உங்கள் பிள்ளைக்கு இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் ஒரு பரிசோதனை தேவைப்படுகிறது. இது இதயத்துக்குரிய வடிகுழாய் உட்செலுத்தும் பரிசோதனை என்றும் அழைக்கப்படுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் பரிசோதனை, உங்கள் பிள்ளையின் இதயம் எப்படி வேலை செய்கிறது என்ற தகவலை உங்கள் பிள்ளையின் இதயநோய் மருத்துவருக்கு அளிக்கிறது.
பரிசோதனைக்கு முன்பு, பரிசோதனையின் போது, மற்றும் பரிசோதனையின் பின்பு என்ன சம்பவிக்கிறது என்பதை இந்தப் பக்கம் விளக்குகிறது. உங்கள் பிள்ளையின் பரிசோதனை பற்றிய சில கேள்விகளுக்கு அது பதிலளிக்கும்.
இதயத்தினுள் வடிகுழாய் செலுத்தும் ஒரு பரிசோதனைக்கான காரணங்கள்
இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் ஒரு பரிசோதனை உங்கள் பிள்ளையின் இதயம் பற்றிய பின்வரும் தகவல்களை அவனது இதயநோய் மருத்துவருக்குக் கொடுக்கிறது:
- உங்கள் பிள்ளையின் இதய அமைப்பு மற்றும் அதன் வால்வுகள். வால்வுகள் என்பது இரத்தம் பின்னோக்கிப் பாயாதவாறு தடுக்கும் திசுக்களின் மடிப்புகள் ஆகும். வால்வுகள் இதய அறைகள் என்றழைக்கப்படும் இதயத்தின் பாகத்துக்கும் இதயத்திலுள்ள இரத்தக் குழாய்களுக்கும் இடையே இருக்கிறது.
- இதய அறைகள் மற்றும் இரத்தக் குழாய்களின் அழுத்தம்
- இதய அறைகள் மற்றும் அதன் இரத்தக் குழாய்களிலுள்ள ஒட்சிசனின் அளவு.
- உடலின் மற்றப் பாகங்களுக்கு உங்கள் பிள்ளையின் இதயம் இறைக்கும் இரத்ததின் அளவு.
- இதயத்துடிப்பின் சீர்.
பரிசோதனை பற்றி உங்கள் பிள்ளையுடன் கலந்து பேசுங்கள்
உங்கள் பிள்ளை விளங்கிக் கொள்ளக்கூடிய வார்த்தைகளை உபயோகித்து அவனு(ளு)டன் கலந்து பேசுங்கள். எதை எதிர்பார்க்கவேண்டும் என உங்கள் பிள்ளைக்குத் தெரிந்திருக்கும்போது அவன(ள)து கவலை மற்றும் பயம் குறையும்.
அங்கு வலி அல்லது ஊசி இருக்காது என உங்கள் பிள்ளைக்குச் சொல்லவேண்டாம். உங்கள் பிள்ளையைத் தேற்றுங்கள். உங்களால் முடிந்தளவுக்கு அவனு(ளு)டன் இருப்பேன் என உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள்.
உங்கள் பிள்ளைக்கு அந்தப் பரிசோதனை தேவைப்படுகிறது எனவும் மருத்துவர்கள் மற்றும் தாதிகள் உதவி செய்வதற்காக அங்கிருப்பார்கள் எனவும் அவனு(ளு)க்குச் சொல்லவும்.
பரிசோதனைக்காகத் தயாராதல்
பெரும்பாலும், இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் பரிசோதனை நடைபெறுவதற்குச் சிலநாட்களுக்கு முன்பு நீங்கள் வடிகுழாய் உட்செலுத்துவதற்கு- முந்திய மருத்துவமனைப் பிரிவை சந்திப்பீர்கள். இது நீங்களும் உங்கள் பிள்ளையும் செயற்பாட்டுக்காகத் தயாராவதற்கு உதவி செய்யும்.
