முன்தோலை (ஆண்குறியின்) வெட்டும் அறுவைச் சிகிச்சை

Circumcision in newborns [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

புதிதாய்ப் பிறந்த சமயத்தில் பிள்ளை நுணித்தோல் வெட்டுதல் (முன் தோல் அகற்றும் அறுவை சிகிச்சை).

முன்தோலை வெட்டுதல் என்பது முன்தோல் எனப்படும் ஆணுறுப்பைச் சுற்றியிருக்கும் திசு வளையத்தை நீக்குதல் ஆகும். புதிதாகப் பிறந்த உங்கள் மகனின் முன்தோலை வெட்ட நீங்கள் தீர்மானித்தால் , பெரும்பாலும் அவன் பிறந்த முதற் சில நாட்களுக்குள்ளே அது செய்யப்பட வேண்டும். சில பத்தாண்டுகளுக்குமுன் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை பிரபல்யமாக இருந்ததைவிட இன்றைக்குப் பிரபல்யம் குறைந்துள்ளது. 1979இல் 90% புதிதாகப் பிறந்த ஆண்குழந்தைகளுக்கு முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது; அதனுடன் ஒப்பிடும்போது இன்று 60% மாத்திரமே செய்யப்படுகிறது.

சுன்னத்து
சுன்னத்து என்பது ஆண்குறியின் முனையிலுள்ள தோலை அகற்றும் ஒரு செயற்பாடாகும்

சில பெற்றோர்களுக்கு, அவர்களது புதிதாகப் பிறந்த ஆண்குழந்தைக்கு முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டுமா அல்லாது இல்லையா என்பதைப் பற்றித் தீர்மானம் எடுப்பது மிகவும் சுலபம். இது ஏன் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களுக்கு ஒரு கலாச்சாரம் அல்லது மதம் சம்பந்தப்பட்ட காரணம் இருக்கலாம். உதாரணமாக, யூத மற்றும் இஸ்லாமிய பெற்றோர்கள் பாரம்பரியப்படி தங்கள் மகனுக்கு முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்வார்கள். இதற்கு மாறாக, இரு பெற்றோர்களும் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சையை மிகவும் எதிர்க்கலாம், மற்றும் அந்தச் செயற்பாடு தேவையில்லை என முழுமனதோடு ஒத்துக்கொள்ளவும்கூடும்.

மற்றப் பெற்றோர்களுக்கு, இந்தத் தீர்மானம் மிகவும் கடினமாயிருக்கும். பெற்றோரில் ஒருவர் இந்தச் செயற்பாடு தேவையானது என உணரலாம். மற்றவர் அதை முழுமையாக மறுக்கலாம். சில குடும்பங்களில் இந்தத் தீர்மானம் ஒரு குழப்பத்துக்கு மூல காரணமாக அமையலாம். புதிதாகப் பிறந்த ஆண்குழந்தையின் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சைக்கு, ஆதரவாகவும் எதிராகவுமுள்ள காரணங்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட ஆணுறுப்பை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்பன பற்றி இந்தப் பக்கம் விபரிக்கும்.

புதிதாகப் பிறந்த ஆண்குழந்தைக்கு முன்தோலை வெட்டுவதனால் உண்டாகும் சாதகங்கள்

மேற்குறிப்பிட்டபடி, முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்யத் தீர்மானிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள், அதை மதம் அல்லது அழகுபடுத்தும் காரணங்களுக்காகச் செய்கிறார்கள். ஆயினும், முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சைக்கு ஒரு பாதுகாப்பான பலன் இருக்கிறது என்பதற்கு சில மிக அரிதான காரணங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு:

  • சிறுநீர்ப்பாதையின் தொற்றுநோய்: முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை இந்த வகையான தொற்றுநோய்களைத் தடுக்க உதவி செய்யலாம். ஆயினும், சிறுநீர்ப் பாதைத் தொற்றுநோய் சிறுவர்களில் அரிதாக இருக்கும், மற்றும் அவற்றிற்கு இலகுவாகச் சிகிச்சை செய்யப்படலாம்.
  • முன்தோலின் கீழ் தொற்றுநோய்கள் (பலனிட்டிஸ்) மற்றும் தளராத முன் தோலின் இறுக்கம் (ஃபிமொஸிஸ்): இவையும் மிக அரிதாகச் சம்பவிக்கக்கூடியவையாகும். நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதன்மூலம் பலனிட்டிஸ் நோயைத் தடுக்கலாம். முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்படாத ஒரு சிறுவனுக்கு அல்லது ஒரு ஆணுக்கு பலனிட்டிஸ் நோய் திரும்பவும் வந்தால் அல்லது ஃபிமொஸிஸ் நோய் வந்தால், அந்த சமயத்தில் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்படலாம். ஆயினும், சிறுவர்கள் மற்றும் வயது வந்த ஆண்களுக்கு முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சையின் செயற்பாடு மிகவும் சிக்கலானதாக மற்றும் வலியுள்ளதாக இருக்கும்.
  • வாழ்க்கையின் பிற்காலங்களில் பாலுறவினால் கடத்தப்படும் நோய்(STDs) களுக்கான ஆபத்து: ஆயினும் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சையானது, பாலுறவினால் கடத்தப்படும் நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பைக் கொடுக்காது.
  • பிள்ளையாக மற்றும் பெரியவராக, ஆணுறுப்பைச் சரிவரச் சுத்தம் செய்வது, ஏற்கனவே அரிதாகவிருக்கும் இந்த வகை சிக்கலான நோய்கள், ஏற்படும் சந்தர்ப்பங்களை மேலும் குறைக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டும்.

