நிமோணியா (நுரையீரல் அழற்சி)

Pneumonia [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

நிமோணியா என்பது மூச்சுச்சிற்றறையில் திரவ உற்பத்தியை ஏற்படுத்தி சுவாச பிரச்சனை உண்டாக்கும் சுவாச உருப்புப்பாதையில் உண்டாகும் ஒரு தொற்றுநோயாகும். பிள்ளைகளின் நிமோணியா அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி படித்தறியுங்கள்.

நிமோணியா (நுரையீரல் அழற்சி) என்றால் என்ன?

நிமோணியா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது தாழ்ந்த சுவாச உறுப்புப்பாதையிலுண்டாகும் தொற்றுநோய் எனவும் அழைக்கப்படலாம். ஏனெனில் இது நுரையீரலின் ஆழத்தில் ஏற்படுகிறது. நிமோணியாவின் அநேக நிலைமைகள் வைரஸ்களால் உண்டாகின்றன. ஒரு சில நிமோணியா காய்ச்சல் நிலமைகள் பக்டீரியாவினால் உண்டாகிறன. பெரும்பாலும், நிமோணியா தடிமலைத் தொடர்ந்து ஏற்படுகிறது.

நிமோனியா
நெஞ்சு எக்ஸ்-ரேயில், நிமோனியா உள்ள சுவாசப்பையின், பாதிக்கப்பட்ட பகுதி வெள்ளையாகக் காணப்படும்.  சுவாசப்பையின் காற்றறைகளில் உள்ள நீரே இந்த வெள்ளையான தோற்றத்திற்குக் காரணமாகும்.

நிமோணியா காய்ச்சலின் அடையாளங்களும் அறிகுறிகளும்

பிள்ளைகளில் நிமோணியா காய்ச்சலின் அறிகுறிகள் மிகவும் வேறுபடலாம். அவை தடிமலின் மற்றும் வேறு மேல் சுவாச உறுப்புப்பாதை உறுப்புகளிலேற்படும் தொற்று நோய் அறிகுறிகளோடும் ஒத்திருக்கலாம். பொதுவான நிமோணியா காய்ச்சலின் அடையாளங்களும் அறிகுறிகளும் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • கடும் காய்ச்சல்
  • இருமல்
  • சுவாசிப்பதில் விரைவு
  • சுவாசிப்பதில் சிரமம்
  • நுரையீரலில் பட்டாசுவெடிப்பதைப் போன்ற சப்தம்
  • பசியின்மை
  • இருமலினாலோ அல்லது சளியை விழுங்கும்போதோ வாந்தி எடுத்தல்
  • நோயுற்றவராகவும் நிலைகுலைந்தவராகவும் உணருதல்
  • அடிவயிற்றில் வலி

நிமோணியாவுக்கு உங்கள் மருத்துவர் என்ன செய்யலாம்

உங்கள் பிள்ளைக்கு நிமோணியா காய்ச்சல் இருப்பதாக உங்கள் மருத்துவர் சந்தேகித்தால் ஒரு மார்பு X-ரே சோதனை செய்யப்படலாம். உங்கள் பிள்ளையின் மருத்துவர் சில இரத்தப் பரிசோதனைகளும் செய்யலாம். வைரஸ் நிமோணியா காய்ச்சலுக்கு அன்டிபையோட்டிக் சிகிச்சை தேவையில்லை. ஆனால் வைரஸா அல்லது பக்டீரியாவா காரணம் என்பதைப் பிரித்துச் சொல்வது இலகுவானதல்ல. சிறந்த சிகிச்சை எது என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அநேக காரணங்களை ஆய்வு செய்வார்.

தேவைப்பட்டால் வைத்தியசாலையில் அனுமதிப்பது

பெரும்பாலான பிள்ளைகள் வீட்டில் வைத்தே சிகிச்சை செய்யப்படுகிறார்கள். நோய் அதிகமாகவுள்ள பிள்ளைகள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம். அவர்களுக்கு ஓக்சிஜன் (உயிர் வாயு) மற்றும் வேறு மருந்துகளும் தேவைப்படலாம். முதலில், பிள்ளைக்கு நரம்பினூடாக (IV) அன்டிபையோட்டிக் செலுத்தப்படலாம். பின்பு பிள்ளையில் முன்னேற்றங்கள் தெரியும்போது வாய் மூலமாகக் கொடுக்கப்படலாம்.

உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

அன்டிபையோட்டிக் மருந்து முழுவதையும் உபயோகிக்கவும்

உங்கள் பிள்ளைக்கு அன்டிபையோட்டிக் கொடுக்கப்பட்டால், உங்கள் பிள்ளை நிவாரணமடைவதாக உணர்ந்தாலும்கூட மாத்திரைகள் முழுவதையும் உபயோகிக்கவும். தொற்றுநோய் மீண்டும் வருவதைத் தடை செய்ய இது முக்கியம்.

காய்ச்சலை சரிவர அவதானித்து சிகிச்சை செய்தல்

காய்ச்சலுக்கு அசெட்டமினோஃபென்(டைலெனோல், டெம்ப்ரா, அல்லது மற்ற பிரான்டுகள்) அல்லது ஐபியூபிரோஃபென்(அட்வில், மோட்ரின், அல்லது மற்ற பிரான்டுகள்) உபயோகிக்கவும். உங்கள் பிள்ளைக்கு ASA (அசெடில்சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின்) கொடுக்க வேண்டாம்.

உங்கள் பிள்ளைக்கு உணவு உண்டவனாக மற்றும் உடல் நீரேற்றப்பட்டவனாகவும் வைத்துக்கொள்ளவும்

உடலில் நீர் வறட்சி ஏற்படாதவாறு உங்கள் பிள்ளைக்கு அதிகளவு பானங்கள் குடிக்கக் கொடுங்கள்.

முதலில்உங்கள் பிள்ளை அதிக உணவு சாப்பிட விருப்பமில்லாதவனாக இருக்கலாம். ஆனால் தொற்றுநோய் நிவாரணமடையத் தொடங்கியவுடன் மற்றும் உங்கள் பிள்ளை குணமடைந்தவனாக உணரும்போது, அதிகமான உணவை உண்ண விரும்பலாம்.

புகைமண்டலம் உள்ள இடங்களைத் தவிருங்கள்

உங்கள் பிள்ளையை புகை மற்றும் நுரையீரலை உறுத்தும் பொருட்கள் உள்ள இடங்களில் வைக்க வேண்டாம்.

இருமலின் அறிகுறிகள்

உங்கள் பிள்ளையின் இருமல், நிவாரணமடைவதற்குமுன் மோசமாகலாம். நிமோணியா காய்ச்சல் குறையும்போது, சளியை போக்குவதற்காக உங்கள் பிள்ளை இருமலாம். அவனது இருமல் ஒரு சில வாரங்களுக்கு நீடிக்கலாம்.

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

பின்வரும் நிலைமைகளில் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை சந்திக்கவும்:

  • உங்கள் பிள்ளையின் இருமல் மூன்று வாரங்களுக்கு மேலாக நீடித்தால்
  • அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொள்ளத் தொடங்கிய பின்னர் உங்கள் பிள்ளையின் காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேலாக நீடித்தால்

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால்,உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையை அழைத்துச் செல்லவும் அல்லது 911 ஐ அழைக்கவும்:

  • சுவாசிப்பதில் சிரமம்
  • உதடு வெளிறி அல்லது நீல நிறமாக மாறினால்
  • அன்டிபையோட்டிக் மருந்துகளை வாந்தியெடுத்தால் அல்லது பானங்களை அருந்த மறுத்தல்
  • நோய் அதிகமானால்

முக்கிய குறிப்புகள்

  • நிமோணியா காய்ச்சல் நுரையீரலின் ஆழத்தில் ஏற்படும் ஒரு தொற்று நோய். இது வைரஸ்கள் அல்லது பக்டீரியாவால் ஏற்படலாம்.
  • உங்கள் பிள்ளைக்கு அன்டிபையோட்டிக் கொடுக்கப்பட்டால், மருந்து முழுவதையும் உபயோகிக்கவும். உங்கள் பிள்ளை நிவாரணமடைவதாக உணர்ந்தாலும்கூட அவ்வாறு செய்யவும்.
  • உங்கள் பிள்ளையை சௌகரியமாக வைத்துக்கொள்ளவும். மற்றும் அவனுக்கு அதிகளவு நீராகாரங்கள் கொடுக்கவும்.
Dernières mises à jour: octobre 16 2009