மருத்துவ மனையைச் சந்திக்கவேண்டிய திகதி மற்றும் நேரத்தைக் கீழே எழுதவும்:
மருத்துவமனையில், ஒரு தாதியைச் சந்திப்பீர்கள். அவர்கள் பின்வருவனவற்றை உங்களுக்கு விளக்குவார்:
- பரிசோதனைக்கு முன்னர் உங்கள் பிள்ளை எவற்றை உண்ணலாம் அல்லது குடிக்கலாம்
- பரிசோதனைக்கு முன்னர் தேவைப்படும் ஏதாவது மருந்துகளின் மாற்றங்கள்
- பரிசோதனை நாளில் எதை எதிர்பார்க்கவேண்டும்
அதே சந்திப்பு நாளில் உங்கள் பிள்ளைக்கு பின்வருவனவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படும்:
- ஒரு இதய மின் அலை வரைவு (ECG). இது இதயத்தின் மின் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும்.
- இரத்தப் பரிசோதனைகள்.
- ஒரு மார்பு எக்ஸ்-ரே. இது உங்கள் பிள்ளையின் மார்பின் உட்பகுதியின் ஒரு விசேஷ படமாகும்.
- ஒரு மின் ஒலி இதய வரைவு. இது இதயச் சுவர்களின் நிலைமை மற்றும் அசைவுகள், அல்லது வால்வுகள் போன்ற இதயத்தின் உட் பகுதிகளின் பதிவு ஆகும்.
நீங்கள் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக நீங்களும் உங்கள் பிள்ளையும் இதய நோய் மருத்துவரையும் சந்திப்பீர்கள். அவர் செயற்பாட்டிலுள்ள ஆபத்துக்களை விரிவாக விளக்குவார். "ஒப்புதல் அளிப்பது" என்பது நீங்கள் செயற்பாட்டைப்பற்றி விளங்கிக் கொண்டீர்கள் மற்றும் மருத்துவர்களை அதைச் செய்ய அனுமதியளிக்கிறீர்கள் என்பதை அர்த்தப்படுத்தும்.
செயற்பாட்டுக்கு முன்பாக உணவு உண்ணுதல் மற்றும் பானங்கள் பருகுதல்
இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் பரிசோதனைக்கு முன்பாக, உங்கள் பிள்ளை உணவு உண்பதையும் பானங்கள் பருகுவதையும் நிறுத்த வேண்டும். பரிசோதனைக்கு முன்பாக உங்கள் பிள்ளைக்கு உணவூட்டும்போது பின்வரும் அறிவுரைகளைத் தயவு செய்து பின்பற்றுங்கள்:
செயற்பாட்டுக்கு முன்னர் நேரம் | நீங்கள் தெரிந்திருக்கவேண்டியவை |
---|---|
செயற்பாட்டுக்கு முந்திய நள்ளிரவு | திடமான உணவு எதுவும் கொடுக்கப்படாது. இது கம் அல்லது கன்டியையும் உட்படுத்தும். இன்னும் உங்கள் பிள்ளை பால், ஓரேஞ் ஜூஸ், போன்ற நீராகாரங்களையும் மற்றும் தெளிவான நீராகாரங்களைப் பருகலாம். தெளிவான நீராகாரங்கள் என்பது அப்பிள் ஜூஸ், ஜிஞ்ஜர் ஏல், அல்லது நீர் போன்ற, நீங்கள் ஊடாகப் பார்க்கக்கூடிய பானங்களாகும். உங்கள் பிள்ளை ஜெல்-ஒ அல்லது பொப்ஸிகிள்ஸ் என்பனவற்றையும் சாப்பிடலாம் |
6 மணி நேரங்கள் | பால், ஃபொர்முலா, அல்லது பால், ஓரேஞ் ஜூஸ் போன்ற நீங்கள் ஊடாகப் பார்க்கமுடியாத நீராகாரங்களை நிறுத்திவிடவும். |
4 மணி நேரங்கள் | உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தவும். |
2 மணி நேரங்கள் | உங்கள் பிள்ளைக்குத் தெளிவான நீராகாரங்கள் கொடுப்பதை நிறுத்திவிடவும். அதாவது ,அப்பிள் ஜூஸ், தண்ணீர், அல்லது ஜிஞ்ஜர் ஏல், ஜெல்-ஓ, அல்லது பொப்ஸிகிள்ஸ் என்பனவற்றையும் நிறுத்திவிடவும். |
உங்கள் பிள்ளையின் மருந்துகள்
செயற்பாட்டுக்கு முன்னர் உங்கள் பிள்ளையின் மருந்துகளில் மாற்றம் தேவைப்பட்டால், வடிகுழாய் உட்செலுத்துவதற்கு- முந்திய உங்கள் மருத்துவமனைச் சந்திப்பின்போது தாதி உங்களுடன் கலந்து பேசுவார். எல்லா மருத்துவமனைச் சந்திப்பின்போதும் தயவு செய்து உங்கள் பிள்ளையின் எல்லா மருந்துகளையும் கொண்டுவரவும்.
