உங்கள் பிள்ளைக்கு வலியிருக்கும்போது: வீட்டில் பராமரித்தல்

Pain at home: Taking care of your child [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒரு பிள்ளையின் வலிக்கு வீட்டில் எப்படி நிவாரணமளிக்கலாம் என்பது பற்றிய ஆலோசனையை இந்தப் பக்கம் அளிக்கிறது

உங்கள் பிள்ளைக்கு வலி இருக்கும்போது வீட்டில் எப்படிப் பராமரிக்கலாம் என்பதைப் பற்றிய தகவல்களை இச் சிற்றேடு உங்களுக்கு அளிக்கிறது. வலி, விழுந்ததின் காரணமாக ஏற்பட்ட வெட்டுக்காயம், சுளுக்கு, தொண்டை வலி, காது வலி, அல்லது ஒரு உடைந்த எலும்பை சீர் செய்தல் மற்றும் வார்ப்பு வைத்தல்(காஸ்ட்) போன்ற, மருத்துவமனையில் செய்யப்பட்ட ஏதாவது செயற்பாட்டின் காரணமாக ஏற்பட்டதாக இருக்கலாம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பதனால், தங்கள் சொந்தப் பிள்ளைக்கான மிகச் சிறந்த வலி நிவாரணி எது என்பதைத் தீர்மானிப்பதில் அவர்கள் உதவி செய்யலாம்.

உங்கள் பிள்ளையின் வலியைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை

  • எல்லாப் பிள்ளைகளும் வலியை ஒரே மாதிரி உணருவதில்லை.
  • வலிக்கான ஒரு சம்பவம் நடந்ததைப் பின்தொடர்ந்துவரும் நாட்களில் வலி நிவாரணமடைந்துகொண்டே வரவேண்டும். வலி மோசமாகக்கூடாது.
  • வலி நிவாரண மருந்து உங்கள் பிள்ளையின் வலியைக் குறைக்க உதவி செய்யும்.
  • உங்கள் பிள்ளையை ஆறுதல் படுத்துவது அவனை இளைப்பாற்றும் மற்றும் வலியைக் குறைக்கும்.
  • உங்கள் பிள்ளையின் கவனத்தைத் திசை திருப்புவது வலியைக் குறைக்க உதவி செய்யலாம்.
  • உங்கள் பிள்ளைக்கு மருந்து கொடுப்பதைப் போல, அவனை ஆறுதல் படுத்துவது மற்றும் கவனத்தைத் திசை திருப்புவதும் முக்கியமானதாக இருக்கலாம்.

வலியை மதிப்பிடுதல்: உங்கள் பிள்ளை வலியில் இருப்பதை அறிதல்

சில சமயங்களில் உங்கள் பிள்ளைக்கு வலிக்கும்போது அதை உங்களுக்குத் தெரிவிப்பான். அவன் வலி, நோவு, பூபூ, புண் அல்லது அவுச் போன்ற வார்த்தைகளை உபயோகிப்பான். உங்கள் பிள்ளை வலியுள்ள பகுதியை சுட்டிக் காட்டுவான், அல்லது அந்த இடத்தை பேணிப்பாதுகாப்பான். உங்கள் பிள்ளை வலி இருக்கிறது என முறையிடாவிட்டால், அவனுக்கு எவ்வளவு வலி உள்ளது என அவனிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளை பெரியவனானால், உங்கள் பிள்ளைக்கு எவ்வளவு வலி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக 0 முதல் 10 வரையுள்ள வலி அளவுகோலை உபயோகிக்கலாம். 0 முதல் 10 வரையிலுள்ள அளவுகோலினால் உங்கள் பிள்ளையின் வலியையும் அளவிடுமாறு அவனைக் கேட்கவும். 0 என்பது வலியில்லை, மற்றும் 10 என்பது மிகவும் மோசமான வலியாகும். 0 முதல் 3 வரை மிகவும் வீரியம் குறந்த வலியாகும், 4 முதல் 6 வரை நடுத்தர அளவு வலி, 7க்கு அதிகமானது வீரியமான வலியாகும்.

உங்கள் பிள்ளையிடம் சிறிதளவு வலி, நடுத்தர அளவு வலி அல்லது அதிகளவு வலி இருக்கிறதா என்று கேட்டு, ஒரு வார்த்தை வலி அளவுகோலையும் (word pain scale) நீங்கள் உபயோகிக்கலாம்.

