உள் நாக்குச் சதை (டொன்சில்) அறுவைச் சிகிச்சை அல்லது உள் நாக்குச் சதை மற்றும் அடினோயிட் அறுவைச் சிகிச்சை; அறுவைச் சிகிச்சையின் பின்னர் உங்கள் பிள்ளையைப் பராமரித்தல்

Tonsil surgery or tonsil and adenoid surgery: Caring for your child after the operation [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உள் நாக்குச் சதைகள் மற்றும் அடினோயிட்டுகள் ஆகியவை பெரிதானால் அகற்றப்படலாம். பிள்ளைகள் உள் நாக்குச் சதை அகற்றுதல் அல்லது அடினோயிட் அகற்றுதல் என்பதைப் பற்றியும

உங்கள் பிள்ளையின் உள் நாக்குச் சதையை வெளியே எடுப்பதற்கு அவனுக்கு ஒரு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். அதே நேரத்தில் அவனின் அடினோயிட்டுக்களையும் வெளியே எடுப்பதற்கு ஒரு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். இந்த அறுவைச் சிகிச்சைகள் உள்நாக்குச் சதை அறுவை (டொன்சிலெக்டமி) மற்றும் அடினோயிட் அகற்றல் (அடினோடெக்டமி) என அழைக்கப்படும்

உள் நாக்குச் சதை ( டொன்சில்) என்றால் என்ன?

உள் நாக்குச் சதை என்பது வாயின் பின்பக்கமாக, நாக்குக்கு அருகில் காணப்படும் திசுவின் சிறிய திசுத் துண்டுகளாகும். அவை கிருமிகளுடன் போராட உதவுகின்றன. தொண்டையின் இரு பாகங்களிலும் ஒவ்வொரு உள் நாக்குச் சதை இருக்கும்.

அடினோயிட்டுக்கள் என்றால் என்ன?

அடினோயிட்டுக்கள் என்பது மூக்குக்குப் பின்பாக இருக்கும் திசுக்களின் கட்டிகளாகும். உங்கள் பிள்ளையின் வாயினூடாகப் பார்க்கும்போது, உங்கள் பிள்ளையின் அடினோயிட்டுக்களை உங்களால் பார்க்க முடியாது.

உள் நாக்கு மற்றும் அடினாயிட் திசு அடினோயிட் மற்றும் உள்நாக்குத் தசை அமைவிடங்கள்
உள் நாக்கும் (டொன்சில்) அடினாயிட் திசுக்களும் நிணநீர்த் திசுக்களால் உருவாக்கப்பட்டிருப்பதுடன் தொற்று நோய்க்கு எதிரான எதிர்ப்புச் சக்தியின் ஒரு பாகமாக அமைகின்றது.  தொடர்ச்சியான தொற்றுநோய்களின் பின் அவை பெரிதடையக்கூடும்.

வீக்கத்தினால் பெரிதாகிய உள் நாக்குச் சதை மற்றும் அடினோயிட்டுக்களை அகற்றுதல்

பல தொற்றுநோய்கள் உண்டானபின், உள் நாக்குச் சதைகள் மற்றும் அடினோயிட்டுக்கள் அடிக்கடி வீங்கிப் பெரிதாகும். இது சுவாசித்தலுக்கு இடையூறுண்டாக்கும் . வீங்கிப் பெரிதாய அடினோயிட்டுக்களும், நடுக் காது மற்றும் மூக்கின் பிற்பகுதியை இணைக்கும் குழாயையும் பாதிக்கும். உள் நாக்குச் சதைகளும் அடினோயிட்டுக்களும் வீங்கிப் பெரிதாகும்போது, அவை வெளியே எடுக்கப்பட வேண்டிவரலாம்.

உள் நாக்குச் சதைகள் மற்றும் அடினோயிட்டுக்களை அகற்றுவது சுவாசிப்பதை இலகுவாக்கும். உங்கள் பிள்ளைக்கு காது மற்றும் தொண்டையிலுண்டாகும் தொற்றுநோய்களையும் குறைக்க இது உதவும்.

தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் (ஒடோ-லாரின் –கொலோஜிஸ்ட்) இந்த அறுவை சிகிச்சையைச் செய்வார். இவர் காதுகள், மூக்கு, மற்றும் தொண்டையிலுள்ள பிரச்சினைகளுக்கு சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் ஆவார்.

அறுவைச் சிகிச்சைக்கு முன்னர்

அறுவைச் சிகிச்சை செய்வதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பு, உங்கள் பிள்ளை உணவு உண்பதையும் பானங்கள் குடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

உங்கள் பிள்ளை எப்போது உணவு உண்பதையும் பானங்கள் குடிப்பதையும் நிறுத்த வேண்டும் என்பதை உங்கள் மருத்துவர் அல்லது தாதி உங்களுக்குச் சொல்லுவார்.

இந்தத் தகவல்களை கீழே எழுதவும்:

  • அறுவைச்சிகிச்சைக்கான திகதி மற்றும் நேரம்:
  • எப்போது உங்கள் பிள்ளை உணவு உண்பதை நிறுத்த வேண்டும்:
  • உங்கள் பிள்ளை எப்போது தெளிவான பானங்கள் பருகுவதை நிறுத்த வேண்டும்:
  • நினைவில் வைக்கவேண்டிய வேறு குறிப்புகள்:

உள் நாக்கு சதைகள் மற்றும் அடினோயிட்டுகளை அகற்றும் அறுவை சிகிச்சை

மருத்துவர் உங்கள் பிள்ளைக்கு ஒரு பொதுவான மயக்க மருந்து என்றழைக்கப்படும் ஒரு விசேஷ “நித்திரைக்கான மருந்தை” க் கொடுப்பார். இது உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சை நேரம் முழுவதும் நித்திரை செய்வான் மற்றும் எந்த வலியையும் உணரமாட்டான் என்பதை நிச்சயப்படுத்தும்.

உங்கள் பிள்ளை நித்திரை செய்து கொண்டிருக்கும்போது, மருத்துவர் உள் நாக்குச் சதைகளை உங்கள் பிள்ளையின் வாயினூடாக அகற்றி விடுவார். உங்கள் பிள்ளைக்கு அடனோயிட்டுகளையும் அகற்றவேண்டியிருந்தால், மருத்துவர் அவற்றையும் ஒரே சமயத்தில் அகற்றிவிடுவார். மருத்துவர் இரத்தக் கசிவையும் நிறுத்திவிடுவார். உங்கள் பிள்ளைக்கு தையல்கள் போடப்படமாட்டாது.

பெரும்பாலும் இத்த அறுவைச் சிகிச்சை 45 முதல் 60 நிமிடங்கள் வரை நடைபெறும்.

உங்கள் பிள்ளை முழுமையாக விழித்தெழுந்தவுடன் நீங்கள் அவனைச் சந்திக்கலாம்.

அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் அறையில் வேலை செய்யும் ஒரு தொண்டர் உங்களை உங்கள் பிள்ளையிடம் அழைத்துச் செல்வார்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர்

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், நாங்கள் உங்ள் பிள்ளையை நிவாரணமடையும் அறை அல்லது மயக்க மருந்து கொடுக்கப்பட்டபின் பராமரிக்கும் பகுதி (PACU) என்றும் அழைக்கப்படும் பகுதிக்கு அழைத்துச் செல்லுவோம். இந்தப் பகுதியில் தான் உங்கள் பிள்ளை விழித்து எழுவான். இந்தப் PACU பகுதியில் உங்கள் பிள்ளை 1 மணி நேரம் வரை தங்கியிருப்பான். அதன் பின்பு நாங்கள் அவனை தாதிகள் மருத்துவப் பிரிவுக்கு மாற்றுவோம்.