உங்களுக்குக் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களைக் கீழே எழுதவும்:
இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் பரிசோதனை ஒரு விசேஷ ஆய்வுகூடத்தில் செய்யப்படும்
உங்கள் பிள்ளை பரிசோதனைக்காக ஒரு விசேஷ சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லப்படுவான். இது ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை அறை போல காணப்படும். இது வடிகுழாய் உட்செலுத்தப்படும் ஆய்வுகூடம் என்றழைக்கப்படும். இது கார்டியக் டையக்னோஸ்ரிக் இன்ரெவென்ஷனல் யூனிட் (CDIU)இன் ஒரு பகுதியாகும். பரிசோதனை நாளில், உங்கள் பிள்ளைக்கு ஒரு நரம்பூடாகச் செலுத்தப்படும் ஊசி தேவைப்படுகிறது. இது IV என்றும் அழைக்கப்படும். ஒரு IV என்பது உங்கள் பிள்ளைக்கு நீராகாரங்கள் அல்லது மருந்துகள் கொடுப்பதற்காக, ஒரு கை அல்லது கால் நரம்பினுள் செலுத்தப்படும் ஒரு சிறிய குழாய் ஆகும்.
உடல்நலப் பராமரிப்புக் குழு உங்கள் பிள்ளையைப் பராமரிப்பார்கள்
இதய வடிகுழாய் உட்புகுத்தல் பரிசோதனைக் குழுவில் பெரும்பாலும் இரண்டு மருத்துவர்கள், இரண்டு தாதிகள், மற்றும் ஒரு மயக்கமருந்து கொடுப்பவர் இருப்பார்கள். உங்கள் பிள்ளைக்கு மயக்கமருந்து கொடுப்பவர் ஒரு விசேஷ பயிற்சி பெற்ற மருத்துவர் ஆவார். பொது மயக்க மருந்து என்றழைக்கப்படும் இந்த மருந்து, பரிசோதனை நடைபெறும்போது உங்கள் பிள்ளையை நித்திரை செய்ய வைக்கும். அதனால் அவன்(ள்) எந்த வலியையும் உணரமாட்டான்(ள்). பரிசோதனைக்கு முன்னர் மயக்க மருந்து கொடுப்பவர் இந்த மருந்துகள் பற்றி உங்களுடன் பேசுவார்.
வளர்ந்த பிள்ளைகளுக்கு பொது மயக்கமருந்துக்குப் பதிலாக தூக்க கலக்க மருந்து கொடுக்கப்படும். தூக்க கலக்க மருந்து என்பது பரிசோதனை சமயத்தின்போது உங்கள் பிள்ளை அசையாதிருப்பதற்காக அவனை(ளை)ச் சாந்தப்படுத்த, அவனு(ளு)க்கு IV இனூடாகச் செலுத்தப்படும் மருந்து ஆகும்.
