ஜெனரல் அனஸ்தீசியா (முழுமையாக மயக்கமடையச் செய்யும் பொது மயக்க மருந்து)

General anesthesia [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஜெனரல் அனஸ்தீசியா பெறுவதற்கு முன் உங்களது பிள்ளையின் வயிறு வெறுமையாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளை ஜெனரல் அனஸ்தீசியாவிற்கு எவ்வாறு தயாராவது என்பதையும் அதற்கு பிறகு மேற்கொள்ளப்படவேண்டிய சிகிச்சை பற்றியும் படித்தறியுங்கள்.

ஜெனரல் அனஸ்தீசியா அதாவது பொதுவான மயக்க மருந்து என்றால் என்ன?

ஜெனரல் அனஸ்தீசியா என்பது உங்கள் பிள்ளையை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்த உதவும் ஒரு மருந்துக் கலவையாகும். இது உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சையை உணரவோ அல்லது நினைவில் வைக்கவோ முடியாதிருப்பதை அர்த்தப்படுத்தும். உங்கள் பிள்ளைக்கு ஒரு அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சையளிக்கும்போது ஜெனரல் அனஸ்தீசியா பயன்படுத்தப்படலாம்.

இந்தத் தகவல்கள் நீங்களும் உங்கள் பிள்ளையும் ஜெனரல் அனஸ்தீசியாவிற்குத் தயாராவதற்கு உதவும். தயவு செய்து இந்தத் தகவலை கவனமாக வாசித்து உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளக்கூடிய சொற்களில் அவனு(ளு)க்கு விளங்கப்படுத்துங்கள். எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வது உங்கள் பிள்ளை கலக்கமடைவதைக் குறைக்கும். அத்தோடு உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் தயாராவதற்கு உதவுவதற்கு நீங்கள் ப்றீ-அனஸ்தீசியா கிளினிக்கையும் அழைக்கலாம்.

ஜெனரல் அனஸ்தீசியாவுக்கு முன் உங்கள் பிள்ளைக்கு என்ன உணவு கொடுக்கப்படவேண்டும்

ஜெனரல் அனஸ்தீசியா பெறுவதற்கு முன் பிள்ளையின் வயிறு வெறுமையாக இருக்க வேண்டும். பிள்ளையின் வயிற்றில் சிறிதளவு உணவு அல்லது நீராகாரம் இருந்தால்கூட மயக்க நிலையின்போது பிள்ளை வாந்தியெடுத்து தன் நுரையீரலை சேதமடையச் செய்துவிடக்கூடும். பிள்ளை வாந்தியெடுக்கும் சாத்தியத்தை வெறுமையான வயிறு குறைத்துவிடும்.

உங்கள் பிள்ளையின் வயிறு வெறுமையாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு இந்த அறிவுறைகளைப் பின்பற்றுங்கள். நீங்கள் இந்த அறிவுரைகளைப் பின்பற்றாவிட்டால், உங்கள் பிள்ளையின் அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சை பின்போடப்படும் அல்லது ரத்துசெய்யப்படும்.

  • அனஸ்தீசியாவுக்குமுன் நடு இரவில், திட உணவு, சுவீங்கம், கன்டி, பால், ஒரேஞ்ஜ் ஜூஸ் அல்லது ஜெல்லோ உண்பதை நிறுத்தவேண்டும். மயக்க மருந்து கொடுப்பதற்குமுன் மூன்று மணிநேரங்கள் வரை உங்கள் பிள்ளை தெளிவான திரவங்களைப் பருகலாம். தெளிவான திரவங்கள் என்பது ஜன்னலூடாகப் பார்ப்பதுபோல நீங்கள் ஊடாகப் பார்க்கக்கூடிய திரவங்களாகும். தண்ணீர், ஜின்ஜரேல் மற்றும் தெளிவான அப்பிள் ஜூஸ் போன்றவை தெளிவான திரவங்களில் உள்ளடங்கும்.
  • மயக்க மருந்துக்கு முன் மூன்று மணிநேரங்களுக்கு பிள்ளை தெளிவான திரவங்கள் உட்கொள்வதை நிறுத்தவேண்டும். பிள்ளை விழிதெழும்வரை வாய் மூலமாக எதையும் உட்கொள்ளக்கூடாது.
  • பிள்ளை மருந்துக்குறிப்பு மருந்து எடுக்கவேண்டியிருந்தால், மருந்தைக் கொடுப்பதற்கு முன் மருத்துவருடன் பேசவும்.