உங்கள் பிள்ளை தாதிகள் மருத்துவப் பிரிவில் மிகவும் கவனமாகக் கண்காணிக்கப்படுவான்

  • உங்கள் பிள்ளை வாயினால் நீராகாரங்களை எடுத்துக் கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுவான். உங்கள் பிள்ளை தெளிவான நீராகாரங்கள் (தண்ணீர் அல்லது அப்பிள் ஜூஸ் போன்ற, உங்களால் ஊடாகப் பார்க்கக்கூடிய திரவங்கள்), ஐஸ் கட்டிகள், அல்லது ஃபிறீஸீஸ் போன்றவற்றை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்குவான். உங்கள் பிள்ளையால் உறிஞ்சிக் குடிக்க முடிந்தவுடனே அவனால் கோப்பையிலிருந்தும் நீராகாரங்களைக் குடிக்க முடியும்.
  • உங்கள் பிள்ளையின் உடல் வெப்பநிலை அடிக்கடி எடுக்கப்படும்.
  • உங்கள் பிள்ளையின் கையில் நரம்பு மூலம் மருந்து உட்செலுத்தும் குழாய் இன்னும் இருக்கும். நீராகாரங்கள் அல்லது மருந்துகள் இனிமேலும் ஏற்றத் தேவையில்லாத நிலை வரும்போது குழாய் அகற்றப்படும்.
  • தேவைப்பட்டால், உங்கள் பிள்ளைக்கு வலிநிவாரண மருந்து கொடுக்கப்படும்
  • உங்கள் பிள்ளை வாந்தி எடுக்கிறானா அல்லது அவனுக்கு இரத்தக் கசிவு இருக்கிறதா என்பதை தாதிப் பணியாளர்கள் கண்காணிப்பார்கள்.
  • ஏதாவது சிக்கல்கள் இருந்தால், தாதிமார் மருத்துவருக்கு அறிவிப்பார்கள்.
  • உங்கள் பிள்ளை முழுமையாக விழிப்படைந்தவுடன், அவன் உதவியுடன் எழுந்து கழிப்பறைக்குப் போகலாம்.
  • உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சையின்போது அல்லது அது முடிந்தவுடன் சிறிதளவு இரத்தத்தை விழுங்கியிருந்தால், தடித்த , கபில நிறத் திரவத்தை வாந்தி எடுக்கக்கூடும். இது சாதாரணமானது. உங்கள் பிள்ளை தொடர்ந்து வாந்தியெடுத்தால், வயிற்றுக் குழப்பத்தை சரிசெய்வதற்க்காக நாங்கள் அவனுக்கு IV மூலமாக மருந்தை உட்செலுத்துவோம்.

அறுவைச் சிகிச்சைக்குப்பின் உங்கள் பிள்ளையின் வலியைச் சமாளித்தல்

அறுவைச் சிகிச்சைக்குப்பின் உங்கள் பிள்ளைக்கு வலியிருந்தால், அவனுக்கு வலி நிவாரண மருந்துகள் பின்வரும் முறைகளில் கொடுக்கப்படும்:

  • விழுங்குவதற்குத் திரவமாக
  • உங்கள் பிள்ளையால் வலிநிவாரண மருந்தை விழுங்க முடியாவிட்டால், அவனின் ஆசன வாயிலினூடாக ஒரு உள்வைப்பு மருந்து கொடுக்கப்படும்.

உங்கள் பிள்ளையை மேலும் சௌகரியமாக உணரவைக்கும் வழிகள் பின்வருமாறு:

  • தொண்டையை ஈரமாக வைக்கும் ஈரப்பதமுள்ள காற்று
  • உங்கள் பிள்ளையின் தலையையும் தோள்களையும் உயர்த்தி வைப்பது வீக்கத்தைக் குறைக்கும்.

வழக்கமாக ஒரேயொரு நாள் மட்டும் மருத்துவமனையில்

பெரும்பாலான பிள்ளைகள் அறுவைச் சிகிச்சை முடிந்த 6 முதல் 8 மணி நேரங்களுக்குள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பத் தயாராயிருப்பார்கள். சிலவேளைகளில் அதிக நேரம் தங்க நேரிடலாம்.

