G/GJ குழாய்கள் பலூன் G குழாய்கள்

G tubes: Balloon G tubes [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பலூன் G குழாய் என்பது ஒரு வகை உணவூட்டல் குழாயாகும், குழாய் தற்செயலாக வெளியேற்றப்படுவதைத் தடுக்க உதவுமுகமாக இது முடிவிடத்தில் ஒரு பலூனைக் கொண்டிருக்கும். உங்கள் குழந்தையின் பலூன் G குழாயை எவ்வாறு பராமரிப்பது மற்றும் வீட்டில் வைத்து அதை எப்படி மாற்றுவது என்பன குறித்து அறிந்து கொள்ளவும்.

முக்கிய குறிப்புகள்

  • பலூன் G குழாய் என்பது ஒரு வகை உணவூட்டல் குழாயாகும், குழாய் வெளியே இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக வயிற்றுக்குள் இருக்கும் முனையில் இது ஒரு பலூனைக் கொண்டிருக்கும்.
  • வயிற்றினுள் வெகுதூரம் உள்ளே செல்லாதிருப்பதற்காக ஒரு சிறுதட்டினைக் கொண்ட நீளமான-முனை உள்ள பலூன் G குழாய் வயிற்றுக்கு வெளியே நீட்டிய வண்ணமிருக்கும்.
  • குறுகிய-முனை உள்ள பலூன் G குழாயானது, தோலுக்கு அருகில் இலகுவில் மறைக்கக் கூடிய வண்ணம் இருக்கும்.
  • G குழாய் தற்செயலாக வெளியே வருவதற்குக் காரணமாகும் பலூன் கசிவினை அல்லது உடைப்பைத் தடுப்பதற்குக் குறைந்த பட்சம் ஒவ்வொரு ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு பலூன் G குழாய்களை மாற்ற வேண்டும்.
  • G குழாயின் உணவூட்டும் இணைப்புத் தொகுதி ஒவ்வொரு மாதமும் மாற்றப்படல் வேண்டும்.
  • G குழாயை நீங்கள் மாற்றும் போது அல்லது மீண்டும் இணைக்கும் போது, எல்லா வேளைகளிலும், அதனை உணவூட்டல்களுக்கும் மருந்துகளுக்கும் பயன்படுத்துவதற்கு முன்பு, குழாயிலிருந்து வரும் திரவங்களின் pH ஐ எப்போதும் சரிபார்த்து, வயிற்றில் இருக்கும் அதன் அளவை உறுதி செய்து கொள்ளவும்.
  • உங்கள் குழந்தையின் வயிற்றிலுள்ள பலூன் உடைந்தால், அடைபட்டிருந்தால் அல்லது குழாய் தற்செயலாக விழுந்தால் நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லத் தேவையில்லை. நீங்களே குழாயை மாற்றலாம் அல்லது ஃபோலே வடிகுழாயைச் செருகலாம். அவசரகால ஃபோலே வடிகுழாயைச் செருக முடியாவிட்டாலும் அந்த உணவுப் பாதையில் எதுவும் இல்லாத பட்சத்திலும் மட்டுமே, நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

காஸ்ட்ரோஸ்டமி குழாய்கள் (G குழாய்கள்) என்பவை திரவ ஊட்டச்சத்து, மருந்துகள் மற்றும் பிற திரவங்களை நேரடியாக வயிற்றுக்குள் வழங்கும் சாதனங்கள் ஆகும். G குழாய்கள் உங்கள் குழந்தையின் வயிற்றில் (வயிறு) ஸ்டோமா எனப்படும் ஒரு அறுவைச் சிகிச்சைத் துளை மூலம் வைக்கப்படுகின்றன.

வெளியிலிருந்து இரைப்பைக்குள் செல்லும் ஒடுக்கமான வழியானது, பாதை என்று அழைக்கப்படுகிறது.

பலூன் G குழாய்கள், குழாயானது சரியான இடத்தில் இருப்பதற்காக வயிற்றினுள் உள்ள முனையில் ஒரு பலூனைக் கொண்டுள்ளன.இந்தக் குழாய்கள் நீளமான-முனை உள்ளவையாக அல்லது குறுகிய-முனை உள்ளவையாக இருக்கலாம்.