இந்த நேரத்தில் உங்கள் பிள்ளை ஜெனரல் அனஸ்தீசியாவைப் பெறுவார்:_____________________________

இந்த நேரத்தில் பிள்ளை தெளிவான திரவங்களை பருகுவதை நிறுத்த வேண்டும்:_______________________________

குழந்தைகளுக்கு

உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிப்பதானால், அனஸ்தீசியாவுக்கு 4 மணிநேராங்களுக்கு முன் தாய்ப்பால் கொடுப்பதை, இந்த நேரத்தில் நிறுத்தவும்:______________________

உங்கள் குழந்தை ஃபோர்மூலா குடிப்பதானால், அனஸ்தீசியாவுக்கு 6 மணிநேராங்களுக்கு முன் ஃபோர்மூலா கொடுப்பதை இந்த நேரத்தில் நிறுத்தவும்:_________________________________

சுருக்கம்: மயக்க மருந்துக்குமுன் உண்பதும் குடிப்பதும்

நேரம்​ உங்கள் பிள்ளை என்ன உண்ணலாம் மற்றும் பருகலாம்
அனஸ்தீசியாவுக்கு முன் நடு இரவில்

உங்கள் பிள்ளைக்கு திட உணவு, கம், கன்டி, பால், ஒரேஞ்ஜ் ஜூஸ் அல்லது ஜெல்லோ கொடுப்பதை நிறுத்துங்கள். பிள்ளை விழிதெழும்வரை எதையும் உட்கொள்ளக்கூடாது

நீர், ஜிஞ்ஜரேல் மற்றும் தெளிவான அப்பிள் ஜூஸ் உட்பட தெளிவான திரவங்களை உங்கள் பிள்ளை பருகலாம்

அனஸ்தீசியாவுக்கு 6 மணி நேரங்களுக்கு முன்உங்கள் பிள்ளைக்கு பேபி ஃபோர்மூலா கொடுப்பதை நிறுத்துங்கள்.
அனஸ்தீசியாவுக்கு 4 மணி நேரங்களுக்கு முன்உங்கள் பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துங்கள்
அனஸ்தீசியாவுக்கு 3 மணி நேரங்களுக்கு முன்உங்கள் பிள்ளைக்கு தெளிவான திரவங்களைக் கொடுப்பதை நிறுத்துங்கள். அவன் விழித்தெழும்வரை உங்கள் பிள்ளை எதையுமே பருகக்கூடாது.

உங்கள் பிள்ளை மருந்துக்குறிப்புள்ள மருந்துகளை உட்கொள்ளுமானால், எப்போது மற்றும் எவ்வாறு மருந்தைக் கொடுக்க வேண்டும் என்று உங்கள் பிள்ளையின் மருத்துவரைக் கேளுங்கள்.

ஜெனரல் அனஸ்தீசியாவுக்கு முன் பிள்ளையை மதிப்பீடுசெய்தல்

குழந்தையின் மயக்க மருந்திற்கு முன்பு, குழந்தையின் உடல் நலத்தைப் பற்றி விசாரிக்க ஒரு தாதி உங்களை அழைப்பார். பிள்ளையை ப்றீ- அனஸ்தீசியா அஸெஸ்மன்ட் கிளினிக்கிற்கு அழைத்துவரும்படி நீங்கள் கேட்கப்படக்கூடும். இந்த கிளினிக்கில் நீங்களும் உங்கள் பிள்ளையும் ஜெனரல் அனஸ்தீசியாவைப்பற்றி ஒரு தாதியிடம் அல்லது மயக்க மருந்து நிபுணரிடம் பேசுவீர்கள். செயற்பாட்டின்போது ஆபத்துக்களைக் குறைப்பதற்காக, பிள்ளைக்கு இருக்கக்கூடிய மருத்துவ நிலைமைகள் அல்லது பிரச்சினைகள் பற்றி மயக்க மருந்து நிபுணர் தெரிந்துகொள்ளவேண்டும். அறுவைச் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் உங்கள் பிள்ளைக்கு வேண்டிய பராமரிப்பைப் பற்றி, நீங்களும் உங்கள் பிள்ளையும் இந்தக் கிளினிக்கில் ஒரு தாதியிடம் பேசுவீர்கள்.

தயவுசெய்து பிள்ளையின் மருந்துப் பட்டியலைக் கிளினிக்கிற்கு கொண்டுவரவும்.

ஜெனரல் அனஸ்தீசியாவுக்கு முன் உங்கள் பிள்ளைக்கு பரிசோதனைகள் தேவைப்படலாம்

மயக்க மருந்து வழங்கப்படுவதற்கு முன்பு உங்கள் பிள்ளைக்கு சில ஆய்வுகூடப் பரிசோதனைகள் தேவையென மயக்க மருந்து நிபுணர் அல்லது உங்கள் பிள்ளையின் மருத்துவர் முடிவு செய்யக்கூடும். இது உங்கள் பிள்ளையின் மருத்துவச் சரித்திரம் மற்றும் பிள்ளை எதற்காக மயக்க மருந்தைப் பெறப்போகிறது ஆகியவற்றில் தங்கியிருக்கிறது.

உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சைக்கு, பரிசோதனைக்கு, அல்லது சிகிச்சைக்கு முன் சுகவீனமுற்றிருக்குமானால்

ஜெனரல் அனஸ்தீசியா கொடுக்கபடுமுன் உங்கள் பிள்ளை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சைக்கு, பரிசோதனைக்கு, சிகிச்சைக்கு முந்திய வாரத்தில் எந்த நேரத்திலாவது சுகவீனமுற்றால், பிள்ளையின் மருத்துவரை மருத்துவமனையில் உடனடியாக தொடர்புகொள்ளவும். பிள்ளைக்கு கீழ்க்காண்பனவற்றில் ஒன்றிருந்தால் அழைக்கவும்:

  • மூச்சிரைப்பு
  • இருமல்
  • காய்ச்சல்
  • மூக்கொழுகுதல்
  • வாந்தியெடுத்தல்
  • பொதுவாக சுகவீனமுற்ற உணர்வு

ஜெனரல் அனஸ்தீசியா எவ்வாறு கொடுக்கப்படும்

உங்கள் பிள்ளைக்கு முகமூடியொன்றின் மூலம் அல்லது IV என்றழைக்கப்படும், நரம்பினுள் செலுத்தப்படும் ஒரு சிறிய குழாய் மூலம் மயக்க மருந்து கொடுக்கப்படும்.

உங்கள் பிள்ளை மிகவும் பதட்டமடைந்திருந்தால், அவனுக்கு மயக்க மருந்துகொடுக்கப்படுவதற்கு முன்பு சில மருந்துகள் கொடுக்கப்படக்கூடும். இது அவனை அமைதியாக்கி மயக்க மருந்தைப் பெற்றுக்கொள்வது பற்றிய அவனது கவலைகளைக் குறைக்க உதவும்.

ஜெனரல் அனஸ்தீசியாவை கொடுப்பவர் யார்

உங்கள் பிள்ளைக்கு மயக்கமருந்தைக் கொடுக்கும் மருத்துவர் அனஸ்தீசியோலஜிஸ்ட் எனப்படுவார். ஒரு அனஸ்தீசியயோலஜிஸ்ட் எனப்படும் மருத்துவர் அறுவைச் சிகிச்சையின்போது மற்றும் வேறு வலிமிக்க அல்லது பதட்டத்தை உருவாக்கக்கூடிய செயற்பாடுகளின்போது தூக்கக்கலக்க மருந்து, வலி கொல்லிகள் மற்றும் அனஸ்தடிக் மருந்துகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவி செய்வார். இதனால் உங்கள் பிள்ளை செயற்பாட்டின்போது நித்திரைசெய்வான் மற்றும் எதையும் உணரமாட்டான்.

அனஸ்தீசியோலஜிஸ்ட் உங்கள் பிள்ளையைப் பராமரித்து மயக்க மருந்தின் விளைவுகளைச் சமாளிக்க பிள்ளைக்கு உதவி செய்வார். பிள்ளையின் அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சையின்போது, பிள்ளையின் சுவாசம், இருதயத் துடிப்பு, வெப்பநிலை, மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை அனஸ்தீசியோலஜிஸ்ட் கண்காணிப்பார். செயற்பாட்டின் பின், பிள்ளை செளகரியமாக இருக்கின்றதா மற்றும் நன்கு நிவாரணமடைகின்றதா என்பதை இவர் நிச்சயப்படுத்திக்கொள்வார்.

உங்கள் பிள்ளை ஜெனரல் அனஸ்தீசியாவினால் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கலாம்

பொது மயக்க மருந்தின் பின் உங்கள் பிள்ளைக்கு கடுமையற்ற பக்க விளைவுகள் (பிரச்சினைகள்) இருக்கக்கூடும், பின்வருவன உட்பட:

  • களைப்பு
  • தலைச்சுற்று
  • சிடுசிடுப்பு
  • தொண்டை வலி
  • இருமல்
  • குமட்டல்
  • வாந்தியெடுத்தல்; இது நிகழுமானால் உங்கள் பிள்ளை சுகமடைவதற்கு மருந்துகள் கொடுக்கப்படும்.

