காஸ்ட் (சாந்துக் கட்டு) பராமரிப்பு: கை அல்லது கால் (சாந்துக்கட்டு)

Cast care: Arm or leg cast [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளையின் கால் மற்றும் கை சாந்துக்கட்டிற்கு சரியான பராமரிப்பை எவ்வாறு மேற்கொள்வது என்பதைப் பற்றி படித்தறியுங்கள். மேலும் பிரச்சனையின் எச்சரிக்கைக் குறிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளையின் சாந்துக் கட்டு (காஸ்ட்) பற்றி

சாந்துக் கட்டானது உடலின் ஒரு பாகத்தை அதன் சரியான இடத்தில் வைத்திருக்கும். எலும்பு முறிவு மருத்துவவியலாளர், மருத்துவர், தாதி ஆகியோரால் சாந்துக் கட்டுகள் போடப்படுகிறது.

எல்லா சாந்துக் கட்டுகளும் ஸ்டொக்கினெட் எனப்படும் இலகுவான துணியால் ஆரம்பிக்கப்பட்டு பின்பு மெல்லிய பஞ்சு பயன்படுத்தப்பட்டு, கடைசியாக பிளாஸ்டர் அல்லது ஃபைபர்கிளாஸினால் சாந்து வார்ப்பு செய்யப்படும்.

பிளாஸ்டர் சாந்துக் கட்டு (பிளாஸ்டர் காஸ்ட்)

  • பிளாஸ்டர் போடப்பட்டதும் அது முதலில் சூடானதாக இருக்கும். இது சாதாரணமானதாகும்.
    10 இலிருந்து 15 நிமிடங்களுக்குள் சாந்து கட்டு வார்ப்பு இறுக்கமானதாகிவிடும் ஆனால் முழுமையாக உலர்வதற்கு 48 மணி நேரங்கள் ( 2 நாட்கள்) வரை எடுக்கும்.
  • முழுமையாக உலரும்வரை சாந்துக்கட்டு வார்ப்பானது குளிர்ந்ததாகவும், தளர்ந்ததாகவும் இருக்கும்.

ஃபைபர்கிளாஸ் (இழைக் கண்ணாடி) சாந்துக்கட்டு

  • பிளாஸ்டர் கட்டைப்போலவேதான் ஃபைபர்கிளாஸ் கட்டும் போடப்படுகின்றது.
  • ஃபைபர் கிளாஸ் சுமார் 1 மணி நேரத்தில் உலர்ந்துவிடும். அது பிளாஸ்டரைவிட பாரம் குறைந்ததாகவும் வலிமையானதாகவும் இருக்கும்.

ஃபைபர்கிளாஸுக்கும் வேறுசில கருவிகளுக்கும் கட்டணம் செலுத்தப்படவேண்டும். இதைப்பற்றி உங்கள் பிள்ளையின் தாதி, மருத்துவர், அல்லது வேறு பணியாளர்கள் கலந்து பேசுவார்கள்.

உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

உங்கள் பிள்ளை கையை அல்லது காலை உபயோகிக்கும் விதத்தை சாந்துக் கட்டு மாற்றிவிடும். பிள்ளையால் வழக்கம்போல் செயற்பட முடியாது.

சாந்துக் கட்டுப் போட்டிருக்கும்போது உங்கள் பிள்ளை எந்தளவுக்கு உடற்செயற்பாட்டில் ஈடுபடவேண்டும் என்பதுபற்றி உங்களுக்கு வழங்கப்பட்ட எல்லா அறிவுருத்தல்களையும் தயவு செய்து பின்பற்றவும்.