பலூன் G குழாய்களின் வகைகள்

நீளமான-முனை உள்ள பலூன் G குழாய்கள்

நீளமான-முனை உள்ள பலூன் G குழாய் என்பது வயிற்றுக்கு வெளியே நீட்டியபடி இருக்கும் நீளமான ஒரு வகை உணவூட்டல் குழாயாகும். குழாயானது வயிற்றினுள் வெகுதூரம் செல்லாமல் தடுப்பதற்காக வயிற்றின் வெளிப்புறத்தில் சிறுதட்டு ஒன்றை இது கொண்டுள்ளது. உணவளிக்கும் பைகள் மற்றும் ஊசிக்குழல்களை நீங்கள் நேரடியாக குழாயில் இணைக்கலாம்.

Kangaroo

நீளமான-முனை உள்ள பலூன் குழாய்களில் பின்வருவனவற்றை உள்ளடக்கிய பல வகைகள் உள்ளன,

  • Avanos Mic-G
  • Kangaroo
  • Cook Entuit

குறுகிய-முனை உள்ள பலூன் G குழாய்கள்

குறுகிய-முனை உள்ள பலூன் G குழாயானது சருமத்துக்கு அருகாமையில் இலகுவில் மறைக்கக் கூடிய வண்ணம் இருக்கும் ஒருவகை உணவூட்டல் குழாயாகும். இந்தக் குழாய்கள், தோலில் பதிந்திருக்கும் விதத்தினால், சில நேரங்களில் "பட்டன்" என அழைக்கப்படுகின்றன, உங்கள் பிள்ளைக்கு இருக்கும் குழாயின் குறிப்பிட்ட வகையை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

உங்கள் பிள்ளைக்கு உணவளிக்க, குறுகிய-முனை உள்ள பலூன் G குழாய்களுக்கு, குழாயுடன் இணைப்பதற்கு சிறப்பு இணைப்புத் தொகுதி ஒன்று தேவை.

குறுகிய-முனை உள்ள பலூன் G குழாய்களில் பின்வருவனவற்றை உள்ளடக்கிய பல வகைகள் உள்ளன,

  • Mic-Key
  • AMT MiniONE
  • Nutriport
Mic-Key
AMT MiniONE

உங்கள் குழந்தையின் பலூன் G குழாயைப் பராமரித்தல்

குழாய் மற்றும் ஸ்டோமாவை முடிந்தவரை உலர்ந்ததாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கவும், தினமும் சோப்பு மற்றும் நீர் கொண்டு கழுவவும். உங்கள் குழந்தையின் ஸ்டோமாவுக்கு கட்டுப் போடத் தேவையில்லை.

ஒவ்வொரு உணவூட்டல் மற்றும் மருந்தளவிற்கும் முன்னரும் பின்னரும், அத்துடன் தொடர்ச்சியான உணவூட்டல் நேரங்களின் போது ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவையும், குறைந்தது 5 முதல் 10 மிலி நீரினால் குழாயை அலசிக் கழுவவும். இது குழாய் அடைக்கப்படுவதைத் தடுக்க உதவுகின்றது.

பலூன்

பலூனுடைய நுழைவுப் பகுதி

உங்கள் குழந்தையின் குழாயின் முடிவில் உள்ள பலூன் தான், குழாயைச் சரியான இடத்தில் வைத்திருக்கின்றது மற்றும் தற்செயலாகக் குழாய் வெளியே இழுக்கப்படுவதைத் தடுக்கின்றது. தொற்று நீக்கிய அல்லது காய்ச்சி வடிகட்டிய நீரினால் இந்த பலூன் நிரப்பப்படுகின்றது.

இந்த பலூனில் “BAL” என்று குறிக்கப்பட்ட நுழைவுப் பகுதியினூடாக நீர் உட்செலுத்தப்படுகின்றது. இந்த பலூனை உப்புக் கரைசல் அல்லது காற்றால் நிரப்ப வேண்டாம். இந்த பலூனுடைய நுழைவுப் பகுதியினுள் உணவைச் செலுத்த வேண்டாம்.

உங்கள் குழந்தையின் பலூன் குழாய் எவ்வளவு நீரைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் G குழாய் நிபுணரிடம் கேட்கவும் (SickKids இல் G குழாய் வளம் தொடர்பான தாதி) அல்லது கீழேயுள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்.

  நீளமான-முனை உள்ளவைகுறுகிய-முனை உள்ளவை
Mic-GKangarooMic-KeyAMT miniONE
12FR3-5 மிலி (அதிகபட்சம் 7 மிலி)5 மிலி3 இலிருந்து 5 மிலி2 இலிருந்து 3 மிலி
14FR3-5 மிலி (அதிகபட்சம் 7 மிலி)5 மிலி5 இலிருந்து10 மிலி3 இலிருந்து 5 மிலி

இந்த பலூனை அதிகமான அல்லது குறைவான நீரினால் நிரப்பினால், குழாய் சருமத்துடன் பொருத்தமாக இணைக்கப்படுவது பாதிக்கப்படக் கூடும். இந்த பலூனில் நீர் குறைவாக இருந்தால், குழாய் தளர்ந்து சருமத்துக்கு வெளியே தள்ளியவாறு இருக்கும்.

