந்துகளைக் கொண்டு தற்காப்பு நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கலாம்:

  • கல்லீரல் நோய் இருத்தல்
  • சிறுநீரக நோய் இருத்தல்
  • கர்ப்பமாக இருத்தல்

உங்கள் குழந்தைக்கு ஹைட்ராக்ஷியூரியா எப்படிக் கொடுக்கப்படுகிறது?

  • உங்கள் மருத்துவர் அல்லது உங்கள் பார்மஸிஸ்ட் சொன்னபடியே உங்கள் குழந்தைக்கு ஹைட்ராக்ஷியூரியா மருந்தைக் கொடுக்கவும். ஏதாவது காரணத்தினால் இந்த மருந்து கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் குழந்தையின் மருத்துவருடன் கலந்தாலோசித்து முடிவெடிக்கவும். அதன் முழு விளைவைக் காண சில மாதங்கள் ஆகலாம்.
  • உங்கள் குழந்தைக்குச் சரியான டோஸ் எவ்வளவு என்பதை அறிய இந்த மருந்தை எடுக்கத் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இரத்தப் பரிசோதனை செய்யப்படலாம்.
  • உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை, ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் ஹைட்ராக்ஷியூரியா மருந்தைக் கொடுக்கவும். பல நோயாளிகள் உறங்கச் செல்லும் நேரத்தில் அதை எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
  • நீங்கள் ஹைட்ராக்ஷியூரியா மருந்தை உணவு உண்ட பிறகு அல்லது உணவு உண்பதற்கு முன்பு கொடுக்கலாம். அதை உணவுடன் கொடுப்பது வயிற்று கோளாறைத் தடுக்க உதவும்.
  • உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் திரவங்களை (திரவங்கள்) அதிகளவில் குடிக்க வேண்டும்.
  • உங்கள் குழந்தை ஹைட்ராக்ஷியூரியா உட்கொண்டு அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் வாந்தி எடுத்தால் (வாந்தி) இன்னொரு டோஸ் மருந்து கொடுக்கவும். உங்கள் குழந்தை ஹைட்ராக்ஷியூரியா உட்கொண்டு அரை மணி நேரத்திற்கும் மேல் ஆனப்பிறகு வாந்தியெடுத்தால், இன்னொரு டோஸ் கொடுக்க வேண்டாம். அடுத்த டோஸை அடுத்த நாள் வழக்கமான அதே நேரத்தில் கொடுக்கவும்.
  • ஹைட்ராக்ஷியூரியா கனடாவில் 500 மி.கி காப்ஸ்யூலாக வழங்கப்படுகிறது. உங்கள் குழந்தை முழு காப்ஸ்யூலை ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது வேறு திரவத்துடன் அப்படியே விழுங்க வேண்டும்.
  • உங்கள் குழந்தையால் காப்ஸ்யூல்களை விழுங்க முடியாவிட்டால் அல்லது முழு காப்ஸ்யூலை விடக் குறைவான டோஸ் எடுத்துக்கொண்டால், ஹைட்ராக்ஷியூரியா வழங்குவதற்கான சிறந்த வழியை பார்மஸிஸ்டிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும். காப்ஸ்யூலைத் திறந்து அதை மருந்து ஊசியில் கரைத்து பரிந்துரைக்கப்பட்ட டோஸ் கொடுக்கலாம். மீதமுள்ள மருந்து தேவையில்லை அதை எறிந்துவிடலாம்.
  • காப்ஸ்யூலில் இருந்து தூள் கலக்கும்போது கையுறைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது முதல் ஹைட்ராக்ஷியூரியா மருந்தை பாதுகாப்பாகக் கையாள்வது எப்படி என்பதை பார்மஸிஸ்ட் உங்களுக்குத் தெளிவாக விளக்குவார். மருந்தை எப்படிப் பாதுகாப்பாக தூக்கி எறிவது என்பதையும் அவர் உங்களுக்குக் கற்பிப்பார்.
  • ஹைட்ராக்ஷியூரியா மருந்தைக் கையாளும் எவரும் பாட்டில் அல்லது காப்ஸ்யூல்களைத் தொடுவதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவ வேண்டும். ஹைட்ராக்ஷியூரியா மருந்தைப் பாதுகாப்பாகக் கையாளுதல் மற்றும் சேமித்தல் பற்றிய விரிவான வழிமுறைகளுக்கு, வீட்டில் வழங்கப்படும் கீமோதெரபி: உங்கள் குழந்தைக்குப் பாதுகாப்பாக காப்ஸ்யூல்களைக் கொடுக்கும் வழிமுறை என்பதைப் பார்க்கவும்.

