கொடுமையாக நடத்துதல் (புளீயிங்)

Bullying [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

கொடுமையாக நடத்துதல் என்றால் என்ன?

கொடுமையாக நடத்துதல் என்பது ஒரு உறவு சம்பந்தமான பிரச்சினை. இதற்கு உறவு சம்பந்தமான தீர்வுகள் தேவைப்படும்.

கொடுமையாக நடத்துதல் என்பது திரும்பத் திரும்ப நடைபெறும் மேசமான நடத்தை. கொடுமையாக நடத்துதல் வேண்டுமென்றே நடத்தப்படுகிறது. கொடுமையாக நடத்துபவர் மற்றவர்களைத் தாக்கி மனவருத்தப்படுத்த விரும்புவார். கொடுமையாக நடத்துபவர் அதிக பலம் வாய்ந்தவர். அவர் கொடுமையாக நடத்தப்படுபவரைவிட வயதில் மூத்தவராக, உயரமானவராக, அதிக பிரபல்யம் வாய்ந்தவராக, அல்லது அதிக பலமுள்ளவராக இருப்பார். சில சமயங்களில் சில பிள்ளைகள், வேறொரு பிள்ளையைக் கொடுமையாக நடத்துவதற்காக ஒரு குழுவாக ஒன்றுசேர்வார்கள்.

கொடுமையாக நடத்துவதில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை பின்வருமாறு:

உடல்ரீதியாகக் கொடுமைப்படுத்துதல்

  • ஒருவரைத் தள்ளுதல், அடித்தல், அல்லது உதைத்தல்
  • ஒருவர் மீது பொருட்களை எறிதல்
  • ஒருவரின் பொருட்களை எடுத்தல் அல்லது உடைத்தல்

வார்த்தைகளால் கொடுமைப்படுத்தல்

சிறுவன் ஒருவனின் முன்பாகசிறுமி ஒருத்தி இன்னொரு சிறுமியின் காதினுள் இரகசியம் கதைத்தல், அந்தச் சிறுவன் கவலையான முகத்துடன் தலை குனிந்திருத்தல்
  • ஆட்களைப் பரிகாசம் பண்ணுதல்
  • ஒருவரை இழிவான பெயர்கள் சொல்லி அழைத்தல்
  • ஒருவரை இழிவான முறையில் பரிகசித்தல்
  • ஒருவரைத் தாக்கப்போவதாகப் பயமுறுத்துதல்

சமூகத்தில் கொடுமையாக நடத்துதல்

  • வதந்திகளைப் பரப்புதல்
  • நட்பை முறித்தல்
  • ஒருவரை வேண்டுமென்றே புறக்கணித்தல்
  • ஒருவருடன் நட்பாக இருக்கவேண்டாம் என மற்றவர்களுக்குச் சொல்லுதல்

இணைய தளத்தில் கொடுமையாக நடத்துதல்

  • ஒருவரின் அனுமதியில்லாமல் அவரைப் படம் பிடித்து இணைய தளத்தில் அவற்றை வெளியிடல்
  • இழிவான உடன் செய்திகள், ஈ- மெயில்கள், அல்லது வாசகச் செய்திகள் அனுப்புதல்
  • இழிவான செய்திகளை சமூக இணையதள வலைப்பின்னலில் அனுப்புதல்
  • ஒருவரைப் பரிகாசம் செய்யும் ஒரு இணையதளத்தை உருவாக்குதல்

ஜாதி/இன சம்பந்தமாகக் கொடுமைப்படுத்துதல்

  • மக்களின் ஜாதி அல்லது இனப் பின்னணி காரணமாக அவர்களை மோசமாக நடத்துதல்
  • ஒரு கலாச்சாரப் பின்னணியைப் பற்றி மோசமான விஷயங்களைப் பேசுதல்
  • ஜாதிப் பெயர்கள் சொல்லி ஒருவரை அழைத்தல்
  • ஜாதி சம்பந்தமான நகைச்சுவைகளைச் சொல்லுதல்

பாலியல் சம்பந்தமாகக் கொடுமையாக நடத்துதல்

  • ஒருவர் ஆண்பிள்ளை அல்லது பெண்பிள்ளையாக இருப்பதால் அவரைப் புறக்கணிப்பது, மோசமாக நடத்துவது, அல்லது அசௌகரியமாக உணரச் செய்வது
  • பாலியல் சம்மந்தமான விமர்சனங்களைச் செய்தல்
  • பாலியல் ரீதியில் ஒருவரைத் தொடுதல், கிள்ளுதல், அல்லது இழுத்தல்
  • ஒருவரின் பாலுறவு நடத்தை பற்றி அநாகரீகமான விமர்சனங்களைச் செய்தல்
  • பாலுறவு சம்பந்தமான வதந்திகளைப் பரப்புதல்
  • ஒருவரின் பாலியல் விருப்பம் காரணமாக அவரை இழிவான பெயர்களால் அழைத்தல்

