HIV யும் உங்கள் பிள்ளையும்

HIV and your child [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

HIV பிள்ளைகள் எவ்வாறு HIV-யை பெறுகிறார்கள் என்பதையும், அது எவ்வாறு அவர்களது உடலை பாதிக்கிறது என்பதையும் உங்களது பிள்ளை கூடுமான வரையில் நலமுடன் இருப்பதற்கான HIV பிள்ளைகள் சிகிச்சை வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

முக்கிய குறிப்புகள்

  • கர்ப்பத்தின்போது அல்லது தாய்ப்பாலூட்டுதலின்மூலம் தாய்மார்களிடமிருந்தும், HIV தொற்றுள்ள இரத்தம் அல்லது இரத்தப் பொருட்கள் மூலமாக அல்லது தொற்றுள்ள ஊசிகள் அல்லது அறுவைச் சிகிச்சைக் கருவிகள் மூலம் பிள்ளைகள் HIV யைப் பெறக்கூடும்.
  • ஒரு பிள்ளை HIV யைக் கொண்டிருக்கும்போது, HIV வைரசானது. தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் குறிப்பிட்ட வகை இரத்த வெண் அணுக்களை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு அழித்துவிடும்.
  • கனடாவில் HIV உள்ள பிள்ளைகள், அவர்களுடைய கிளினிக்குகளுக்குப் போய் குறித்துக் கொடுக்கப்பட்ட படியே மருந்துகளை உட்கொள்வார்களானால், ஆரோக்கியமான சாதாரண வாழ்க்கை வாழமுடியும்.
  • HIV ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் மருந்துகள் மூலம்பல பிரச்சினைள் தவிர்க்கப்படலாம்.

HIV என்பது என்ன?

  • HIV கலன் ஊடுருவல்
    HIV தன்னை CD4 கலத்துடன் இணைத்து தனக்குள் இருப்பதை அதற்குள் செலுத்தும்.

    HIV என்பது ஹியூமன் இம்யூனோடெஃபிசியன்சி வைரசைக் குறிக்கிறது. CD4 என்றழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான வெள்ளை இரத்த அணுக்களை HIV தாக்குகிறது. CD4 கலன்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப்போராடுபவை. CD4 கலன்கள் சிலவேளைகளில் T கலன்கள், உதவிக் கலன்கள், அல்லது CD4 நிணநீர்க் கலன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

  • HIV வைரசின் மேலுமதிக பிரதிகளை செய்ய பாதிக்கப்பட்ட CD4 கலன்கள் உபயோகிக்கப்படுகின்றன.  இது CD4 கலன்களை அழித்து விடுகின்றது.

    CD4 கலனிற்குள் HIV நுளையும் போது, அது தன்னைப்போல இன்னுமதிக பிரதிகளை உருவாக்க இந்தக் கலனை உபயோகிக்கும். இந்த செயற்பாட்டின்போது அது கலனை அழித்துவிடும்.

  • சிகிச்சையில்லாமல் CD4 கலன்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து, நோயெதிர்ப்புத் தொகுதி பலவீனமடைகிறது.

    காலப்போக்கில இன்னுமதிக வைரசுகள் உருவாக்கப்படும்போது, CD4 கலன்களின் எண்ணிக்கை குறையும். இது நோயெதிர்ப்புத் தொகுதியை பலவீனமடையச் செய்யும். பலவீனமடைந்த நோயெதிர்ப்புத் தொகுதி வேறு தொற்றுநோய்களையும் சில வகையான புற்றுநோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு இயலாததாகிவிடும்.

HIV க்கும் AIDS க்குமிடையே உள்ள வித்தியாசங்கள்

HIV தொற்று என்றால் ஒருவரின் உடலில் HIV வைரஸ் இருக்கின்றது என்று அர்த்தமாகும். சிலர் கிருமி தொற்றிய பின்புகூட சில காலம் ஆரோக்கியமாக இருக்கும் அதேவேளையில் சிலர் விரைவாக சுகவீனம் அடைந்துவிடுவார்கள். ஒரு முறை உங்கள் பிள்ளையின் உடலில் HIV வைரஸ் புகுந்துவிட்டால், அது ஒருபோதும் முழுமையாக விட்டுப் போகாது. HIV யைத் தங்கள் இரத்தத்தில் கொண்டுள்ள நபர்கள் HIV-பொஸிடிவ் என்றழைக்கப்படுவார்கள்.

