காக்காய் வலிப்பு நோய் (எப்பிலெப்ஸி): ஒரு கண்ணோட்டம்

Epilepsy: An overview [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

நோய்க்கான சிகிச்சைகளின் தெரிவுகள் பற்றிய தகவலுடன், வலிப்பு நோய் மற்றும் காக்காய் வலிப்பு நோய் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

காக்காய் வலிப்பு நோய் (எப்பிலெப்ஸி) என்றால் என்ன?

காக்காய் வலிப்பு நோய், அல்லது வலிப்பு நோய் (சீஷர்), என்பது பல்வேறு வித்தியாசமான நிலைமைகளுக்கான ஒரு பொதுவான பெயர். ஒரு பிள்ளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூண்டப்படாத வலிப்பு நோய் ஏற்படும்போது அவனு(ளு)க்குக் காக்காய் வலிப்பு நோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறது. “தூண்டப்படாத” என்பது ஒரு கடுமையான நோய், காய்ச்சல், அல்லது தலையின் காயம் என்பனவற்றால் ஏற்படாத வலிப்பு நோய்.

வலிப்பு நோய் (சீஷர்) என்பது என்ன?

வலிப்பு நோய் மூளையில் ஒரு திடீர் மின்சாரக் குழப்பத்தினால் ஏற்படுகிறது. மூளை உடலைக் கட்டுப்படுத்துவதனால், இந்தக் குழப்பம் உடலைப் பாதிக்கும். மூளையில் வலிப்பு நோய் எங்கே ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து, வலிப்பு நோய் வித்தியாசமான ஆட்களில் வித்தியாசமாகத் தோன்றும். அவை பின்வருமாறு:

  • அப்சென்ஸ் வலிப்பு நோயுள்ள ஒரு பிள்ளை பகற்கனவு காண்பவன் போல அல்லது ஒரு சில செக்கன்டுகளுக்கு “கவனச் சிதறல்” (ஸ்பேசிங் அவுட்) டைந்ததைப்போல தோற்றமளிக்கலாம்.
  • எளிமையான பகுதியான வலிப்புநோயுள்ள ஒரு பிள்ளை இல்லாத ஒரு சத்தத்தைக் கேட்கலாம், அல்லது ஒரு கையில் திடீர்த் தசை இழுப்பு ஏற்படலாம்.
  • டோனிக்-க்ளோனிக் வலிப்பு நோயுள்ள ஒரு பிள்ளை தரையில் விழலாம் மற்றும் கடுமையாக நடுங்கலாம்.
  • வலிப்பு நோயுண்டான ஒரு பிள்ளை சுயநினைவை இழக்கலாம், அல்லது தனது சுற்றாடலுக்கான விழிப்புணர்வுடனிருப்பாள் மற்றும் அவளால் பேச முடியும்.

வலிப்புநோய், ஒரு காயம், ஒரு கட்டி, ஒரு வடு, அல்லது மூளை நரம்பில் ஒரு சிக்கல் என்பனவற்றால் ஏற்படலாம். ஆயினும், பெரும்பாலும் வலிப்பு நோய்க்கு அறியப்பட்ட உடல்ரீதியான காரணங்கள் இருக்காது. MRI அல்லது CT ஸ்கானில் மூளை முற்றிலும் இயல்பாக இருப்பதைப் போலவே தோற்றமளிக்கும். இந்நிலைமை பெரும்பாலும் பிள்ளைகளில் காணப்படும்.

ஒரு முறை வலிப்பு உண்டாவது, உங்கள் பிள்ளைக்குக் காக்காய் வலிப்பு நோய் இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தாது. ஒரு முறை வலிப்பு உண்டான பிள்ளைகளில் பாதிப்பேருக்கு இரண்டாவது முறை வலிப்பு ஏற்பட்டதில்லை. ஆனால் இரண்டாவது முறை வலிப்பு உண்டாவது, அந்தப் பிள்ளைக்கு மேலும் அதிக முறைகள் வலிப்பு உண்டாகலாம் என்பதை அர்த்தப்படுத்தும். எனவே இந்த நிலைமையில் பெரும்பாலும் சிகிச்சை செய்வது பற்றிச் சிந்திக்கப்படுகிறது.