பிள்ளையின் சாந்துக்கட்டில் (காஸ்ட்) பிரச்சினை இருப்பதற்கான அறிகுறிகள்

பிள்ளையின் சாந்துக்கட்டை நாளொன்றுக்கு 4 அல்லது 5 தடவை அவதானிக்கவும். பிள்ளைக்கு கீழ்க்காணும் அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருப்பின் உங்கள் மருத்துவர், தாதி அல்லது எலும்பு முறிவு வல்லுனரை அழைக்கவும் அல்லது மருத்துவமனைக்குச் செல்லவும்:

கைவிரல் அல்லது கால்விரல் நீலமாக, வெளிறியதாக அல்லது மிகவும் வீங்கியிருத்தல்

காயப்படாத கையுடன் ஒப்பிடுகையில் கட்டுத்துணிக்குள் (cast) உள்ள கட்டிய நிறம்மாறிய கை
காஸ்ட்  அதிக இறுக்கமாக இருந்தால், காஸ்டின் முடிவில் உள்ள தோல் பாதிக்கப்படாத தோலோடு ஒப்பிடும்போது வெளிறியதாக அல்லது நீல நிறமானதாக தோன்றும். 

உங்கள் பிள்ளையின் கை விரல்அல்லது கால் விரல் சூடானதாகவும் இளம் சிவப்பாகவும் இருக்கவேண்டும். உடல் வெப்பநிலை, நிறம், மற்றும் அளவு ஆகியவற்றை பிள்ளையின் மற்றக் கால் அல்லது கையோடு நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சாந்துக்கட்டு போட்டுள்ள போது உங்கள் பிள்ளை நகப்பூச்சு அல்லது மோதிரங்களை அணியக்கூடாது. நகங்கள் நீல நிறமாக இருக்கின்றனவா என்பதை நீங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

கைவிரல் அல்லது கால்விரல் மடிக்க அல்லது நீட்ட முடியாமலிருத்தல்

சாந்துக்கட்டு போடப்பட்டுள்ளபோது, உங்கள் பிள்ளை தன் கால் விரல்களை கீழ்ப்புறம் மடிக்க, மற்றும் மேல்ப் புறமாக உயர்த்த மற்றும் நீட்டக்கூடியதாக இருக்கவேண்டும். கையில் சாந்துக்கட்டு போடப்பட்டுள்ளபோது, பிள்ளை எல்லா விரல்களையும் நீட்டக்கூடியதாக இருக்கவேண்டும். ஒரு நாளில் பல தடவை கால் விரல்கள் அல்லது கை விரல்களை அசைக்கும்படி பிள்ளையைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

எலும்பு முறிவு இப்போதுதான் நடந்ததென்றால், சில வேளைகளில் அதன் விளைவாக ஏற்படும் வீக்கம் காரணமாக, பிள்ளையின் விரல்கள் அல்லது கால்விரல்கள் முழுமையாக விரிவது கடினமாக இருக்கலாம்.

கை அல்லது கால் விறைத்திருத்தல் (உணர்ச்சிக் குறைவு)

உங்கள் பிள்ளை கை அல்லது கால் முழுவதையும் உணரக்கூடியதாக இருக்க வேண்டும்.

விறைப்பு உணர்வு, ஊசியால் குத்துவது போன்ற கூச்ச உணர்வு அல்லது சாந்துக்கட்டுப் போட்ட கை அல்லது காலை அடியில் வைத்து நித்திரை செய்தல் போன்றவை இருக்கக்கூடாது.

சாந்துக்கட்டிலிருந்து மணங்கள் வருவது

சாந்துக்கட்டு போடப்பட்டு நீண்ட நாட்களாகியிருந்தால் கட்டிலிருந்து மணம் வருவது சாதாரணமானதே. மோசமான மணம் எங்களுக்கு கவலையைத் தருவதாக இருக்கிறது, ஏனெனில் அது கட்டுக்கடியில் ஒரு தொற்றுநோயிருப்பதற்கு ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு சாந்துக்கட்டு இறுக்கமானதாக இருக்கும்போது

பிள்ளைக்கு சாந்துக் கட்டு இறுக்கமானதாக இருந்தால், கை அல்லது கால், சாந்துக்கட்டுக்குள் வீங்கியிருக்கிறதென அர்த்தப்படுத்தலாம். இந்த வீக்கத்தின் காரணமாக கையில் அல்லது காலில் இரத்தச்சுற்றோட்டம் நடைபெறுவது கடினமானதாக இருக்கலாம்.

