கொப்புளிப்பான் (வரிசெல்லா)

Chickenpox (Varicella) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

கொப்புளிப்பான், அல்லது வரிசெல்லா, என்பது வைரஸினால் ஏற்படும் ஒரு பொதுவான பிள்ளைப் பருவத்தில் வரும் தொற்று நோயாகும்.

கொப்புளிப்பான் (சிக்கன்பொக்ஸ்) என்பது என்ன?

கொப்புளிப்பான் பிள்ளைப் பருவத்தில் வரும் ஒரு மிகப் பொதுவான தொற்று நோயாகும். வரிசெல்லா- சொஸ்டர் (உச்சரிப்பு: வ-ரி-செல்- ஆ சொ-ஸ்டர்) எனப்படும் ஒரு வைரஸ் மூலம் இது உண்டாகின்றது.

பிள்ளைகளில் இத்தொற்றுநோய் பொதுவாக கடுமையற்றதாக இருக்கும். ஆனால் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் பெரியோருக்கும் கொப்புளிப்பான் வந்தால் அவர்கள் மிகவும் சுகவீனமடையக்கூடும்.

பொதுவாக, நமது நோயெதிர்ப்புத் தொகுதி தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றது. இரத்தப் புற்றுநோய் போன்ற நோயெதிர்ப்புத் தொகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அல்லது நோயெதிர்ப்புத் தொகுதியை பலவீனமடையச் செய்யும் மருந்துகள் எடுப்பவர்களுக்கு கொப்புளிப்பான் மிகவும் அபாயகரமானதாகும். ஸ்டேரொயிடுகள் மற்றும் மாற்று உறுப்புப் பொருத்துதல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் போன்றவை இவற்றில் உள்ளடங்கும்.

ஷிங்கிள்ஸ் (அரையாப்பு) என்பது என்ன?

ஷிங்கிள்ஸ் பார்வைக்கு கொப்புளிப்பான் போலவே இருப்பதோடு அதே வைரஸால் உண்டாகிறது. இருப்பினும் பொதுவாக இது உடலின் ஒரு பகுதியில் மட்டுமே தோன்றுகிறது. வைரஸ் கிருமி சிறிது காலத்திற்கு உடலில் பதுங்கியிருந்து பின்பு வெளியே வரும் போது ஷிங்கிள்ஸ் ஏற்படுகின்றது. ஏற்கெனவே கொப்புளிப்பான் வந்தவர்களுக்கு மட்டுமே ஷிங்கிள்ஸ் நோய் வரும். கொப்புளிப்பான் உள்ள ஒருவரிடமிருந்து நீங்கள் ஷிங்கிள்ஸ் நோயைப் பெற்றுக்கொள்ள முடியாது.

கொப்புளிப்பானின் அறிகுறிகள்

கொப்புளிப்பான் வழக்கமாக காய்ச்சலோடு ஆரம்பிக்கின்றது. ஒன்று அல்லது இரண்டு நாளில் உங்கள் பிள்ளைக்கு மிகுந்த அரிப்போடுகூடிய தோலில் ராஷ் ஏற்படும். இந்த தோல் ராஷ் சிகப்புப் புள்ளிகளாக ஆரம்பிக்கும்.

கொப்புளிப்பான்கொப்புளிப்பான்
படம் CDC/Dr. K.L. ஹெர்மாண் இன் அனுசரனையுடன்.

இந்த சிகப்புப் புள்ளிகள் விரைவில் திரவம் நிறைந்த கொப்புளங்களாக மாறும். சிலர் குறைவான கொப்புளங்களை மட்டுமே கொண்டிருப்பார்கள். வேறு சிலர் 500 வரையான கொப்புளங்களைக் கொண்டிருக்கலாம். இந்த கொப்புளங்கள் நான்கு அல்லது ஐந்து நாட்களில் காய்ந்து பொருக்காகிவிடும்.