இந்த பலூனில் நீர் அதிகமாக இருந்தால் குழாய் இறுக்கமாகவும் சருமத்திற்கு மிக நெருக்கமாகவும் இருக்கும். குழாய் மிகவும் இறுக்கமாக இருந்தால், உங்கள் குழந்தையின் தோலில் ஒரு வெளித்தள்ளலைக் காணலாம், அவ்வேளையில், நீங்கள் பலூனில் உள்ள நீரின் அளவைக் குறைக்க வேண்டும். குழாய் ஸ்டோமாவிலிருந்து வெளிப்புறமாக அதிகளவில் தொங்கிக்கொண்டிருந்தால், நீங்கள் பலூனில் உள்ள நீரின் அளவை அதிகரிக்கலாம். இந்த பலூனுடைய அளவைச் சரிசெய்வது, உங்கள் குழந்தையின் குழாய் சரியாகப் பொருந்துவதற்கு உதவாதுவிடின், உங்கள் G குழாய் நிபுணரால் மீண்டும் அந்த உணவுப்பாதை அளவிடப்படல் வேண்டும்.

இந்த பலூனில் உள்ள நீரின் அளவை வாரத்திற்கு ஒரு முறையாவது சரிபார்ப்பது அவசியமாகும். பலூனில் ஏதாவது பிரச்சினை உள்ளதா என்பதை அறிய இது உதவும். பலூனை சரிபார்க்க ஸ்லிப்-டிப் ஊசிக்குழலைப் பயன்படுத்தவும்.

  1. பலூனுடைய நுழைவுப்பகுதியில் வெற்று ஊசிக்குழலைச் செருகவும்.
  2. பலூனில் இருந்து முழு நீரையும் வெளியகற்றவும். பழைய தண்ணீரை வெளியே ஊற்றிவிடவும். பலூனில் உள்ள நீர் நிறமாற்றம் அடைவது இயல்பு (பழுப்பு அல்லது மஞ்சள்).
  3. பலூனைத் தொற்று நீக்கிய அல்லது காய்ச்சி வடிகட்டிய நீரால் மீள நிரப்பவும்.

நீங்கள் முதலில் ஊற்றியதை விட பலூனிலிருந்து குறைந்தளவு நீர் வெளியேற்றப்படுவது இயல்பானது. இதற்குக் காரணம் சிறிதளவு நீர் ஆவியாகி இருக்கக்கூடும் என்பதே. இதில் 0.5 மிலி வரை வித்தியாசம் இருப்பது வழமையானது.

நீங்கள் உட்செலுத்தியதை விட வெளியகற்றும் நீரின் அளவின் வித்தியாசம் 0.5 மிலி க்கு அதிகமாக இருந்தால், பலூன் சேதமடைந்திருக்கக் கூடும் அத்துடன் குழாய் மாற்றப்பட வேண்டியிருக்கும். அப்படி நடந்தால்:

  • நீங்கள் வழக்கமாக இடுகின்ற அளவு நீரினால் பலூனை மீள-நிரப்பி, மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் மீண்டும் சரிபார்க்கவும்.
  • நீங்கள் எல்லா நீரையும் திரும்பப் பெற்றால், தண்ணீர் வழக்கத்தை விட விரைவாக ஆவியாகி இருக்கக் கூடும். நீங்கள் வழக்கமாக இடுகின்ற அளவு நீரினால் பலூனை மீள நிரப்பி, மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை பலூனிலுள்ள நீரின் அளவைச் சரிபார்ப்பதனால் மேலதிகப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதனை உறுதி செய்து கொள்ளலாம்.
  • மூன்று முதல் நான்கு மணிநேரங்களுக்குப் பிறகு நீங்கள் மீண்டும் குறைவாகப் பெற்றால், பலூன் சேதமடைந்திருக்கக்கூடும், மேலும் குழாய் மாற்றப்பட வேண்டும்.
  • நீங்கள் முதலில் பலூனில் இட்டதை விட அதிக திரவம் கிடைத்தால், அத்துடன் அது வயிற்று உள்ளடக்கங்கள் அல்லது உணவைப் போலத் தோற்றமளித்தால், இதன் பொருள் பலூன் நிச்சயமாக உடைந்துவிட்டது அதனால் குழாய் கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.