கொடுமையாக நடத்தப்படுவதின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

அடிக்கடி கொடுமையாக நடத்தப்படும் பிள்ளைகள் தங்கள் நடத்தையில் மற்றும் /அல்லது உணர்ச்சிகளில் பின்வரும ஒரு மாற்றத்தைக் காண்பிப்பார்கள்:

  • பாடசாலைக்குப் போக விருப்பமின்மை
  • கல்வி சார்பற்ற நடவடிக்கைகளில் பங்குபற்ற விருப்பமின்மை
  • கவலை, பயம், அதிகமான எதிர்த்தாக்கம்
  • குறைவான சுயமதிப்பு
  • தன்னை அல்லது மற்றவர்களைத் தாக்கப்போவதாகப் பயமுறுத்துதல்
  • பாடசாலை மீது மிகக் குறந்தளவு அக்கறையையும் செயற் திறனையும் காண்பித்தல்
  • பொருட்களைத் தொலைத்தல், பணம் தேவைப்படுதல், பாடசாலையிலிருந்து வந்தவுடன் பசிக்கின்றதென சொல்லுதல்
  •  காயங்கள், நசுக்குக் காயங்கள், சேதப்படுத்தப்பட்ட உடைகள், உடைந்த பொருட்கள்
  • சந்தோஷமின்மை, எரிச்சலடைதல், நடவடிக்கைகளில் அக்கறையின்மை
  • தலைவலி மற்றும் வயிற்றுவலி
  • நித்திரை செய்வதில் பிரச்சினை, பயங்கரக் கனவுகள், படுக்கையில் சிறுநீர் கழித்தல்

கொடுமையாக நடத்தும் பிள்ளைகள் தங்கள் பலத்தைக் கடுமையாக உபயோகிப்பதாகப் பின்வரும் அடையாளங்களால் காண்பிப்பார்கள்:

  • மற்றவைகளின் உணர்ச்சிகளில் குறைந்த அக்கறை
  • மற்றவர்கள் மீதான தனது நடத்தையின் விளைவை அடையாளம் கண்டு கொள்வதில்லை
  • சகோதரர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் மிருகங்களுடன் கடும்போக்கு
  • அதிகாரம் செய்தல் மற்றும் தன் காரியம் நிறைவேற திறமையாகச் செயற்படல்
  • விபரிக்கமுடியாத பொருட்களை மற்றும் /அல்லது மேலதிக பணம் வைத்திருத்தல்
  • உடமைகள், நடவடிக்கைகள், மற்றும் இருப்பிடங்களைப் பற்றி இரகசியமாக வைத்திருத்தல்
  • கடும்போக்கு பற்றி ஒரு நேர்மறையான மனப்பான்மையை வைத்திருத்தல்
  • எளிதில் எரிச்சலடைதல் மற்றும் விரைவாகக் கோபப்படுதல்

காரணங்கள் மற்றும் ஆபத்தான காரணிகள்

கொடுமையாக நடத்தப்படும் பிள்ளைகள்

கொடுமையாக நடத்தப்படும் பிள்ளைகளுக்கு ஒரு சில நண்பர்கள் தான் இருப்பார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு அளவுக்கதிகமான பாதுகாப்புக்கொடுக்கும் அல்லது கட்டுப்பாடு செய்யும் பெற்றோர்கள் இருக்கலாம். திரும்பத் திரும்பக் கொடுமையாக நடத்தப்படும் பிள்ளைகள் இழிவான உறவுக்குள் சிக்கிக் கொள்ளலாம். அந்த சக்திவாய்ந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, பாதுகாப்பாக இருப்பதற்கு அவர்களுக்கு உதவி தேவைப்படும்.