கொப்புளிப்பான் தொடுதல் அல்லது காற்றிலிருக்கும் சிறு துளிகள் மூலமாகப் பரவுகின்றது

கொப்புளிப்பான் மிக இலகுவாகப் பரவும். அது இரண்டு வகைகளில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தாவுகின்றது:

  • ஒருவர் கொப்புளங்களைத் தொடுவதால் வைரஸுடன் வரும் நேரடித் தொடர்பின் மூலம்.
  • கொப்புளிப்பான் உள்ள ஒருவர் தும்மும், இருமும் அல்லது பேசும்போதுகூட காற்றில் கலக்கும் உமிழ் நீர்த்துளிகள் மூலம்.

தோலில் ராஷ் தோன்றுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாதான் இந்த வைரஸ் மிக இலகுவாகப் பரவுகின்றது. கொப்புளிப்பான் உள்ள ஒரு பிள்ளை கொப்புளங்கள் காய்ந்துவிடும் வரை இந்த நோயை இன்னொருவருக்குக் கடத்தலாம். பாடசாலைக்கு அல்லது பகல் நேர கண்காணிப்பு நிலையத்துக்கு மீண்டும் எப்போது திரும்பலாம் என்பதை அறிய அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளைகளில் ஒருவருக்கு கொப்புளிப்பான் இருந்தால், குடும்பத்தில் உள்ள, இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியில்லாத மற்ற அங்கத்தவர்களுக்கு இது பரவும். இன்னொருவருக்கு இந்த நோய் தொற்றிவிட்டால், அது முதலாவது குடும்ப அங்கத்தினர் நோயைப் பெற்றதிலிருந்து பொதுவாக இரண்டு தொடங்கி மூன்று வாரங்களுக்குப் பின் தோன்றும்.

ஒரு கர்ப்பிணிப் பெண் தனக்கிருக்கும் கொப்புளிப்பானை வயிற்றிலுள்ள தன் குழந்தைக்குக் கடத்தக்கூடும். கொப்புளிப்பானுள்ள தாய்மார் பிரசவத்தின் பின்பு புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் கடத்தகூடும். அநேகமாக கர்ப்பிணிகளுக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் வரும் கொப்புளிப்பான் மிகவும் கடுமையானதாக இருக்கும்.

கொப்புளிப்பானுக்கு வீட்டில் சிகிச்சையளித்தல்

உங்கள் பிள்ளைக்கு கொப்புளிப்பான் வந்தால், அசெடில்சாலிசிலிக் அசிட் (ASA அல்லது ஆஸ்பிரின்) அல்லது ASA அடங்கிய வேறு பொருட்களைக் கொடுக்க வேண்டாம். ASA உபயோகிப்பது ரைஸ் சின்ட்றம் நோயைப் பெறும் ஆபத்தை அதிகரித்துவிடும். இந்தக் கடுமையான நோய் பிள்ளையின் ஈரலை அல்லது மூளையை சேதப்படுத்தி விடலாம்.

பிள்ளையின் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அசெட்டமினோஃபென் (உச்சரிப்பு: அ-செ-ட-மின்-ஓ-∴பென்) உபயோகியுங்கள். அசெட்டமினோஃபென் அடங்கிய காய்ச்சல் மருந்தொன்றை தெரிவு செய்ய உங்கள் மருந்தாளுநர் உதவுவார்.

கொப்புளிப்பானால் ஏற்படும் தோல் ராஷ் மிகவும் அரிப்புடையது. தோலுக்கு நல்ல பராமரிப்பு வழங்குவதோடு பிள்ளை தோலை சொறியாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதிகம் சொறிகின்ற பிள்ளைக்கு, தோலுக்குள் புகுந்துவிடுகின்ற பக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் தொற்றிவிடுகின்றன. இதைத் தடுப்பதற்கு பின்வருவனவற்றை நீங்கள் செய்யலாம்:

  • உங்கள் பிள்ளையின் விரல் நகங்களை ஒட்ட வெட்டுங்கள்
  • பாரம் குறைந்த உடைகளை உங்கள் பிள்ளைக்கு அணியுங்கள்
  • அரிப்பைக் குறைப்பதற்கு உதவும் முகமாக பிள்ளையை இளஞ்சூட்டு நீரால் குளிப்பாட்டுங்கள்
  • பிள்ளை போதிய அளவு சுகமாக உணர்ந்தால் அவளை ஓடி விளையாட அனுமதியுங்கள். இது அரிப்பை மறந்திருக்க உதவும்
  • அரிப்பைக் குறைப்பதற்கு உதவும் கிறீம் ஒன்றின் பெயரை உங்கள் மருத்துவர் சொல்லக்கூடும்.