உங்கள் குழந்தை ஹைட்ராக்ஷியூரியா டோஸை எடுத்துக்கொள்ள தவறினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • ஒரு டோஸ்எடுத்துக்கொள்ளத் தவறினால், அதற்கான மாற்று டோஸ் கொடுக்க வேண்டாம்.

ஹைட்ராக்ஷியூரியா வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

இரத்தம் செயல்படுவதற்கு முன்பு மாற்றங்கள் காணப்படுவதற்கு சில மாதங்கள் ஆகலாம்.

ஹைட்ராக்ஷியூரியா மருந்தினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் யாவை, அவை எப்படிக் கண்காணிக்கப்படுகின்றன?

உங்கள் குழந்தை ஹைட்ராக்ஷியூரியா மருந்தை உட்கொள்ளும்போது அவருக்குப் பின்வரும் பக்கவிளைவுகளில் சில ஏற்படலாம். உங்கள் குழந்தைக்குப் பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதேனும் தொடர்வது, அவை நீங்காமல் இருத்தல், அல்லது அவை உங்கள் குழந்தைக்குத் தொந்தரவாக இருத்தல் போன்ற சூழ்நிலைகளுக்கு உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் பேசி சந்தேங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும்:

  • குமட்டல் மற்றும் வாந்தி: வெறும் வயிற்றில் ஹைட்ராக்ஷியூரியா எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.
  • உடல் அரிப்பு: இது ஒரு குறிப்பிட்ட சொறியாக இல்லாமல் இருக்கலாம், இது மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் போய்விடும். சொறி அதிகரித்தால், உங்கள் குழந்தைக்கு ஹைட்ராக்ஷியூரியா மருந்தைப் பரிந்துரைத்த மருத்துவரைப் பார்க்கவும்.
  • முடி உதிர்தல்: முடி மெலிந்து காணப்படும். முடி உதிர்தல் பொதுவாக வழுக்கை புள்ளிகளை ஏற்படுத்தாது. அவ்வாறு நடந்தால், ஹைட்ராக்ஷியூரியா மருந்தை (மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் அதிகம் நிகழ்வுகள் இல்லாத சூழ்நிலைகளில்) எடுத்துக்கொள்வதால் ஏற்படும் ஆபத்து மற்றும் நன்மை பற்றி உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் கலந்துரையாடப்பட வேண்டும்.
  • இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைதல்: உங்கள் குழந்தை சிகிச்சை பெற தொடங்கிய முதல் வருடத்தில் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை சரிபார்ப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனைகளை உள்ளூர் ஆய்வுக்கூடங்களில் செய்யப்படும், அதன் முடிவுகள் உங்கள் குழந்தையின் மருத்துவருக்கு அனுப்பப்படும். இரத்த அணுக்களின் எண்ணிக்கை முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஏற்கத்தக்க அளவை விடக் குறைவாக இருந்தால், மருந்தை நிறுத்திவிட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரத்தப் பரிசோதனையை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். அந்த பரிசோதனையின் முடிவு இரத்த அணுக்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்ட ஏற்கத்தக்க அளவை அடைந்ததாக காண்பித்தால்பரிந்துரைக்கப்பட்டபடி மருந்து தொடரப்படலாம். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்தால், எண்ணிக்கை குறையத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் குழந்தை எடுத்துக்கொண்டிருந்த டோஸ் அளவிலிருந்து இப்போது எடுத்துக்கொள்ளும் டோஸ் அளவு குறைக்கப்படும். உங்கள் குழந்தை இந்தக் குறைந்த டோஸைத் தொடர்ந்து உட்கொள்ளக்கூடும்.
  • தோல் மற்றும் நகம் கருமையடைதல்: சில காலத்திற்கு ஹைட்ராக்ஷியூரியா மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு, சில நோயாளிகளுக்கு நகங்கள், விரல்கள் வளையும் இடம்(நக்கிள்ஸ்) மேல் உள்ள தோல் கருமையடையும். மருந்து உட்கொள்வது நிறுத்தப்பட்டவுடன் இந்த விளைவு சரியாகிவிடும்.
  • கல்லீரல் செயலிழப்பு (சிக்கல்கள்): இது வழக்கமாக ஏற்படுவதல்ல, ஆனால் இந்த சிக்கலை மதிப்பிடுவதற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
  • தலைவலி.
  • பெரும்பாலும் தொடைகள் மற்றும் மேல் கைகளில் தசை பலவீனம் ஏற்படக்கூடும்.
  • வாய் எரிச்சல் அல்லது புண்கள்: மென்மையான டூத்பிரஷைப் பயன்படுத்துவது மற்றும் வாயைக் கழுவுவது உதவக்கூடும்.
  • நீண்ட கால விளைவுகள்: ஹைட்ராக்ஷியூரியா ஒரு கீமோதெரபி மருந்து, மேலும் இந்த வகையான மருந்துகளில் சிலவற்றை பல ஆண்டுகளாகப் புற்றுநோய் பாதிப்புள்ள நோயாளிகள் எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அரிவாள் உயிரணுச் சோகை பாதிப்புடைய நோயாளிகள் ஹைட்ராக்ஷியூரியா மருந்து உட்கொள்வதினால் புற்றுநோய் ஏற்பட்டதற்கான பதிவுகள் எதுவுமில்லை.

