தலைவலி

Headache in children [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பல்வேறு வகையான காரணங்களால் உங்களது பிள்ளைக்கு தலைவலி ஏற்படலாம். பிள்ளைகளின் தலைவலிகளுக்கான காரணங்கள் மற்றும் பிள்ளை தலைவலிக்கான சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி படித்தறியுங்கள்.

தலைவலி என்பது என்ன?

தலையின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படக்கூடிய வலி தலைவலியாகும். பதின்ம வயதினரிடையே (டீன்ஸ்) அல்லது வளர்ந்த பிள்ளைகளிடையே தலைவலி மிகவும் சாதாரணமானது. இளம் பிள்ளைகளுக்கும்கூடத் தலைவலி இருக்கலாம்.

பெரும்பான்மையான தலைவலிகள் கடுமையான சுகவீனத்திற்கான ஒரு அடையாளம் அல்ல.

தலைவலிக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

தலைவலி ஒரு கூர்மையான வலி, துடிக்கும் உணர்வு அல்லது ஒரு மந்தமான வலி போல உணரச் செய்யும். வலி, தலையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்களிலும் ஏற்படலாம். உங்கள் பிள்ளை தலையின் ஒரு பகுதியில் மாத்திரம் வலியை உணரலாம்.

பின்வருவன போன்ற, தொடர்புடைய அறிகுறிகள் ஏதாவது இருக்கின்றனவா என உங்கள் பிள்ளையிடம் கேட்கவும்:

  • கவனத்தை ஒருமுகப்படுத்தல், ஞாபகம் அல்லது பேச்சு என்பனவற்றில் மாற்றங்கள்
  • ஒரு கையில் அல்லது காலில் பலவீனம்
  • பார்வை அல்லது கேட்பதில் ஏதாவது மாற்றங்கள்
  • காய்ச்சல்
  • சளித்தேக்கம்
  • குமட்டல் அல்லது வாந்தி

பின்வருவன போன்ற தலைவலியுடன் தொடர்பான தூண்டிவிடும் காரணிகள் உள்ளனவா என்று கவனிக்கவும்:

  • குறைந்தளவு நித்திரை
  • உணவு
  • வீடியோ கேமுகள் உபயோகித்தல், தொலைக்காட்சி பார்த்தல் அல்லது பிரகாசமான மின் விளக்குகள்
  • கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏதாவது தலைக்காயம்

தலைவலிக்கான காரணங்கள்

தலைவலிகள் முதன்மையானவையாக அல்லது இரண்டாம் பட்சமானவையாக இருக்கலாம். முதன்மையான தலைவலிகள் மூளை வேதிப்பொருட்களில் மாற்றங்கள், நரம்பு அல்லது இரத்தக்குழாய்ச் செயற்பாடு, அல்லது தலை அல்லது கழுத்து பகுதியில் தசை இழுப்பு என்பன சம்பந்தப்பட்டவை.

இரண்டாம் பட்சத் தலைவலி உங்கள் பிள்ளைக்கு ஏற்கனவே இருக்கும் வேறொரு மருத்துவ நிலைமையினால் ஏற்படுகிறது. அவை பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • மிகச் சிறிய அல்லது மிகப் பெரிய தொற்றுநோய்கள்
  • ஒவ்வாமைகள்
  • மருந்துகள், மன உளைச்சல், அல்லது கவலை
  • குறிப்பிட்ட சில உணவுகள் அல்லது அவற்றின் உட்பொருட்களுக்கு கூர் உணர்வு
  • தலைக் காயம்
  • சளி உறுத்தல்
  • பல் அல்லது TMJ ( அடிமுதுகுத் தண்டுவட மூட்டுக்கள்) ஊற்றுமூலம்
  • போதைமருந்துகள் அல்லது நச்சுப் பொருட்களுடன் தொடர்பு
  • இரத்தக்குழாய் விரிவடைதல் அல்லது கட்டி போன்ற மூளை சம்பந்தமான பிரச்சினைகள்
  • வேறு அநேக காரணங்கள்

உங்கள் பிள்ளையின் தலைவலி பெரும்பாலும் பின்வருவனவற்றுள் ஒன்றினால் ஏற்பட்ட ஒரு அறிகுறியாக இருக்கும்:

  • தடிமல், காய்ச்சல் அல்லது வைரஸால் வரக்கூடிய சுகவீனம்
  • பல் வலி அல்லது பல்சம்பந்தமான வேறு பிரச்சினை
  • அளவுக்கதிகமான களைப்பு
  • பசி

உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு மருத்துவ வரலாறு மற்றும் உடல்ரீதியான மதிப்பீடுகளை பரிசோதித்துப் பூர்த்தி செய்வதன்மூலம் தலைவலிக்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பார். மிகவும் அரிதான நிலைமைகளில், உங்கள் பிள்ளைக்கு ஒரு மேலும் கடுமையான நிலைமை இருக்கிறது என்பதைத் தலைவலி அர்த்தப்படுத்தக்கூடும்.

உங்கள் பிள்ளை பின்வருவனவற்றைக் கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நீங்கள் நாடவேண்டும்:

  • தலையில் திடீரென, கடுமையான வலி
  • தலைச்சுற்று, விறைப்பான கழுத்து, வாந்தி அல்லது குமட்டல், குழப்பம், பேச்சில் தெளிவின்மை அல்லது மாற்றம், இரட்டைப் பார்வை அல்லது பார்வையிழப்பு, அல்லது உடலின் ஒரு பகுதியில் பலவீனம் போன்ற அறிகுறிகளுடன் சேர்ந்து வரும் தலைவலி

உங்கள் பிள்ளையின் தலைவலிகள் பிள்ளையை நித்திரையிலிருந்து விழிக்கச்செய்கிறது அல்லது விருப்பமான நடவடிக்கைகளுக்கு இடையூறு விழைவிக்கின்றது எனில், ஒரு மருத்துவர் உங்கள் பிள்ளையைப் பரிசோதிக்க வேண்டும்.

தலைவலிகளின் வகைகள்

உளைச்சல் (டென்ஷன்) தலைவலிகள்

உங்கள் பிள்ளை நீடிக்கும் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படும் தலைவலி பற்றி முறையிட்டால், உங்கள் பிள்ளைக்கு இருப்பது டென்ஷன் தலைவலியாக இருக்கலாம். இதுவே பிள்ளைகளில் ஏற்படுகின்ற மிகவும் சாதாரணமான தலைவலியாகும். ஒரு டென்ஷன் தலைவலி, தலையைச் சுற்றி ஒரு இறுக்கமான பட்டி இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும். கழுத்துத் தசைகளும்கூட வலியோடும் இறுக்கமாகவும் இருக்கலாம்.

டென்ஷன் தலைவலிகள் கம்பியூட்டர்கள், வீடியோ கேமுகள் அல்லது வேறு மெஷின்களை நீண்ட நேரம் அல்லது இடைவிடாமல் உபயோகிப்பதால் ஏற்படலாம். உங்கள் பிள்ளைக்குப் பெற்றோர், ஆசிரியர் அல்லது நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் பற்றிக் கவலைப்படுவதினால் டென்ஷன் தலைவலி ஏற்படலாம். உங்கள் பிள்ளையின் வழக்கமான நடவடிக்கைகள், அல்லது மார்க்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் டென்ஷன் தலைவலியை ஏற்படுத்தலாம்.

ஒற்றைத் தலைவலிகள் (மைக்கிரெயின்ஸ்)

பிள்ளைகள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படலாம். இவை வளரிளமைப் பருவத்தில் ஆரம்பிக்கின்றன. ஆயினும் சில வேளைகளில் இளம் பிள்ளைகளும்கூட ப் பாதிக்கப்படலாம். ஒற்றைத் தலைவலி வரும் பிள்ளைகள் பெரும்பாலும், ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட ஒற்றைத் தலைவலியுள்ள உறவினரை கொண்டிருக்கலாம். அவர்களுக்கு திரும்ப வரும் மற்றும் அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி அல்லது அவர்களுடைய இளம் வயதில் விளங்கப் படுத்த முடியாத வாந்தியால் அவதிப்பட்டிருக்கலாம்.