ஒரு கொப்புளத்தின் மூலமாக பக்டீரியா உங்கள் பிள்ளையின் தோலில் தொற்றிவிட்டதற்கான எச்சரிக்கை அறிகுறிகளில் சில இதோ:

  • ஒரு புதிய காய்ச்சல்
  • தொற்றுள்ள தோல் தொடுவதற்கு சூடாக இருத்தல்
  • தொற்றுள்ள ஒரு கொப்பளத்திலிருந்து சீழ் வருதல்
  • தொற்றுள்ள பகுதிகளில் வீக்கமும் வலியும்

தோலில் ஏற்படும் பக்டீரியத் தொற்று நோய்க்கு ஒரு மருத்துவரால் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

ஒரு இலவசத் தடுப்பு மருந்து கொப்புளிப்பானைத் தவிர்க்கும்

தடுப்பு மருந்து உடலின் நோயெதிர்ப்புத் தொகுதியில் பாதுகாப்பு வழங்கும் புரோட்டீன்களை உருவாக்கச் செய்கின்றது. இந்த புரோட்டீன்கள் பிறபொருள் எதிரிகள் எனப்படுகின்றன. நீண்ட காலத்திற்கு ஒருவருக்கு நோய் தொற்றுவதிலிருந்து அவரை இந்தத் தடுப்பு மருந்து பாதுகாக்கும்.

ஆரோக்கியமான எல்லாப் பிள்ளைகளும் ஒரு வயதாக இருக்கும்போதே கொப்புளிப்பான் தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். கனடா குழந்தை மருத்துவ சங்கம் மற்றும் நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (நஷனல் அட்வைசரி கமிட்டி) ஆகியவற்றின் அறிவுரை இதுவே. ஒன்டாரியோவில் இந்தத் தடுப்பு மருந்து இலவசமாகக் கிடைக்கின்றது. நடை குழந்தைகள், பிள்ளைகள், பதின்ம வயதினர் மற்றும் பெரியவர்களுக்கும் கூட இந்தத் தடுப்பு மருந்து பாதுகாப்பானதும் பயனுள்ளதுமாக இருக்கின்றது.

உங்கள் பிள்ளை தடுப்பு மருந்தை இன்னும் பெறாத நிலையில், கொப்புளிப்பான் உள்ள இன்னொரு பிள்ளையுடன் விளையாடினாலோ அல்லது அவளைத் தொட்டாலோ, தடுப்பு மருந்தை உடனடியாகப் பெறுவதன் மூலம் உங்கள் பிள்ளை பாதுகாக்கப்படலாம்.

உங்கள் பிள்ளை ஒரு பலவீனமான நோயெதிர்ப்புத் தொகுதியைக் கொண்டிருந்தாலோ அவளுக்கு கொப்புளிப்பான் உள்ளதென நீங்கள் நினைத்தாலோ உங்கள் மருத்துவரை அழையுங்கள்

உங்கள் பிள்ளைக்கு நோயெதிர்ப்புத் தொகுதியில் ஒழுங்கின்மை இருந்தாலோ அல்லது பிள்ளையின் நோயெதிர்ப்புத் தொகுதியை பலவீனமடையச் செய்யும் மருந்துகளை உபயோகித்து வந்தாலோ, உங்கள் மருத்துவரை உடனடியாக அழையுங்கள். பின்வரும் மருந்துகள் ஒன்றின் மூலம் உங்கள் பிள்ளைக்கு சிகிச்சை அளிக்கப்படக்கூடும்:

  • VZIG (வரிசெல்ல-சொஸ்டர் இம்மியூன் குளோபுளின்) என்றழைக்கப்படும் மருந்து. கொப்புளிப்பானைத் தடுப்பதற்கு உதவியாக VZIG, பிறபொருள் எதிரிகளை பெருமெண்ணிக்கையில் கொண்டுள்ளது. இந்த மருந்து ஊசி மூலமாகக் கொடுக்கப்படுகின்றது.
  • தொற்றுநோயைக் கடுமையற்றதாக்கும் ஒரு அன்டி வைரல் அதாவது வைரஸை எதிர்க்கும் மருந்துகள்
  • உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் வேறு சிகிச்சைகள்