பரிசோதனையின்போது என்ன சம்பவிக்கும்
வடிகுழாய் (கதீற்றர்) என்றழைக்கப்படும் ஒரு மெல்லிய நீண்ட குழாயை இதய நோய் மருத்துவர் உங்கள் பிள்ளையின் கழுத்து அல்லது கவட்டிலுள்ள ஒரு நாடி நரம்பு அல்லது நாள நரம்பினுள் கவனமாக உட்செலுத்துவார். கவடு என்பது தொடைக்கு மேலுள்ள பகுதியாகும். பின்பு வடிகுழாய் நாடி நரம்பு அல்லது நாள நரம்பினூடாக உங்கள் பிள்ளையின் இதயத்துக்குள் புகுத்தப்பட்டுவிடும்.
வடிகுழாய் உட்செல்லும்போது அதைக் கண்காணிப்பதற்காக, இதய நோய் மருத்துவர், கணனித் திரையிலுள்ள எக்ஸ்-ரே படத்தை உபயோகிப்பார். இந்தப் பரிசோதனையின்போது உங்கள் பிள்ளையின் இதயம் வழக்கம்போல வேலை செய்யும்.
"மாறுபாட்டு திரவம்" என்றழைக்கப்படும் ஒரு திரவத்தை மருத்துவர் வடிகுழாயினூடாக இதயவறைக்குச் செலுத்துவார். மாறுபாட்டு திரவம் என்பது இரத்தோட்டப் பாதையை மருத்துவர் நன்றாகப் பார்ப்பதற்கு அனுமதிக்கும் ஒரு விதமான வண்ணச் சாயம் ஆகும். பின்பு அவர் உங்கள் பிள்ளையின் இதயத்தினூடாக வண்ணச் சாயம் செல்லும் பாதையின் எக்ஸ்-ரே படத்தைப் பிடிப்பார். பரிசோதனைக்குப் பின்னர் ஒரு சில மணி நேரங்களில், இந்த வண்ணச் சாயம் உங்கள் பிள்ளையின் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
இந்தப் பரிசோதனை முடிந்தவுடன், இதய நோய் மருத்துவர் வடிகுழாய்களை வெளியே எடுத்துவிடுவார். உங்கள் பிள்ளையின் கவட்டிலிருக்கும் சிறிய காயத்தை ஒரு கனமான பன்டேஜினால் மூடிவிடுவார். உங்கள் பிள்ளைக்கு தையல்கள் தேவைப்படாது.
இதய வடிகுழாய்கள் சிலவேளைகளில் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உபயோகிக்கப்படும்
சிலவேளைகளில் இதய நோய் மருத்துவர், உங்கள் பிள்ளையின் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக இதய வடிகுழாயை உபயோகிப்பார். இதயத்தில் அல்லது இரத்தக் குழாயில் ஏற்படும் ஒரு துளையை அடைப்பதற்கும் இதய வடிகுழாயை உபயோகிக்கலாம்.ஒரு நரம்பை அல்லது வால்வு ஒன்றை விரிவாக்கவும் இது உபயோகிக்கப்படலாம். இந்தச் சிகிச்சை நரம்புக்குள் வடிகுழாய் செலுத்தப்படுதல் என்றும் அழைக்கப்படும். உங்கள் பிள்ளைக்குத் தேவைப்பட்டால் அவனி(ளி)ன் மருத்துவர் அதைப்பற்றி விளக்கமளிப்பார்.
இதய வடிகுழாய் உட்புகுத்தல் பரிசோதனையின்போது நீங்கள் உங்கள் பிள்ளைக்காகக் காத்திருக்கலாம்
உங்கள் பிள்ளையின் பரிசோதனையின்போது நீங்கள் எங்கு காத்திருக்கவேண்டும் என உடல்நலப் பராமரிப்புக் குழு உங்களுக்குச் சொல்லுவார்கள். இது CDIU இன் காத்திருப்போர் அறை அல்லது உங்கள் பிள்ளையின் உள்-நோயாளர் அறையாக இருக்கலாம். எங்கு காத்திருக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்லப்படாவிட்டால், தாதியைக் கேட்கவும்.
இதய வடிகுழாய் உட்புகுத்த செய்யும் பரிசோதனை எவ்வளவு நேரம் நீடிக்கும்?