உங்கள் பிள்ளையை மோட்டார் வண்டி அல்லது டாக்ஸி மூலம்தான் வீட்டுக்குக் கொண்டுபோகவேண்டும். உங்கள் பிள்ளையின் சௌகரியம் மற்றும் பாதுகாப்புக்காக அவனை பேரூந்தில் அல்லது சப்வே ரயில் மூலம் கொண்டு செல்லவேண்டாம்.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

வலி

அறுவைச் சிகிச்சைக்குப்பின் உங்கள் பிள்ளைக்கு கொஞ்சம் வலி இருக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு தொண்டையில் புண் வலியிருக்கும். தொண்டைப்புண் காரணமாக, அவனுக்குக் காதுவலியும் இருக்கலாம். அறுவைச் சிகிச்சை செய்து 5 அல்லது 6 நாட்களின் பின்பு உங்கள் பிள்ளையின் தொண்டைப்புண் அல்லது காதுவலி சிறிது காலத்துக்கு மோசமாகலாம். இது சாதாரணமானது.

உங்கள் பிள்ளைக்கு கழுத்து விறைப்பும் இருக்கும். இது மோசமானால், உங்கள் மருத்துவரை அழையுங்கள்.

உங்கள் பிள்ளைக்கு வலி இருந்தால், அவனுக்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல் அல்லது டெம்ப்ரா போன்ற) கொடுங்கள். அறுவைச் சிகிச்சை முடிந்து 2 வாரங்களுக்கு உங்கள் பிள்ளைக்கு ஐபியூபுரோஃபென்( மோட்ரின் அட்வில், அல்லது மைடோல் போன்ற) அல்லது ASA (அசெட்டில் சாலிசிலிக் அசிட் அல்லது ஆஸ்பிரின் என்று அறியப்பட்ட) கொடுக்க வேண்டாம். இந்த மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்குப் பின் உங்கள் பிள்ளையின் இரத்தம் கசியும் ஆபத்தை அதிகரிக்கும். உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்துகள் தேவைப்பட்டால், “தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்” இடம் இதைக் கொடுக்கலாமா என்பதைக் கேளுங்கள்.

உங்கள் மருத்துவர் சில வலி நிவாரண மருந்துகளையும் உங்கள் பிள்ளைக்கு எழுதிக் கொடுப்பார். உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டுச் செல்லுவதற்கு முன்பாக தாதி அந்த மருந்துச் சீட்டை உங்கள் பிள்ளையிடம் கொடுப்பார்.

நீராகாரங்கள் குடித்தல்

அறுவைச் சிகிச்சைக்குப்பின் உங்கள் பிள்ளை அதிகளவு நீராகாரங்கள் குடிக்கவேண்டியது மிகவும் முக்கியம். அறுவைச் சிகிச்சைக்குப்பின், முதற் சில நாட்களுக்கு , உங்கள் பிள்ளை ஒரு நாளில், குறைந்தது 4 கிளாஸ் நீராகாரங்கள் எடுத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் பிள்ளை, அதிகளவு நீராகாரங்கள் அல்லது விரும்பினால், ஜெல்-ஒ மற்றும் யோகேட் போன்ற திரவ உணவுகளைப் பருகவேண்டும்.

7 முதல் 8 நாட்களுக்கு உங்கள் பிள்ளைக்கு ஓரேஞ்சு, எலுமிச்சை, அல்லது கிரேப்ஃப்ரூட் சாறுகள் அல்லது சிற்றஸ் பழங்களைக் கொடுக்க வேண்டாம். இவை அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. மற்றும் உங்கள் பிள்ளைக்கு அவை குடிக்கும்போது வேதனையைக் கொடுக்கும்.

உணவு உண்ணுதல்

உங்கள் பிள்ளை, வாந்தி எடுக்காமல் நீராகாரங்களைப் பருக முடியும்போது, நூடில்ஸ், முட்டை, மற்றும் யோகேட் போன்ற மென்மையான உணவுகளையும் அவனால் உண்ண முடியும். மெனமையான உணவுகளை உங்கள் பிள்ளை சிரமமின்றி உண்ண முடியும்போது, அவன் வழக்கமான உணவுகளை உண்ணலாம்.