சில பிள்ளைகள் அவர்களது வலியைப் பற்றிப் பேசமாட்டார்கள்

உங்கள் பிள்ளைக்கு வலியைப் பற்றிப் பேசவோ அல்லது அதைப்பற்றி உங்களிடம் சொல்லவோ முடியாமலிருக்கலாம். உங்கள் பிள்ளையைக் கவனமாக அவதானித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பார்க்கவும். பெரும்பாலும், தங்களுடைய பிள்ளைக்கு வலி இருக்கிறதா என்பது பெற்றோர்களுக்குத் தெரியும்.

உங்கள் பிள்ளைக்கு வலி இருக்கிறதா என்பதை அறிய எதை எதிர்பார்க்க வேண்டும்

உங்கள் பிள்ளை முகத்தைச் சுளிக்கிறனா, அல்லது தனது காலால் உதைக்கிறானா என்பதை அவதானிக்கவும். அவன் தன் பற்களைக் கடிக்கிறானா? உங்கள் பிள்ளை தன் கால்களைத் தனது வயறுவரை இழுக்கிறானா? உங்கள் பிள்ளை முனகினால், அல்லது வழக்கத்துக்கு மாறாக அழுதால், அல்லது இருக்கமாக இருந்தால் அவனுக்கு வலி இருக்கலாம். வலியுள்ள ஒரு பிள்ளை அசைய விரும்பாதிருக்கலாம் அல்லது விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, அல்லது உணவு உண்பது போன்ற வழக்கமாகச் செய்யவிரும்பும் காரியங்களைச் செய்ய விரும்பாதிருக்கலாம்.

வலி நிவாரணம்: மருந்தின் மூலமாக உங்கள் பிள்ளையின் வலிக்கு வீட்டில் நிவாரணமளித்தல்

வலி நிவாரண மருந்தைக் கொடுக்கத் தாமதிக்கவேண்டாம்

உங்கள் பிள்ளைக்கு அதிகளவு வலி உண்டாகும்வரை காத்திருக்காது அவனுக்கு வலி நிவாரண மருந்து கொடுக்கும்போது அது சிறப்பாக வேலை செய்யும். நீங்கள் தாமதித்தால் வலி, நிவாரணமடைய அதிக நேரம் எடுக்கும்.

உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டிய மருந்தின் அளவு, அவனது வயது மற்றும் எடையில் தங்கியுள்ளது. வலி நிவாரண மருந்துக்கான மருந்துக் குறிப்புடன் நீங்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறியிருந்தால், மருத்துவர் மற்றும் மருந்தாளரால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வழிநடத்துதலைப் பின்பற்றவும்.

மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவும். பக்கவிளைவுகள் என்பது மருந்து தானே ஏற்படுத்தும் பிரச்சினைகள். பக்கவிளைவுகள் பற்றி உங்கள் மருத்துவர், தாதி, அல்லது மருந்தாளருடன் பேசவும்.

அநேக வித்தியாசமான வலி நிவாரண மருந்துகள் இருக்கின்றன. சில உதாரணங்கள் பின்வருமாறு:

அசெட்டமினோஃபென்

அசெட்டமினோஃபென் மருந்தின் பொதுவான வர்த்தகச் சின்னப் பெயர்கள் டைலெனோல், அல்லது டெம்ப்ரா ஆகும். இந்த ஓரே மருந்துக்கு மூன்று வித்தியாசமான பெயர்கள் இவையாகும். உங்கள் பிள்ளைக்கு வலி மிகக் குறைவானதாக இருந்தால் , ஒவ்வொரு 4 மணி நேரங்களுக்கு ஒரு முறை நீங்கள் அசெட்டமினோஃபென் மருந்தைக் கொடுக்கலாம். அசெட்டமினோஃபென் மருந்து, உங்கள் பிள்ளைக்குக்குக் கொடுப்பதற்கு ஒரு பாதுகாப்பான மருந்து. பெட்டி அல்லது போத்தலில் விபரிக்கப்பட்டபடி, உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தைக் கொடுக்கும்போது எந்தப் பெரும் பக்க விளைவுகளும் இருக்காது.

