PICCஐ உட்செலுத்துதல்: இந்தச் செயன்முறைக்குப் பின்னர் வீட்டில் உங்கள் பிள்ளையைப் பராமரித்தல்

PICC insertion: Caring for your child at home after the procedure [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

வெளிப்புறத்திலிருந்து உட்செலுத்தப்படும் மத்திய வடிகுழாயின் (PICC) உட்செலுத்துதலுக்குப் பிறகு உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்து எவ்வாறு பராமரிப்பது என்பதை அறிந்து கொள்ளவும்.

முக்கிய குறிப்புகள்

  • PICC செலுத்தப்படும் இடம் மற்றும் இணைப்புக்குழாயை எல்லா நேரங்களிலும் உலர்வாகவும் அந்த இடத்தில் கட்டு (dressing) போடப்பட்ட நிலையிலும் வைத்திருக்கவும்.
  • உங்கள் பிள்ளை வலிக்காக acetaminophen எடுத்துக் கொள்ளலாம்.
  • இந்த செயன்முறைக்கு 24 மணி நேரத்திற்குப் பின்னர் உங்கள் பிள்ளை இலேசான உடற் செயற்பாட்டுக்குத் திரும்பலாம்.
  • உங்கள் பிள்ளை எந்த நேரத்திலும் நீந்தக்கூடாது.
  • உங்கள் பிள்ளையின் PICC உடைந்தால், அதன் மூடி கழன்று விழுந்துவிட்டால், போடப்பட்ட கட்டு தளர்வாக வந்தால் அல்லது அது வெளியே விழுந்து விட்டால் என்ன செய்வது என்பது உட்பட PICCஐ எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்துத் தாதி ஒருவர் உங்களுக்குக் கற்பிப்பார்.

உங்கள் பிள்ளைக்கு வெளிப்புறமாக உட்செலுத்தப்படும் மத்திய வடிகுழாய் (PICC) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டிற்குப் பின்னர் வீட்டில் உங்கள் பிள்ளையை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதையும், உதவிக்கு எப்போது அழைக்கவேண்டும் என்பதையும் இந்தப் பக்கத்தில் உள்ள தகவல்கள் விளக்குகின்றன. உங்கள் பிள்ளை வீட்டிற்குச் செல்லும்போது, வீட்டுப்-பராமரிப்புத் தாதி ஒருவர் உங்கள் பிள்ளையின் PICC ஐக் கவனித்துக்கொள்வார், மேலும் இந்தக் கவனிப்பில் சிலவற்றை நீங்களே எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பார்.

மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படல்

உங்கள் பிள்ளை எவ்வளவு காலம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்பது PICCஐ உட்செலுத்துவதற்கான காரணம் மற்றும் செயல்முறைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை எப்படி உணர்கிறார் என்பதைப் பொறுத்தது. PICC பொருத்தப்பட்ட சில பிள்ளைகள் தங்கள் செயன்முறை நடந்த அதே நாளிலேயே வீட்டிற்குச் சென்றுள்ளார்கள். மற்றவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்துள்ளனர்.

செயன்முறைக்குப் பின்னர் கட்டுப் போடுதல்

PICC தோலில் இருந்து வெளிவரும் பகுதி தெளிவான bandage போட்டு மூடப்பட்டிருக்கும். அந்த இடத்தை இயலுமானவரை சுத்தமாக வைத்திருப்பதற்காக இந்த bandage ஒரு சிறப்பான வழியில் போடப்படுகிறது.

PICCஐ உடனடியாகவே உங்கள் பிள்ளையின் மருந்து அல்லது திரவங்களுக்காகப் பயன்படுத்த முடியும். PICC பயன்படுத்தப்படும்போது உங்கள் பிள்ளை எந்த வலியையும் உணரக்கூடாது.

செயன்முறைக்குப் பிறகு வலி நிவாரணம்

செயன்முறைக்குப் பிறகு, சில பிள்ளைகள் PICC தோலில் இருந்து வெளிவரும் சிறிய பகுதியில் வலியை உணரலாம். வழக்கமாக, இந்த வலி லேசானது மற்றும் சில மணி நேரங்களுக்குள் போய்விடும். தேவைப்பட்டால், வலிக்காக உங்கள் பிள்ளைக்கு acetaminophen கொடுக்கவும். உங்கள் பிள்ளை அதிக வலி இருப்பதாக முறைப்பாடு செய்தால், உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழுவின் அங்கத்தவர் ஒருவரை அழைத்து, உங்கள் பிள்ளைக்கு அந்த வலியைத் தணிப்பதற்கு ஏதாவது கொடுக்க முடியுமா என்று கேளுங்கள்.