உங்கள் பிள்ளையின் பரிசோதனை எவ்வளவு நேரம் நீடிக்கும் என இதய நோய் மருத்துவர் நினைக்கிறார் என்பதை அவர் உங்களுக்குச் சொல்லுவார். தேவைப்படும் நேரங்கள் பின்வரும் இரண்டு காரியங்களில் தங்கியுள்ளது:
- வடிகுழாயை உட்புகுத்த எடுக்கும் நேரம்
- வடிகுழாய் உட்புகுத்தும்போது என்ன செயற்பாடுகள் தேவைப்படுகின்றன
உங்கள் பிள்ளை நிவாரணமடைய சில மணிநேரங்கள் எடுக்கலாம்
உங்கள் பிள்ளைக்கு பொது மயக்கமருந்து கொடுக்கப்பட்டிருந்தால், அவன்(ள்) நிவாரணமடையும் அறையிலேயே விழித்தெழும்பக்கூடும். உங்கள் பிள்ளை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படும் சமயம் வரை அங்கிருப்பான்(ள்). உங்கள் பிள்ளை இரவு மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தால அவன்(ள்) உள்-நோயாளர் பிரிவுக்கு மாற்றப்படுவான்(ள்).
உங்கள் பிள்ளையின் பரிசோதனை பற்றி இதய நோய் மருத்துவருடன் பேசியபின்னர், நிவாரணமடையும் அறையிலுள்ள உங்கள் பிள்ளையைப் பார்க்கவேண்டும் என நீங்கள் கேட்கலாம்.
அடுத்த 4 மணிநேரங்களுக்கு தாதி, உங்கள் பிள்ளையின் இதயத் துடிப்பு வேகம், இரத்த அழுத்தம், மற்றும் சுவாசித்தல் என்பனவற்றைச் சோதிப்பார். வடிகுழாய் உட்செலுத்தப்பட்ட பகுதியில் போடப்பட்ட பன்டேஜையும் அந்த பாதத்தின் துடிப்பையும் சோதிப்பார்.
பரிசோதனையின் பின்னர் உங்கள் பிள்ளை ஒரளவு தூக்கமயக்கமாக இருப்பான்(ள்). சிறிது நேரத்துக்கு படுக்கையிலிருக்க வேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளை விழித்து எழுந்ததும் அவனால் நீராகாரங்கள் உட்கொள்ள முடியும். அதன் பின்னர் விரைவாக, உங்கள் பிள்ளை படிப்படியாக வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்குவான்(ள்).
உங்கள் பிள்ளை எப்போது வழக்கமான மருந்தை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் வழக்கமான மருந்துகளில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்பதை தாதி உங்களுக்கு விளக்கிச் சொல்வார். உங்கள் பிள்ளையின் மருந்துகள் பற்றிய தகவல்கள் எதுவும் உங்களுக்குத் தெரிவிக்கப்படாவிட்டால், தயவுசெய்து உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேட்கவும்.
எதாவது மாற்றங்கள் இருந்தால் அவற்றைக் கீழே எழுதவும்:
மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீட்டுக் செல்லுதல்
உங்கள் பிள்ளை எப்போது வீடு திரும்புவான்(ள்) என்பது, பரிசோதனையின் பின்பு உங்கள் பிள்ளை எவ்வளவு நன்றாக இருக்கிறான்(ள்) மற்றும் என்ன வகையான செயற்பாடுகள் அவனு(ளு)க்குச் செய்யப்பட்டன என்பதைப் பொறுத்திருக்கிறது. பரிசோதனை நடைபெற்ற அன்று பின்நேரமே சில பிள்ளைகளால் வீடு திரும்ப முடியும். மற்றவர்கள் இரவு மருத்துவமனையில் தங்கி மறுநாள் தான் வீட்டுக்குப் போகமுடியும்.
மேலதிக தகவல்களுக்கு, தயவு செய்து " இதயத்தினுள் வடிகுழாய் உட்புகுத்தப்படுதல்: செயற்பாட்டின் பின்னர் உங்கள் பிள்ளையைப் பராமரித்தல்" ஐப் பார்க்கவும்.
