எட்டோபோசைட் என்பது புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்காகக் கொடுக்கப்படும் ஒரு மருந்து. இது புற்றுநோய் உயிரணுக்கள் பகுதிகளாகப் பிரிவடைதலையும் புதிய உயிரணுக்கள் உருவாகுவதையும் தடை செய்யும். எட்டோபோசைட் மருந்து கூட்டுக்குளிகை, ஊசிமருந்து வடிவங்களில் கிடைக்கும்.
எட்டோபோசைட் மருந்து, விபி -16 அல்லது அதன் வர்த்தகப் பெயரான வெபெஸிட் ® என அழைக்கப்படுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
சில பிள்ளைகளால் எட்டோபோசைட் 50 மிகி கூட்டுக்குளிகையை முழுமையாக விழுங்க முடியாது அல்லது அவர்களுக்கு 50 மிகி க்குக் குறைவான வேளைமருந்து தேவைப்படும். எட்டோபோசைட் மருந்தின் 20 மிகி/மிலி அளவு ஊசிமூலமாகச் செலுத்தப்படக்கூடிய கரைசல் வாய்வழியாகக் கொடுக்கப்படுகிறது. பின்வரும் அறிவுரைகளைத் தயவுசெய்து கவனமாக மீளாய்வு செய்யவும்:
ஏதாவது கீமோத்தெரபி சிகிச்சை கொடுப்பதற்கு முன்பாக, வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்துகள் கொடுத்தலும் ஐத் தயவு செய்து பார்க்கவும்.
உங்களுடைய பிள்ளைக்குக் கீமோத்தெரபி சிகிச்சை கொடுக்கும்போது பின்வருவனவற்றைச் செய்யவும்:
- கையுறைகள், ஒரு முகமூடி, ஒரு நீளமான மேலாடை என்பனவற்றை அணிந்துகொள்ளவும்.
- அப்புறப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்கள் தயாராக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்
உங்களுக்குப் பின்வருவனவும் தேவைப்படும்:
- நரம்பு மூலமாக ஏற்றும் மருந்தூசிக் குழல்
- குப்பியைச் சென்றடையக்கூடிய கூர்முனைகள் (ஸ்பைக்ஸ்)
- ஒரு உறிஞ்சக்கூடிய பிளாஸ்டிக் பின்னணைவுள்ள மெத்தை அட்டை
- எட்டோபோசைட் மருந்தைக் கொண்டிருக்கும் ஒரு சிறு குப்பி
சிறு குப்பியிலிருந்து எட்டோபோசைட் மருந்தை எடுப்பதற்கு, உங்களுக்கு ஒரு கூர்முனையும் (ஸ்பைக்ஸ்) நரம்பினூடாகச் செலுத்தப்படும் மருந்தூசிக் குழலும் தேவைப்படும்.
சிறு குப்பியிலிருந்து எட்டோபோசைட் மருந்தைப் பின்வருமாறு இழுத்தெடுக்கவும்
- எட்டோபோசைட் மருந்துக் குப்பியிலிருந்து பிளாஸ்டிக் மூடியை அகற்றி ஒரு கடினமான மேற்பரப்பில் செங்குத்தாக வைக்கவும்.
- குப்பிக் கூர்முனையை அதன் பொதியிலிருந்து வெளியே எடுத்து மருந்துக் குப்பிக்குட் செலுத்தவும்.
- எட்டோபோசைட் மருந்துக் குப்பியை மேசையின் மேல் வைத்து குப்பியின் மூடியின் நடுவில் கூர்முனையை வைத்து ஒழுங்குபடுத்தவும். கூர்முனையை நேராக வைத்துக் கூர்முனை, ரப்பர் மூடியினூடாகச் சென்று, குப்பியின் பிளாஸ்டிக் "விளிம்பு", குப்பியைத் தொடும்வரை கூர்முனையை உறுதியாகக் குப்பினுள் கீழ்நோக்கித் தள்ளவும்.
