நுனித்தோல் வெட்டுதல் என்றால் என்ன?
நுனித்தோல் வெட்டுதல் என்பது ஆணுறுப்பின் நுனித்தோலை வெட்டி அகற்றுதல் ஆகும். வழக்கமாக, நுனித்தோல் வெட்டுதல் குழந்தை பிறந்தபின் விரைவாகச் செய்யப்படும். ஆயினும், இந்தச் செயற்பாடு வளர்ந்த ஆண்குழந்தைகளுக்கும் செய்யப்படுகின்றது.
நுனித்தோல் வெட்டுதல் இரண்டு வழிகளில் செய்யப்படலாம்: வெட்டுதல் மூலம், அல்லது பிளாஸ்ரிக் வளையம் உபயோகிப்பதன்மூலம் செய்யப்படலாம். இந்த இரு முறைகளுக்கும் சுத்தம்செய்தல், வலி நிவாரணம், பொதுவான பராமரிப்பு என்பன ஒரேமாதிரியானவைதான்.
நுனித்தோல் வெட்டிய பின்னர் சாதாரண பராமரிப்பு
வெட்டுதல் வகையான நுனித்தோலெடுப்பு
அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் முதல் வாரத்தில் உங்கள் மகன் ஒரு நாளைக்கு மூன்று முறை வெந்நீரில் குளிக்கவேண்டும்.
நுனித்தோல் வெட்டப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு சிறிய பன்டேஜ் அணிந்தபடி உங்கள் மகன் வீடு திரும்பக்கூடும். பன்டேஜை அகற்றிவிட முயற்சிக்காதீர்கள். அது தானே கழன்றுவிட விட்டுவிடுங்கள். அறுவைச் சிகிச்சை முடிந்து மறுநாள் காலையில் பன்டேஜ் விழுந்துவிடாவிட்டால், குளிக்கும்போது அதை நனைத்து அகற்றிவிடவும்.
உங்கள் மகன் அசௌகரியமாக உணர்ந்தால் , ஒரு நாளில் மூன்று முறைக்குமேல் அவனைக் குளிப்பாட்டவும். முடியும்போது ஆணுறுப்பை காற்றில் உலர விடவும்.
வெட்டுக்காயம் முழுமையாக ஆறும்வரை, ஒவ்வொரு முறை குளித்தபின்பும், பொலிஸ்போரின் போன்ற அன்டிபையோடிக் கிறீமைப் பூசவும்.
வளையம் வகையான் நுனித்தோல் வெட்டுதல்
சில வேளைகளில் ப்லாஸ்றிபெல் என்றழைக்கப்படும் வளையம் இரண்டு வாரங்களில் தானாகவே விழுந்து விடும். வளையத்தை இழுத்தெடுக்க முயற்சிக்காதீர்கள்.
ஆணுறுப்பைச் சுத்தம் செய்வதற்காக உங்கள் பிள்ளைக்கு வெந்நீர்க் குளியல் கொடுக்கவும். குளித்தபின்னர் தோலைச் சுற்றி அன்டிபையொடிக் கிறீம் தடவவும். முடியும்போது ஆணுறுப்பை காற்றில் உலர விடவும்.
மருந்தினால் உங்கள் பிள்ளையின் வலியைச் சமாளித்தல்
அறுவைச்சிகிச்சை முடிந்தபின் 24 மணி நேரங்களுக்குப் பின்னர், உங்கள் மகனுக்கு வலிக்கு அல்லது காய்ச்சலுக்கு அசெட்டொமினொஃபென் கொடுக்கலாம். உங்கள் மகன் தளர்வான, சௌகரியமான ஆடை அணிய வேண்டும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை முதன் முதலில் சிறுநீர் கழிப்பதற்கு பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளலாம். அவன் அசௌகரியமாக உணர்ந்தால், கொஞ்சம் உற்சாகப்படுத்தல் மற்றும் இளைப்பாறுதலுடன் வெந்நீர்க் குளியல் கொடுத்தால் அது அவனுக்குத் தொட்டியில் சிறுநீர் கழிக்க உதவி செய்யலாம்.
வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்புதல்
அடுத்த சில நாட்களில் உங்கள் மகன் படிப்படியாகத் தன் வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம். அவன் வளர்ந்த பையனாக இருந்தால், அவன் வழக்கம் போல விளையாடத் தொடங்கும்போது பாடசாலைக்குத் திரும்பலாம்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் 6 வாரங்களுக்கு உங்கள் மகன் சைக்கிள் ஓட்டுதல் போன்ற கால்களை அகலமாக வைத்து விளையாடும் விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடக்கூடாது. வேலிக்கு மேலாக ஏறுதல் போன்ற கவட்டுப்பகுதியில் எரிச்சலையுண்டாக்கக் கூடிய வேலைகள் எதனையும் உங்கள் மகன் செய்யக்கூடாது.
மருத்துவரை எப்போது அழைக்கவேண்டும்
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஒரு சில மணி நேரங்களுக்கு சிறிதளவு இரத்தக் கசிவு இருப்பது சாதாரணமானது. அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நாள் முடிவில் இரத்தக் கசிவு நின்றுவிட வேண்டும்.
அறுவைச் சிகிச்சை நடைபெற்ற பகுதியில் அதிகளவு இரத்தப் போக்கிருந்தால், ஆணுறுப்பை திடமாக அழுத்தவும். இரத்தப் போக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், சிறுநீரக மருத்துவமனைப் பிரிவு அல்லது அறுவைச் சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையை அழைக்கவும்.
மருத்துவமனை அல்லது கிளினிக் சந்திப்புத் திட்டங்கள்
உங்கள் மகன் மருத்துவமனைச் சந்திப்புத் திட்டத்துக்காக மருத்துவமனையிலிருக்கும் சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவை சந்திக்கவேண்டியிருக்கலாம். இதை எப்போது செய்யவேண்டும் என்பதை மருத்துவப்பிரிவிலிருக்கும் மருத்துவப் பணியாளர்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள். நுனித்தோல் வெட்டுதல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட உங்கள் பிள்ளையை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், சிறுநீரகவியல் மருத்துவமனையை அழைக்கவும்.
முக்கிய குறிப்புகள்
- உங்கள் மகன் அறுவைச்சிகிச்சை முடிவடைந்த வாரத்தில் ,ஒவ்வொரு நாளும் மூன்று முறை வெந்நீரில் குளிக்க வேண்டும்.
- உங்கள் மகன் நுனித்தோல் அறுவை சிகிச்சை நடைபெற்ற பகுதியில் பன்டேஜ் அணிந்து கொண்டு வீடு திரும்பினால், பெரும்பாலும் அது தானாகவே விழுந்துவிடும்.
- உங்கள் மகனுக்கு வளையம் உபயோகித்து நுனித்தோல் வெட்டுதல் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அந்த வளையத்தை தானாகவே விழுந்துவிட அனுமதிக்கவும்.
- வலியைக் குறைப்பதற்காக உங்கள் மகனுக்கு, போத்தலில் கூறப்பட்டுள்ளபடி, அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூரோஃபின் கொடுக்கலாம்.
- ஆணுறுப்பை அல்லது கவட்டை எரிச்சலடையச் செய்யக்கூடிய நடவடிக்கைகளை உங்கள் மகன் தவிர்க்கவேண்டும்.