சில வகையான காக்காய் வலிப்பு நோய்க்கு மருந்தினால் இலகுவாகச் சிகிச்சையளிக்கப்படலாம். மற்றவை ஒரு விசேஷ உணவுக் கட்டுப்பாட்டுக்குப் பிரதிபலிப்புக் காண்பிக்கும். மற்றவற்றிற்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். ஒரு பிள்ளை ஒரு மருந்துக்கு நல்ல முறையில் பிரதிபலிப்பைக் காண்பிக்கலாம். வேறொரு பிள்ளைக்கு இது முற்றிலும் பொருந்தாததாக இருக்கலாம். காக்காய் வலிப்பு நோய் ஒரு சிக்கலான ஒழுங்கின்மை. அதனால், பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள், மற்றும் மருத்துவர்களுக்கு உண்மையில் என்ன சம்பவிக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கான மிகச் சிறந்த மருந்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாகவும் மன உளைச்சலைத் தருவதாகவும் இருக்கும்.

காக்காய் வலிப்பு நோய்க்கான சிகிச்சை

பெரும்பாலும் சிகிச்சையின் முதற் தெரிவு, மருந்து. காக்காய் வலிப்பு நோயுள்ள பெரும்பாலான பிள்ளைகளுக்கு, முதலில் முயற்சி செய்த மருந்துகள் அவர்களது வலிப்பைக் கட்டுப்படுத்தும். ஆயினும், ஒரு நியாயமான பரிசோதனைக் காலத்தின் பின்பும் மருந்துகள் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் மருந்துகளை மாற்றும்படி அல்லது வேறு மருந்துகளைச் சேர்த்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்யலாம்.

சில பிள்ளைகளுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வித்தியாசமான மருந்துகள் அல்லது மருந்துகளின் ஒரு இணைப்பை முயற்சி செய்தபின்னரும் இன்னும் வலிப்பு நோய் இருக்கலாம். இப்படிச் சம்பவித்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு அறுவைச் சிகிச்சையைச் சிபாரிசு செய்யலாம். வலிப்பு நோய்க்கான அறுவைச் சிகிச்சையினால், ஒரு அறுவை மருத்துவர், வலிப்பு நோயை உண்டாக்கும் மூளையின் பகுதியை அகற்றிவிடுவார் அல்லது தொடர்பறுத்துவிடுவார். மருந்தினால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோயுள்ள எல்லாப் பிள்ளைகளுக்கும் அறுவைச் சிகிச்சை செய்வதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும்.

மருந்துகள் வேலை செய்யாமலும், அறுவைச் சிகிச்சை ஒரு நல்ல தெரிவாகவும் இல்லாதிருக்கும்போது, மருத்துவர் ஒரு விசேஷ உணவுக் கட்டுப்பாட்டு முறை அல்லது வேகஸ் நரம்புத் தூண்டுதல் போன்ற வேறொரு சிகிச்சை முறை செய்வதைப்பற்றிச் சிந்திப்பார்.

சிகிச்சையின் இலக்கு

சிகிச்சையின் இலக்குகள் பின்வருவனற்றைப் பொறுத்து வித்தியாசப்படும்:

  • வலிப்பு நோயின் கூட்டறிகுறிகள்
  • உங்கள் பிள்ளைக்கு வலிப்பு நோய் எவ்வளவு அடிக்கடி வருகிறது மற்றும் அவை எவ்வளவு கடுமையானவை
  • கிடைக்கக்கூடிய சிகிச்சையின் தெரிவுகள்
  • உங்கள் பிள்ளையின் வயது

சிகிச்சையின் பிரதான குறிக்கோள் பின்வருவனவாக இருக்கலாம்:

  • வலிப்பு நோயை முற்றாக நீக்கிவிடுவது
  • வலிப்பு நோயின் வலிமையைக் குறைப்பது, அடிக்கடி சம்பவிப்பதைக் குறைப்பது
  • வலிப்பு நோயை ஓரளவில் குறைப்பது, மிகக் குறைந்தளவு பக்கவிளைவுகளுடன் சமநிலைப்படுத்துவது

சிகிச்சையின் மற்ற இலக்குகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • இயல்பான அபிவிருத்தி
  • கற்றுக் கொள்தல் மற்றும் நடத்தையில் முன்னேற்றம்.
  • எதிர்காலத்தில் சுதந்திரமாக வாழ்தல்

காலப்போக்கில், உங்கள் பிள்ளை மற்றும் அவனது நிலைமைகள் மேலும் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அவனது உடல் நிலைமைகள் மாறும்போது, மற்றும் புதிய சிகிச்சைத் தெரிவுகள் கிடைக்கப்பெறும்போது சிகிச்சையின் இலக்குகள் மாற்றமடையலாம்.