பிள்ளைகள் பெரும்பாலும் PICC உள்ள கையைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். உங்கள் பிள்ளையின் கையைச் சாதாரணமாகப் பயன்படுத்துமாறு அவரை ஊக்குவிக்கவும். உங்கள் பிள்ளை கையை எல்லாப் பக்கத்துக்கும் அசைப்பது நல்லது மற்றும் பாதுகாப்பானது.

சிக்கல்கள்

உங்கள் பிள்ளையின் PICCயில் சில சிக்கல்கள் ஏற்படலாம். அது உடைந்து போகலாம், மூடி கழன்று விழலாம், போடப்பட்ட கட்டுத் தளர்ந்து போகலாம் அல்லது PICC வெளியே விழுந்து விடலாம். உடைந்த PICCக்கள் அகற்றப்பட்டு மாற்றப்பட வேண்டும். இந்தச் சூழ்நிலைகளைக் கையாள நீங்கள் தயாராக இருப்பது முக்கியம்.

PICCயில் உறைதல், வடிகுழாய் அல்லது மூடியில் இரத்தம் மற்றும் தொற்று ஏற்படல் ஆகியவை பிற சாத்தியமான சிக்கல்களில் அடங்கும். PICCஐக் கையாளுவதற்கு முன்பு உங்கள் கைகளைக் கழுவவேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவும்.

வடிகுழாயில் (Catheter) சேதம்

கடினமாகக் கையாளுதல், இழுத்தல், கத்தரிக்கோலால் வெட்டுதல், பாவிப்பதால் ஏற்படும் பொதுவான சேதம் அல்லது கூர்மையான பொருளால் துளையிடுதல் ஆகியவற்றால் வடிகுழாயில் சேதம் ஏற்படலாம். இது நடந்தால், சேதமடைந்த இடத்தில் வடிகுழாயிலிருந்து திரவம் வெளியேறக்கூடும், கிருமிகள் உள்ளே செல்லக்கூடும், மேலும் வடிகுழாய்க்குள் இரத்தம் மீண்டும் பாயக்கூடும். இணைப்புக் குழாயில் ஒரு சிறிய கிழிதல் இருந்தால் வடிகுழாய் ஈரமாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

PICC உடைந்தால் அல்லது அதில் கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது

நீங்கள் மருத்துவமனையை விட்டுச் செல்வதற்கு முன்னர், உங்களுக்கு PICCக்கான அவசரநிலைப் பொதி ஒன்று கொடுக்கப்படும். உங்கள் பிள்ளையின் PICC உடைந்தால் உங்களுக்குத் தேவைப்படும் பொருட்கள் இந்தப் பொதியில் இருக்கும். ஒரு தாதி உங்களுக்கு இந்தப் பொதியைக் கொடுத்து நீங்கள் புறப்படுவதற்கு முன்னர் அதை உங்களுடன் மீளாய்வு செய்வார். இந்தப் பொதி எப்போதும் உங்கள் பிள்ளையுடன் இருப்பதை நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

PICC உடைந்தால், பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. பதட்டப்படாமல் அமைதியாக இருக்கவும்.
  2. வழங்கப்பட்ட padded clampஐப் பயன்படுத்தி உடைந்த பகுதிக்கும் உங்கள் பிள்ளைக்கும் இடையில் PICC ஐக் கவ்விப் பிடிக்கவும். உங்களிடம் கவ்வி (clamp) இல்லாவிட்டால், இணைப்புக் குழாயை வளைத்து ஒன்றாக டேப் செய்யவும்.
  3. உங்கள் பிள்ளைக்கு ஏதாவது உட்செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தவும்.
  4. உடைந்த பகுதியை ஆல்கஹால் உள்ள பஞ்சால் சுத்தம் செய்யவும்.
  5. உடைந்த பகுதிக்கு அடியில் சுத்தமான பஞ்சுத் துணியை வைத்து PICC ஐ அந்தத் துணியில் டேப் செய்யவும்.
  6. வடிகுழாயைச் சுற்றித் துணியை மடித்து, பிறகு இந்தத் துணிச் சுருளை உங்கள் பிள்ளையின் கையில் டேப் செய்யவும்.
  7. துளை சிறியதாக இருந்தால், எப்படி என்று உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தால், அது தடைப்படுவதைத் தடுக்க உதவும் வகையில் PICCயை heparinize செய்ய முயற்சிக்க வேண்டும்.
  8. மேலதிக அறிவுறுத்தல்களுக்கு நீங்கள் PICC ஐப் பெற்றவுடன் Vascular Access (வாஸ்குலர் அணுகல்) சேவையை அழைக்கவும். மேலதிக மதிப்பீட்டிற்காக உங்கள் பிள்ளையை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.
  9. உடைந்த இணைப்புக் குழாயை உங்களுடன் கொண்டு வரவும். சரியான அளவை அறிவதற்கான விரைவான வழி இது.