ஒற்றைத் தலைவலிகள் பெரும்பாலும் மீண்டும் மீண்டும் ஏற்படும் தன்மைகொண்டது. அதாவது அவை திரும்பத் திரும்ப வரலாம். உங்கள் பிள்ளைக்குத் தலைவலி ஆரம்பிப்பதற்கு முன்பு பல்வேறுபட்ட அறிகுறிகள் இருக்கலாம். கண்ணின் பின் புறம் போன்ற தலையின் ஒரு பகுதியில் மட்டுமே அவன் வலியை உணரக்கூடும். வலி மேலும் பொதுமைப்படுத்தப்பட்டதாக (தலையின் எல்லாப் பகுதியிலும்)க்கூட இருக்கலாம்.

இளம் பெண்களில், ஒற்றைத் தலைவலியானது மாதவிலக்குச் சுழற்சியோடு தொடர்புடையதாக இருக்கலாம்.

ஒற்றைத் தலைவலி, பிரகாசமான வெளிச்சத்தைப் பார்த்தல் அல்லது உரத்த சத்தங்களைக் கேட்பதனால் மோசமாக்கப்படலாம். இருட்டான மற்றும் அமைதியான இடங்களில் அவை பெரும்பாலும் முன்னேற்றமடையலாம். உங்கள் பிள்ளைக்கு குமட்டல் மற்றும் வாந்தியும் இருக்கலாம்.

கிளஸ்டர் (கொத்துக்காளாக வரும்) தலைவலிகள்

தலைவலிகளின் வகைகளுக்குள் மிக அதிக வலியுள்ளது கிளஸ்டர்த் தலைவலி தான். கிளஸ்டர் (கொத்துக்கள்) தலைவலிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான நாட்கள் அல்லது வாரங்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கடுமையான தலைவலி. இந்தக் கொத்துகளுக்கிடையே தலைவலி இல்லாத காலப்பகுதிககளும் இருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு ஒரு வருடத்தில் இரண்டு கிளஸ்டர் காலப்பகுதிகள் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய பாணியைக் கொண்டிருப்பர்கள். உதாரணமாக, ஒரு வருடத்தில் உங்களுக்கு பல கு கிளஸ்டர்கள்(கொத்துகள்) ஏற்படலாம். அல்லது பல வருடங்கள் கிளாஸ்டர்கள் இல்லாதிருக்கலாம்.

கிளஸ்டர் தலைவலிகள் அரிதானவையே. ஆனால் அவை அபாயகரமான மருத்துவ நிலையோடு தொடர்புடையவை அல்ல.

தலைவலியுள்ள உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

உங்கள் பிள்ளைக்கு ப் பசி உணர்வினாலும் தலைவலி ஏற்படலாம். உங்கள் பிள்ளைக்குச் சாப்பிடுவதற்கு கொஞ்சம் உணவு கொடுக்கவும். ஒரு சிறிய நித்திரை அல்லது அமைதியான தொந்தரவில்லாத இடத்தில் இளைப்பாறுவதும்கூட தலைவலியைக் குறைக்க உதவக்கூடும்.

தலைவலி மிகவும் கடுமையானதாக இருந்தால், அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா, அல்லது வேறு பிரான்டுகள்) அல்லது ஐபியூபுரோஃபென் (மோட்ரின், அட்வில் அல்லது வேறு பிரான்டுகள்) போன்ற வலி நிவாரண மருந்துகளை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கலாம். உங்கள் பிள்ளைக்கு ஒற்றைத்தலைவலி அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படும் தலைவலி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அவன் தலைவலி வருவதுபோல உணரும்போதே வலி நிவாரண மருந்துகளைக் கொடுக்கவும். இது தலைவலியைத் தொடக்கத்திலேயே நிறுத்துவதற்கு உதவி செய்யும்.

மருத்துவரிடம் போவதற்கு முன்பாக

உங்கள் பிள்ளை தலைவலி திரும்பத் திரும்ப வருவதாகக் குறை சொன்னால், அவனை மருந்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

மருத்துவச் சந்திப்புத் திட்டத்துக்கு முன்பாக, தலைவலியின் விபரங்களை, பின்வருவன போல குறிப்பெடுக்கவும்:

  • தலைவலியின் வகை
  • வலிக்கும் இடம் (எங்கே)
  • வலி எவ்வளவு நேரம் நீடிக்கிறது (நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள்)
  • உங்கள் பிள்ளைக்கு வலி ஏற்படும் நேரம் (காலை, மதியம், அல்லது பின்நேரம்)
  • உங்கள் பிள்ளை தலைவலியை உணரும்போது வெளிப்புற நிலைமைகள் (பிரகாசமான ஒரு வெளிச்சம் இருந்ததா? பாடசாலையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பு நேரத்திலா?)
  • வலியைக் குறைக்க உதவும் ஏதாவது சிகிச்சை