உங்கள் குழந்தை ஹைட்ராக்ஷியூரியா மருந்தைப் பயன்படுத்தும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

ஹைட்ராக்ஷியூரியா உங்கள் குழந்தையின் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை தற்காலிகமாகக் குறைக்கும், இதனால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க, குறிப்பாக அவர்களின் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது, உங்கள் குழந்தை சளி அல்லது காய்ச்சல் போன்ற தொற்றுநோய் உள்ளவர்களுடன் உரையாடுவது, தொடுவது, அருகில் நிற்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்,

ஹைட்ராக்ஷியூரியா மருந்தை கருத்தரிக்கும் நேரத்தில் எடுத்துக் கொண்டால் அல்லது கர்ப்பமாக இருக்கும்போது எடுத்துக் கொண்டால் பிறப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் பாலியல் நாட்டமுள்ள ஒரு இளம் பெண்ணாக இருந்தால், ஹைட்ராக்ஷியூரியா மருந்தை எடுத்துக்கொள்ளும்போது பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும். ஹைட்ராக்ஷியூரியா மருந்தை எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் கர்ப்பமாகிவிட்டால், உடனே அதை எடுத்துக்கொள்வதை நிறுத்தி, உங்கள் மருத்துவருக்கு அதுகுறித்துத் தெரியப்படுத்த வேண்டும்.

கர்ப்பமாக முயற்சிக்கும் முன் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஹைட்ராக்ஷியூரியா எடுப்பதை நிறுத்த வேண்டும். ஹைட்ராக்ஷியூரியா விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம்.

உங்கள் குழந்தைக்கு HIV இருந்து, இந்த நிலைக்குக் குறிப்பாக டிடனோசின் மற்றும்/அல்லது ஸ்டாவுடின் மருந்து எடுத்துக்கொண்டிருந்தால், உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் அதுகுறித்து பேசுவது நல்லது.

இது மட்டுமே முழுமையான பட்டியல் அல்ல. உங்கள் குழந்தைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (பரிந்துரைக்கப்பட்ட, பரிந்துரைக்கப்படாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் குழந்தையின் மருத்துவர் அல்லது பார்மஸிஸ்ட்டிடம் அதுகுறித்து கேட்கவும்.

ஒரு பெற்றோர் அல்லது பராமரிப்பாளராக, அபாயகரமான மருந்துகளைக் கையாளுவதால் தீங்கு விளைவிக்கும் ஆபத்து ஏற்படுவது குறைவே, இருப்பினும், அதன் வெளிப்பாட்டைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது சாலச்சிறந்தது. உங்கள் குழந்தையின் மருந்தை சுவைத்துப் பார்க்காமல் இருப்பதும் இதில் அடங்கும். மேலும், நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், அபாயகரமான மருந்துகளைதொடுவதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தால், வேறொருவர் உங்கள் குழந்தைக்கு அவர்களுடைய மருந்தைக் கொடுப்பது நல்ல யோசனையாக இருக்கும்.

அபாயகரமான மருந்துகள் ஆரோக்கியமான செல்களைச் சேதப்படுத்தும். அபாயகரமான மருந்துகளைக் கையாளும் எவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தையின் மருந்துகளைக் கையாளும்போது கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிவது நல்லது. அத்துடன், உங்கள் குழந்தையின் மருந்தை எடுத்து தருவதற்கு முன்பாக உங்கள் கைகளை சோப்பு போட்டு தண்ணீரால் சுத்தமாகக் கழுவவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் யாவை?