கொடுமையாக நடத்தும் பிள்ளைகள்

மற்றவர்களைக் கொடுமையாக நடத்தும் பிள்ளைகள் பெரும்பாலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பலம் மற்றும் வன்முறையை அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்காக பலம் மற்றும் வன்முறையைப் பிரயோகிக்கக் கற்றுக்கொள்வார்கள். இந்தப் பிள்ளைகளில், பின்வரும் போக்குகள் பொதுவாக இருக்கும்:

  • கூச்சலிடுவது, அடிப்பது, அல்லது பிள்ளையைப் புறக்கணிப்பதன் மூலம் பெற்றோர் பலம் மற்றும் வன்முறையைக் காண்பிக்கலாம்.
  • பெற்றோர்கள் ஒருவர் மீது மற்றவர் பலம் மற்றும் வன்முறையைக் காண்பிக்கலாம்.
  • சகோதரர்கள் வீட்டில் பிள்ளைக் கொடுமையாக நடத்தலாம்.
  • பிள்ளைக்கு கொடுமையாக நடத்தும் மற்றும் வன்முறையைக் காண்பிக்கும் நண்பர்கள் இருக்கலாம்.
  • நண்பர்களின் அழுத்தத்தைச் சமாளிப்பதில் பிள்ளைக்கு கஷ்டம் இருக்கலாம்.
  • ஆசிரியர்கள் அல்லது பயிற்சியளிப்பவர்கள் கூச்சலிடுதல், விலக்கி வைப்பது அல்லது நிராகரிப்பதன் மூலம் பலம் மற்றும் வன்முறையைக் காண்பிக்கலாம்.

கொடுமையாக நடத்துவதைத் தடுத்தல்

தாயின் கை மகளை வளைத்திருக்க, அம்மாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கட்டிலில் இருத்தல்​​​

கொடுமையாக நடத்தப்படும் பிள்ளைக்கு உதவி செய்யக்கூடிய வழிகள்

கொடுமையாக நடத்தப்படும் பிள்ளைகள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி அறிக்கையிடுவதற்கு உற்சாகப்படுத்தப்படவேண்டும். பிள்ளையின் அனுபவங்கள் பற்றித் தாங்கள் அறிந்துகொள்ள விரும்புவதாகப் பெரியவர்கள் காண்பிக்கவேண்டும். பிள்ளைகள் கொடுமையாக நடத்தப்படுவதை நிறுத்துவது பெரியவர்களின் பொறுப்பு.

கொடுமையாக நடத்தப்படும் பிள்ளைகள், தங்களைக் கொடுமையாக நடத்துபவர்களிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும். கொடுமையாக நடத்தப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கும் மற்றும் அவர்களுடன் சேர்ந்துகொள்ளும் நண்பர்களிடமிருந்தும் அவர்களுக்குப் பாதுகாப்புத் தேவைப்படுகிறது.

எப்போது கொடுமைப்படுத்துதல் நடைபெறலாம் என முன்கூட்டியே எப்படி எதிர்பார்க்கலாம் என்பதை இந்தப் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது உதவியாகவிருக்கலாம். அதன்மூலம், அப்படிப்பட்ட சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதை அவர்கள் ஒத்திகை பார்க்கலாம். புதிய நண்பர்களை உருவாக்குவதற்கு அவர்களுக்குச் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு நண்பன் இருப்பது உண்மையிலேயே உதவி செய்யும்.

அவர்கள் தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் அவர்கள் வாழ்க்கையில் பங்கெடுக்கும் பெரியவர்கள், மற்றும் அவர்களது நண்பர்கள் ஆகியோரிடமிருந்து ஆதரவைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

கொடுமையாக நடந்துகொள்ளும் பிள்ளைக்கு உதவி செய்யக்கூடிய வழிகள் பின்வருமாறு:

கொடுமையாக நடந்துகொள்ளும் பிள்ளைகள் பின்வருவனவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும்:

  • தங்கள் பலத்தை நம்பிக்கையான வழிகளில் உபயோகித்தல்
  • நம்பிக்கையான உறவைக் கட்டியெழுப்புதல்
  • ஒரு பிரச்சினை எழும்போது அமைதியாயிருத்தல்
  • மற்றவர்கள் எப்படி உணருவார்கள் என்பதை சிந்தித்தல்
  • எதிர்பார்ப்புகளை நினைவில் வைத்திருத்தல்

அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் தங்கள் வாழ்க்கையில் பங்கெடுக்கும் பெரியவர்கள் ஆகியோரிடமிருந்து முரண்பாடற்ற செய்திகள் மற்றும் ஆதரவான தலையிடுதல் என்பன தேவைப்படுகின்றன.

கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் வழிகள்

கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்த்து அதில் தலையிடாத அல்லது அதைப்பற்றி அறிக்கை செய்யாத பிள்ளைகள், தங்கள் பங்கில் கொடுமைப்படுத்துவதை மோசமாக்குகிறார்கள் என்பதை உணருவதில்லை. அவர்கள் கொடுமைப்படுத்துவதைப் பார்க்கும்போது, அதில் தலையிடுவது பாதுக்காப்பாக இருந்தால், அப்படிச் செய்யவேண்டும் என்று அவர்களுக்குக் கற்பிக்கப்படவேண்டும். கொடுமைப்படுத்தும் நிகழ்ச்சிகளை நம்பிக்கையான ஒரு பெரியவரிடம் அறிக்கை செய்யவேண்டும் என அவர்கள் உற்சாகப்படுத்தப்படவேண்டும்.

நீங்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் அல்லது கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்த்தால் என்ன செய்யவேண்டும்

உங்கள் பிள்ளைக்குத் தெரிவிக்கவேண்டிய சில குறிப்புகள் பின்வருமாறு:

நீங்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்

ஒருவரின் கை இன்னொருவரை வளைத்திருக்க இரண்டு சிறுவர்கள் ஒருவருக்கு ஒருவர் அருகில் முன்னுக்குப் பார்த்தபடி நிற்றல்
  • உங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவும்.
  • பாடசாலையில் ஒரு பெரியவரிடம் தெரிவிக்கவும்.
  • உறுதியாயிருக்கவும்: கொடுமைப்படுத்தும் மாணவனை தைரியமாக எதிர்க்கவும். கொடுமைப்படுத்துவதை நிறுத்தும்படி அந்தப் பிள்ளையிடம் சொல்லவும். அது நியாயமானதல்ல!
  • கடும்போக்காக நடக்காதீர்கள்: பதிலுக்குச் சண்டையிடாதீர்கள். இது கொடுமைப்படுத்துவதை மேலும் மோசமாக்கலாம். பதிலுக்குச் சண்டையிடும் பிள்ளைகள் நீடித்த மற்றும் மேலும் கடுமையான கொடுமைப்படுத்தப்படுத்தலை அனுபவிக்கக்கூடும்.

கொடுமைப்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்தால் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:

  • உங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவும்.
  • பாடசாலையில் ஒரு பெரியவரிடம் தெரிவிக்கவும்.
  • கொடுமைப்படுத்தப்படும் மாணவனுக்கு உதவி செய்யவும்.
  • கொடுமைப்படுத்தலை நிறுத்துவதற்கு எவரிடமாவது உதவி கேட்கவும்.
  • நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்த்தால், கொடுமைப்படுத்தும் மாணவனிடம் செல்லவும். கொடுமைப்படுத்துவதை நிறுத்தும்படி அவனிடம் சொல்லவும்.

முக்கிய குறிப்புகள்

  • பிள்ளைகள் எப்படி ஒருவருடன் மற்றவர் உறவு கொள்கிறார்கள் என்பது தொடர்பான ஒரு பிரச்சினை கொடுமைப்படுத்துதல் ஆகும்.
  • கொடுமைப்படுத்தும் பிள்ளைகள் மற்றவர்களை அடக்குவதில் பலத்தையும் வன்முறையையும் உபயோகிக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.
  • கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்த்தும் அதைப்பற்றி அறிக்கை செய்யாத பிள்ளைகள், தங்கள் பங்கில் கொடுமைப்படுத்துவதை மோசமாக்குகிறார்கள் என்பதை அறியாதிருக்கலாம்.
  • கொடுமைப்படுத்தப்படும் பிள்ளைகளையும் கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்க்கும் பிள்ளைகளையும் அதை அறிக்கை செய்யவேண்டும் என பெரியவர்கள் உற்சாகப்படுத்தவேண்டும்.
  • கொடுமைப்படுத்தப்படும் பிள்ளைகள் உறுதியாயிருக்கவேண்டும் மற்றும் கொடுமைப்படுத்தப்படுவதை நிறுத்தும்படி சொல்லவேண்டும். அவர்கள் திருப்பிச் சண்டையிடக்கூடாது. ஏனென்றால் இது மிகவும் மோசமான கொடுமைப்படுத்தலில் விளைவடையலாம்.
  • பிள்ளைகளுடன் சம்பந்தப்படும் எல்லாப் பெரியவர்களும், பிள்ளையின் பாதுகாப்புக்கு பொறுப்பாளிகள். எந்தப் பங்கிலாவது கொடுமைப்படுத்துதலில் சம்பந்தப்படும் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள். நேர்மறையான ஆற்றல்கள் மற்றும் ஆரோக்கியமான உறவு என்பனவற்றைக் கட்டியெழுப்ப அவர்களுக்கு ஆதரவு தேவை.
Last updated: January 27 2010