- ஊசிமருந்துக் குழலை பொதியிலிருந்து வெளியே எடுக்கவும். குப்பியின் கூர்முனையைத் தள்ளியும் முறுக்கியும் மருந்தூசிக் குழலுடன் பாதுகாப்பாக இணைக்கவும்.
- குப்பியைத் தலைகீழாகக் கவிழ்த்து, மருந்தூசிக குழலின் தண்டை மெதுவாக வெளியே இழுத்துத் தேவையான அளவு வேளைமருந்தை இழுத்தெடுக்கவும்.
- அமுக்கத்தைச் சமப்படுத்துவதற்காகக் குப்பிக்குள் ஒரு சிறிய பலூனில் காற்று நிரம்பும். இது இயல்பானது.
- குப்பியின் கூர்முனையிலிருந்து மருந்தூசிக் குழலை அகற்றிவிடவும்.
இப்போது, எட்டோபோசைட் வேளைமருந்தைக் கொடுப்பதற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்கள்.
உங்களுடைய பிள்ளைக்கு வாய்வழியாக எட்டோபோசைட் மருந்தைக் கொடுப்பதற்குப் பின்வருவனவற்றைச் செய்யவும்:
- எட்டோபோசைட் திரவத்தின் சுவையை முன்னேற்றுவதற்காக அதனுடன் குறைந்த பட்சம் சம அளவான பழரசத்தைச் சேர்த்து அதன் செறிவைக் குறைக்கவும். அப்பிள் ஜூஸ், ஓரேஞ் ஜூஸ், கோலா, அல்லது லெமனேடை நீங்கள் உபயோகிக்கலாம். கிரேப் ஃப்ருட் ஜூஸ் உபயோகிக்கப்படக்கூடாது.
- நீங்கள் வேளைமருந்தைக் கொடுத்து முடித்தவுடன் காலியான மருந்தூசிக் குழலை ஷார்ப்ஸ் கொள்கலனில் போட்டுவிடவும்.
- மேலதிக வேளைமருந்துகள் தேவைப்பட்டால், ஒரு புதிய மருந்தூசிக் குழல் உபயோகிக்கப்படவேண்டும்.
- எட்டோபோசைட் மருந்துக் குப்பியின் மீதிருக்கும் கூர்முனை, அடுத்து வரும் வேளைமருந்துகளுக்கும் 10 நாட்கள் வரை உபயோகிக்கப்படலாம். குப்பியை செங்குத்தாக, குளிர்ச்சியான, உலர்ந்த, சூரிய ஒளி படாத இடத்தில் வைக்கவும்.
- ஒவ்வொரு புதிய எட்டோபோசைட் குப்பிக்கும் ஒரு புதிய குப்பிக் கூர்முனையை உபயோகிக்கவும்.
பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் , வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை)ச் சிகிச்சை: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்துகள் கொடுத்தலும் ஐத் தயவு செய்து பார்க்கவும்.
முக்கிய குறிப்புகள்
- 20மிகி/மிலி எட்டோபோசைட் ஊசிமருந்து வாய்வழியாகக் கொடுக்கப்படுகிறது.
- உங்களுடைய பிள்ளைக்கு எட்டோபோசைட் மருந்து கொடுக்கும்போது கையுறைகள், முகமூடி, ஒரு நீளமான மேலாடை என்பனவற்றை அணிந்து கொள்ளவும்.
- எட்டோபோசைட் மருந்தைக் குப்பியிலிருந்து வெளியே எடுப்பதற்கு, குப்பியை எட்டக்கூடிய கூர்முனையையும் (ஸ்பைக்) நரம்பூடாகச் செலுத்தும் மருந்தூசிக் குழலையும் உபயோகிக்கவேண்டும்.
- ஒரு பானத்தை உபயோகித்து எட்டோபோசைட் மருந்தின் செறிவைக் குறைக்கவும். கிரேப் ஃப்ருட் ஜூஸ் உபயோகிக்கப்படக்கூடாது
- நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு புதிய எட்டோபோசைட்க் குப்பிக்கும் ஒரு புதிய குப்பிக் கூர்முனைய உபயோகிக்கவும்.