உங்கள் பிள்ளை மற்றும் உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது சிகிச்சையளிக்கும் குழுவுடன் ஆலோசிப்பதன்மூலம் சிகிச்சை பற்றிய தீர்மானத்தை நீங்கள் எடுக்கவேண்டும். பிள்ளை புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளில் சிகிச்சைத் தெரிவுகளை விளக்கிக்கூறவும். இதன் மூலம் அவன் பதற்றம் குறைந்தவனாக, அதிக ஒத்துழைப்புத் தருபவனாக மற்றும் நிலைமையில் கட்டுப்பாடுடையவனாக இருக்கக்கூடும்.

காக்காய் வலிப்பு நோய், கற்றுக் கொள்தல் மற்றும் நடத்தையில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்

மருந்துகள் அல்லது அறுவைச் சிகிச்சை, காக்காய் வலிப்பு நோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதி மாத்திரமே. சிகிச்சையின் முதற்படி, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது, ஆனால் இது மாதிரமே சிகிச்சையல்ல. காக்காய் வலிப்பு நோயுள்ள பிள்ளைகளுக்கு வலிப்பு நோய் நன்கு கட்டுப்படுத்தப்பட்டாலும், சுய-கௌரவம், கற்றுக்கொள்தல், நடத்தை, அல்லது சமூகத்துடன் இணங்கிப்போதல் என்பனவற்றில் இன்னமும் பிரச்சினகள் இருக்கலாம். இந்த வகையான பிரச்சினைகள் எழும்போது அவற்றைத் திறமையாகக் கையாளுவதற்கு சிகிச்சையளிக்கும் குழுவுடன் ஒத்துழைக்கவும்.

எதிர்காலத்தில் எவற்றை எதிர்பார்க்கவேண்டும்

சில பிள்ளைகள் வளர்ந்து வரும்போது வலிப்பு நோயற்றவர்களாகிறார்கள். மற்றவர்கள் வலிப்பு நோயைத் தடுப்பதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதுமே மருந்து உட்கொள்ளவேண்டியவர்களாகிறார்கள். உங்கள் பிள்ளையின் நிலைமையில் எவற்றை எதிர்பார்க்கவேண்டும் என உங்கள் பிள்ளையின் சிகிச்சையளிக்கும் குழுவிடம் கேட்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • மூளையில் ஓரு மின்சாரக் குழப்பம் ஏற்படுவதனால் வலிப்பு நோய் உண்டாகிறது. வலிப்பு நோய் வித்தியாசமான ஆட்களில் வித்தியாசமானதாக இருக்கும்.
  • ஒரு பிள்ளைக்கு இரண்டு அல்லது அதற்குமதிகமான தூண்டப்படாத வலிப்பு நோய் ஏற்பட்டால், அவனுக்குக் காக்காய் வலிப்பு நோய் இருப்பதாகக் கண்டறியப்படும்.
  • பெரும்பாலான பிள்ளைகளின் வலிப்பு நோயை மருந்தினால் கட்டுப்படுத்த முடியும்.
  • வேறு சிகிச்சை முறைத் தெரிவுகள், அறுவைச் சிகிச்சை, ஒரு விசேஷ உணவுத் திட்டம், அல்லது வேகஸ் நரம்பு தூண்டுதல் என்றழைக்கப்படும் ஒரு சிகிச்சை முறை என்பனவற்றை உட்படுத்தும்.
  • காக்காய் வலிப்பு நோய் கற்றுக்கொள்தல் மற்றும் நடத்தை என்பனவற்றில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
Dernières mises à jour: mars 05 2010