எயிட்ஸ் எனபது பெற்றுக்கொண்ட நோயெதிர்ப்பைக் குன்றச்செய்யும் குறைபாடாகும். இது பின்வருவன வற்றின்போது ஏற்படும் HIV தொற்றுநோயின் கடைசிக் கட்டமாகும்:

  • CD4 எண்ணிக்கை மிகக் குறைவு
  • சில வகை கடுமையான தொற்றுநோய்கள் அல்லது புற்றுநோய் உருவாகுதல்

பிள்ளைகள் எவ்வாறு HIV யைப் பெறுகின்றனர்

பின்வரும் வழிகளில் பிள்ளைகள் HIV யைப் பெறலாம்:

  • பெரும்பானமையான பிள்ளைகள் தொற்றுநோயிள்ள தாய்மார்களிடமிருந்து HIV யைப் பெற்றுக்கொள்கிறார்கள். கர்ப்பத்தின்போது, பிரசவத்தின்போது அல்லது தாய்ப்பாலூட்டுதலின்போது HIV குழந்தைக்குக் கடத்தப்படும்.
  • சில பிள்ளைகள் HIV உள்ள இரத்தம் அல்லது இரத்தப் பொருட்கள் மூலமாக HIV யைப் பெற்றுக்கொள்கிறார்கள். கறைபட்ட ஊசி அல்லது அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் மூலமாகவும் சில பிள்ளைகள் HIV யைப் பெற்றுக்கொள்கிறார்கள். வழங்கப்படும் இரத்தம் சோதிக்கப்படாத மற்றும் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஊசிகள் சரியானமுறையில் சுத்தமாக்கப்படாத மற்றும் கிருமிநீக்கம்செய்யப்படாத நாடுகளில் இது வழக்கமாக நடைபெறுகிறது.
  • பதுமவயதினரிடையே பாதுகாக்கப்படாத பாலுறவுத் தொடர்புகள் அல்லதுபிள்ளைகளுக்கு செய்யப்படும் துஷ்ப்பிரயோகங்கள் HIV தொற்றுநோய்க்கு வழி நடத்தலாம்.
  • ஊசிகளைப் பரிமாரிக்கொள்ளும்போது நரம்பு மூலம் ஏற்றப்படும் போதைப்பொருட்களும் HIV தொற்றுநோய்க்கு வழி நடத்தலாம். நரம்பு போதைப்பொருட்கள் ஊசிமூலம் உடலில் ஏற்றப்படுகிறது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் HIV உள்ள பிள்ளையை வைத்திருப்பதெனபது எதை அர்த்தப்படுத்தும்

உங்கள் பிள்ளைக்கு HIV இருந்தால், உங்களுக்கும் HIV இருக்கின்றதா இல்லையா என்பதை (உங்கள் நிலையை) அறிந்துகொள்ள நீங்களும் பரிசோதிக்கப்பட வேண்டும். நீங்கள் HIV-பொஸிடிவ் நபரானால், உங்களுடைய ஏனைய பிள்ளைகளும் உங்களுடன் உடலுறவுகொள்ளும் நபர்களும் பரிசோதிக்கப்படவேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்து உங்கள் பிள்ளையையும் குடும்பத்தையும் பராமரிப்பதற்காக நீங்களும் உங்களுக்கான பராமரிப்பை நாடவேண்டும்.

HIV- பொசிடிவ்வான உங்கள் பிள்ளை அல்லது யாராவது குடும்ப அங்கத்தவர்கள் HIV சிகிச்சையளிப்பதில் விசேஷித்த கிளினிக்குகளுக்கு ஒழுங்காகச் செல்லவேண்டும்.

HIV உள்ள பிள்ளைகளுக்கு சிகிச்சைகள்

HIV உள்ள பிள்ளைகளுக்கு இரண்டு முக்கிய வகையான சிகிச்சையளிக்கப்படுகின்றது:

  • HIV க்கு சிகிச்சையளிக்க மருந்துகள்
  • வேறு தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கு மருந்துகள்

HIV சிகிச்சைக்கான மருந்துகள் HIV வைரஸ் தனது பிரதிகளை மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்கும். இந்த மருந்துகள் ARV (அன்டி ரெட்ரோவைரல்ஸ்) என்றழைக்கப்படுகின்றன; வேறு மருந்துகளோடு கூட்டாகக் கொடுக்கும்போது இச்சிகிச்சை கொம்பினேஷன் அன்டி ரெட்ரோவைரல் சிகிச்சை அல்லது ஹைலி அக்டிவ் அன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சை (HAART) என அழைக்கப்படுகின்றன.

வேறு தொற்றுநோய்களைத் தடுப்பதற்காக வேறுவகை மருந்துகள் கொடுக்கப்படும். குறிப்பிட்ட வகையான மோசமான நிமோனியாவைத் தடுப்பதற்காக கொடுக்கப்படும் இவை, ட்ரைமெதொப்ரிம்-சல்ஃபமெதோக்சேசோல் (செப்ட்ரா) போன்ற மருந்துகளை உட்படுத்தும். எல்லாப் பிள்ளைகளுக்கும் இத்தகைய தடுக்கும் மருந்துகள் தேவைப்படுவதில்லை. இத்தகைய தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய அளவுக்கு பிள்ளையின் நோயெதிர்ப்புத் தொகுதி பலவீனமடைந்திருந்தால் மாத்திரமே இவை கொடுக்கப்படுகின்றன.

