இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி

What is developmental dysplasia of the hip (DDH)? [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒரு பிள்ளையின் இடுப்பின் இந்த அசாதாரண நிலைக்கான அடையாளங்கள், அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை பற்றி இலகுவாக விளங்கிக் கொள்வதற்கான ஒரு கண்ணோட்டம்.

இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி என்றால் என்ன (DDH)?

இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி (DDH) என்பது இடுப்பு மூட்டு அசாதரணமாக இருக்கும் ஒரு நிலைமை. சில குழந்தைகள் இந்த நிலைமையுடன் பிறக்கிறார்கள். தொடைஎலும்பின் மேற்பகுதி (ஃபெமூர்) மூட்டில் சரியாகப் பொருந்தவில்லை. இது நொண்டுதல் மற்றும் வலியை உண்டாக்கும். மேலும் கடுமையான நிலைமைகளில், இது ஊனத்தையும் ஏற்படுத்தலாம்.

இந்த நிலைமை 1,000 குழந்தைகளுள் 1 குழந்தையைப் பாதிக்கின்றது. 3 புதிதாகப் பிறந்த குழந்தைகளுள் 1 குழந்தையில் இடுப்பில் சிறிதளவு ஸ்திரமின்மை இருப்பதைக் காணலாம். இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி பெண்பிள்ளைகளில் அதிகளவில் காணப்படும். இந்த நிலைமை பரம்பரைக்குள் கடத்தப்படலாம்.

இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கான (DDH) அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்

இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுள்ள பிள்ளை இந்த நிலைமையின் அறிகுறிகளைக் காண்பிக்காதிருக்கலாம். இந்த அறிகுறி மிகவும் நுணுக்கமாக இருக்கலாம். பிள்ளையின் வயதைப் பொறுத்து அவை வேறுபடலாம். உங்கள் மருத்துவர் அறிய விரும்பும் சில அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • இடுப்புகளைத் திறக்கும் போது அல்லது மூடும்போது “க்ளங்” என்ற சத்தம் கேட்டல்
  • இடுப்புக்கு வெளிப்பக்கமாக தொடையை அசைக்கமுடியாதிருத்தல்
  • ஒரு கால் மற்றக்காலைவிடக் குட்டையாக இருத்தல்
  • கவடு அல்லது புட்டத்தைச் சுற்றித் தொடையில், கொழுப்புப் படைகள் சமமட்டமாக இல்லாதிருத்தல்
  • வளர்ந்த பிள்ளைகள் நொண்டுதல் அல்லது ஒரு பாதத்திலுள்ள கால்விரல்களால் நடத்தல்
  • வளர்ந்த பிள்ளைகளில் முதுகெலும்பில் ஒரு வளைவு

இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கான காரணங்கள்

இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கான சரியான காரணம் என்னவென்பது மருத்துவர்களுக்குத் தெரியாது. சில அபாயகரமான காரணிகள், உங்கள் பிள்ளை இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுடன் பிறப்பதற்குரிய வாய்ப்பை அதிகரிக்கும். இந்த அபாயங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கான குடும்ப வரலாறு
  • குழந்தை பிறக்கும்போது கால் அல்லது புட்டம் முதலில் வெளிவரும் நிலைமை
  • கருப்பையில் கருவைச் சுற்றியுள்ள திரவம் குறைவடைதல்
  • தசை அல்லது எலும்புக்கூட்டுத் தொகுதியில் பிரச்சினைகள்

சிக்கல்கள்

இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கு, தொடக்கத்திலேயே சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இடுப்பு மூட்டு சரியான முறையில் உருவாகாது. இது இடுப்பை வழக்கமான நிலையில் அசைக்கக் முடியாமல் இருப்பதில் விளைவடையலாம். பிள்ளை நடக்கத் தொடங்கும்போது இது வெளிப்படையாகத் தெரியலாம். அவன்(ள்) வளரும்போது இது வலியை ஏற்படுத்தலாம்.

ஒரு மருத்துவர் உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவி செய்யலாம்

குடும்ப மருத்துவர் ஒரு உடல்ரீதியான பரிசோதனை செய்வார். உங்கள் பிள்ளைக்கு இடுப்பு இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி இருப்பதாகக் கருதினால், ஒரு எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை மருத்துவரிடம் உங்கள் பிள்ளையைப் பரிந்துரை செய்வார். வழக்கமாக ஒரு அல்ட்ராசவுண்ட் அல்லது எக்ஸ்–ரே எடுக்கப்படும்.