சில PICCக்களை மாற்றாமலேயே சரிசெய்ய முடியும். சில உடைந்த PICCக்கள் அகற்றப்பட்டு மாற்றப்பட வேண்டும்.

மூடி கழன்று விழுந்து விட்டால் என்ன செய்வது

மூடி கழன்று விழுந்து விட்டால்:

  1. PICC முனையை ஆல்கஹால் உள்ள பஞ்சு கொண்டு துடைக்கவும்.
  2. ஒரு புதிய மூடியை எடுத்து அதை இணைப்புக் குழாயின் முடிவில் உள்ள hubஇன் மேல் வைத்துத் திருகவும்.
  3. மூடியைச் சுத்தமான துணியால் சுற்றிப் பின்னர் அந்தத் துணிச்சுருளை உங்கள் பிள்ளையின் கை அல்லது மார்பில் டேப் செய்யவும்.
  4. இயலுமான விரைவில் மூடியை மாற்ற வேண்டும். உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தால் aseptic தொடுதல் அற்ற நுட்பத்தைப் (ANTT) பயன்படுத்தி மூடி மாற்றத்தை நீங்கள் செய்யலாம். இந்த நுட்பம் உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை என்றால், வீட்டுப்-பராமரிப்புத் தாதி அதைச் செய்யக்கூடும்.

போடப்படும் கட்டு (dressing) தளர்வடைந்தால் என்ன செய்வது

  1. கட்டு தளர்வாக வந்தால், அதை டேப் மூலம் வலுப்படுத்தவும்.
  2. கட்டு கழன்றுவிட்டால், புதிய சுத்தமான கட்டுப் போடுவதன் மூலம் இணைப்புக் குழாயைப் பாதுகாக்கவும்.
  3. இயலுமான விரைவில், ஒரு புதிய கட்டைப் பயன்படுத்த வேண்டும். நீங்களோ அல்லது வீட்டு-பராமரிப்புத் தாதியரோ ANTT ஐப் பயன்படுத்தி கட்டு மாற்றத்தைச் செய்யலாம்.

PICC வெளியே விழுந்துவிட்டால் என்ன செய்வது

வடிகுழாய் (catheter) வெளியே விழுந்தால் அல்லது வெளியே இழுக்கப்பட்டால்:

  1. இரத்தப்போக்கை நிறுத்த, வடிகுழாய் பிள்ளையின் கையில் உள்ள நரம்புக்குள் நுழையும் இடத்திற்கு 10 நிமிடங்கள் அழுத்தம் கொடுக்கவும்.
  2. வெளிவரும் இடத்தை வழக்கமாகச் சுத்தம் செய்யும் திரவத்தால் சுத்தம் செய்து, அந்தப் பகுதியில் ஒரு bandage போடவும்.
  3. நுழையும் இடத்தில் வீக்கம் அல்லது கண்டற்காயம் ஏதாவது உள்ளதா என்று கவனிக்கவும்.
  4. மேலதிக அறிவுறுத்தல்களுக்கு உங்கள் உடல்நலப் பராமரிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவரைத் தொடர்பு கொள்ளவும். PICC ஐ மீண்டும் செலுத்துவதற்கான செயன்முறை உடனடியாகச் சாத்தியப்படாது.

