குளோபஸம் (Clobazam)

Clobazam [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை குளோபஸம் என்ற மருந்தை உட்கொள்ளவேண்டும்.

உங்கள் பிள்ளை குளோபஸம் என்ற மருந்தை உட்கொள்ளவேண்டும். குளோபஸம் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

குளோபஸம் என்பது வலிப்புத் தடுப்பு மருந்து என்றழைக்கப்படும் ஒரு மருந்து. இது குறிப்பிட்ட சில வகையான வலிப்புகளைக் கட்டுப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது.

எனது பிள்ளைக்கு இந்த மருந்தை நான் எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு குளோபஸம் மருந்து கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • குளோபஸம் மருந்தை ஒழுங்காக, உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடியே சரியாக உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்துக்கு இந்த மருந்தைக் கொடுப்பதன்மூலம் வேளைமருந்து கொடுப்பதைத் தவறவிடாதிருக்கவும். ஏதாவது காரணத்துக்காக மருந்து கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவருடன் கலந்து பேசவும். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள்
  • உங்கள் பிள்ளை குளோபஸம் மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் உட்கொள்ளலாம். மருந்து உங்கள் பிள்ளையின் வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தினால், மருந்தை உணவுடன் சேர்த்துக் கொடுக்கவும்.

எனது பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நான் என்ன செய்யவேண்டும்?

உங்கள் பிள்ளை வேளைமருந்து ஒன்றைத் தவறவிட்டால்:

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு ஒரு சமயத்தில் ஒரு வேளைமருந்தை மாத்திரம் கொடுக்கவும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அறிகுறிகளுள் ஏதாவது தொடர்ந்திருந்தால் உங்கள் மருத்துவரை அழைக்கவும்:

  • சோர்வு அல்லது களைப்பு
  • வயிற்றில் அசௌகரியம்
  • மயக்கம் போன்ற உணர்வு அல்லது தலைச்சுற்று
  • எரிச்சலடைதல்
  • உறுதியின்மை அல்லது ஒழுங்கின்மை
  • வாய் உலர்தல்
  • நித்திரை செய்வதற்குக் கஷ்டம்
  • எடை அதிகரித்தல்
  • தலைவலி

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அழைக்கவும்:

  • குழப்பம்
  • தசைப் பலவீனம்
  • நடத்தையில் மாற்றங்கள்
  • மங்கலான பார்வை
  • கண்கள் உட்பட கட்டுப்பாடற்ற உடல் அசைவுகள்

நான் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

பல் அறுவைச் சிகிச்சை அல்லது ஒரு அவசர நிலைச் சிகிச்சை உட்பட, உங்கள் பிள்ளைக்கு ஏதாவது அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பாக, உங்கள் பிள்ளை குளோபஸம் மருந்தை உட்கொள்கிறான் என்பதை மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத) மருந்துகள் கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் பார்வை மற்றும் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

உங்கள் பிள்ளை ஏதாவது மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வேறெங்காவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது குளோபஸம் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. குளோபஸம் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: அக்டோபர் 27 2009