சிகிச்சை

சிகிச்சை, உங்கள் பிள்ளையின் வயது மற்றும் இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்திருக்கும். வீரியம் குறைந்த நிலைமைகள் ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படாமல் சரிசெய்யப்படும். மேலும் கடுமையான நிலைமைகளுக்குச் சிகிச்சை தேவைப்படும்.

கவசம்

போதியளவு தொடக்கத்திலேயே நோய் கண்டுபிடிக்கப்பட்டால், பல்விக் ஹார்னெஸ் ஓர்தோஸிஸ் என அழைக்கப்படும் ஒரு கருவியை அணியும்படி மருத்துவர் உங்கள் பிள்ளையிடம் கேட்பார்.  இது, உங்கள் பிள்ளையை ஒரு “தவளை-போன்ற” நிலையில் வைக்கும், மென்மையான வார்ப்பட்டைகளின் ஒரு தொகுப்பு. இது, இடுப்பு மூட்டை வழக்கமான முறையில் வளர அனுமதிக்கும். இந்தக் கருவியை உங்கள் பிள்ளை எவ்வளவு காலத்துக்கு அணிந்திருக்கவேண்டும் என உங்கள் எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை மருத்துவர் தெரிவிப்பார்.  

இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுள்ள 20 குழந்தைகளுள் 1 குழந்தைக்கு, இந்த நிலைமையைச் சரி செய்வதற்கு பவ்லிக் ஹார்னெஸ் ஐ விட அதிகம் தேவைப்படுகிறது.

அறுவைச் சிகிச்சை

வளர்ந்த பிள்ளைகளுக்கு பின்வரும் இரு சிகிச்சைகளுள் ஒன்று தேவைப்படுகிறது:

பெரும்பாலும், 18 மாதங்களுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மூடப்பட்ட நிலையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவருதல் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்தச் சிகிச்சையின்போது, பிள்ளைக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்ட நிலையில் இடுப்புக் குழிக்குள் எலும்பு கையினால் வைக்கப்படுகிறது.

18 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பிள்ளைகளுக்கு, பெரும்பாலும் திறந்து வைக்கப்பட்ட நிலையில், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவருதல் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவைச் சிகிச்சையின்போது, தொடை திரும்ப ஒழுங்குபடுத்தப்பட்டு, தொடை எலும்பு திரும்பவும் குழிக்குள் வைக்கப்படும்போது, இடுப்பைச் சுற்றியுள்ள தசைகள் மற்றும் திசுக்கள் தளர்த்தப்படும். இடுப்பு திரும்பவும் ஒழுங்குபடுத்தப்பட்டவுடன் தசைகளும் திசுக்களும் இறுக்கப்படும்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

உங்கள் பிள்ளையின் இடுப்பு சரியான முறையில் வளரவில்லை என நீங்கள் சந்தேகித்தால், முடிந்தளவு விரைவில் மருத்துவரைச் சந்திக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி என்பது தொடை எலும்பின் மேற்பகுதி இடுப்பு மூட்டினுள் சரியாகப் பொருந்தாமல் இருப்பது.
  • பிறக்கும்போது கால் அல்லது புட்டம் முதலில் வெளிவரும் நிலைமை அல்லது குடும்ப வரலாறில் இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுள்ள குழந்தைகளுக்கு இந்த நிலைமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
  • அறிகுறிகள், ஒரு குழந்தையால் இடுப்புக்கு வெளிப்பக்கமாக தொடையை அசைக்க முடியாமலிருக்கும் நிலைமை மற்றும் அதன் பின்பாக , நடப்பதற்குக் கஷ்டம் மற்றும் வலி என்பனவற்றை உட்படுத்தும்
  • இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியைச் சரி செய்வதற்கு பல்விக் ஹார்னெஸ் ஓர்தோஸிஸ் உபயோகிக்கப்படுகிறது.
  • இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுள்ள 20 குழந்தைகளில் 1 குழந்தைக்கு, இந்த நிலைமையைச் சரிசெய்வதற்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
Last updated: மார்ச் 05 2010