Nasogastric (மூக்கு வழியாக இரைப்பைக்குள் உட்செலுத்தப்படும் - NG) குழாய்: உங்கள் பிள்ளையின் NG குழாயை உட்செலுத்துவது எப்படி

Nasogastric (NG) Tube: How to insert your child's NG tube [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளையின் Nasogastric குழாயை உட்செலுத்துவது எப்படி மற்றும் உங்கள் பிள்ளையின் உட்புறத்தில் அது சரியான இடத்தில் இருக்கிறதா என்பதை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டி.

முக்கிய குறிப்புகள்

  • மென்மையான silastic nasogastric (NG) குழாய் என்பது, மூக்கின் நாசித்துவாரம் வழியாகத் தொண்டை மற்றும் வயிற்றுக்குள் செல்லும், ஒரு நீண்ட, மெல்லிய வெற்றுக் குழாய் ஆகும்.
  • ஒவ்வொரு முறை நீங்கள் குழாயை உட்செலுத்தும்போதும், ஒரு நாசியிலிருந்து மற்றைய நாசிக்கு மாற்றி உட்செலுத்த முயற்சிக்கவும்.
  • உணவளிக்க அல்லது மருந்து கொடுக்க NG குழாயைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் NG குழாய் இருக்கும் இடத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
  • குழாய் சுவாசப்பாதையில் இருந்தால், உங்கள் பிள்ளைக்கு மூச்சுத் திணறல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம். இது நடந்தால், NG குழாயை உடனடியாக அகற்றி விடவும். உங்கள் பிள்ளை ஓய்வெடுக்கட்டும், அவர் நன்றாக இருப்பதாக உணர்ந்தவுடன் மீண்டும் தொடங்கவும்.

Nasogastric குழாய் என்றால் என்ன?

மூக்கிலிருந்து வயிற்றுக்குச் செல்லும் குழாயுடன் ஒரு பிள்ளை

Nasogastric குழாய் என்பது, மூக்கின் நாசித்துவாரம் வழியாகத் தொண்டை மற்றும் வயிற்றுக்குள் செல்லும், ஒரு நீண்ட, மெல்லிய வெற்றுக் குழாய் ஆகும். உங்கள் பிள்ளையால் வாய் வழியாகப் போதுமான உணவை உட்கொள்ள முடியாவிட்டால் அல்லது அவரால் வாய் வழியாக உணவைப் பாதுகாப்பாக உட்கொள்ள முடியாவிட்டால், நீங்கள் இந்தக் குழாயைப் பயன்படுத்தி உணவளிக்கலாம். திரவ ஊட்டங்கள் இந்தக் குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்கின்றன.

இந்தக் குழாயை உட்செலுத்துவது எப்படி?

உட்செலுத்துவதற்கு குழாயைத் தயார் செய்தல்

குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுக்கு இந்தப் படிமுறைகள் வேறுபட்டவை. தயவுசெய்து உங்கள் மருத்துவத் தாதியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

  1. பின்வரும் உபகரணங்களைச் சேகரிக்கவும்:
    • வழிகாட்டி கம்பியுடன் கூடிய silastic NG குழாய், அளவு _____
    • Hypafix போன்ற ஒவ்வாமை அற்ற நாடாவைத் (tape) துண்டுகளாக வெட்டவும்
    • ஒரு பிள்ளைக்கு என்றால் ஒரு டம்ளர் தண்ணீரில் உறிஞ்சுகுழாய் (குடிப்பதற்கு) அல்லது ஒரு குழந்தைக்கு என்றால் சூப்பி
    • சுத்தமான நீர் அல்லது நீரில் கரையக்கூடிய எண்ணெய் (குழாயை வழுக்கக்கூடியதாக ஆக்குவதற்கு)
    • எழுத்து அழியாத மார்க்கர்
    • 10 மிலி ஊசி
    • pH சோதனைத் தாள்
  2. அனைத்துப் பொருட்களையும் கைக்கெட்டும் தூரத்தில் வைக்கவும்.
  3. உங்கள் கைகளைக் கழுவவும்.
  4. சரியான நீளத்தைக் கண்டறிய NG குழாயை அளவிடவும்.
    • உங்கள் பிள்ளையை நிமிர்ந்து உட்கார வைக்கவும். குழந்தைகளுக்கு, உங்கள் குழந்தையின் முகம் மேலே பார்க்கும் வண்ணம் தாடையைச் சற்று உயர்த்திப் படுக்க வைக்கவும்.
    • குழாயின் நுனியை உங்கள் பிள்ளையின் நாசியில் உள்ள துளைகளுடன் பிடித்துத் துளைகளிலிருந்து அளவிடத் தொடங்குங்கள்.
    • நாசியிலிருந்து காது மடலின் அடிப்பகுதி வரை உணவுக் குழாயை அளவிடவும், பின்னர் மார்பு எலும்பின் அடிப்பகுதிக்கும் தொப்புள் அல்லது "தொப்புள் குழியின்" பாதி இடைவெளி வரை அளவிடவும்.
சரியான நீளத்திற்கு NG குழாயை அளவிடுதல்ஒரு சிசு மற்றும் ஒரு வளர்ந்த பிள்ளையின் நெஞ்சு எலும்பின் அடி மற்றும் தொப்புள் வரையான அளவீடுகள் மற்றும் அமைவிடம்
  1. இந்த அளவீடுகளை எழுத்து அழியாத மார்க்கரினால் குழாயில் குறிக்கவும்.
NG குழாயில் அளவீடுகளைக் குறித்தல்இரு முனைகள் மற்றும் அகற்றக்கூடிய காப்பிடப்பட்ட வயர் கொண்ட NG குழாயில் அடையாளங்கள்
  1. குழாயிலிருந்து வழிகாட்டிக் கம்பியைத் தளர்த்தவும், ஆனால் அதை அகற்றிவிட வேண்டாம்.

