தீக்காயங்கள்: முதலுதவி

Burns: First aid [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்களுடைய பிள்ளையின் தீக்காயத்தை எப்படித் தகுந்த முறையில் பராமரிப்பது என்பது பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு மேற்பார்வை.

தீக்காயம் என்றால் என்ன?

சூரிய வெளிச்சம், தீச்சுவாலைகள், சூடான திரவங்கள், மின்சாரம், இஸ்திரிப் பெட்டி அல்லது சூட்டடுப்பின் மேற்புறம் போன்ற சூடான பொருட்களுடன் தொடர்பு கொண்டபின் ஏற்படும் காயம் ஒரு தீக்காயம் எனப்படும். பெரும்பாலான தீக்காயங்கள் வீட்டுக்குள்ளேயே, தோல் வெந்நீர் அல்லது சூடான எண்ணெயுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படுகிறது. இந்த வகையான தீக்காயம் சூட்டுப்புண் என அழைக்கப்படுகிறது.

தீக்காயங்களின் நிலைகள் (டிகிரீக்கள்)

பாதிக்கப்பட்ட தோலின் அளவையும் அதன் ஆழத்தையும் வைத்து மருத்துவர் தீக்காயத்தின் நிலை அல்லது வினைமையை தீர்மானிப்பார். பெரும்பாலான நிலைமைகளில் ஒரு விசாலமான, ஆழமான தீக்காயம் அதிக பட்ச வினைமையானதாக இருக்கும்.

முதன் –நிலைத் தீக்காயங்கள்

முதன் –நிலைத் தீக்காயங்கள், அல்லது மேற்பரப்புத் தீக்காயங்கள், தோலின் மேற்படையை மாத்திரம் பாதிக்கும். இந்த வகைக்கு, சூரிய வெப்பத்தினால் ஏற்படும் காயம் சாதாரணமான ஒரு உதாரணமாகும். முதன் –நிலைத் தீக்காயத்தின்போது உங்களுடைய பிள்ளையின் தோல் சிவப்பு நிறமாகி, வீங்கி, சிறிதளவு வலியை உண்டாக்கும். இந்த வகையான தீக்காயம் ஒரு சில நாட்களில், எந்த விதமான அடையாளங்கள் அல்லது வடுக்களை உண்டாக்காது தாமாகவே ஆறிவிடும்.

இரண்டாம் –நிலைத் தீக்காயங்கள்

எரி்காயத்தின் பாகை அளவுகள்எரி்காயத்தின் பாகை அளவுகள்
தோலின் குறுக்கு முகவேட்டு எரிகாயத்தின் ஆழங்களைக் காண்பிக்கிறது.  முதற்பாகை அளவு எரிகாயங்கள் தோலின் மேற்பரப்பை (புறத்தோல்) உட்படுத்தும். இரண்டாவது பாகை அளவு எரிகாயங்கள் தோலின் ஆழ் பரப்புகளை (உட்தோல்) உட்படுத்தும்.  மூன்றாவது பாகை அளவு எரிகாயங்கள் தோலின் முழு ஆழத்தையும் சில வேளைகளில் அதற்குக் கீழ்ப்பட்ட திசுக்களையும் உட்படுத்தும்.

இரண்டாம் –நிலைத் தீக்காயங்கள், அல்லது பகுதித் தடிப்பான தீக்காயங்கள் தோலின் மேற்படையையும் அதன் கீழிருக்கும் முதற் சில படைகளையும் பாதிக்கும். இரண்டாம் –நிலைத் தீக்காயத்தினால், உங்களுடைய பிள்ளையின் தோல் சிவப்பு நிறமாக மாறி, வீங்கிக் கொப்பளங்களை உண்டாக்கும். இது உங்களுடைய பிள்ளைக்கு அதிகளவு வேதனையைக் கொடுக்கும். பெரும்பாலான நிலைமைகளில், ஒரு இரண்டாம் –நிலைத் தீக்காயம் ஒரு சில வாரங்களில் தாமாகவே ஆறிவிடும். அது உங்களுடைய பிள்ளையில் வடுவை உண்டாக்கும்.

மூன்றாம் –நிலைத் தீக்காயங்கள்

மூன்றாம் –நிலைத் தீக்காயங்கள், அல்லது முழுமையான தடிப்புள்ள தீக்காயங்கள் தோலின் எல்லாப் படைகளையும் பாதிக்கும். இது நரம்புகள், இரத்தக்குழாய்கள், முடியுறைகள் என்பனவற்றை உட்படுத்தும். உங்களுடைய பிள்ளையின் தோல் கறுப்பு நிறமாக அல்லது அதி வெண்மை நிறமாக மாறும். ஆயினும், தீக்காயங்கள் ஏற்படுத்தும் நரம்புகளின் சேதத்தின் அளவின் காரணமாக மூன்றாம் –நிலைத் தீக்காயங்கள் சம்பந்தப்பட்ட வலி மிகவும் குறைவானதாக இருக்கும்.

