நீந்துவோர் காது நோய் (ஓடிடிஸ் எக்ஸ்டர்னா)

Swimmer's ear (otitis externa) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

நீந்துவோர் காது நோய் என்பது செவிக் கால்வாயில் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். நீந்துவோர் காது நோய் அறிகுறிகள், இது எவ்வளவு காலம் நீடிக்கும், மற்றும் இந்த நிலைமைகளில் பிள்ளையை பராமரிக்கும் வழிகள் ஆகியவற்றைப் பற்றி படித்தறியுங்கள்.

நீந்துவோர் காது நோய் (சுவிம்மர்ஸ் இயர்) என்பது என்ன?

ஓடிடிஸ் எக்ஸ்டர்னா, அல்லது நீந்துவோர் காது நோய் என்பது செவிக் கால்வாயில் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இது எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும் என்றாலும், 7 க்கும் 12 க்கும் இடைப்பட்ட பிள்ளைகளில்தான் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. நீந்துவோர் காது நோய் பெரும்பாலும் கோடை மாதங்களில் ஏற்படுவதோடு, தண்ணீரில் அதிக நேரம் செலவிடும் பிள்ளைகளில்தான் மிகவும் பொதுவானதாக இருக்கின்றது.

நீந்துவோர் காது நோய்க்கான அடையாளங்களும் அறிகுறிகளும்

காதின் உடற்கூரியல்செவிப்பறை மென்சவ்வு மற்றும் செவிக் கால்வாய் செந்நிறமாகவும் அரிப்புணர்வுடனும் இருத்தல்; கால்வாய் சுவர் வீங்கி இருத்தல்; மற்றும் சிதல் வெளியேற்றம்

பின்வரும் நிலைகளைப் பற்றி உங்கள் பிள்ளை முறையிடலாம்:

  • வழக்கமாக ஒரு காதில் ஆனால் சிலவேளைகளில் இரண்டு காதுகளிலும் வலி, மெதுவான வலி மற்றும் அரிப்பு
  • மந்தமான செவிப்புலன் அல்லது செவிப்புலன் இழப்பு
  • காதில் அடைப்பேற்பட்டது போன்ற உணர்வு

வலிக்கும் காதிலிருந்து ஒரு வெளியேற்றம் அல்லது நீர் வடியல் ஏற்படலாம். மிகக் கடுமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே காய்ச்சல் காணப்படும்.

சிக்கல்கள்

மிக அரிதாக, சிகிச்சையளிக்கப்படாத நீந்துவோர் காது நோய், பின்வருவன போன்ற கடும் சிக்கல்களை ஏற்படுத்தும்:

  • செலுலிடிஸ் என்றழைக்கப்படும் கடுமையான ஆழமான தோல் தொற்றுநோய்
  • நீடித்த ஓடிடிஸ் எக்ஸ்டர்னா போன்ற நீண்டகால்தொற்றுநோய்கள்
  • தற்காலிக செவிப்புலன் இழப்பு
  • நெக்ரொடைசிங் ஓடிடிஸ் எக்ஸ்டர்னா என்றழைக்கப்படும், எலும்பு மற்றும் குருத்தெலும்புச் சிதைவு
  • சில வேளைகளில் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய, அருகிலிருக்கும் நரம்புகளுக்கு அல்லது மூளைக்கு தொற்று நோய் பாரிய அளவில் பரவுதல்

உங்கள் பிள்ளையின் காதைச் சுற்றி அல்லது காதுக்குப் பின்னால் வலி, வீக்கம் அல்லது சிவந்திருத்தல் அல்லது உயர்ந்த உடல் வெப்பநிலை ஆகியவையிருந்தால் எப்போதும் மருத்துவ கவனிப்பை நாடுங்கள்.

நீந்துவோர் காது நோய்க்கு மருத்துவர்கள் என்ன செய்யலாம்

அன்டிபையோடிக் மற்றும் ஸ்டேரொயிட்கொண்ட காது சொட்டு மருந்துகளால் உங்கள் பிள்ளைக்கு வழக்கமாக சிகிச்சையளிக்கப்படும். உங்கள் மருத்துவர் இந்த மருந்துகளுக்கான மருந்துக் குறிப்பைத் தருவார். உங்கள் பிள்ளையின் தொற்றுநோய் மிகவும் கடுமையானதென்றால், வாய் மூலம் உட்கொள்ளும் அன்டிபையோடிக் மருந்துக்கும் உங்கள் மருத்துவர் ஒரு மருந்துக் குறிப்பைத் தரக்கூடும். கடுமையற்ற சந்தர்ப்பங்களில் பியூரோஸ் கரைசல் (பியூரொவ்ஸ் சொலூஷன்), போன்றதொரு வலுவூட்டும் காது சொட்டு மருந்தால் சிகிச்சையளிக்கப்படலாம்.

2 அல்லது 3 நாட்களில் தொற்றுநோய் நீங்கத் தொடங்குவதோடு, வழக்கமாக ஒரு வாரத்தின்பின் முழுமையாக குணமடையும்.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

வலிக்கு சிகிச்சையளியுங்கள்

நீந்துவோர் காது நோய் வலிநிறைந்தது. மருந்துக் குறிப்பு இல்லாமல் கிடைக்கும் அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா அல்லது வேறு பிராண்டுகள்) அல்லது ஐபியூபுரோஃபென் (மோட்ரின், அட்வில் அல்லது வேறு பிராண்டுகள்) போன்ற வலி மருந்துகளை உங்கள் பிள்ளையின் வலிக்கு உதவுவதற்காக நீங்கள் கொடுக்கலாம்.

