உங்கள் பிள்ளை கிளறித்றோமைசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். கிளறித்றோமைசின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.
இந்த மருந்து எப்படிப்பட்டது?
கிளறித்றோமைசின் என்பது அன்டிபையோடிக் என்றழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள் பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளால் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன.
கிளறித்றோமைசின் மருந்து, பியாக்ஸின்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். கிளறித்றோமைசின் மருந்து மாத்திரை, நீண்ட காலம் செயற்படும் மாத்திரை, மற்றும் திரவம் போன்ற வடிவங்களில் கிடைக்கும்.
இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு...
உங்கள் பிள்ளைக்கு கிளறித்றோமைசின் மருந்து அல்லது மக்றோலைட் பிரிவைச் சேர்ந்த வேறு ஏதாவது அன்டிபையோடிக் மருந்துகளுக்கு ஒவ்வாமை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். இது எரித்றோமைசின் மற்றும் அஸித்றோமைசின் என்பனவற்றையும் உட்படுத்தும்.
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:
- சிறுநீரக நோய்
- கல்லீரல் நோய்
உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?
உங்கள் பிள்ளைக்கு கிளறித்றோமைசின் மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:
- உங்கள் பிள்ளைக்கு கிளறித்றோமைசின் மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிடும் காலம் வரை, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, இந்த மருந்து கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.
- உங்கள் பிள்ளைக்கு கிளறித்றோமைசின் மருந்தை ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் ஒழுங்கான இடைவெளிகளில், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடியே சரியாகக் கொடுக்கவும். மருந்து கொடுக்கும் நேரத்தைத் தவறவிடாதிருப்பதற்காக, உங்களுக்கு வசதியான நேரங்களைத் தெரிவு செய்யவும்.
- உங்கள் பிள்ளை கிளறித்றோமைசின் மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் உட்கொள்ளலாம். ஆயினும், இந்த கிளறித்றோமைசின் மருந்து வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தினால் அதை உணவுடன் சேர்த்துக் கொடுக்கவும்.
- உங்கள் பிள்ளை நீண்ட காலம் செயற்படும் மாத்திரைகளை உட்கொள்வதாக இருந்தால், அவை உணவு அல்லது பாலுடன் முழுமையாக விழுங்கப்பட வேண்டும். வெறும் வயிற்றில் உட்கொள்ளப்படக்கூடாது. அவற்றை உடைக்கவோ, நசுக்கவோ அல்லது மெல்லவோ வேண்டாம்.
- உங்கள் பிள்ளை கிளறித்றோமைசின் திரவ மருந்தை உட்கொள்வதாக இருந்தால், உங்கள் பிள்ளைக்கு மருந்து கொடுப்பதற்கு முன்பாகப் போத்தலை நன்கு குலுக்கவும். ஒவ்வொரு வேளைமருந்தையும் மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி, அல்லது பீச்சாங்குழாயினால்(ஸ்ரிஞ்) அளக்கவும். திரவ மருந்தை ஒரு இளங் குளிரான இருட்டான இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கவும். குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம்.
உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
- உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
- அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
- ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?
உங்கள் பிள்ளை முன்னேற்றம் காணத் தொடங்குவதற்கு, இந்த மருந்தை உட்கொள்ளத்தொடங்கிப் பல நாட்கள் செல்லலாம். முழுப் பலனைக் காண்பதற்கு மேலும் அநேக நாட்கள் எடுக்கலாம்.
இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?
உங்கள் பிள்ளை கிளறித்றோமைசின் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் பக்கவிளைவுகளில் சிலவற்றைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
- இலேசான வயிற்றுப்போக்கு( மலம் தண்ணீர் போல கழிதல்) உட்பட வயிற்றில் அசௌகரியம், வயிற்றில் தசைப்பிடிப்பு அல்லது அசௌகரியம், வாந்தி, நெஞ்சு எரிவு அல்லது அஜீரணம், வயிறு உப்பியிருப்பதைப்போன்ற உணர்வு, அல்லது வாயு வெளியேறுதல்
- தலைவலிகள்
- உணவு அல்லது பானத்தின் சுவையில் மாற்றம்
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரை அலுவலக நேரத்தில் அழைக்கவும்:
- இலேசான தோற்படை அல்லது தோல் அரிப்பு
பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:
- சுவாசிப்பதில் பிரச்சினைகள், மூச்சு வாங்குதல், அல்லது மார்பு இறுக்கம்
- முகம், உதடுகள், நாக்கு, அல்லது தொண்டையில் வீக்கம்
- கடுமையான குமட்டல் அல்லது வாந்தி, கடுமையான வயிற்றுப்போக்கு( மலம் தண்ணீர் போல கழிதல்), அல்லது வயிற்றில் வலி
- கொப்பளங்கள், தோல் உரிதல் அல்லது ஒரு கடுமையான தோற்படை
- தோல் அல்லது கண்கள் மஞ்சளாதல், வெளிர் நிற மலம், அல்லது அடர் நிற சிறுநீர்
- வேகமான, மந்தமான, அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
- கடுமையான தலைச் சுற்று அல்லது மயக்கமடைதல்
உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?
கிளறித்றோமைசின் மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாத சில மருந்துகள் இருக்கின்றன அல்லது சில நிலைமைகளில் கிளறித்றோமைசின் வேளைமருந்து அல்லது வேறு மருந்துகளின் அளவுகள் தேவையானபடி சரி செய்யப்பட வேண்டும். உங்கள் பிள்ளை பின்வரும் மருந்துகள் உட்பட, வேறு ஏதாவது மருந்துகள் உட்கொள்வதாக இருந்தால், உங்கள் மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் தெரிவிப்பது முக்கியம்:
- கார்பமஸெப்பைன், வல்ப்றொயேட், மற்றும் ஃபினைட்டொயின் போன்ற வலிப்பு எதிர்ப்பு மருந்துகள்
- டைகொக்ஸின் மற்றும் அமியோடரோன் உட்பட இதய நோய் மருந்துகள்
- வோஃபரின்
- அன்டிஹிஸ்ரமைன்கள்
- சைக்ளோஸ்போரின், ராக்றோலிமஸ், சிரோலிமஸ்
- தியோஃபிலைன்
- சிசப்ரைட்
உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.
உங்கள் பிள்ளை கிளறித்றோமைசின் மருந்து உட்கொள்ளும்போது அவனு(ளு)க்கு கிரேப்ஃபுருட் அல்லது கிரேப்ஃபுருட் பழச்சாறு கொடுக்கவேண்டாம்.
நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?
உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.
உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
மருந்துக் குறிப்பில் எழுதப்பட்ட கிளறித்றோமைசின் மருந்துகள் முழுதையும் உட்கொண்டு தீர்ப்பதற்காகப் போதியளவு கிளறித்றோமைசின் மருந்துகளை எப்போதும் கைவசம் வைத்திருப்பதற்கு நிச்சயமாயிருக்கவும். தேவைப்பட்டால், உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.
கிளறித்றோமைசின் மாத்திரைகள் மற்றும் திரவ மருந்தை அறை வெப்பநிலையில், குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் கிளறித்றோமைசின் மாத்திரைகளை வைக்கவேண்டாம்.
காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.
கிளறித்றோமைசின் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான கிளறித்றோமைசின் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:
- நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் (416) 813-5900 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.
பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது கிளறித்றோமைசின் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. கிளறித்றோமைசின் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.