வடிகுழாய் அல்லது மூடியில் இரத்தம் தெரிந்தால் என்ன செய்வது

அழுதல், சிரித்தல், உடற்பயிற்சி செய்தல் அல்லது பம்ப் நிறுத்தப்பட்டிருக்கையில் கவ்வியைத் திறந்து வைத்திருத்தல் ஆகியவற்றால் மார்பிலுள்ள நாளங்களில் அழுத்தம் அதிகரித்தால் வடிகுழாய் அல்லது மூடியில் இரத்தம் தெரியும். இந்த அமைப்பில் தளர்வான இணைப்பு அல்லது பழுதுபட்ட மூடி போன்ற ஒரு திறந்த பகுதி எங்காவது இருந்தால் அப்படி நிகழும்.

வடிகுழாயில் இரத்தம் தோன்றினால், அதை எவ்வாறு கையாள்வது என்று உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தால், அதனை அலசிக்கழுவிப் பின்னர் heparinize செய்ய வேண்டும். நீங்கள் இரத்தத்தைக் கண்டால், கசிவுகள், வெடிப்புகள் மற்றும் தளர்வான இணைப்புகள் ஏதாவது உள்ளதா என்று எப்போதும் அமைப்பைச் சரிபார்க்கவும். மாற்றக்கூடிய எந்தப் பகுதிகளையும் மாற்றவும், இரத்தம் மீள்-பாய்வதை மீண்டும் சரிபார்க்கவும். உங்களால் பிரச்சினையைச் சரிசெய்ய முடியவில்லை என்றால் உடல்நலப் பராமரிப்புக் குழுவுக்குத் தெரியப்படுத்தவும்.

PICCஐ அலசிக் கழுவ முடியாவிட்டால் என்ன செய்வது

PICCஐ அலசிக் கழுவும்போது படிப்படியாக அழுத்தம் அதிகரிப்பதை நீங்கள் கவனித்தால், PICC இன் உட்புற சுவர்களில் துகள்கள் ஒட்டிக்கொண்டிருக்கலாம், இதனால் திரவங்களுக்கான பாதை குறுகலாக இருக்கும். உங்களால் திடீரென PICCஐ அலசிக் கழுவ முடியாவிட்டால், கவ்வி திறந்துள்ளதா என்பதையும், PICC வளைந்திருக்கிறதா அல்லது முறுக்கப்பட்ட நிலையில் உள்ளதா என்பதையும் சோதிக்கவும். இது இந்த விடயங்களில் ஒன்றல்ல என்றால், PICC இல் திரவங்களின் ஓட்டத்தை நிறுத்தும் இரத்த உறைவு இருக்கக்கூடும். இது நடந்தால் உங்கள் உடல்நலப் பராமரிப்புக் குழுவின் உறுப்பினரை நீங்கள் அழைக்க வேண்டும்.

PICCஇலிருக்கும் இரத்தக் கட்டியை அலசிக் கழுவி வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம். அதன் மூலம் நீங்கள் PICCஐ வெடிக்கச் செய்யலாம் அல்லது உங்கள் பிள்ளையின் இதயம் மற்றும் நுரையீரலுக்குள் ஒரு இரத்தக் கட்டியைத் தள்ளி விடலாம்.

PICCஐ அலசிக்கழுவ முயற்சிக்கும்போது முழுமையான அடைப்பை நீங்கள் கண்டால், அதை உங்கள் உடல்நலப் பராமரிப்புக் குழுவிடம் தெரிவிக்கவும். உதவிக்காக நீங்கள் மருத்துவமனைக்கு அல்லது கிளினிக்குக்கு வர வேண்டியிருக்கும்.

தொற்றுநோய்

PICC வைத்திருப்பது இரத்த அமைப்பில் எளிதான வழியை பாக்டீரியாவுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. எனவே, ஒவ்வொரு முறை நீங்கள் இணைப்புக் குழாயைக் கையாளும்போதும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. aseptic தொடுதல் அற்ற நுட்பம் (ANTT) PICC பராமரிப்பின் போது தொற்றுநோயைத் தடுப்பதற்குரிய மிக முக்கியமான வழியாகும். கிருமிகள் வளர்வதைத் தடுக்க வடிகுழாய் வெளிவரும் இடத்தைச் சுத்தம் செய்து சரியாகக் கட்டுப் போட வேண்டும். பொருட்களை அழுக்காகவோ அல்லது ஈரமாகவோ பெறுவது அல்லது ANTT முறைகளைப் பின்பற்றாதது ஆகியன கிருமிகள் உடலில் நுழைந்து வளர அனுமதிக்கும், இது கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தும்.