அவுரல்கான் போன்ற சில டொபிக்கல் காது சொட்டு மருந்துத் தயாரிப்புகள், வலியை நீக்க உதவலாம் அனால் கிருமித் தொற்றிற்கு சுகமளிக்காது. அன்டிபையோடிக் சொட்டுகளைக் கொடுப்பதற்கு சற்றுமுன் இவ்வகை காது சொட்டு மருந்துகளை உபயோகிக்கவேண்டாம். இது அன்டிபையோடிக்ஸின் தாக்கத்தைக் குறைத்துவிடும்.

இலகுவான காது சொட்டு மருந்திற்கு ஆலோசனைகள்

உங்கள் பிள்ளைக்கு நீங்கள் காது சொட்டு மருந்தைக் கொடுக்கும் போது, அவளை ஒரு பக்கமாக சரிந்து படுக்க வைப்பதோடு, சொட்டுகள் செவிக் கால்வாயின் அடிவரை செல்வதை நிச்சயப்படுத்துவதற்கு காதை ஆட்டுங்கள். அதன் பின்னர் 3 முதல் 5 நிமிடங்கள் வரை அவளை தொடர்ந்து, பக்கமாக சரிந்து படுக்கவைத்திருங்கள்.

காதில் அதிக நீர் வடிந்திருந்தால், சொட்டுகளைக் விடுவதற்குமுன் நிங்கள் அவற்றை சுத்தம் செய்யலாம். ஒரு டிஷூவை முறுக்கி, செவிக் கால்வாய்க்குள், சில தடவைகள் மெதுவாகப் போட்டெடுங்கள். செவிக் கால்வாய்க்குள் பஞ்சு முனையுள்ள குச்சிகள் அல்லது கியூ-டிப்ஸ்களை ஒருபோதும் போட வேண்டாம்.

நீந்துவதை அல்லது தலையை முழுவதுமாக மூழ்குவதை தவிருங்கள்

தொற்றுநோயானது முழுமையாகக் குணமாகும்வரை உங்கள் பிள்ளை நீந்துவதை அல்லது தன் தலையைத் தண்ணீருக்கடியில் மூழ்குவதை தவிர்க்க வேண்டும். அவள் ஷவரில் குளிக்கும்போது நீர் காதிற்குள் நேரடியாக நுழைவதைத் தவிர்த்திடுங்கள்.

மருத்துவ உதவியை எப்போது நாடுவது

பின்வரும் நிலைமைகளின்போது பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழையுங்கள்:

  • சிகிச்சையளித்து 48 மணிநேரங்களுக்குப் பின் பிள்ளையின் நிலையில் முன்னேற்றமில்லை
  • உங்கள் பிள்ளைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுகின்றது
  • காதைச் சுற்றி அல்லது காதுக்குப் பின்னால் சிவந்து அல்லது வீங்கியிருக்கின்றது

நீந்துவோர் காது நோயைத் தவிர்ப்பது

வலுவூட்டுகின்ற (அஸ்ட்ரின்ஜென்ட்) காது சொட்டு மருந்து

சில பிள்ளைகள் மீண்டும் மீண்டும் வரும் ஓடிடிஸ் எக்ஸ்டர்னாவால் அவதிப்படுவர். காயவைக்கும் அல்கஹால்கொண்ட அல்லது பியூரோஸ் கரைசல் (பியூரொவ்ஸ் சொலூஷன்), போன்ற வேறு வலுவூட்டும் காது சொட்டு மருந்துகளை நீந்தியதற்குப்பின் உபயோகிப்பதன் மூலம் இதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் உதவலாம். இந்த வலுவூட்டும் காது சொட்டு மருந்துகள் மருந்துக்குறிப்பில்லாமலே ஃபார்மஸிகளில் கிடைக்கப்பெறும். அதிக கடுமையான தொற்றுநோயொன்று இருக்கும்போது இந்தக் காது சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டாம்.

காதடைப்பான்கள்

நீந்தும்போது காதடைப்பான்களைப் பயன்படுத்துவது ஓடிடிஸ் எக்ஸ்டர்னா மீண்டும் வருவதை தடுக்க உதவும். நீந்துவதற்காகவே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட காதடைப்பான்களையே பயன்படுத்துங்கள்.

முக்கிய குறிப்புகள்

  • நீந்துவோர் காது நோய்க்கு, வழக்கமாக மருந்துக் குறிப்பு மூலம் வழங்கப்படும் காது சொட்டு மருந்துகாளால் சிகிச்சையளிக்கப்படுகின்றது
  • உங்கள் பிள்ளைக்கு, தொடர்புடைய கடும் காய்ச்சல் அல்லது சுற்றியிருக்கும் தோல் சிவந்து அல்லது வீங்கியிருந்தால் உங்கள் மருத்துவரை மீண்டும் பார்க்கச்செல்லுங்கள்.
  • காதுக்குள் பஞ்சு முனையுள்ள குச்சிகள் அல்லது கியூ-டிப்ஸ்களை ஒருபோதும் போட வேண்டாம்.
  • மீண்டும் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கு, உலர்த்தும் காது சொட்டு மருந்துகளையும் காதடைப்பான்களையும் உபயோகிப்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
Last updated: junho 15 2011