பெரும்பாலான நிலைமைகளில், உங்களுடைய பிள்ளையில் சுரண்டல் காயம் அல்லது வெட்டுக்காயத்தை ஏற்பட்டால், இரத்தம் வடிதல் விரைவாக நின்றுவிடும். வெளியேறிய இரத்தத்தின் அளவு அதிகமானதாகத் தோன்றினாலும், பெரும்பாலான சிறிய காயங்கள் பெருமளவு இரத்த இழப்பில் அல்லது சிக்கல்களில் முடிவடையாது. ஆயினும், இரத்தம் வடிதல் நிறுத்தப்படாவிட்டால், அதிகளவு இரத்த இழப்பைத் தடுப்பதற்கும், அதனால் ஏற்படக்கூடிய அதிர்ச்சியைத் தடுப்பதற்கும் நீங்கள் விரைவாகச் செயற்படவேண்டும். இரத்தோட்டத் தொகுதி உடலின் எல்லாப் பாகங்களுக்கும் போதியளவு இரத்தத்தை வழங்காதிருக்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அதிர்ச்சிக்கான அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
- வெளிறிய, சாம்பல் நிற தோல்
- உடல்வெப்பநிலையில் வீழ்ச்சி
- வியர்த்தல்
- விரைவான சுவாசம்
- நினைவிழத்தல்
சிகிச்சை
ஓய்வு
சிறிய காயமானாலும் வினைமையான காயமானாலும், எந்த வகையான காயத்துக்கும் சிகிச்சை செய்யும்போது உங்களுடைய பிள்ளையை ஒய்வு நிலையில் வைத்துக்கொள்ளவும். உட்கார்ந்திருக்கும்படி அல்லது படுத்திருக்கும்படி அவளை உற்சாகப்படுத்தவும்.
காயப்பட்ட பகுதியை உயர்த்தி வைத்தல்
காயப்பட்ட பகுதியை உங்களுடைய பிள்ளையின் இதயத்துக்கு மேலாக உயர்த்திவைக்க நிச்சயமாக இருக்கவும். இது காயத்தை நோக்கிப் பாயும் இரத்தத்தின் அளவைக் குறைக்கும். காயம் அழுக்காக இருந்தால், அதை சுத்தமான, குளிர்ந்த அல்லது இளஞ் சூடான குழாய் நீரினால் மென்மையாக அலசவும். வெந்நீரை உபயோகிக்கவேண்டாம். காயத்தைச் சுத்தம் செய்வதற்காக நீங்கள் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் அல்லது சேலைன் காயத் தெளிப்பானையும் உபயோகிக்கலாம். அல்ககோல், அயடீன், மேர்கியூரோகுரோம், ஹைட்ரஜன் பேரொக்ஷைட், அல்லது அது போன்ற வேறு சுத்தப்படுத்தும் மருந்துகளை உபயோகிக்கவேண்டாம். இந்தக் கரைசல்கள் வலி மற்றும் /அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்.
நேரடியான அழுத்தம்
காயத்திலிருந்து இரத்தம் வடிதலை நிறுத்துவதற்காகக் கிருமியழிக்கப்பட்ட சல்லடைத் துணி அல்லது ஒரு சுத்தமான துணியை எடுத்து காயத்தின் மேல் உறுதியாக அழுத்தவும். இரத்தம் வடிதல் மந்தமானவுடன் அல்லது நின்றவுடன், மருந்துக்கட்டை காயத்தின் மேல் வைத்து ஒரு வார்ப்பட்டை அல்லது ஒரு காப்பூசியினால் பத்திரப்படுத்தவும்.
உங்களுடைய பிள்ளை அதிர்ச்சியடைந்திருப்பதற்கான எதாவது அறிகுறியைக் காண்பித்தால், உடனே 9-1-1 ஐ அழைக்கவும்.
உட்புதைக்கப்பட்ட பொருள்
உங்களுடைய பிள்ளையின் உடலில் ஏதாவது ஒரு பொருள் உட்புதைக்கப்பட்டிருந்தால், அல்லது ஒட்டிக்கொண்டிருந்தால், அதை வெளியே எடுக்கவேண்டாம். அதை வெளியே இழுத்தெடுப்பது இரத்தம் வடிதலை மோசமாக்கலாம். அதற்குப் பதிலாக, அந்தப் பகுதியை கிருமியழிக்கப்பட்ட சல்லடைத் துணியினால் பாதுகாப்பாக மூடிவிடவும். நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்காக, உங்களுடைய கைகளைக் கழுவவும், அல்லது ஒரு முறை மாத்திரமே உபயோகிக்ககூடிய கையுறைகளை அணியவும் நிச்சயமாக இருக்கவும். பன்டேஜ் சுருளினால் காயத்தைச் சுற்றிக் கட்டவும். காயத்துக்கு மேலேயும் கீழேயும் பன்டேஜ் சுருளைப் பத்திரப்படுத்தவும். அந்தப் பொருளை வெளியே எடுப்பதற்காகவும் காயத்தைப் பராமரிப்பதற்காகவும் மருத்துவக் கவனிப்பை உடனே நாடவும்.
முக்கிய குறிப்புகள்
- உங்களுடைய பிள்ளையின் காயத்திலிருந்து இரத்தம் வடிதல் தானாகவே நிற்காவிட்டால், அதிகளவு இரத்தம் இழக்கப்படுவதையும் அதிர்ச்சியையும் தடுப்பதற்காக விரைவாகச் செயற்படவும்.
- அதிர்ச்சிக்கான அறிகுறிகள் தோல் வெளிறுதல், உடல் வெப்பநிலையில் வீழ்ச்சி, வியர்த்தல், விரைவான சுவாசம், நினைவிழத்தல் என்பனவற்றை உட்படுத்தும்.
- உங்களுடைய பிள்ளை அதிர்ச்சிக்கான ஏதாவது அறிகுறியைக் காண்பித்தால், உடனே 9-1-1ஐ அழைக்க்கவும்.
- காயத்தை இதயத்துக்கு மேலாக உயர்த்தி வைக்கவும். இது காயப்பட்ட பகுதிக்குப் பாயும் இரத்தத்தின் அளவைக் குறைக்கும்.
- உங்களுடைய பிள்ளையின் காயத்துக்குச் சிகிச்சையளிக்கும்போது, உங்களுடைய கைகள் சுத்தமாக இருப்பதையும், அல்லது ஒரு முறை மாத்திரமே உபயோகிக்கக்கூடிய கையுறைகள் அணிந்திருப்பதையும் நிச்சயப்படுத்தவும்.
- உங்களுடைய பிள்ளையின் உடலுக்குள் ஏதாவது பொருள் புதைந்திருந்தால், அதை அகற்றவேண்டாம். அந்தப் பகுதியை சுத்தமான பன்டேஜ் சுருளினால் மூடி, மருத்துவக் கவனிப்பை உடனே நாடவும்.