மென்மையாகிவிட்ட அல்லது உடைந்த சாந்துக்கட்டு

சாந்துக்கட்டு மென்மையாகி விட்டால் அல்லது உடைந்து விட்டால் அது திருத்தப்படவேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.

உங்கள் பிள்ளையின் சாந்துக்கட்டை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

  • பிள்ளையின் சாந்துக்கட்டை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருங்கள்.
  • அழுக்காகிவிட்ட சாந்துக்கட்டை ஈரத்துணியால் சுத்தம் செய்யுங்கள். அது உலரும் வரை அந்தப் பகுதியை காற்றுப்படும்படி வையுங்கள். குளிராக இருக்கும்போது நீங்கள் ஒரு ஹெயார் டிரையரையும் பாவிக்கலாம்.
  • சொறிவதற்காக சாந்துக்கட்டுக்குள் பஞ்சு, சில்லறைகள், அல்லது பேனாக்கள் போன்றவற்றைப் போடவேண்டாம். சாந்துக்கட்டுக்குள் சற்று அரிப்பாக இருப்பது சாதாரணமானதே.
  • பிள்ளையின் சாந்துக்கட்டின் வடிவத்தை வெட்டவோ மாற்றவோ வேண்டாம்.
  • காஸ்ட் விழிம்புகளில் இருக்கும் சருமத்தை சோதித்துப் பாருங்கள். கொப்புளம் அல்லது சிவந்திருக்கிறதா என்று பாருங்கள்
  • பிள்ளை ஓய்வெடுக்கும்போது காஸ்ட் போடப்பட்ட கை அல்லது காலை ஒரு தலையணையின் மேல் வைய்யுங்கள்

சாந்துக்கட்டை (காஸ்டைக்) கழட்டுதல்

ஒரு எலெக்ட்ரிக் வாள் மூலம் சாந்துக்கட்டு வெட்டப்படும். இது வலியை ஏற்படுத்தாது ஆனால் அதிக சத்தத்தை ஏற்படுத்தும். இந்த செயல்முறையின்போது பிள்ளையின் காதுகளைப் பாதுகாக்க காதில் வைப்பதற்காக பஞ்சு வழங்கப்படும்.

உங்களுக்கு கேள்விகள் ஏதுமிருந்தால் என்ன செய்வது

முறிந்த எலும்பு எவ்வாறு குணமடைந்து வருகிறது அல்லது குணமடைந்துள்ளது என்பதைப்பற்றிக் கேள்விகள் இருந்தால் உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது குழந்தை மருத்துவரை பார்க்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளையின் சாந்துக்கட்டு, பிளாஸ்டர் அல்லது ஃபைபர்கிளாஸால் செய்யப்பட்டிருக்கலாம்.
  • உங்கள் பிள்ளையின் சாந்துக்கட்டை ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவைகள் அவதானியுங்கள்.
  • பிள்ளையின் கைவிரல்கள் அல்லது கால்விரல்கள் நீலமாக, வெளிறி, அல்லது வீங்கியிருந்தால்; பிள்ளையால் கைவிரல்களை அல்லது கால்விரல்களை மடிக்கவோ நேராக்கவோ முடியாதிருந்தால்; சாந்து கட்டிய கை அல்லது காலில் விறைப்பு அல்லது ஊசிகுற்றுவது போன்ற உணர்வு ஏற்ட்டால்; சாந்துக்கட்டிலிருந்து மோசமான மணம் வந்தால்; பிள்ளைக்கு சாந்துக்கட்டு இறுக்கமானதாக இருந்தால்; அல்லது சாந்துக்கட்டு மென்மையானதாக அல்லது உடைந்திருந்தால், பிள்ளையின் சாந்துக்கட்டில் ஒரு பிரச்சினை இருக்கக்கூடும்.
Last updated: நவம்பர் 17 2009