உங்கள் பிள்ளைக்கு அவரின் சாதாரண வெப்பநிலையை விட ஒரு டிகிரி அதிகமாகக் காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது குளிருணர்ச்சி அல்லது வியர்வை இருந்தால், உடனடியாக உங்கள் உடல்நலப் பராமரிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவரை அழைக்கவும். எல்லாக் காய்ச்சல்களும் PICC இல் தொற்று ஏற்பட்டதனால் வருவதாக அர்த்தமல்ல; ஆனால் தொற்று எப்போதும் சந்தேகிக்கப்படுகிறது, மேலும் PICC பரிசோதிக்கப்பட வேண்டும்.

நீங்கள் அழைப்பதற்கு முன்னர்:

  • உங்கள் பிள்ளைக்குத் தொண்டைப் புண், இருமல், மூக்கால் ஒழுகுதல், தூக்கக் கலக்கம் அல்லது நடத்தையில் மாற்றம் போன்ற நோய்த்தொற்றின் வேறு ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்று சரிபார்க்கவும்.
  • PICC வெளிவரும் இடத்தில் செந்நிறம், வீக்கம் உள்ளதா அல்லது திரவம் வெளியேறுகிறதா என்று பார்க்கவும்.
கவனிக்க வேண்டிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன செய்ய வேண்டும்
காய்ச்சல், குளிருணர்ச்சி உங்கள் பிள்ளையின் வெப்பநிலையைச் சோதித்துப் பார்க்கவும்.
வெளிவரும் இடத்தில் செந்நிறம், வீக்கம் அல்லது திரவ வெளியேற்றம் PICCஇன் குழாய்ப் பகுதியைத் தொடர்ந்து கட்டைப் பிரித்துச் சிவப்பு நிறக் கோடுகள் உள்ளதா எனச் சோதிக்கவும்.
பொதுவாகக் களைப்படையும் உணர்வு நோய்த்தொற்றின் பிற அறிகுறிகளைப் பார்க்கவும்.
வலி உங்கள் பிள்ளை வலியை அனுபவித்தால், அவரின் வலியின் இருப்பிடம் மற்றும் தீவிரத்தை விவரிக்கும்படி அவரிடம் கேட்கவும்.
அதிகூடிய காய்ச்சல்:
வாய் வழியாக 38 ° C (அல்லது இயல்பை விட 1 ° C அதிகம்)
கையின் கீழ் 37.5 ° C
மலக்குடல் வழியாக 38.5 ° C
காய்ச்சல் மற்றும் வேறு ஏதாவது அறிகுறிகளைப் பற்றித் தெரிவிக்க உங்கள் உடல்நலப் பராமரிப்புக் குழுவை அழைக்கவும்.

இரண்டாம் நிலைப் பராமரிப்பாளர்களுக்கு

கீழேயுள்ள வீடியோ (ஆங்கிலத்தில் கிடைக்கிறது) குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சிறுவர் பராமரிப்பு வழங்குநர்கள் மற்றும் பிற பராமரிப்பாளர்களுக்கு PICC க்கான அவசர நடைமுறைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் காண்பிக்கும். உங்கள் பிள்ளையைப் பராமரிக்கும் எவருடனும் இந்த வீடியோவைப் பார்க்கவும், ஒருவேளை அவர்கள் இந்த நடைமுறைகளில் எதையாவது செய்ய வேண்டியிருக்கும்.

 

PICC பொருத்தப்பட்டுள்ள உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

கையில் PICC வெளிவரும் இடத்தில் எப்போதும் ஒரு bandage போட்டிருக்க வேண்டும். இந்த bandage PICC ஐச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும். hub என்று அழைக்கப்படும் வடிகுழாயின் முனை ஒரு மூடியினால் மூடப்படும்.

நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, வீட்டுப்-பராமரிப்புத் தாதி ஒருவர் உங்கள் பிள்ளையின் PICC ஐக் கவனித்துக் கொள்வார். PICC ஐக் கவனித்துக்கொள்வதற்கு நீங்கள் பழக்கப்படும்போது, இந்தக் கவனிப்பில் சிலவற்றை நீங்களே எவ்வாறு வழங்குவது என்பதை அந்தத் தாதி உங்களுக்குக் கற்பிக்க முடியும்.