குழாயை உட்செலுத்துதல்

ஒவ்வொரு முறை நீங்கள் குழாயை உட்செலுத்தும்போதும், ஒரு நாசியிலிருந்து மற்றைய நாசிக்கு மாற்றி உட்செலுத்த முயற்சிக்கவும். ஒரு மென்மையான silastic NG குழாய் ஒரு மாதத்திற்கு அந்த இடத்திலேயே இருக்கக் கூடும், ஒவ்வொரு மாதமும் அதை மாற்ற வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவும்.

உங்கள் பிள்ளைக்கு NG குழாய் வைக்கும் ஒவ்வொரு முறையும், நீங்கள் பின்வரும் படிமுறைகளைச் செய்ய வேண்டும்:

  1. உங்கள் பிள்ளையை நிமிர்ந்து உட்கார வைக்க வேண்டும். உங்கள் பிள்ளை ஒரு குழந்தையாகவோ அல்லது மிகவும் இளமையாகவோ இருந்தால், கீழே படுக்க வைத்து, அவர்களின் கைகளும் கால்களும் அசையாமல் இருக்க உதவும் வகையில் அவர்களை ஒரு போர்வையால் சுற்ற வேண்டும்.
  2. குழாயின் முதல் 2 முதல் 4 அங்குலங்கள் (5 முதல் 10 செ.மீ) தண்ணீரில் அல்லது நீரில் கரையக்கூடிய மசகு எண்ணெய் (உதாரணமாக, KY அல்லது Muko Jelly) இல் நனைக்கவும். இது குழாய் நுழைந்து செல்வதை எளிதாக்கும். வழுக்குவதற்காகப் பெட்ரோலியம் ஜெலியைப் (உதாரணமாக வாஸ்லின்) பயன்படுத்த வேண்டாம்.
  3. குழாயின் முனையை நீங்கள் தேர்ந்தெடுத்த நாசியில் உட்செலுத்தவும், குழாயைச் சற்றுக் கீழேயும் அந்தப் பக்கத்தில் உள்ள காதை நோக்கியும் நகர்த்தவும். குழாயைக் கட்டாயப்படுத்திச் செலுத்த வேண்டாம்.
  4. உங்கள் பிள்ளை தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்பட்டால், அவர்கள் ஒரு உறிஞ்சுகுழாய் மூலம் தண்ணீரைக் குடிக்கலாம். உங்கள் குழந்தை விழுங்க உதவுவதற்கு ஒரு சூப்பியையும் கொடுக்கலாம். உங்கள் பிள்ளை பானம் குடிக்க அனுமதிக்கப்படாவிட்டால், குழாய் கீழே இறங்கும்போது விழுங்கும்படி அவரிடம் கூறவும்.
  5. குறிக்கப்பட்ட இடம் நாசியை அடையும் வரைக்கும் குழாயைத் தொடர்ந்து முன்னோக்கிச் செலுத்தவும். குழாய் உங்கள் பிள்ளையின் வாயிலிருந்து திரும்ப வெளியே வந்தால், அதை மீண்டும் இழுத்து, உங்கள் பிள்ளை ஆசுவாசமடைந்த பின் மீண்டும் தொடங்கவும்.
  6. குழாயிலிருந்து வழிகாட்டிக் கம்பியை மெதுவாக அகற்றவும். உங்கள் பிள்ளையின் முகத்தில் ஒரு சிறிய துண்டு நாடாவால் குழாயை ஒட்டிப் பாதுகாக்கவும். வழிகாட்டிக் கம்பியைத் தூக்கி எறிய வேண்டாம். அதனை எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பாதுகாப்பான இடத்தில் பராமரிக்கவும்.
  7. NG குழாய் தற்செயலாக மூச்சுக்குழாய்க்குள் (சுவாசக்குழாய்) சென்றால் எச்சரிக்கையாக இருக்கவும். இந்தக் குழாய் சுவாசப்பாதையில் இருந்தால், உங்கள் பிள்ளைக்கு மூச்சுத்திணறல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இது நடந்தால், NG குழாயை உடனடியாக அகற்றி விடவும். உங்கள் பிள்ளை ஓய்வெடுக்கட்டும், அவர்கள் நன்றாக இருப்பதாக உணர்ந்தவுடன் மீண்டும் தொடங்கவும்.
  8. ஏதாவது உணவூட்டுவதற்கு அல்லது மருந்துகளைக் கொடுப்பதற்கு முன்பு குழாய் சரியான இடத்தில் உள்ளதா எனச் சரிபார்க்கவும். குழாயின் இடத்தைச் சரிபார்க்க கீழே உள்ள வழிமுறைகளைப் பார்க்கவும்.