உங்களுடைய பிள்ளை மூன்றாம் –நிலைத் தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டால், அவளுக்கு தோலை ஓட்டவைக்கும் ஒரு அறுவைச்சிகிச்சை செய்யப்பட வேண்டியிருக்கலாம். இந்த மருத்துவச் செயல்முறை, தீக்காயம் ஏற்படாத ஒரு உடற்பகுதியிலிருந்து ஆரோக்கியமான ஒரு சிறிய தோற்பகுதி வெட்டி எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் ஒட்டவைத்தலை உட்படுத்துகிறது. மூன்றாம் –நிலைத் தீக்காயங்கள் ஆறுவதற்குப் பல மாதங்களாகலாம். இது எப்போதுமே ஒரு வடுவை ஏற்படுத்தும்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

உங்களுடைய பிள்ளை மிகப் பெரிய தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டால், உடனே 9-1-1 ஐ அழைக்கவும்.

மிகப் பெரிய தீக்காயங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

தொலைபேசியில் கதைக்கும் ஒருவர்
  • ஒரு தீக்காயம் மிகவும் ஆழமானதாகவும் தோலின் எல்லாப் படைகளையும் பாதித்திருக்கிறது (மூன்றாம் –நிலைத் தீக்காயங்கள்).
  • ஒரு தீக்காயம், 10 செ.மீ.ஐவிட விசாலமானது ,அல்லது 4 அங்குலம் குறுக்களவுள்ளது
  • கைகள், பாதங்கள், முகம், கவடு, மார்பு, மலவாயில், பிறப்புறுப்புப் பகுதி, அல்லது மிகப்பெரிய மூட்டில் ஏற்பட்ட ஒரு தீக்காயம்.

உங்களுடைய பிள்ளையின் தீக்காயத்தில் எங்காவது தொற்றுநோய் ஏற்பட்டால் அல்லது தீக்காயங்கள் நன்கு ஆறாமல் இருப்பது போலத் தோன்றினால், மருத்துவ உதவியை உடனே நாடவும்.

சிகிச்சை

மிகப் பெரிய தீக்காயங்கள்

உங்களுடைய பிள்ளை ஒரு மிகப் பெரிய தீக்காயத்தினால் வேதனைப்படுகிறாள் என நீங்கள் சந்தேகித்தால், உடனே 9-1-1 ஐ அழைக்கவும். அம்புலன்ஸ் வண்டி வரும்வரைக் காத்திருக்கும்போது நீங்கள் செய்யக்கூடிய காரியங்களின் பட்டியல் பின்வருமாறு:

  • இளம் குளிர் (அதிகமாகக் குளிர்ந்ததல்ல) தண்ணீரினால் ஈரமாக்கப்பட்ட ஒரு துணி அல்லது துவாயினால் காயத்தை மூடவும்.
  • உங்களுடைய பிள்ளையின் எரிந்த உடைகளை அகற்றவேண்டாம்.
  • கொப்பளங்கள் ஏதாவது ஏற்பட்டிருந்தால் அவற்றை உடைக்கவேண்டாம்.
  • தீக்காயம் ஏற்பட்ட பகுதியில் தண்ணீரைத் தவிர, ஏதாவது பூசு மருந்துகள், தெளிப்பான்கள் அல்லது வேறு ஏதாவது பொருட்களைப் பூச வேண்டாம்.

சிறிய தீக்காயங்கள்

முதன் –நிலைத் தீக்காயங்கள், பெரும்பாலான இரண்டாம் –நிலைத் தீக்காயங்கள் உட்பட சிறிய தீக்காயங்களுக்கு வீட்டில் சிகிச்சை செய்யப்படலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சூரிய வெளிச்சம் படுவதைத் தவிர்க்கவும். இது தீக்காயங்களை மோசமானதாக்கலாம் அல்லது தீக்காயங்கள் ஆறுவதற்கு அதிக காலம் செல்லலாம். அத்துடன், தீக்காயத்துக்கு சன்ஸ்கிறீன் உபயோகிப்பது தோல் சேதமடைதலைப் பாதுகாக்காது.

தீக்காயங்களைக் குளிர வைக்கவும்

ஓடும் நீரில் நெருப்புப்பட்ட கையைப் பிடித்தல்

தீக்காயத்தை குளிர்ந்த நீரில் மூழ்கும்படி, அல்லது மெதுவாக ஒழுகும் தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு வைக்கவும். இதை நீங்கள் விரைவாகச் செய்வது சிறந்தது. தீக்காயத்தை பார்ப்பதற்காக உங்களுடைய பிள்ளையின் உடைகளைக் களைவதில் நேரத்தை வீணாக்கவேண்டாம். நீங்கள் வெளியே இருந்தால், தோட்டத்திலுள்ள ரப்பர்க் குழாயை, குடிதண்ணீர் நீரூற்றை, அல்லது வேறு ஏதாவது குளிர்ந்த தண்ணீர் மூலவளத்தை உபயோகிக்கவும். தீக்காயங்களைக் குளிர்விப்பது உங்களுடைய பிள்ளையின் வலியைக் குறைக்கும். குளிர்ந்த தண்ணீர் வீக்கத்தையும் குறைத்து, தீக்காயங்கள் தோலின் கீழாக ஆழமாக ஊடுருவுவதையும் தடுக்கும்.