உங்கள் பிள்ளைக்குத் திரும்பத் திரும்ப ஏற்படும் தலைவலிகள் இருந்தால், “தலைவலி டையரியில்” தலைவலிக்கும் நேரங்களைப் பதிவு செய்யவும். இது தலைவலியின் மாதிரியைக் கண்டுபிடிக்க மருத்துவருக்கு உதவி செய்யும்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

பின்வரும் நிலைமைகளின்போது உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழைக்கவும்:

  • இரண்டு நாட்களுக்கு மேலாக நீடிக்கும், தலையில் ஒரு குறிக்கப்பட்ட பகுதியில் ஏற்படும் தலைவலி
  • அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூரொஃபென் அல்லது வேறு தலைவலி மருந்துகள் உபயோகிக்கப்பட்ட பின்னரும், தலைவலியில் முன்னேற்றமில்லை அல்லது வலி மோசமடைகின்றது
  • தலைவலிகள், விளையாட்டு, பாடசாலை, உணவு அருந்துதல், பானம் பருகுதல் அல்லது நித்திரைகொள்ளுதல் போன்ற உங்கள் பிள்ளையின் வழக்கமான நடவடிக்கைகள் அல்லது தினசரி வழக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
  • திரும்பத் திரும்ப ஏற்படும் தலைவலிகள் வழக்கத்தைவிட அதிக கடுமையாகவும் மேலும் அடிக்கடியும் ஏற்படுகின்றன
  • திரும்பத் திரும்ப ஏற்படும் தலைவலிகள், சிபாரிசு செய்யப்பட்ட சிகிச்சைகள் அல்லது மருந்துகளின் பின்னரும் முன்னேற்றமடையவில்லை.
  • தலைவலிகள் உங்கள் பிள்ளையை இரவில் அடிக்கடி எழுப்பிவிடுகின்றன, மற்றும் அவை வாந்தியுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அறிகுறிகளுடன் தலைவலி இருந்தால், உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லுங்கள் அல்லது 911 ஐ அழையுங்கள்:

  • தலையில் திடீரெனக் கடுமையான வலை
  • ஒரு தலைக் காயத்தைத் தொடர்ந்து தலைவலி மோசமாகிறது அல்லது தொடர்ந்து திரும்ப வந்து கொண்டேயிருக்கிறது
  • தலை சுற்றுதல், மயக்கம், தன்னுணர்வை இழத்தல்
  • அதிகளவு காய்ச்சல்
  • கழுத்து விறைப்பு
  • குமட்டல் அல்லது வாந்தி
  • பேச்சில் தெளிவின்மை அல்லது குளறுபடி
  • உடற் பாகங்களில் மந்தம் அல்லது பலவீனம்
  • நித்திரை செய்வதில் கஷ்டம்

முக்கிய குறிப்புகள்

  • பிள்ளைகளுக்கு வரும் தலைவலியானது அசெளகரியமானது மற்றும் உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தும். அவை மிக அரிதாகவே கடுமையான மருத்துவ நிலைகளுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.
  • உங்கள் பிள்ளையைச் சௌகரியமாக உணரச் செய்வதன் மூலம் மிகச் சிறிய தலைவலிகளுக்குப் பராமரிப்புக் கொடுக்கவும். அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூரொஃபென் போன்ற மருந்துக் குறிப்பு இல்லாமல் வாங்கும் மருந்துகளைக் கொடுக்கவும்.
  • திரும்பத் திரும்ப ஏற்படும் தலைவலி அல்லது விடாப்பிடியான தலைவலிக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவியாக ஒர் மருத்துவர் ஒர் மருத்துவ மதிப்பீட்டைச் செய்யலாம்.
  • உங்கள் பிள்ளைக்கு கடுமையான மற்றும் திடீரென ஏற்படும் தலைவலிகள் இருந்தால் கிளினிக்கிலோ அல்லது அவசர சிகிச்சைப் பிரிவிலோ ஒரு உடனடியான மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
Dernières mises à jour: mars 05 2010