காலப்போக்கில் தோல் எரிச்சல் ஏற்பட்டு, அதை உங்களால் குணப்படுத்த முடியாவிட்டால், உங்கள் பிள்ளையின் சுகாதார வழங்குநருடன் பேசுங்கள்.

குழாயின் இடத்தைச் சரிபார்க்கவும்

பின்வரும் சந்தர்ப்பங்களில் உங்கள் பிள்ளையின் குழாய் இருக்கும் இடத்தைச் சரிபார்க்கவும்:

  • உணவூட்டங்கள் அல்லது மருந்துகளுக்கு இந்தக் குழாயைப் பயன்படுத்துவதற்கு முன்னர்
  • ஒரு புதிய குழாய் வைக்கப்படும் போது
  • குழாய் வெளியே வந்திருக்கலாம் என்று நீங்கள் கவலைப்படும்போது
  • உங்கள் பிள்ளைக்கு மூச்சுத் திணறல், வாந்தி, இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால்

பின்வரும் முறையைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளையின் வயிற்றில் குழாய் இருக்கும் இடத்தைச் சரிபார்க்கவும்:

இரண்டு மிலீ திரவம் கொண்ட உட்செலுத்தி NG குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது
  1. குழாயைத் தூய்மையாக்குவதற்கு வெறுமையான 10 மிலி ஊசியை அடாப்டருடன் இணைத்துக் காற்றை மெதுவாக உட்செலுத்தவும். பின்னர் சுமார் 2 மிலி வயிற்று உள்ளடக்கங்களை எடுக்க plungerஐப் பின்னோக்கி இழுக்கவும்.
pH சோதனைத் துண்டுகள் மற்றும் pH நிற வழிகாட்டி
  1. pH சோதனைத் தாளை வயிற்றுத் திரவத்துடன் ஈரப்படுத்தி, கொள்கலனில் உள்ள லேபிளுடன் வண்ணத்தை ஒப்பிடுக. பெரும்பாலான பிள்ளைகளுக்குத் தாளில் உள்ள நிறம் 4 க்கும் குறைவாகக் காட்ட வேண்டும். வயிற்று அமிலத்தை அடக்குவதற்குரிய மருந்துகளை எடுக்கும் அல்லது அவ்வேளையில் உணவளிக்கப்பட்ட பிள்ளைகளுக்குத் தாளில் உள்ள நிறம் 6 க்கும் குறைவாகக் காட்ட வேண்டும். என்ன நிறத்தை எதிர்பார்க்க வேண்டும் என்று உங்கள் பிள்ளையின் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரிடம் கேளுங்கள்.
  1. NG குழாய் சரியாகப் பொருத்தப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால், அதை அகற்றிவிட்டு மீண்டும் முயற்சி செய்யவும். pH பரிசோதனை செய்யச் சிறிது வயிற்றுத் திரவத்தைப் பின்னால் இழுப்பதில் சிக்கல் இருந்தால், பின்வருவனவற்றை முயற்சிக்கவும்:
    • ஒரு பெரிய சிரின்ஞ்சைப் பயன்படுத்திக் குழாய் சரிவதைத் தடுக்க மெதுவாகப் பின்னால் இழுக்கவும்.
    • 1 முதல் 2 மிலி காற்றை NG குழாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்தி ஊசியை மெதுவாக பின்னோக்கி இழுக்கவும்.
    • வயிற்றிலுள்ள குழாயின் நிலையை நகர்த்துவதற்குச் சில நிமிடங்களுக்கு உங்கள் பிள்ளையை அவரது வலது அல்லது இடது பக்கமாகப் படுக்க வைத்து அவரது நிலையை மாற்றவும்.

மேலதிகத் தகவல்களுக்குத் தயவுசெய்து Nasogastric (NG) குழாயைப் பார்க்கவும்: உங்கள் பிள்ளைக்கு உணவூட்டுதலும் Nasogastric (NG) குழாய் மூலம் உணவளித்தலும்: பொதுவான பிரச்சினைகள்.

Last updated: ਜਨਵਰੀ 26 2024