கடுமையான பக்க விளைவுகள் அரிதாகவே இருக்கும்

பொது மயக்க மருந்தின்போது அல்லது அதற்குப் பின் கடுமையான ஒரு சிக்கல் தோன்றுவதற்கு ஒரு மிகச் சிறிய வாய்ப்பு இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகள் மிகவும் அரிதானவை ஆனால் பின்வருவனவற்றை உட்படுத்தக்கூடும்:

  • மருந்துக்கு ஒவ்வாமைப் பிரதிபலிப்பு
  • மூளைச் சேதம்
  • இதயஸ்தம்பம், இது இதய துடிப்பு நின்றுவிடுவதை அர்த்தப்படுத்தும்; இது மரணத்தை ஏற்படுத்தலாம்

அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சையின்போது மயக்க மருந்து நிபுணர் பிள்ளையை மிகவும் கவனமாக அவதானிப்பார். இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றைக் கையாள அவர் பயிற்சி பெற்றிருக்கிறார்.

உங்கள் பிள்ளைக்கு கடுமையான பிரச்சினை இருக்குமானால், அவன் மருத்துவமனையில் அதிக நாட்களுக்கு தங்க நேரிடலாம்.

அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சைக்குப் பின்

உங்கள் பிள்ளை போஸ்ட் அனஸ்தடிக் கெயார் யூனிட் (PACU) அல்லது ரிக்கவரி அறைக்கு செல்வான். பிள்ளையின் சுவாசம், இருதயத் துடிப்பு, வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தத்தை விசேஷ பயிற்சிபெற்ற தாதிகள் அடிக்கடி கண்காணிப்பார்கள். அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சையின் பின் விரைவிலேயே பிள்ளை விழித்துவிடுவான். பிள்ளை விழித்தவுடன் நீங்கள் அவனுடன் இருக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு வலியிருந்தால்

உங்கள் பிள்ளை பொது மயக்க மருந்திலிருந்து விழிக்கும் முன்பு அவனுக்கு வலி நிவாரணி மருந்து கொடுக்கப்படும்.

அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சையின் பின் பிள்ளை நலமடைய உதவுவதற்கு வலியை சமாளிப்பது முக்கியமாகும். உங்கள் பிள்ளைக்கு வலியிருக்கின்றதென நீங்கள் நினைத்தால், பிள்ளையின் தாதியுடன் அல்லது வைத்தியருடன் பேசி அவர்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு ஏதாவது கேள்விகளிருந்தால்

உங்கள் பிள்ளையின் அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சை நாளன்று உங்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் மற்றும் கவலைகள் பற்றி பேசுவதற்காக, அனஸ்தீசியோலஜிஸ்ட் உங்களை சந்திப்பார். அதற்கு முன்பாக உங்களுக்கு எதாவது கேள்வியிருந்தால், அனஸ்தீசியா பிரிவை அழைக்கவும்.

உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் கூடுமானவரை இது ஒரு சிறந்த அனுபவமாக இருப்பதற்காக குழுவினர் உங்களோடு இணைந்து செயற்படுவார்கள். உங்களுக்கு கேள்விகள் அல்லது கவலைகளிருந்தால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.

முக்கிய குறிப்புகள்

  • பொது மயக்க மருந்தின்போதும் அதற்குப் பின்னும் பிள்ளையின் வயிறு வெறுமையாக இருக்கவேண்டும். வயிறு வெறுமையாக இல்லாவிட்டால் பிள்ளை வாந்தியெடுத்து தனது நுரையீரலை சேதப்படுத்தக்கூடும். இந்த அறிவுருத்தல்களை நீங்கள் கடைப்பிடிக்காவிட்டால், பிள்ளையின் அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சையின் தாமதிக்கப்படலாம் அல்லது ரத்துசெய்யப்படலாம்.
  • பிள்ளையின் அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சைக்கு முந்தின நள்ளிரவிலிருந்து உங்கள் பிள்ளை திட உணவு, சுவீங்கம், கன்டி, பால், ஒரேஞ்ச் ஜூஸ், அல்லது ஜெல்லோ ஆகியவற்றை உண்ணவோ குடிக்கவோ கூடாது. மயக்க மருந்துக்கு முந்தின 3 மணி நேரங்கள் வரை தெளிந்த திரவங்களாகிய தண்ணீர் , ஜிஞ்ஜரேல், அல்லது தெளிவான் அப்பிள் ஜூஸ் ஆகியவற்றை மட்டுமே உங்கள் பிள்ளை உட்கொள்ள வேண்டும்.
  • அறுவைச் சிகிச்சை, பரிசோதனை அல்லது சிகிச்சைக்கு மூன்று மணி​நேரங்களுக்கு முன்பு, பிள்ளைக்கு எதையும் பருகக் கொடுக்கவேண்டாம்.
  • பொது மயக்க மருந்தினால் கடுமையான பக்க விளைவு பிள்ளைக்கு ஏற்படுவதற்கான ஒரு சிறிய வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்சினை தோன்றினால் அதைக் கையாளும் பொருட்டு மயக்க மருந்து நிபுணர் பிள்ளையைக் கவனமாக அவதானிப்பார். ​
Last updated: November 17 2009