உங்கள் பிள்ளையின் HIV கிளினிக் நியமனங்களின் போது எதை எதிர்பார்க்க வேண்டும்

வழக்கமாக ஒவ்வொரு 1 முதல் 3 மாதங்களுக்கு எல்லாப் பிள்ளைகளும்  ஒழுங்காகச் சென்று தங்கள் உடல்நலத்தைப் பரிசோதிக்க வேண்டும். உங்கள் பிள்ளை எவ்வளவு நன்றாக வளர்ச்சியடைகின்றது என்பதை அறிவதற்காக உங்கள் பிள்ளை நிறுத்தும் அளந்தும் பார்க்கப்படும்.   கடந்த முறை  வருகைதந்ததிலிருந்து,  உங்கள் பிள்ளையின் தற்போதைய உடல்நலம்  எப்படி இருக்கின்றது என்பதைக் காண, உங்கள் பிள்ளை ஒரு தாதி  மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும்.  உங்கள் பிள்ளையின் நோயெதிர்ப்புத் தொகுதி எப்படியிருக்கின்றது மற்றும்  இரத்தத்தில் எவ்வளவு வைரஸ் இருக்கின்றது என்பதைப் பார்ப்பதற்காகவும், உடல்நலத்திற்கான வேறு பொதுவான    சோதனைகளுக்காகவும்  சிறிதளவு இரத்தம் எடுக்கப்படும். 

HIV தொற்றுநோயைக் கண்காணிக்க பரிசோதனைகள்

உங்கள் பிள்ளை HIV தொற்றுடன் எவ்வாறு செயற்படுகிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கு, ஒவ்வொரு 3 முதல் 4 மாதங்களுக்கு, விசேஷ இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும்:

  • இரத்தத்தில் உள்ள HIV வைரசுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் இடமே வைரல் லோட் ஆகும்.
  • CD4 கலன் எண்ணிக்கை என்பது CD4 கலன்களின் எண்ணிக்கையாகும். இது நோயெதிர்ப்புத் தொகுதி எவ்வளவு நன்றாக செயல்ப்படுகின்றது என்பதைக் காட்டும். ஒரு பிள்ளையின் CD4 கலன்களின் சாதாரண எண்ணிக்கை அப்பிள்ளையின் வயதைப் பொறுத்ததாகும்.

கிளினிக்கில் உங்களையும் உங்கள் பிள்ளையையும் பார்க்கக் கிடைக்கப்பெறும் நபர்கள்

உங்கள் பிள்ளையின் மருத்துவர்கள் மற்றும் தாதிகளைப் போன்று கிளினிக்கில் நீங்கள் பேசக்கூடிய நபர்கள் இதோ:

  • உங்கள் உணர்ச்சிரீதியான மற்று குடும்பம் பற்றிய அக்கறைகள் மற்றும் HIV உங்கள் குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பனபற்றி ஒரு சமூக சேவகர் உங்களிடம் பேசக்கூடும். பணப் பிரச்சினைகள், மருந்துச் செலவுகள் மற்றும் இம்மிக்கிரேஷன் பிரச்சனைகள் போன்றவற்றிலும், சமூக சேவகர் உதவி செய்யமுடியும்.
  • உங்கள் பிள்ளையின் உணவு மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகள் பற்றி ஒரு நல உணவு வல்லுணர் உரையாடலாம்.
  • உங்கள் பிள்ளையின் வளர்ச்சி மற்றும் பாடசாலையில் படிக்கும் திறமை பற்றி ஒரு வளர்ச்சிக்கான நிபுணர் உங்களிடம் பேசலாம்.
  • உங்கள் பிள்ளையின் நடை மற்றும் ஓட்டம் போன்ற உங்கள் பிள்ளையின் அசைவு வளர்ச்சி பற்றி ஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட் மதிப்பீடுசெய்யலாம்.
  • உங்கள் பிள்ளையின் சுய-மரியாதையையும் HIV பற்றி அறிந்துகொள்வதற்கு அவன் தயாராக இருக்கின்றானா இல்லையா என்பதை மதிப்பீடு செய்வதற்கும் ஒரு மனநல மருத்துவரும் கிடைக்கப்பெறுவார்.

தேவைப்படக்கூடிய வேறு பல உத்தியோகஸ்தர்களும் மருத்துவ மனையில் கிடைக்கப்பெறுவார்கள். அத்தகையவர்கள், உங்கள் பிள்ளையைப் பராமரிப்பதில் உங்களுக்கு உதவக்கூடுமா என்பதைக் கண்டறிய, உங்கள் பிள்ளையைப்பற்றி உங்களுக்கிருக்கும் கவலைகளை உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதிகளிடம் பேசுங்கள்.