உங்கள் பிள்ளை, அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், 2 வாரங்களுக்கு, டோஸ்ற், அல்லது பிற்ஸா, போன்ற கடினமான உணவுகளை உண்ணக்கூடாது. இந்த உணவுகள் அவன் தொண்டையில் உராசி வலி மற்றும் இரத்தக்கசிவை உண்டாக்கும்.

வாயைப் பராமாரித்தல்

அறுவைச் சிகிச்சைக்குப்பின் 2 வாரங்களுக்கு உங்கள் பிள்ளையின் வாயில் வித்தியாசமான மணம் இருக்கும். உங்கள் பிள்ளையை தண்ணீரால் மெதுவாக வாயைக் கழுவ வைக்கவும் அல்லது மென்மையாக பல் துலக்க வைக்கவும். உங்கள் பிள்ளையை வாய் கொப்பளிக்க, அல்லது தொண்டையின் பிற்பகுதியை வேகமாகக்கடந்து போக எதனையும் அனுமதிக்க வேண்டாம்.

உங்கள் பிள்ளையின் தொண்டையில் , பல நாட்களாக உள் நாக்குச் சதை இருந்த இடத்தில், தற்போது வெள்ளை நிறப் படலங்கள் காணப்படலாம். இது உங்கள் பிள்ளைக்கு தொற்றுநோய் இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தாது. உங்கள் பிள்ளையின் தொண்டையைக் காப்பாற்றுவதற்காக 7 முதல் 10 நாட்களுக்கு, அவன் இரும, சத்தமாகப் பேச, அல்லது தொண்டையைத் தெளிவாக்க அதிகம் முயற்சிக்காமலிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை வாயைத் திறந்தபடி வைத்துத் தும்ம அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அறுவைச் சிகிச்சைக்குப்பின்னர், குறைந்தது 1 வாரத்திற்காவது உங்கள் பிள்ளை மூக்கைச் சிந்த அனுமதிக்காதீர்கள். மூக்கு ஒழுகினால், ஒரு டிஷூவைக் கொண்டு அவன் தன் மூக்கைத் துடைக்க வேண்டும்.

உங்கள் பிள்ளை மேலும் சௌகரியமாகச் சுவாசிக்க உதவி செய்வதற்கு, ஹியூமிடிஃபையர் என்ற கருவியை நீங்கள் உபயோகிக்கலாம். இந்தக் கருவி காற்றை குளிர்வித்து ஈரப்பதமுள்ளதாக மாற்றும். இதை உங்கள் பிள்ளையின் படுக்கைக்குப் பக்கத்தில் வைக்கவும்.

வலியைக் குறைப்பதற்காகவும் உங்கள் பிள்ளையை மேலும் சௌகரியமாக வைப்பதற்காகவும் அவனின் தலை மற்றும் தோள்களை உயர்த்தி வைக்கவும்.

உங்கள் பிள்ளையின் அடினோயிட்டுகளும் அகற்றப்பட்டிருந்தால், உங்கள் பிள்ளையின் குரல் அவன் மூக்கினூடாகப் பேசுவதைப்போல் ஒலிக்கும். இது சாதாரணமானது. இது சில வாரங்களுக்கு அல்லது அடினோயிட்டுகள் மிகவும் பெரியதாயிருந்தால், 3 மாதங்கள் வரை நீடிக்கலாம்.

நடவடிக்கைகள்

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் 1 வாரத்திற்கு உங்கள் பிள்ளை முடிந்தளவுக்கு அமைதியாக இருக்கவேண்டும். உங்கள் பிள்ளையை கடினமான விளையாட்டுப் போட்டிகள் அல்லது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய போட்டி விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்கவேண்டாம்.