PICC தடைப்படுவதைத் தவிர்ப்பதற்கு, அது எப்போதும் பின்வருவனவற்றில் ஒன்றைக் கொண்டிருக்கும்:

  • ஒரு உட்செலுத்துதல், இதில் திரவங்கள் ஒரு பம்ப் மூலம் PICC க்குள் தள்ளப்படுகின்றன.
  • heparin lock: Heparin என்பது ஒரு மருந்து, இது PICC இல் திரவம் செலுத்தப்படாதபோது தடை ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது. ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு புதிய Heparin மருந்து PICC க்குள் செலுத்தப்பட்டு அலசிக் கழுவப்படும். PICC ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படாவிட்டால், heparin மருந்தால் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் ஒரு தடவை அலசிக் கழுவ வேண்டும்.

PICC ஐப் பாதுகாத்தல்

PICC மிகவும் பாதுகாப்பானது என்றாலும், அது உங்கள் பிள்ளையின் உடலுக்குள் உள்ள எதனுடனும் இணைக்கப்படவில்லை. எனவே அதை இழுத்தால், அது வெளியே வரக்கூடும். PICC உங்கள் பிள்ளையின் கையில் பாதுகாப்பாக இருப்பதை எப்போதும் உறுதி செய்வது மிகவும் முக்கியம். இது தற்செயலாக அது வெளியே இழுக்கப்படுவதைத் தடுக்க உதவுகிறது. உங்கள் பிள்ளையின் கையில் PICC யை டேப் போட்டு வைத்திருப்பது அது முறுகுவதை அல்லது வளைவதைத் தடுக்கும். அது சேதமடையாமல் அல்லது உடைந்துவிடாமல் தடுக்க இது முக்கியம்.

போடப்படும் கட்டைப் (Dressing) பராமரித்தல்

PICC தோலில் இருந்து வெளிவரும் பகுதி தெளிவான bandage போட்டு மூடப்பட்டிருக்கும். கையில் PICC வெளிவரும் இடத்தில் எப்போதும் ஒரு bandage போட்டிருக்க வேண்டும். இந்த bandage PICC ஐ சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது.

  • உட்செலுத்திய பிறகு கட்டுத்துணியில் சிறிது உலர்ந்த இரத்தம் இருப்பது இயல்பு. PICC வைத்திருக்கும் இடத்தில் இரத்தப்போக்கு இருக்கக்கூடாது. இருந்தால், வாஸ்குலர் அணுகல் வள சேவையைத் தொடர்பு கொள்ளவும்.
  • போட்டிருக்கும் கட்டு சரியான இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • அந்தக் கட்டை ஈரமாக்க வேண்டாம். PICC ஈரமாகிவிட்டால், அது தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
  • வீட்டுப்-பராமரிப்புத் தாதி ஒருவர் வாரந்தோறும் அல்லது தேவைப்படும் போதெல்லாம் அந்தக் கட்டை மாற்றுவார். நீங்கள் மருத்துவமனையை விட்டுச் செல்வதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழுவினரால் இது ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
  • PICC செலுத்தும் இடத்தில் இருக்கும் சிறிய தையலை அகற்ற வேண்டாம். சில வாரங்களுக்குப் பிறகு அது தானாகவே உதிர்ந்துவிடும்.
  • உங்கள் பிள்ளையின் PICC முறுக்கப்படுவதையோ அல்லது வளைவதையோ தடுப்பதற்கு அது எப்போதும் அவரின் கையில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

குளித்தல்

PICC செலுத்தப்பட்டு 24 மணித்தியாலங்களின் பின்னர் உங்கள் பிள்ளை shower எடுக்கலாம் அல்லது குளிக்கலாம். இருப்பினும், PICC மற்றும் போடப்பட்ட கட்டை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது முக்கியம். அது ஈரமாகிவிட்டால், உடனடியாக டிரஸ்ஸிங் மாற்றப்பட வேண்டும். உங்கள் பிள்ளை குளிக்கும்போது PICC உலர்வாக இருப்பதற்கு எவ்வாறு மூடி வைக்க வேண்டும் என்பதை உங்கள் பிள்ளையின் தாதி உங்களுக்குக் கற்பிப்பார்.

