உங்கள் பிள்ளை ரனிடெடீன் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
உங்கள் பிள்ளை ரனிடெடீன் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ரனிடெடீன் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.
இந்த மருந்து எப்படிப்பட்டது?
ரனிடெடீன் என்பது வயிற்றுக்குள் சுரக்கப்படும் அமிலத்தின் அளவைக் குறைக்கும் ஒரு மருந்து ஆகும். இது மார்பு எரிச்சல் (வயிறு எரிச்சல் என்றும் அறியப்படும்) மற்றும் வயிற்றுப்புண்களுக்குச் சிகிச்சை செய்வதற்கு மற்றும் தடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சில குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் நோய்களினால் வயிறு சேதமடைவதைத் தடுப்பதற்கும் இது உபயோகிக்கப்படுகிறது.
ரனிடெடீன் மருந்து, மாத்திரை, திரவம் மற்றும் ஊசிமருந்து வடிவங்களில் கிடைக்கும். ரனிடெடீன் மருந்து, ஸன்டக்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்கு கொடுப்பதற்கு முன்பு
உங்கள் பிள்ளைக்கு ரனிடெடீன் மருந்துக்கு ஒவ்வாமை இருக்கிறது என உங்கள் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.
உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:
- சிறுநீரக நோய்
உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?
உங்கள் பிள்ளைக்கு ரனிடெடீன் மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:
- உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் சொல்லும்வரை, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும்.
- ரனிடெடீன் மருந்து உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் கொடுக்கலாம். ரனிடெடீன் மருந்து உங்கள் பிள்ளைக்கு வயிற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தினால், அதை உணவுடன் சேர்த்துக் கொடுப்பது அதைத் தடுப்பதற்கு உதவி செய்யக்கூடும்.
- திரவ மருந்தும் கிடைக்கும். உங்கள் பிள்ளை ரனிடெடீன் மருந்தின் திரவ வடிவத்தை உட்கொள்வதாக இருந்தால், மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி அல்லது பீச்சாங்குழாய்(ஸ்ரிஞ்) மூலம் வேளைமருந்தை அளக்கவும்.
- மாத்திரைகள் நசுக்கப்பட்டு திரவத்துடன் கலக்கப்படலாம் அல்லது உங்கள் பிள்ளைக்கு மருந்தைக் கொடுப்பதற்கு சற்று முன்னர் சிறிதளவு உணவுடனும் கலக்கப்படலாம்.
உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
- உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
- அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
- ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?
உங்கள் பிள்ளை ரனிடெடீன் மருந்தை உட்கொள்ளத் தொடங்கியவுடனேயே நிவாரணமடையத் தொடங்குவான்(ள்). முழுப்பலனை அடைவதற்கு பல நாட்கள் செல்லலாம்.
இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?
உங்கள் பிள்ளை ரனிடெடீன் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
- தலைவலி, களைப்பு, அல்லது மயக்க உணர்வு
- பசியின்மை
- வயிற்றுக் குழப்பம், வாந்தி, வயிற்றுப்போக்கு(மலம் தண்ணீர் போல கழிதல்)
பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:
- விரைவான, மந்தமான, அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
- மஞ்சள் நிறத் தோல் அல்லது கண்கள்
- அசாதாரண நசுக்குக் காயம் அல்லது இரத்தக் கசிவு
- முகம், உதடுகள், நாக்கில் வீக்கம்
- சுவாசிப்பதில் அல்லது விழுங்குவதில் சிரமம்
- கடுமையான தோற்படை
- கடுமையான மயக்க உணர்வு அல்லது மயக்கமடைதல்
உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?
குறிப்பிட்ட சில உணவுகள் மற்றும் பானங்கள் மார்பு எரிச்சலை மோசமாக்கும். உங்கள் பிள்ளை கொழுப்புள்ள/ வறுத்த உணவுகள், உறைப்புள்ள உணவுகள், சிட்டிரிக் அமிலமுள்ள பழங்கள், கார்பனேற்றுள்ள பானங்கள், மற்றும் அல்ககோல் என்பனவற்றைத் தவிர்க்க விரும்பலாம்.
உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.
ரனிடெடீன் மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாத சில மருந்துகள் இருக்கின்றன அல்லது சில நிலைமைகளில் ரனிடெடீன் வேளைமருந்தும் வேறு சில மருந்துகளும், தேவைக்குத் தகுந்தபடி சரிசெய்யப்படவேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளை பின்வரும் மருந்துகள் உட்பட, வேறு ஏதாவது மருந்துகள் உட்கொள்வதாக இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் தெரிவிப்பது முக்கியம்:
- அன்டாசிட்டுகள் அல்லது சுக்ரல்ஃபேட்
- அன்டிஃபங்கல்கள் (கெட்டொகொனஸோல் அல்லது ஐட்ராகொனஸோல்)
- வோர்ஃபரின்
நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?
உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.
உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு ரனிடெடீன் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.
ரனிடெடீன் மருந்தை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்க வேண்டாம்.
காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.
ரனிடெடீன் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான ரனிடெடீன் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:
- நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.
பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது ரனிடெடீன் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. ரனிடெடீன் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.