பலூன் உடைந்திருந்தால், குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்படக்கூடிய ஆபத்து உள்ளது. குழாயை நீங்களே மாற்றிக் கொள்ளும் வரை அல்லது குழாயை மாற்ற உதவுவதற்கு உங்கள் G குழாய் நிபுணருடன் சந்திப்பை ஏற்படுத்தும் வரை குழாயை அதன் உரிய இடத்தில் கட்டி வைக்கவும். அதே சமயம், குழாய் இன்னும் வயிற்றில் இருப்பதனால் நீங்கள் உணவு மற்றும் மருந்துகளுக்கு அக்குழாயைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். பலூன் உடைந்து விட்டால் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

குறுகிய-முனை உள்ள பலூன் G குழாய்க்குரிய உணவூட்டல் இணைப்புத் தொகுதி

குறுகிய-முனை உள்ள பலூன் G குழாய்க்குரிய உணவு உட்செலுத்தும் நுழைவுப் பகுதியானது, உங்கள் குழந்தையின் உணவூட்டங்கள் குழாயில் நுழைந்து பின்னர் அவர்களின் வயிற்றுக்குள் செல்லும் இடமாக அமையும். வயிற்று உள்ளடக்கங்கள், உணவூட்டங்கள், நீர் மற்றும் மருந்துகள் குழாயிலிருந்து வெளியேறாமல் தடுக்க, உணவு உட்செலுத்தும் நுழைவுப் பகுதியில் ஒரு-வழியாக மட்டும் தொழிற்படும் வால்வு ஒன்று உள்ளது. இந்த ஒரு-வழி வால்வைத் திறந்து உணவூட்டல்களையும் மருந்துகளையும் கொடுப்பதற்கு, உணவூட்டல் இணைப்புத் தொகுதி ஒன்றினை நீங்கள் பயன்படுத்த வேண்டும். குறுகிய-முனை உள்ள பலூன் G குழாயின் ஒவ்வொரு வகைக்கும் அவற்றுக்கென சொந்தமான இணைப்புத் தொகுதி உள்ளது. நீங்கள் புதிதாக வாங்கும் குறுகிய-முனை உள்ள பலூன் G குழாயுடன், அப்பெட்டியில் இதில் ஒன்றைப் பெறுவீர்கள். மீள மாற்றுவதற்கான இணைப்புத் தொகுதிகள் தேவைப்படும்போது, அவை தனியாக வாங்கப்படுகின்றன.

குழாயிலிருந்து பிரிக்கப்பட்ட இணைப்புத் தொகுப்பு
குழாயுடன் இணைக்கப்பட்ட இணைப்புத் தொகுப்பு

இணைப்புத் தொகுதியைக் குழாயுடன் இணைத்தல்

  1. உணவுக் குழாயை மூடியுள்ள பிளாஸ்டிக் மேலுறையைத் திறக்கவும்.
  2. இணைப்புத் தொகுதியில் உள்ள கவ்வி மூடியுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  3. இணைப்பில் உள்ள கோட்டினைக் குழாயிலுள்ள கோட்டுடன் பொருத்தி, இணைப்பை வால்வுக்குள் தள்ளவும்.
  4. பட்டன் குழாயை சரியான இடத்தில் வைத்துப் பிடித்தபடி இணைப்பின் பூட்டு சரியாக போடப்பட்டதை உணரும் வரை இணைப்பைக் கடிகாரம் இயங்கும் திசையில் திருப்பவும். எந்தத் திசையில் திருப்ப வேண்டும் என்பதைக் காண்பிக்க இணைப்பில் ஒரு அம்புகுறி உள்ளது.
  5. இறுதியாக உங்கள் உணவூட்டங்கள், திரவங்கள் மற்றும் மருந்துகளைப் பொருத்தமான நுழைவுப்பகுதியுடன் இணைத்த பின்னர் கவ்வியைத் திறக்கவும்.
  6. நீங்கள் இணைப்பைப் பயன்படுத்தி முடித்ததும், அதனை அலசிக் கழுவிவிட்டுக் குழாயிலிருந்து அகற்றவும்.