ஐபியூபுரோஃபென்

ஐபியூபுரோஃபென் மருந்தின் பொதுவான வர்த்தகச் சின்னப் பெயர்கள் அட்வில் மற்றும் மோட்ரின் ஆகும். இந்த ஓரே மருந்துக்கு மூன்று வித்தியாசமான பெயர்கள் இவையாகும். உங்கள் பிள்ளையின் வலிக்கு அட்வில் மருந்து கொடுப்பது சரியானதாக இருக்குமா என உங்கள் மருத்துவரிடம் கேட்கவும். ஐபியூபுரோஃபென் மற்றும் அசெட்டமினோஃபென் மருந்துகளை ஒருமித்து எடுப்பது உதவியாக இருக்கும்.

வேறு வலி நிவாரண மருந்துகள்

தாதி, முதிர்ச்சியடைந்த பயிற்சிசெய்யும் தாதி, அல்லது மருத்துவர் உங்கள் பிள்ளைக்கு வீட்டில் உபயோகிப்பதற்காக வேறு வலி நிவாரண மருந்துகளைத் தரலாம். உங்கள் பிள்ளைக்கு மருத்துவர் வேறு மருந்துகளை எழுதித் தந்தால், அவற்றை எப்படி மற்றும் எப்போது உட்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிக் கேட்பதற்கு நிச்சயமாக இருக்கவும். நீங்கள் வேறு மருந்துகளைத் தனியே உபயோகிக்கலாம் அல்லது அசெட்டமினோஃபென் மருந்துடன் சேர்த்து உபயோகிக்கலாம் என்பது பற்றி தாதி, முதிர்ச்சியடைந்த பயிற்சிசெய்யும் தாதி, அல்லது மருத்துவர் உங்களுக்குச் சொல்லுவார். மிதமான அல்லது கடுமையான வலிக்கு, உங்களுக்கு அபினிகள் அதாவது opioids (வலிமையான வலி நிவாரண மருந்துகள்) மருந்துக் குறிப்பில் எழுதிக் கொடுக்கப்படலாம். அபினிகள் என்பது மோர்ஃபைன், ஹைட்ரோமோர்ஃபைன், மற்றும் ஒக்ஸிகோடொன் போன்ற மருந்துகள். மருந்துக்குறிப்பில் எழுதப்பட்டிருக்கும் ஆலோசனைகளைக் கவனமாகப் பின்பற்றவும். உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரைத் தொடர்பு கொள்ளவும்.

மேற்பூசும் உணர்வு நீக்கி மருந்துகள் (கிறீம்)

உங்கள் பிள்ளைக்குத் தடுப்புமருந்து கொடுப்பதற்காக ஊசி ஏற்றுதல் போன்ற, வலியுள்ள செயற்பாடுகள் செய்யப்படப்போவதை நீங்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தருணங்கள் இருக்கின்றன. வலியைக் குறைப்பதற்கு உதவிசெய்வதற்காக நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் இருக்கின்றன. எல்மா, மக்ஸிலீன், அல்லது அமெடொப் போன்ற தோலை மரத்துப்போகச்செய்யும் ஒரு உணர்வு நீக்கி கிறீமை நீங்கள் உபயோகிக்கலாம். மருந்து அட்டைப் பெட்டியிலுள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றவும்.

மருந்தில்லாமல் வலியைக் குறைத்தல்

மருந்தில்லாமல் வலியைக் குறைப்பதற்கு இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. ஒன்று, உடல்ரீதியாக ஆதரவு கொடுக்கும் முறைகள், மற்றது உளவியல் ரீதியாக கவனச்சிதறலை ஏற்படுத்தும் தந்திரம்.

உடல்ரீதியான ஆதரவு வலியைக் குறைக்க வழிசெய்யும்

உங்கள் பிள்ளைக்குச் சிறந்தமுறையில் ஆதரவு கொடுக்கக்கூடிய வழிகளில் அவனைத் தேற்றவும்.