உங்கள் பிள்ளை வழக்கம்போல ஷவரில் அல்லது சாதாரணமாகக் குளிக்கலாம். உங்கள் பிள்ளை மக்கள் கூட்டம் அல்லது தொற்றுநோய் மற்றும் தடிமல் உள்ளவர்கள் இருக்குமிடத்திலிருந்து தூர விலகியிருக்கவேண்டும்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் 1 வாரம் அல்லது 10 நாட்களின் பின் பாடசாலைக்கோ அல்லது பகல் நேரப் பராமரிப்பு நிலையத்துக்கோ செல்லமுடியும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் 2 வாரங்களுக்கு, உங்கள் பிள்ளையை நகரத்தை விட்டு நீண்ட தூரச் சுற்றுலா செல்ல அநுமதிக்கக்கூடாது.

உங்கள் பிள்ளைக்கு ஒரு தொடர் சிகிச்சை தேவைப்படலாம்

“காது மூக்கு தொண்டை” மருத்துவமனைத் தாதி, அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் 2 வாரங்களுக்குள், உங்கள் பிள்ளைக்கு ஏதாவது பிரச்சினை உள்ளதா என்றும் திரும்பவும் மருத்துவரை சந்திக்க வேண்டிய தேவை இருக்கிறதா என்றும் அறிந்து கொள்வதற்காக ,உங்களை சந்திப்பார். “காது மூக்கு தொண்டை” மருத்துவர் உங்கள் பிள்ளையை திரும்பவும் பரிசோதிக்கவேண்டும் என்று சொன்னால், உங்கள் பிள்ளைக்கு ஒரு சந்திப்புத் திட்டத்தை ஏற்பாடு செய்வோம்.

மருத்துவரை அழைக்கவேண்டிய தேவைகள்

உங்கள் பிள்ளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் அவனுக்குப் பின்வரும் அறிகுறிகள் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் “காது மூக்கு தொண்டை” மருத்துவரை அல்லது, “காது மூக்கு தொண்டை” மருத்துவமனையை அல்லது உங்கள் குடும்ப மருத்துவரைத் தயவு செய்து அழையுங்கள்:

  • 38.5⁰ C (101⁰ F) அல்லது அதற்கும் அதிகமாகக் காய்ச்சல் இருந்தால்
  • தொடர்ந்து வாந்தி இருந்தால்
  • வலி தொடர்ந்து மோசமடைந்துகொண்டேபோனால்
  • நீராகாரம் உட்கொள்ள மறுத்தால்
  • உங்கள் பிள்ளை, அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் 12 மணி நேரங்களுக்குள் சிறுநீர் கழிக்காவிட்டால்
  • மூக்கில் அல்லது வாயில் புதிய இரத்தம் காணப்பட்டால்

உங்கள் பிள்ளைக்கு இரத்தக்கசிவு அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், அல்லது நீங்கள் கவலையடைந்தால், தாமதிக்க வேண்டாம். உடனே, உங்கள் பிள்ளையை உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியவர்கள் பற்றிய தகவல்களை கீழே எழுதவும்:

“காது மூக்கு தொண்டை” மருத்துவரின் பெயர் மற்றும் அழைப்பு எண்:

“காது மூக்கு தொண்டை” மருத்துவமனைத் தாதியின் அழைப்பு எண்:

குடும்ப மருத்துவரின் பெயர் மற்றும் அழைப்பு எண்:

முக்கிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளையின் வீங்கிப் பெரிதாகிய உள் நாக்குச் சதைகள், மற்றும் சிலவேளைகளில் அவனது அடினோயிட்டுகளை அகற்றுவதற்காக அவனுக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும்.
  • உங்கள் பிள்ளையின் உள் நாக்குச் சதைகள் மற்றும் அடினோயிட்டுகளை அகற்றும்போது அவன் நித்திரையாயிருப்பான். எந்த வலியையும் உணரமாட்டான்.
  • பெரும்பாலான பிள்ளைகளுக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்ற அன்றே வீடு திரும்ப முடியும்.
  • உங்கள் பிள்ளை தன் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட அல்லது உணவை உண்ணத்தொடங்க ஏறக்குறைய 1வாரம் அல்லது 10 நாட்கள் ஆகும்.
Last updated: noviembre 10 2009