குழாயிலிருந்து இணைப்பை நீக்குதல்

  1. இணைப்பைப் பற்றிப் பிடிக்கவும்.
  2. குழாயைச் சரியான இடத்தில் வைத்து, இணைப்பை எதிர்க் -கடிகாரத் திசையில் திருப்பவும் (இணைப்பில் உள்ள அம்புக்குறிக்கு எதிராக).
  3. இணைப்பில் உள்ள கோட்டினை குழாயின் கோட்டுடன் பொருத்தி இணைப்பை அகற்றவும்.
  4. உணவுக் குழாயின் மீதுள்ள பிளாஸ்டிக் மேலுறையை மூடவும்.

இணைப்புத் தொகுதி ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு முறை மாற்றப்பட வேண்டும், அல்லது பிளாஸ்டிக் கடினமாகி வருவதையோ அல்லது பாலுணவு, உணவு அல்லது மருந்துகள் உள்ளே தங்கியிருப்பதையோ நீங்கள் கவனித்தால் அது மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் இடையில் இணைப்புத் தொகுதியை நீரினால் அலசிக் கழுவுவதும், சோப்பு மற்றும் நீர் கொண்டு அதனைத் தினமும் ஒரு முறை சுத்தம் செய்வதும் முக்கியமானது. இணைப்புத் தொகுதி இழுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்குப் பயன்பாட்டில் இல்லாதபோது அதனைக் குழாயிலிருந்து அகற்றி வைக்கவும்.

பலூன் G குழாயை எவ்வளவு காலத்திற்கொரு முறை மாற்ற வேண்டும்?

பெரும்பாலான G குழாய் உற்பத்தியாளர்கள் நீங்கள் எவ்வளவு காலத்துக்கு இந்தக் குழாயைப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தை வழங்குவதில்லை. கசிவுகள் அல்லது குறைபாடுகள் இல்லாமல் செயற்படும் வரை அதனை வைத்திருக்க முடியும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், குழாயானது தற்செயலாக வெளியே விழக்கூடிய முறையில், பலூனில் கசிவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்குக் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு ஒரு முறை குழாய் மாற்றப்பட வேண்டும்.

குழாயை மாற்றும்போது, அது தொடர்பாக ஏற்படும் ஆபத்துகளை நினைவிற் கொள்வது அவசியம்.

நோய்த்தொற்று நீங்கள் குழாயை மாற்றும்போது, ஸ்டோமா மற்றும் உணவுப்பாதையில் அரிப்பு ஏற்படக்கூடும் மற்றும் இது பாக்டீரியாவைத் தோற்றுவிக்கலாம். நோய்த்தொற்று அபாயத்தை இதுஅதிகரிக்கின்றது. குழாயைக் கையாளுவதற்கு முன்பு எப்போதும் உங்கள் கைகளைக் கழுவவும், அத்துடன் உங்கள் குழந்தையின் சருமத்தைத் தொடும் போதெல்லாம், சோப்பு மற்றும் நீரால் அந்தப் பகுதியைத் தொடர்ந்து சுத்தம் செய்யவும். அந்தப் பகுதியைக் காற்றுப் படுமாறு திறந்து வைக்கவும்.

அதிகரித்த ஹைப்பர் கிரானுலேஷன் திசு (ஆறிவரும் புண்கள் மீது அளவுக்கதிகமாக உருவாகும் குருமணித் திசுக்கள்) பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிதாக ஒன்றைச் செருகினால் சருமத்தில் எரிவேற்பட்டு, ஹைப்பர் கிரானுலேஷன் திசுக்களை ஏற்படுத்தும். இது ஒரு வழமையான நிகழ்வு. உங்கள் G குழாய் நிபுணர், ஹைப்பர் கிரானுலேஷன் திசுவைச் சமாளிக்க உங்களுக்கு உதவ முடியும்.

துளை: ஒரு புதிய குழாயைச் செருகும்போது, ஏற்கனவே இருக்கும் உணவுப்பாதையுடன் குழாய் செருகப்படாமல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இது உடலுக்குள் ஒரு புதிய பாதையையும் இடத்தையும் உருவாக்கக்கூடும். இது மிகமிக அரிதானது. உங்கள் பிள்ளைக்கு புதிய குழாய் மூலம் முதன்முதலில் உணவளித்த பின்னர் சகிக்க முடியாத தன்மை (வாந்தி) அல்லது கடுமையான வலி உடனடியாக ஏற்பட்டால், உதவிக்கு அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.நவீன தொழில்நுட்பக் கதிரியக்கவியல் பிரிவில் ஒரு G குழாய் சோதனை திட்டமிடப்பட வேண்டியிருக்கும்.துளையிடல் பெரிட்டோனிடிஸ் (வயிற்றறை உறையழற்சி) எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கக் கூடும்.