புதிதாகப் பிறந்த ஆண்குழந்தைக்கு முன்தோலை வெட்டுவதனால் ஏற்படும் பாதகங்கள்

முன்தோலை வெட்டுவது மருத்துவத்திற்குத் தேவைப்படும் ஒரு செயற்பாடல்ல. முன்தோல் வெட்டப்படாமல் விடப்படும்போது, அது ஆணுறுப்பின் நுனியிலுள்ள உணர்ச்சியைப் பேணிப் பாதுகாக்கிறது, மற்றும் சிறுநீர் மற்றும் மலத்திலிருந்தும் பாதுகாக்கிறது. அத்துடன், முன்தோல் சிறுநீருக்குரிய துவாரத்தையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. முன்தோலை அகற்றும்போது இந்தப் பாதுகாப்பு அம்சங்களும் அகற்றப்படுகிறது.

மதசார்பற்ற நுனித்தோல் வெட்டுதல் முக்கியமாக அழகுக்காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சையாகும். இது குழந்தையை “மற்றப் பையன்களை” போல் அல்லது “அவனுடைய தகப்பனை”ப் போல் தோற்றமளிக்க வைக்கும். சில பெற்றோர்கள், தங்களுடைய மகன் வளர்ந்தபின் அவனுடைய ஆணுறுப்பின் தோற்றத்தைக் குறித்து மற்றவர்களால் பரிகசிக்கப்படுவான் என்று கவலைப்படுகிறார்கள். தங்கள் குழந்தை ஒரு சிறிய வித்தியாசத்தைக் கொண்டிருப்பான் என்பதற்காக அவனைத் தேவையற்ற மருத்துவ அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்துவது நியாயமான காரணமா என்பதைப் பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்யவேண்டாம் என்பதற்கான வேறு காரணங்கள் பின்வருமாறு:

  • அறுவைச் சிகிச்சையில் சிக்கல்கள்: அறுவைச் சிகிச்சையில் கடுமையான பக்கவிளைவுகள் அரிது, ஆயினும் அவை சம்பவிக்கலாம். அவை தோல் அல்லது குறுதியோட்ட தொற்றுநோய்கள், இரத்தப்போக்கு, சதையழுகுதல், வடுக்கள் உண்டாதல், மற்றும் அறுவைச் சிகிச்சையின்போது உண்டாகக்கூடிய விபத்துக்கள் என்பவற்றை உட்படுத்தலாம்.
  • வலி: முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை ஒரு வலியை ஏற்படுத்தும் செயற்பாடாகும். செயற்பாட்டின்போது, அந்தப் பகுதியை மரத்துப் போகச் செய்வதற்காக மருத்துவர் மயக்கமருந்தை உபயோகிப்பார்.
  • மருத்துவச் செலவு: அநேக நாடுகளில் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சையானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடாகக் கருதப்படுகிறது. அதனால், இந்தச் செயற்பாட்டுக்காக நீங்கள் பணம் செலுத்தவேண்டும்.
  • விரைவாகத் தீர்மானம் எடுத்தல்: பெரும்பாலும் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்படும். உங்களுக்கு தீர்மானம் எடுப்பதற்கு மேலதிக நேரம் தேவைப்பட்டால், உங்கள் குழந்தைக்கு ஒரு மாத வயதாவதற்கு முன்பு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேலாக அதிக காலம் எடுத்தால், உங்கள் குழந்தைக்கு பொது மயக்கமருந்து தேவைப்படும்.

புதிதாய்ப் பிறந்த குழந்தையை முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்தபின் பராமரித்தல்

தொடக்கத்தில் வெட்டுக்காயம் சிவப்பாயும் மென்மையாயும் இருக்கும். அறுவைச் சிகிச்சை செய்தபின், முதல் இரண்டு நாட்களில் வலி குறையும், மற்றும் மூன்றாம் நாளில் பெரும்பாலும் போய்விட்டிருக்கும். வெட்டுக்காயத்திலுள்ள பொருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின் ஏழு முதல் 10 நாட்களுக்குள் விழுந்துவிடும். சில முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சையில் பிளாஸ்டிபெல் வளையம் என்றழைக்கப்படும் ஒரு கருவி உபயோகிக்கப்படும். இது அறுவைச் சிகிச்சையின் பின்னர் 10 முதல் 14 நாட்களில் விழுந்துவிடும். இந்த வளையம் தானாகவே விழுந்துவிடும். அதை இழுத்து விட வேண்டாம்; இழுத்தால் அது இரத்தப் போக்கை ஏற்படுத்தும்.