தீக்காயங்களை மூடிவிடவும்

நெருப்புப்பட்ட பகுதி சுற்றும்  துணியால் (gauze) சுற்றப்பட்ட கை

உங்களுடைய பிள்ளையின் தீக்காயம் பெரியதாக இருந்தால், கிருமியழிக்கப்பட்ட சல்லடைத்துணி அல்லது ஒரு சுத்தமான போர்வையால் தளர்வாக மூடிவிடவும். தீக்காயத்தை இறுக்கமாகச் சுற்றிக் கட்டவேண்டாம். தீக்காயத்தை மூடிவிடுவது, அந்தப் பகுதியைச் சுத்தமாக வைக்கும், வலியையும் குறைக்கும். புதிதாக ஏற்பட்ட தீக்காயத்தில் பஞ்சு உருண்டைகளை வைக்கவேண்டாம். இந்த சமயத்தில் எந்தப் பூசுமருந்துகளைப் பூசுவதையும் தவிர்க்கவும்.

தீக்காயத்தைச் சுத்தம் செய்தல்

சிறிய தீக்காயங்களை, ஒரு நாளைக்கு இரண்டு முறை, ஒரு வீரியம் குறைந்த வாசனையூட்டப்படாத திரவ சோப்பினால் மென்மையாகக் கழுவவும். தீக்காயத்தை குளிர்ந்த நீரில் மூழ்கும்படி, அல்லது மெதுவாக ஒழுகும் தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு வைக்கவும். தீக்காயத்தை காற்றில் உலரவிடவும் அல்லது ஒரு மென்மையான, சுத்தமான துணி அல்லது துவாயினால் மிகவும் மென்மையாக தட்டி உலரவைக்கவும். உங்களுடைய பிள்ளையின் தீக்காயத்தில் கொப்பளங்கள் இருந்தால் அவற்றை உடைக்கவேண்டாம். கொப்பளங்கள் தொற்றுநோயைத் தடைசெய்யும் ஒரு பாதுகாப்புப் படையாகச் செயற்படும். கொப்பளங்கள் உடைய நேரிட்டால், பொலிஸ்பொரின் போன்ற அன்டிபையோடிக் பூசுமருந்துகளை அவற்றின் மீது பூசி, கிருமியழிக்கப்பட்ட சல்லடைத் துணி அல்லது ஒரு பன்டேஜினால் மூடிவிடவும்.

வலி நிவாரணி

தீக்காயம் உங்களுடைய பிள்ளைக்கு மிகவும் வேதனையளிப்பதாக இருக்கும். உங்களுடைய பிள்ளைக்கு, ஐபியூரோஃபின் அல்லது அசெட்டமினோஃபெனை (லேபிளில் விபரிக்கப்பட்டபடி) கொடுக்கவும். உங்களுடைய பிள்ளைக்கு ASA (அமினோசலிசிலிக் அசிட், ஆஸ்பிரின், வேறு பிரான்டுகள்) ஐக் கொடுக்கவேண்டாம். தீக்காயம் சம்பந்தப்பட்ட வலிகளுக்குச் சிகிச்சை செய்வதற்கு ASA ஐப் போலவே ஐபியூரோஃபினும் அசெட்டமினோஃபெனும் சிறந்தது.

முக்கிய குறிப்புகள்

  • உங்களுடைய பிள்ளை ஒரு மிகப் பெரிய தீக்காயத்தால் பாதிக்கப்பட்டால், உடனே 9-1-1 ஐ அழைக்கவும்.
  • சிறிய தீக்காயங்களைக் குளிர்ந்த நீரால் குளிர்விக்கவும்.
  • வலிக்கு, உங்களுடைய பிள்ளைக்கு அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூரோஃபின் கொடுக்கவும். உங்களுடைய பிள்ளைக்கு ASA. கொடுக்கவேண்டாம்
  • சிறிய தீக்காயங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை திரவ சோப்பினால் மென்மையாகக் கழுவவும்.
  • சிறிய தீக்காயங்கள் வீட்டில் பராமரிக்கப்படலாம். ஆனால், அது நன்கு ஆறாவிட்டால் மருத்துவக் கவனிப்புத் தேவைப்படலாம்.
Last updated: febrero 14 2011