வழங்குபொருட்கள்

  • புதிய பலூன் G குழாய்
  • சோப்பு
  • இளஞ்சூடான தண்ணீர்
  • துடைக்கும் துணி
  • தொற்று நீக்கிய அல்லது கொதிக்க வைத்து வடிகட்டிய நீர்
  • 5-மிலி ஸ்லிப்-டிப் ஊசிக்குழல்கள் நான்கு
  • நீர்-சார்ந்த மசகு எண்ணெய் அல்லது ஜெல்லி
  • உணவூட்டல் இணைப்புத் தொகுதி (குறுகிய-முனை உள்ள G குழாய்களுக்கு)
  • pH கீற்றுகள் மற்றும் வண்ணக் குறிப்பு வழிகாட்டி

செயன்முறை

  1. சோப்பு மற்றும் நீர் கொண்டு உங்கள் கைகளைக் கழுவவும், உங்கள் உபகரணங்கள் மற்றும் பொருட்களைத் தயார் செய்யவும்.
  2. உங்கள் குழந்தையின் குழாயின் பலூனை நிரப்புவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட அளவு நீரை ஒரு ஊசிக்குழல் மூலம் உறிஞ்சி எடுக்கவும். குழாயை அலசிக் கழுவுவதற்கு 5 மிலி தண்ணீரை மற்றொரு ஊசிக்குழல் மூலம் உறிஞ்சி எடுக்கவும். மற்ற இரண்டு ஊசிக்குழல்களையும் வெறுமையாக விடவும். பலூனில் இருந்து பழைய நீரை அகற்றி pH ஐ சரிபார்க்க நீங்கள் இவற்றைப் பயன்படுத்துவீர்கள்).
  3. உங்கள் துடைக்கும் துணியின் ஒரு பாதியை சோப்பு மற்றும் நீராலும், மற்றைய பகுதியை சோப்பு-அற்ற நீராலும் நனைத்துத் தயார் செய்யுங்கள்.
  4. நீங்கள் ஏற்கனவே உறிஞ்சி எடுத்த புதிய நீரால் பலூனை நிரப்புவதன் மூலம் புதிய G குழாயின் பலூன் உடைக்கப்படவில்லை என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும். குறைபாடுகளால் ஏற்படும் கசிவுகளைச் சரிபார்க்க பலூனை மெதுவாக நசித்துப் பாருங்கள். தொடர்வதற்கு முன்னர் பலூனிலிருந்து முழு நீரையும் வெளியகற்றவும்.
  5. வெற்று ஊசிக்குழல்களில் ஒன்றைப் பயன்படுத்தி பழைய G குழாயின் பலூனிலிருந்து தொற்று நீக்கிய அல்லது கொதிக்க வைத்து வடிகட்டிய நீரை அகற்றவும். இந்த நீரையும் ஊசிக்குழலையும் எறிந்துவிடவும்.
  6. பழைய G குழாயை அகற்றவும். குழாயின் உட்பகுதி பழுப்பு அல்லது கறுப்பு நிறமாக இருப்பது வழக்கம். இது அமிலத் தன்மையுள்ள வயிற்று உள்ளடக்கங்களால் ஏற்படுகின்றது. பழைய குழாயை எறிந்துவிடவும்.
  7. சிவந்திருத்தல், வடிதல், சொறி அல்லது ஹைப்பர் கிரானுலேஷன் திசு (ஆறிவரும் புண்கள் மீது அளவுக்கதிகமாக உருவாகும் குருமணித் திசு) போன்ற எந்த மாற்றங்களுக்கும் ஸ்டோமாவை மதிப்பிடுவதற்கு இது ஒரு சிறந்த நேரம். சோப்பு மற்றும் நீரினால் ஸ்டோமாவைக் கழுவிச், சோப்பு- இல்லாத நீரால் அதனை அலசவும். பின்னர் காற்றுப் பட்டு உலர விடவும்.
  8. புதிய பலூன் G குழாயின் நுனியை வழுவழுப்பானதாக்கி, சிறிய கோணத்தில் சரித்து, ஏற்கனவே உள்ள பாதையைப் பின்பற்றி ஸ்டோமாவில் புகுத்தவும். குழாயைப் புகுத்துவது சற்றுக் கடினமாக இருக்கும் அதனால் சிறிது உந்துவிசை கொடுப்பது சரியாக இருக்கும். உங்கள் பிள்ளை உட்சுவாசிக்கும் நேரத்தில் அதனைச் செருக முயற்சிக்கவும், ஏனெனில் அவர்கள் அந்த நேரத்தில் மிகவும் ஆசுவாசமாக இருப்பார்கள்.
  9. குழாய் சரியான இடத்தில் அமைந்தவுடன், நீங்கள் வழக்கமாக பாவிக்கும் அளவு தொற்று நீக்கிய அல்லது கொதிக்க வைத்து வடிகட்டிய நீரைக் கொண்டு பலூனை நிரப்பவும். நீங்கள் ஒரு எதிர்விசையை உணரும் வரைக் குழாயை மெதுவாக இழுக்கவும். பலூன் இரைப்பைச் சுவரின் உட்புறத்தை அடைந்துவிட்டது என்பதனை இது குறிக்கின்றது.
  10. கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி pH ஐ சரிபார்த்து, குழாய் இரைப்பையில் இருக்கின்றதா என்று சோதித்தறியவும். 6.0 அல்லது அதற்கும் குறைவான pH ஐப் பெறுவதன் மூலம், குழாய் இரைப்பையில் இருப்பதனை நீங்கள் அறிந்தவுடன், 5 மிலி நீரால் குழாயை அலசிக் கழுவவும். உங்கள் பிள்ளைக்கு குறுகிய-முனையுள்ள குழாய் இருந்தால், குழாயை அலசிக் கழுவுவதற்கு நீங்கள் உணவூட்டல் இணைப்புத் தொகுதியைப் பயன்படுத்த வேண்டும்.
  11. உங்கள் பிள்ளைக்கு நீளமான-முனையுள்ள குழாய் இருந்தால், வெளிப்புறமாகவுள்ள சிறுதட்டினைச் சரிசெய்யவும், அதனால் அது சருமத்திற்கு எதிராக மென்மையாக அமைந்திருக்கும்.