  • ஐஸ் பைகள்: வீக்கம் இருந்தால் இது தான் மிகச் சிறந்த தெரிவு: ஐஸ் பைகளை அதிகபட்சம் 15 நிமிடங்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை உபயோகிக்கவும்.
  • ஈர வெப்பம்: வீக்கம் ஒரு பொருட்டாக இல்லாது மற்றும் கடுமையான காயமடைந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் இது தான் மிகச் சிறந்த தெரிவு. ஈர வெப்பத்தை அதிகபட்சம் 20 நிமிடங்களுக்கு, ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை உபயோகிக்கவும். தீக்காயம் ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதற்காக வெப்பம் “வெதுவெதுப்பாக” இருக்கவேண்டும் “சூடாக” இருக்கக்கூடாது.
  • அவனைத் தூக்கி, அரவணைத்து, தாலாட்டி, அல்லது தடவிக் கொடுக்கவும்.
  • வலியுள்ள இடத்தை தடவி அல்லது தேய்த்துவிடவும்.
  • புண்ணுள்ள பகுதிக்குக் கீழே ஒரு தலையணையை வைக்கவும்.
  • படுக்கையிலிருந்து எழுந்திருத்தல் மற்றும் அசைதல் மற்றும் படுத்திருக்கும் நிலையை மாற்றுதல் உதவியாக இருக்கும்.

உளவியல் ரீதியில் கவனத்தைச் சிதறடிக்கும் தந்திரங்கள் வலியைக் குறைக்கும்

உங்கள் பிள்ளையின் கவனத்தை அவனது வலியிலிருந்து திசை திருப்புவதன் மூலம் இவைகள் உதவிசெய்யும். சில பிள்ளைகளின் கவனம் பின்வருவனவற்றால் திசை திருப்பப்பட்டுவிடும்:

  • தொலைக்காட்சி பார்த்தல், வீடியோ, டிவிடிக்கள் அல்லது கணனி விளையாட்டுகள்
  • கதை சொல்லுதல்
  • குமிழ்கள் ஊதுதல்
  • உங்களுடன் விளையாடுதல்
  • அவர்களுக்கு மிகவும் விருப்பமான விளையாட்டுப் பொருளுடன் விளையாடுதல்

உங்கள் பிள்ளை எப்படி இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்தல் (வலியை மறு மதிப்பீடு செய்தல்)

உங்கள் பிள்ளையின் வலியைக் குறைப்பதற்கு நீங்கள் உதவி செய்தபின்னர், வலியில் மாற்றமிருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பது முக்கியம். நீங்கள் பின்வருமாறு சோதித்துப் பார்க்கலாம்:

  • உங்கள் பிள்ளைக்கு வலி நிவாரண மருந்து கொடுத்து 1 மணி நேரத்தின் பின்னர் அவனுக்கு எவ்வளவு வலி இருக்கிறது என்பதைச் சோதித்துப் பார்க்கவும்.
  • 0 முதல் 10 வரையுள்ள அளவுகோலில் வலி எப்படி இருக்கிறது “சிறிதளவு வலி, அல்லது ”அதிகளவு வலி” இருக்கிறதா என்பதைப்பற்றி உங்கள் பிள்ளையிடம் கேட்கவும் அல்லது அவனது நடவடிக்கைகளை கவனமாக அவதானிக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு இன்னமும் வலி இருந்தால், உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசனைக்காக அழைக்கவும்.
  • உங்கள் பிள்ளையைத் தேற்றி அவனது கவனத்தை வலியிலிருந்து திசை திருப்ப முயற்சிக்கவேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்.
  • வலி மருந்துகளின் சேர்க்கை, உடல்ரீதியான ஆதரவு மற்றும் உளவியல்ரீதியான கவனச் சிதறல்கள் வலியைக் குறைக்க உதவிசெய்யாவிட்டால், அல்லது உங்கள் பிள்ளையின் வலி மோசமாகிக்கொண்டே போனால், உங்கள் மருத்துவரை அழைக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • எல்லாப் பிள்ளைகளும் வலியை ஒரே விதமாக உணரமாட்டார்கள்.
  • உங்கள் பிள்ளைக்கு எந்தளவு வலி இருக்கிறது என்பதை அவனிடம் கேட்பதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் மற்றும் அவனது நடவடிக்கைகளை அவதானிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • வலி நிவாரண மருந்துகளின் மூலம் உங்கள் பிள்ளையின் வலியைக் குறைக்கலாம். தாதி, மருத்துவர் அல்லதுமருந்தாளர் உங்களுக்குத் தரும் வழிநடத்தல்களை எப்போதும் பின்பற்றவும்.
  • உடல்ரீதியான முறைகள் மற்றும் நடவடிக்கை முறைகளினாலும் உங்கள் பிள்ளையின் வலியைக் குறைக்கலாம்.
  • உங்கள் பிள்ளையின் வலியை மறு- மதிப்பீடு செய்யவும். ​
Last updated: septiembre 07 2010