உணவுகள்

உங்கள் பிள்ளை உணர்விழப்பதற்குரிய மருந்து அல்லது மயக்க மருந்தைப் பெற்று, இந்தச் செயன்முறைக்குப் பிறகு போதுமானளவு ஆசுவாசமாக உணர்ந்தால், அவர்கள் வழக்கமான உணவைச் சாப்பிடுவதற்குத் திரும்பலாம். இந்தச் செயன்முறைக்குப் பிறகு 48 மணி நேரத்துக்கு ஏராளமான திரவங்களை குடிக்க உங்கள் பிள்ளையை ஊக்குவிப்பதும் முக்கியம்.

வலி நிவாரணம்

தேவைப்பட்டால், வலிக்காக உங்கள் பிள்ளைக்கு acetaminophen கொடுக்கவும். ஒரு தாதியிடமோ அல்லது உங்கள் பிள்ளையின் மருத்துவரிடமோ முதலில் சோதிக்காமல், acetylsalicylic acid (ASA) அல்லது ibuprofen போன்ற இரத்தத்தை மெல்லியதாக மாற்றும் எந்த மருந்துகளையும் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டாம்.

செயற்பாடு

உங்கள் பிள்ளை PICC செருகப்பட்ட 24 மணிநேரத்திற்குப் பிறகு, அவர் எந்த வலியையும் அனுபவிக்காத பட்சத்தில், இலேசான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம். உங்கள் பிள்ளை PICCஐத் தாக்கக்கூடிய அல்லது வடிகுழாயை வெளியே இழுக்கக்கூடிய ஹாக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் அல்லது கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடக்கூடாது. PICC தண்ணீருக்கு அடியில் வைக்கப்படக்கூடாது, எனவே உங்கள் பிள்ளை எந்த நேரத்திலும் நீருடன் தொடர்புபடும் விளையாட்டுகளை விளையாடவோ அல்லது நீந்தவோ கூடாது. PICC க்கு அருகில் எங்கும் கத்தரிக்கோலைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், PICCஐத் தொடவோ விளையாடவோ மற்றப் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டாம்.

உடல்நலப் பராமரிப்பு வழங்குநரை எப்போது பார்க்க வேண்டும்

உங்கள் பிள்ளைக்குப் பின்வருவனவற்றில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்பு வழங்குநரை அழைக்கவும் அல்லது உடனடியாக உங்களுக்கு அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்:

  • 38°C (100.4°F) க்கும் அதிகமான அல்லது உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழு வழங்கும் சாதாரண வரம்பை விட அதிகமான காய்ச்சல்
  • 48 மணி நேரத்திற்குப் பிறகு acetaminophen தேவைப்படும் வலி
  • அழுத்தத்துடன் நிற்காத இரத்தப்போக்கு
  • PICCஇன் இடத்தில் கசிதல் அல்லது வடிதல்
  • சுவாசிப்பதில் சிரமம்
  • அவர்களின் இதயத்தில் ஒரு வித்தியாசமான உணர்வு அல்லது அவர்களின் இதயம் மிக வேகமாகத் துடிப்பதாக உணர்தல்
  • PICC இணைப்பு அமைந்துள்ள பக்கத்தில் முகம், மார்பு, கழுத்து அல்லது கையில் குறிப்பிடத்தக்க வீக்கம்
  • PICC சிறிதளவாக அல்லது முழுமையாக இழுக்கப்படுதல்

ஒவ்வொரு பிள்ளையின் நிலைமையும் வேறுபட்டது, எனவே உங்கள் பிள்ளைக்கு ஏதாவது குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் உள்ளனவா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டும்.

உங்களுக்குக் கரிசனைகள் இருந்தால் என்ன செய்வது

உங்கள் பிள்ளை SickKids நோயாளியாக இருந்தால், தொலைபேசி (416-813-6986) அல்லது மின்னஞ்சல் (vascularaccess.resourcenurse@sickkids.ca) வழியாகக் கேள்விகள் அல்லது கரிசனைகளுடன் வணிக நேரங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை வாஸ்குலர் அணுகல் வளத் தாதியரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

வார இறுதி நாட்களில்/வணிக் நேரங்களுக்குப் பின்னராக, இணைப்புக் குழாய் அடைத்திருந்தால் அல்லது உடைந்திருந்தால் திரவ/மருந்து விநியோகத்திற்கான மாற்று முறைகளுக்காக நீங்கள் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

Last updated: February 01 2024