நீங்கள் இப்போது உணவு மற்றும் மருந்துகளுக்கு குழாயைப் பயன்படுத்தலாம்.

புதிதாக மாற்றப்பட்ட பலூன் குழாய் சரியான இடத்தில் இருக்கிறதா என்பதனைச் சோதித்தறிதல்

புதிதாக மாற்றப்பட்ட குழாய்களை, உணவூட்டங்கள் மற்றும் மருந்துகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்பு, குழாய் மூலம் உறிஞ்சி இழுக்கப்படும் உள்ளடக்கங்களின் pH ஐச் சோதித்து அது வயிற்றில் இருக்கிறதா என்பதனை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

PH ஐ எவ்வாறு சோதித்தறிவது

உங்களுக்குத் தேவைப்படுவன:

  • வெறுமையான ஸ்லிப் டிப் ஊசிக்குழல் ஒன்று
  • குறுகிய-முனை உள்ள பலூன் G குழாய்க்குரிய உணவூட்டல் இணைப்புத் தொகுதி (குறுகிய-முனை உள்ள குழாய்களுக்கு மட்டும்)
  • pH கீற்றுகள்
  • வண்ண pH குறிப்பு வழிகாட்டி

என்ன செய்ய வேண்டும்:

  1. புதிய குழாயைப் புகுத்தியவுடன், வெறுமையான ஊசிக்குழலை உணவூட்டல் இணைப்புத் தொகுதியினுள் (குறுகிய-முனை உள்ள பலூன் G குழாய்க்கு) அல்லது நேரடியாகக் குழாயின் மருந்து செலுத்தும் நுழைவுப் பகுதியினுள் உட்செலுத்தவும் (குறுகிய-முனை உள்ள பலூன் G குழாய்க்கு) அத்துடன் வயிற்று உள்ளடக்கங்களின் ஒரு சிறிதளவினை உறிஞ்சி இழுக்கவும். வயிற்று உள்ளடக்கங்களை உங்களால் பெற முடியாவிட்டால், உங்கள் குழந்தையைப் பக்கப் பாடாக நகர்த்தவும் அல்லது நிமிர்ந்து உட்கார வைக்கவும்.
  2. ஊசிக்குழலிலிருந்து வயிற்று உள்ளடக்கங்களை pH கீற்றுக்குள் இடவும்.
  3. pH கீற்றில் உள்ள நிறங்களை குறிப்பு வழிகாட்டியில் உள்ள நிறங்களுடன் ஒப்பிடவும்.

PH அளவீடு 6.0 க்கும் குறைவாக இருந்தால், குழாய் இரைப்பையில் உள்ளது, நீங்கள் குழாயை அலசிக் கழுவி விட்டு, உணவு மற்றும் மருந்துகளுக்குப் பயன்படுத்தலாம்.