  • வலிமிகுந்த சூழ்நிலையில் மட்டுமல்லாது, ஒவ்வொரு நாளும் மருந்து உட்கொள்ள வேண்டும். இது தீவிர பாதிப்பினால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் அளிக்காது. இம்மாதிரியான நிகழ்வுகளைத் தடுக்கும் இரத்த அணுக்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் இது செயல்படுகிறது. இது அரிவாள் உயிரணுச் சோகை நோயைக் குறைக்கிறது, சிவப்பு அணுக்கள் சிதைவதைக் குறைக்கிறது மற்றும் பாதுகாக்கப்படும் உருப்பெற்ற கருவின் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.
  • மருந்து உட்கொண்ட ஒரு மாதத்திற்கு பிந்தைய வருகையில், சிவப்பு இரத்த அணுக்கள் பெரிதாக மாறும். இது நுண்ணோக்கியின் கீழ் பரிசோதனை செய்யும்போதும் பார்க்கும்போதும் காணப்படுகிறது. இந்த சிவப்பு அணுக்கள் சிறிய இரத்த நாளங்கள் வழியாக மிக எளிதாகச் செல்லும்மற்றும் எளிதில் உடைந்து விடும். பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தையின் பசி அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கிறார்கள்.
  • மூன்று மாதங்கள் உட்கொள்வதினால், உருப்பெற்ற கருவின் ஹீமோகுளோபின் மற்றும் ஒட்டுமொத்த ஹீமோகுளோபின் அளவில் அதிகரிப்பு உள்ளது. அதிக உருப்பெற்ற கருவின் ஹீமோகுளோபின் அளவைக் கொண்ட நோயாளிகளுக்கு குறைவான வலி நிகழ்வுகள் ஏற்படுவதை நாங்கள் அறிவோம்.
  • ஆறு மாதங்கள் உட்கொள்வதினால், உங்கள் குழந்தைக்கு சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பிருந்த ஆறு மாதங்களை விடக் குறைவான வலி நிகழ்வுகளே ஏற்பட்டிருக்கும்.
  • ஒரு நோயாளி எவ்வளவு காலம் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்கிறார் என்பது அவர்களுக்கும் சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கும் இடையிலான முடிவாகும்.
  • ஹைட்ராக்ஷியூரியா அனைத்து தனியார் காப்புறுதித் திட்டங்களாலும் ஒன்ராறியோ மருந்து நலனுதவித் திட்டத்தாலும் பாதுகாக்கப்படுகிறது.
  • உங்கள் குழந்தையின் மருந்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் குழந்தைக்கு வேறு எவருடைய மருந்தையும் கொடுக்காதீர்கள்.
  • வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்களில் போதியளவு ஹைட்ராக்ஷியூரியா காப்ஸ்யூல்களை எப்போதும் கைவசம் வைத்திருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் மருந்து தீர்ந்து போவதற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே காப்ஸ்யூல்களை ரீபில் செய்வதற்கு உங்கள் பார்மஸிஸ்ட்டை தொடர்புகொள்ளவும்.
  • ஹைட்ராக்ஷியூரியா மருந்தை அறை வெப்பநிலையில், குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சூரிய ஒளி படாதவாறு வைக்கவும். குளியலறை அல்லது சமையலறையில் அதை வைக்க வேண்டாம்.
  • காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்க வேண்டாம். காலாவதியான அல்லது மீந்து போன மருந்துகளை எறிந்து விடுவதற்கான சிறந்த வழி பற்றி உங்கள் பார்மசிஸ்டிடம் கேட்கவும்.

ஓவர் டோஸ் குறித்த தகவல்கள்

ஹைட்ராக்ஷியூரியா மருந்தை உங்கள் குழந்தையின் பார்வையில் படாதவாறு ஒரு பாதுகாப்பான இடத்தில் பூட்டி வைக்கவும். உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக ஹைட்ராக்ஷியூரியா உட்கொண்டால், பின்வரும் எண்களில் ஒன்றில் உங்கள் உள்ளூர் நஞ்சுத் தகவல் வழங்கும் நிலையத்தைத் தொடர்புகொள்ளவும். இந்த அழைப்புகள் இலவசமானவை. 

  • கியூபெக்கைத் தவிர கனடாவில் எங்கிருந்தும் 1-844 POISON-X அல்லது 1-844-764-7669 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.
  • நீங்கள் கியூபெக்கில் வசிக்கிறீர்கள் என்றால் 1-800-463-5060 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

பொறுப்புத்துறப்பு: இந்தக் குடும்ப மருத்துவ உதவியில் உள்ள தகவல்கள் அச்சிடும் நேரத்தில் துல்லியமானவையாக இருந்தன. இது ஹைட்ராக்ஷியூரியா பற்றிய தகவல்களின் சுருக்கத்தை வழங்குகிறது மற்றும் இந்த மருந்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கவில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்படவில்லை. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது ஹைட்ராக்ஷியூரியா மருந்தைப் பற்றி மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் பேசி அறிந்துகொள்ளவும்.

Last updated: June 12 2023