முழங்கை இழுபட்டிருத்தல் என்பது என்ன?
முழங்கை இழுபட்டிருத்தல் என்பது, முன்னங்கையிலுள்ள ஓர் எலும்பு விலகி, முழங்கையிலுள்ள ஒரு தசை நாரினூடாக செல்லும்போது நிகழுகிறது. ஒரு தசைநார் எலும்புகளை அதனிடத்தில் பிடித்து வைத்திருக்கிறது. ஒரு பிள்ளயின் முன்னங்கை திடீரென இழுக்கப்படும்போது, முறுக்கப்படும்போது, அல்லது அசைக்கப்படும்போது தசை நார் இழுக்கப்பட்டு, ஆரம் அதனிடத்திலிருந்து விலகுகிறது.
இது செவிலிப்பெண் முழங்கை அல்லது முன்கை எலும்பு மூட்டு பிசகுதல் என்றும் அழைக்கப்படுகிறது.
முழங்கை இழுபட்டிருத்தல் என்பது சிறு பிள்ளைகளுக்கு சாதாரணமாகச் சம்பவிக்கக்கூடியது. பொதுவாக இது 6 மாதங்கள் முதல் 5 வயது வரையான பிள்ளைகளுக்கு சம்பவிக்கும்.
முழங்கை இழுபட்டிருத்தல் என்ற நோயின் அடையாளங்களும் அறிகுறிகளும்
சடுதியாக முன்னங்கை இழுக்கப்பட்ட பின் அல்லது முறுக்கப்பட்ட பின் பெரும்பாலும் பிள்ளை வலியினால் அழும்.
உங்கள் பிள்ளை முன்னங்கையை தன் பக்கத்தில் தாங்கலாக வைத்துக்கொண்டு அழுலாம். அவள் தன் கைகளை உபயோகிக்காமலே இருக்கலாம்.
உங்கள் பிள்ளை நிலைகுலைந்து போவது சாதாரணமானது. முன்னங்கையை அசைக்கும்போது மட்டும் வலிக்கிறது என்று அழலாம் அல்லது முறையிடலாம். அவள் அழாமலும் நிலைகுலைந்து போகாதிருப்பதும் கூட சாத்தியமானது. அனேக பிள்ளைகளிடம் எங்கே வலிக்கிறது என்று கேட்டால், முழங்கைப்பகுதியில் பிரச்சினை இருந்தாலும் மணிக்கட்டையே சுட்டிக் காண்பிப்பார்கள்
மருத்துவமனையில் சிகிச்சை
பெரும்பாலும் உங்கள் பிள்ளைக்கு எக்ஸ்ரே தேவைப்படாது. உடல் நல பராமரிப்பளிப்பவர் முன்னங்கையை அசைத்து எலும்பையும் தசைநாரையும் அதற்குரிய இடத்தில் வைத்து விடுவார். இது பிள்ளைக்குக் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தலாம். ஆனால் அது பெரும்பாலும் ஒரு வெகு விரைவான செயற்பாடாக இருக்கும்.
பெரும்பாலும் இந்தச் செயற்பாடு நடைபெற்ற 15 நிமிடங்களுக்குள் உங்கள் பிள்ளை தன் முன்னங்கையை திரும்பவும் உபயோகிக்கத் தொடங்கலாம். முதலில் அவள் தயங்கலாம். இந்த காயம் பல மணி நேரத்துக்கு முன்னர் சம்பவித்ததாக இருந்தால் அவள் தன் முன்னங்கையை வழக்கம்போல செயல்படுத்தத் தொடங்க இன்னும் கூடுதல் நேரம் ஆகலாம்.
சில வேளைகளில், உங்கள் பிள்ளையின் முன்னங்கையைத் தற்செயலாக அசைக்கும்போது, பிள்ளையின் சட்டையை அல்லது சுவெட்டரை கழற்றுதல் போன்ற சமயங்களில், எலும்பு தானாகவே அதனிடத்துக்கு அசைக்கப்பட்டுவிடும். ஆனால் நீங்களாக எலும்பை அதனிடத்திற்கு அசைத்துவைக்க முயற்சிக்கவேண்டாம்.
உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்
முழங்கை இழுபட்டிருத்தல், உங்கள் பிள்ளைக்கு நீண்ட காலப் பாதிப்பை உண்டாக்காது. முழங்கையானது அதனிடத்தில் வைக்கப்பட்டதும் உங்கள் பிள்ளை முன்பு போலவே அதை செயல்படுத்தத் தொடங்குவாள். நீங்கள் உங்கள் பிள்ளையின் செய்கைகளை கட்டுப்படுத்தவேண்டிய அவசியமில்லை.
இந்த செயல்பாட்டிற்குப் பிறகு உங்கள் பிள்ளைக்கு சிறிது வலி இருக்கலாம். இருந்தால், அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்பரா,அல்லது வேறு பிரான்டுகள்) அல்லது ஐபியூபுரோஃபென் (அட்வில், மோட்ரின், அல்லது வேறு பிரான்டுகள்) போன்ற வீரியம் குறைந்த வலி நிவாரண மருந்துகளைக் கொடுக்கவும்.
மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்
பின்வரும் நிலைமைகளின் போது உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள்:
- செயற்பாட்டின் பின்னர் அடுத்த நாளும் உங்கள் பிள்ளை தன் முன்னங்கையை வழக்கம் போல உபயோகிக்கவில்லை
- உங்கள் பிள்ளைக்கு மிக அதிகமான வலி இருப்பதைப் போல தோன்றுகிறது.
- இதே மாதிரியான காயம் திரும்பவும் ஏற்படுகிறது.
முழங்கை இழுபடுவதை தடுத்தல்
உங்கள் பிள்ளையைத் தூக்குவது, கையில் அல்லது மணிக்கட்டில் பிடித்து ஊஞ்சல் போல ஆட்டுவது போன்று, உங்கள் பிள்ளையின் முன்னங்கைகளைத் திடீரென இழுப்பதையோ அல்லது குலுக்குவதையோ தவிர்க்கவும். மற்ற குடும்ப அங்கத்தினருக்கும் சொல்லி வைக்கவும். குறிப்பாக, சில சிறு பிள்ளைகள் முழங்கை இழுபட்டிருத்தல் என்ற வியாதிக்கு ஆளாகக் கூடியவர்கள். ஆயினும் அவர்கள் பெரும்பாலும் 5 வயதுக்கு மேற்படும்போது இவ் வியாதியிலிருந்து நிவாரணமடைவார்கள்.
முக்கிய குறிப்புகள்
- முழங்கை இழுபட்டிருத்தல் என்பது முன்னங்கையை சடுதியாக இழுப்பதால் அல்லது குலுக்குவதால் ஏற்படுகிறது.
- இது சிறு பிள்ளைகளுக்கு மிகவும் சாதாரணமாக சம்பவிக்கும்.
- பெரும்பாலும், இது ஒரு உடல் நல பராமரிப்பளிப்பவரால் இலகுவாகக் கண்டு பிடிக்கப்பட்டு சரி செய்யப்படும்.
- இழுபட்ட முழங்கையை ஒரு போதும் நீங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம்.
- உங்கள் பிள்ளையின் முன்னங்கையை, சடுதியாக இழுப்பதை அல்லது குலுக்குவதைத் தவிருங்கள்.