சந்திப்பு நியமனங்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் உங்கள் பிள்ளை சுகவீனமடைந்தால் அல்லது அவனுடைய மருந்துகள் பற்றி உங்களுக்கு கரிசனைகள் இருந்தால் என்ன செய்யவேண்டும்

ஒழுங்கான பராமரிப்பிற்காக, உங்கள் வீட்டிற்கருகாமையில் ஒரு குடும்ப மருத்துவரையோ அல்லது குழந்தை மருத்துவரையோ நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்கள் பிள்ளையின் கிளினிக்கை தொலைபேசியில் அழைப்பதன் மூலமாக சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம் அல்லது அடுத்த சந்திப்பு நியமனத்தின் போது கலந்தாலோசிக்கப்படலாம். வேறு பிரச்சனைகள், கிளினிக்கிலோ, உங்கள் குடும்ப மருத்துவரிடத்திலோ அல்லது குழந்தை மருத்துவரின் அலுவலகத்திலோ அல்லது உங்களுக்கு அருகாமையிலிருக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பகுதியிலோகூட உங்கள் பிள்ளை இன்னும் அவசரமாகப் பார்வையிடப்படுவதைத் தேவைப்படுத்தலாம்.

HIV யும் உங்கள் பிள்ளையின் உடல்நலமும்

கனடாவில் HIV உள்ள பிள்ளைகள், அவர்களுடைய கிளினிக்குகளுக்குப் போய் குறித்துக் கொடுக்கப்பட்ட படியே மருந்துகளை உட்கொள்வார்களானால், ஆரோக்கியமான சாதாரண வாழ்க்கை அனுபவிக்க முடியும். அறிகுறிகளே இல்லாத போது அல்லது சில அறிகுறிகளைக் கொண்டிருக்கும்போது பல பிள்ளைகளில் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, பிள்ளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதகாக, மருத்துவக் குழுவுக்கு அந்த வேளையிலேயே தேவைப்படுமானால், மருந்துகளை கொடுக்கத் தொடங்வதற்கு அனுமதிக்கும்.

சில பிள்ளைகளில், அவர்கள் ஏற்கெனவே தொற்றுநோயினால் மிகவும் சுகவீனம் அடைந்த பின்பு, மிகவும் தாமதமாக HIV இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்தப் பிள்ளைகளில் சிலர் மிகவும் மோசமாகலாம் அல்லது இறந்துபோகலாம். மிக நீண்ட காலமாகக் இது நடைபெறுவதை நாங்கள் காணவில்லை.

HIV உள்ள பிள்ளைகளில் காணக்கூடிய பிரச்சினைகளின் வகைகள்

HIV இருக்கின்றது எனக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், சில பிள்ளைகள் மிக ஆரோக்கியமாகக் காணப்படுவதோடு நோய் தொற்றியதற்கான எந்த வித அறிகுரிகளையும் கொண்டிருப்பதில்லை. வேறு பிள்ளைகள் பின்வருவன போன்ற கடுமையற்ற சில பிரச்சினைகளைக் கொண்டிருப்பர்.

  • குன்றிய வளர்ச்சி அல்லது பருமனடைதல்
  • தோல், மார்பு, காது அல்லது வயிறு மற்றும் குடல்களில் தொற்றுநோய்கள்
  • வாய் வெண் புண்
  • வீங்கிய சுரப்பிகள் 
  • வயிற்றோட்டம்
  • காய்ச்சல்கள்
  • விருத்தியடைவதில் தாமதம் (உடல், உணர்ச்சி மற்றும் மனரீதியான)

வேறு பிள்ளைகள் நிமோனியா, மூளை உறையழற்சி, காசநோய், மூளை நலிவு அல்லது புற்றுநோய் போன்ற கடுமையான பிரச்சினைகளைக் கொண்டிருப்பார்கள். HIV தொற்று ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் இப்பிரச்சினைகளில் பலவற்றை மருந்து மூலம் தடுத்துவிடலாம்.

HIV மூலவளங்கள்

உங்களுக்கு ஏதாவது கேள்விகள் அல்லது கரிசனைகள் இருந்தால், உங்கள் குழந்தையின் மருத்துவரை அல்லது HIV கிளினிக்கைத் தொடர்புகொள்ளுங்கள். மேலதிக தகவலுக்கு பின்வருவனவற்றைக் காணுங்கள்:

தெரெசா குரூப்

www.teresagroup.ca
416-596-7703

CATIE: கம்யூனிட்டி எயிட்ஸ் டிறீட்மென்ட் இன்ஃபொமேஷன் எக்ஸ்சேஞ்ஜ்

www.catie.ca


Last updated: December 17 2009