PH அளவீடு 6.0 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், குழாய் இரைப்பையில் இல்லாதிருக்கக் கூடும்.

மருந்துகள் மற்றும் சமீபத்திய உணவூட்டங்கள் pH ஐப் பாதிக்கலாம்.

நீங்கள் அதிக அளவீட்டினைப் பெற்றால், உணவூட்டல் அல்லது மருந்துகளுக்குக் குழாயைப் பயன்படுத்த வேண்டாம், ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் pH ஐ சரிபார்க்கவும். திரும்பவும் அளவீடு 6.0 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், குழாயைப் பயன்படுத்த வேண்டாம். அத்துடன் உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்புகொண்டு ஒரு நவீன தொழில்நுட்பக் கதிரியக்கவியல் பிரிவில் நிலையைச் சரிபார்க்க வேண்டும்.

உங்கள் குழந்தையின் பலூன் G குழாய் வெளியே இழுக்கப்பட்டால் அல்லது அடைபட்டால் என்ன செய்ய வேண்டும்

குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால்

G குழாய் தற்செயலாக வெளியே விழக்கூடும் அல்லது வெளியே இழுக்கப்படக் கூடும். பலூன் உடைந்தால் அல்லது அதில் போதுமான நீர் இல்லாவிட்டால் இது நிகழலாம்.

பலூன் உடைந்துவிட்டதா என்று சோதிக்க, 5 மிலி நீரால் அதனை நிரப்பவும். நீங்கள் ஒரு கசிவைக் காணவில்லை என்றால், பலூனில் இருந்து நீரை அகற்றி, G குழாயை சோப்பு மற்றும் நீரால் கழுவவும், மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி அதை ஸ்டோமாவில் மீண்டும் புகுத்தவும். நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் அளவு நீரால் பலூனை நிரப்பவும். மேலதிகமாகப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை பலூனைச் சரிபார்க்கவும்.

பலூன் உடைந்திருந்தால், மேலே விவரிக்கப்பட்டபடி புதிய குழாய் மூலம் அதை மாற்றவும்.

உங்களால் G குழாயை மாற்ற முடியாவிட்டால், தற்காலிகமாக ஃபோலே வடிகுழாயைச் செருகவும்.

ஃபோலே வடிகுழாயை எவ்வாறு உட்செலுத்துவது என்பதனை அறிய, தயவுசெய்து "உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாய் வெளியேற்றப்பட்டால் என்ன செய்வது" என்ற கட்டுரையைப் பார்க்கவும். புதிய G குழாய் புகுத்தப்படும் வரை நீங்கள் ஃபோலே வடிகுழாயை உணவூட்டங்களுக்கும் மருந்துகளுக்கும் பயன்படுத்தலாம்.

குழாயில் அடைப்பு ஏற்பட்டால்

உங்கள் குழந்தையின் G குழாயில் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று அறிய, தயவுசெய்து "உங்கள் குழந்தையின் உணவுக் குழாய் அடைக்கப்பட்டால் என்ன செய்வது" என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

பின்வருவனவற்றை உள்ளடக்கிய அவசரகாலக் கருவிப் பெட்டியை எப்போதும் எடுத்துச் செல்ல நினைவிற் கொள்ளவும்:

  • காப்புப்பிரதி G குழாய் அல்லது ஃபோலே வடிகுழாய்
  • நீர்-சார்ந்த மசகு எண்ணெய் அல்லது ஜெல்லி
  • ஊசிக்குழல்கள்
  • நீர்
  • pH கீற்றுகள் மற்றும் வண்ணநிறக் குறிப்பு வழிகாட்டி
  • எதிர்பாராமல் குழாயை மாற்ற நேரிட்டால் அதற்குரிய ஒட்டுநாடா
  • அடாப்டர் அல்லது இணைப்புத் தொகுப்பு

குழாய் வெளியே விழுந்தால் அல்லது அடைபட்டிருந்தால் நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லத் தேவையில்லை. நீங்களே குழாயை மாற்றலாம் அல்லது ஃபோலே வடிகுழாயைச் செருகலாம். நீங்கள் ஒரு ஃபோலே வடிகுழாயைச் செருக முடியாவிட்டால், அந்த உணவுப் பாதையில் எதுவும் இல்லை, அல்லது ஃபோலே வடிகுழாயைச் செருகிய பிறகு, அது இரைப்பையில் இருப்பதனை உங்களால் சரிபார்க்க முடியாது என்றால் மட்டுமே நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

Last updated: October 25 2019