இதய வடிகுழாய் உட்புகுத்தப்பட்டபின்னர் எவற்றை எதிர்பார்க்கவேண்டும்
உங்கள் பிள்ளைக்கு கவட்டைச் சுற்றியுள்ள பகுதியில் கொஞ்சம் நசுக்குக் காயம் இருக்கலாம். அது ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் புண்வலியாக இருக்கலாம்.
பரிசோதனைக்குப் பின்னர் முதல் நாள் (24 மணி நேரங்கள்) உங்கள் பிள்ளையின் வயிற்றில் அசௌகரியமிருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு ஒரு பொது மயக்கமருந்து கொடுக்கப்பட்டிருந்தால் இது பெரும்பாலும் சம்பவிக்கும்.
பரிசோதனைக்குப் பின்னர் முதல் 5 நாட்களுக்கு உங்கள் பிள்ளை அமைதியான நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடமுடியும்.
செயற்பாட்டினால் ஏற்படக்கூடிய சிக்கல்களின் ஆபத்துக்கள்
பெரும்பாலும், இதய வடிகுழாய் உட்புகுத்தல் பரிசோதன மிகவும் ஆபத்துகள் குறைந்ததாகும். ஆனாலும் இது ஆபத்துக்கள் அற்றதல்ல. இதய வடிகுழாய் உட்புகுத்தல் பரிசோதனையினால் ஏற்படும் ஆபத்துக்களில் சில பின்வருமாறு:
- இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைதல்,
- இரத்தம் வடிதல்
- தொற்றுநோய்
- மயக்கமருந்து தொடர்பான பிரச்சினைகள்
- அவசர நிலை அறுவைச் சிகிச்சைக்கான தேவை
உங்கள் பிள்ளையின் இதய வடிகுழாய் உட்புகுத்தல் பரிசோதனையின் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளுதல்
உங்கள் பிள்ளையின் பரிசோதனையின் சில முடிவுகளைப்பற்றி , அவன்(ள்) மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பே இதய நோய் மருத்துவர் உங்களிடம் பேசுவார். சில நாட்களின் பின்னர் பரிசோதனையின் இறுதி முடிவுகள் மற்றும் உங்கள் பிள்ளையின் சிகிச்சைக்கான திட்டங்கள் என்பனவற்றைப் பெற்றுக்கொள்வீர்கள். மேலதிக தகவல்கள் ஏதாவதிருந்தால், இந்தப் பரிசோதனை முடிவுகளுடன், உங்கள் பிள்ளையின் இதய நோய் மருத்துவர் உங்களை அழைப்பார்.
முக்கிய குறிப்புகள்
- இதய வடிகுழாய் உட்புகுத்தல் பரிசோதனை என்பது உங்கள் பிள்ளையின் இதயம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றிய தகவல்களை உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குக் கொடுப்பதற்காகச் செய்யப்படும் பரிசோதனை ஆகும்.
- இதய வடிகுழாய் உட்புகுத்தல் பரிசோதனை செய்யப்படுவதற்கு முன்பாக, உங்கள் பிள்ளைக்கு வேறு சில பரிசோதனைகளும் செய்யப்படவேண்டும்.
- பரிசோதனைக்கு முன்பாக, உங்கள் பிள்ளைக்கு உணவு கொடுப்பது எப்போது நிறுத்தப்படவேண்டும், மற்றும் மருந்துகளில் ஏதாவது மாற்றங்கள் இருக்கின்றனவா என்பன பற்றிய விசேஷ அறிவுறுத்தல்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
- பரிசோதனைக்காகப் பெரும்பாலும் உங்கள் பிள்ளைக்கு நித்திரைக்கான மருந்து கொடுக்கப்படும். பரிசோதனைக்குப் பின்னர் அன்றிரவு உங்கள் பிள்ளை மருத்துவமனையில் தங்கவேண்டியிருக்கலாம்.
- பரிசோதனையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பற்றி உங்கள் பிள்ளையின் மருத்துவர் உங்களுக்குச் சொல்லுவார்.