உங்கள் மகனின் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட ஆணுறுப்பை எப்படிப் பராமரிக்கலாம் என்பது பற்றிய விரிவான அறிவுறுத்தல்களை உங்கள் மருத்துவர் உங்களுக்குத் தருவார். பொதுவான சில குறிப்புகள் பின்வருமாறு:

  • உங்கள் மருத்துவர் மருந்துக்கட்டை அகற்றி விடும்படி உங்களுக்குச் சொல்லும்போது அதை அகற்றி விடுங்கள்.
  • காயத்திலிருந்து இரத்தம் தொடர்ந்து வடிந்தால் மருந்துக்கட்டை திரும்பவும் அதே இடத்தில் வைக்கவும். வெட்டுக்காயத்தில் மருந்துச் சல்லடைத் துணி ஒட்டிவிடாதவாறு காயத்தின் மேல் பெற்றோலியம் ஜெலியைப் பூசிவிடவும்.
  • காயமுள்ள பகுதியை ஒரு நாளில் பல முறைகள் அல்லது அது அழுக்காகும்போதெல்லாம் தண்ணீரால் சுத்தம் செய்யவும். சோப்பு உபயோகிக்க வேண்டாம்; அது எரிச்சலை உண்டாக்கும் மற்றும் அது அவசியமுமில்லை.
  • ஒவ்வொரு தடவையும் சுத்தம் செய்தபின்பு, வெட்டுக்காயத்தைப் பாதுகாப்பதற்கும், நிவாரணமடையும்போது அதை மென்மையாக வைத்திருப்பதற்காகவும் வெட்டுக்காயக் கோட்டின்மேல் பெற்றோலியம் ஜெலியைத் தடவவும்.

உங்கள் மகனின் அடுத்த மருத்துவ சந்திப்புத் திட்டத்தின்போது , அவனின் வெட்டுக்காயப்பகுதி குணமாகிவிட்டது மற்றும் எல்லாம் சரியாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்காக ,மருத்துவர் அவனின் ஆணுறுப்பைப் பரிசோதிப்பார்.

மருத்துவரை எப்போது அழைக்கவேண்டும்

அவசர கவனிப்பை எப்போது நாடவேண்டும் என உங்கள் மருத்துவர் உங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் கொடுப்பார். பின்வருவன சம்பவித்தால், உங்களுக்கு மிக அருகாமையிலிருக்கும் மருத்துவமனையின் அவசரநிலைப் பிரிவை உடனே அழையுங்கள் அல்லது அவனை அழைத்துச் செல்லுங்கள்:

  • உங்கள் மகனின் சிறுநீர் துளிகளாக அல்லது கசிந்து வெளியே வருகிறது
  • ஆணுறுப்பின் தலைப்பகுதி நீலம் அல்லது கறுப்பு நிறமாகிறது
  • வெட்டுக்காயத்திலிருந்து ஒரு சில துளிகளுக்கு மேல் இரத்தம் சொட்டுகிறது
  • முன்தோல் வெட்டப்பட்ட பகுதியில் தொற்றுநோய் ஏற்பட்டது போல தோன்றுகிறது அல்லது மஞ்சள் நிற சீழ் வடிகிறது
  • உங்கள் மகனுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது அல்லது அவன் நோயாளி போல தோற்றமளிக்கிறான்

அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட பகுதி உங்களுக்கு அசாதாரணமாகத் தோற்றமளித்தால், அல்லது உங்களுக்கு வேறு கவலைகள் இருந்தால், 24 மணி நேரங்களுக்குள் மருத்துவரை அழைக்கவும்.

புதிதாகப் பிறந்த காலங்களுக்குப் பிந்திய முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை

முன்தோல் வெட்டுப்படாத சில பையன்களுக்கு, இறுக்கமாக நீட்டப்பட்டிருக்கும் முன்தோலை சரிசெய்வதற்கு அல்லது முன்தோலுக்குக் கீழான தொற்றுநோய் திரும்பவும் வருவதைத் தடுப்பதற்கு முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த நிலைமைகளில், முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை மருத்துவ ரீதியாகத் தேவைப்படும் ஒரு செயற்பாடாகும். அத்துடன் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குச் செய்யப்படும் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சையைவிட இது மிகவும் சிக்கலானதாகும். வளர்ந்த குழந்தைகள், பையன்கள், மற்றும் ஆண்களுக்கு முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை மருத்துவமனையில் வைத்து ஒரு சிறுநீரக மருத்துவரால் செய்யப்படும். இதற்கு ஒரு சாதாரண மயக்கமருந்து தேவைப்படும். இந்தச் செயற்பாட்டுக்கு உட்படும் ஒருவர் அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக வேண்டும் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப்பின்னர் மயக்கமருந்திலிருந்து தெளிவடையவும் வேண்டும். தெளிவடையும் சமயத்தில் வலிநிவாரண மருந்து கொடுக்கப்படும்.

Last updated: octubre 18 2009