மக்கள் வழக்கமாக கொப்புளிப்பானை இரண்டு தடவை பெறுவதில்லை

அநேகமான சந்தர்ப்பங்களில், உங்களுக்கு ஒருதடவை கொப்புளிப்பான் வந்ததென்றால் அந்த நோய் உங்களுக்குத் திரும்பவும் வராது. இது சீவியகால நோயெதிர்ப்பு எனப்படுகின்றது. ஆனால் மிக அரிதான சமயங்களில் ஒருவருக்கு இந்த நோய் மீண்டும் வரலாம்.

கர்ப்பிணிப் பெண்களில் கொப்புளிப்பான் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் கொப்புளிப்பான் கடுமையானதாக இருக்கலாம்.

நீங்கள் கர்ப்பம் தரிக்க எண்ணியிருந்தால் மற்றும் உங்களுக்கு கொப்புளிப்பான் வந்ததில்லையென்றால் தடுப்பு மருந்தைப் பெறுவதைப்பற்றி மருத்துவருடன் பேசுங்கள்.

நீங்கள் கர்ப்பிணியென்றால் கொப்புளிப்பான் பற்றிய பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்:

உங்களுக்கு முன்பே கொப்புளிப்பான் வந்துவிட்டதா?

□ ஆம் □ இல்லை

நீங்கள் முன்பே கொப்புளிப்பான் தடுப்பு மருந்தை பெற்றுவிட்டீர்களா?

□ ஆம் □ இல்லை

கொப்புளிப்பான் அல்லது ஷிங்கிள்ஸ் நோயுள்ள ஒருவருடன் ஒரே வீட்டில் நீங்கள் வசித்திருகின்றீர்களா?

□ ஆம் □ இல்லை

இந்த மூன்று கேள்விகளுக்கும், இல்லை என நீங்கள் பதிலளித்தால், கொப்புளிப்பான் உள்ளவர்களிடமிருந்து விலகியிருங்கள். உங்கள் கர்ப்பத்தின்போது ஏதாவதொரு ஒரு சமயத்தில், வயிற்றிலுள்ள உங்கள் குழந்தையை கொப்புளிப்பான் தாக்கக்கூடும். நீங்கள் கொப்புளிப்பான் உள்ளவரோடு தொடர்புகொண்டிருந்தால் மருத்துவரை உடனடியாக அழையுங்கள்.

இந்த மூன்று கேள்விகளுக்கும், ஆம் என நீங்கள் பதிலளித்தால், நீங்கள் அநேகமாக கொப்புளிப்பான் நோயிலிருந்து பாதுகாப்பைப் பெற்றவராக இருப்பீர்கள். அநேகமான பெண்கள் தாங்கள் பிள்ளையாக இருக்கும்போது கொப்புளிப்பான் வந்ததை மறந்துவிட்டால்கூட, அவர்களுடைய இரத்தத்தில் பிற பொருள் எதிரிகள் இருப்பதால் இந்த நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

கொப்புளிப்பான் உள்ள பிள்ளைகள் மருத்துவ மனையில் வித்தியாசமான பராமரிப்பைப் பெறுகின்றார்கள்

உங்கள் பிள்ளை மருத்துவ மனையிலிருந்தால் மற்றவர்களுக்கு நோயைக் கடத்தாமலிருப்பதற்காக அவளுக்கு வித்தியாசமான சிகிச்சை வழங்கப்படக்கூடும். “தனிமைப்படுத்தப்பட்ட முன்ஜாக்கிரதை” எனப்படும் விசேஷித்த பராமரிப்பு விதிகள் மூலம் உங்கள் பிள்ளைக்கு தனியான ஒரு அறை கிடைக்கக்கூடும் அல்லது கொப்புளிப்பான் உள்ள மற்ற பிள்ளைகளுக்கு அருகில் அவள் வைக்கப்படக்கூடும்.

உங்கள் பிள்ளை மருத்துவ மனைக்குப் போனால் மற்றும் நீங்கள் அவளுக்கு கொப்புளிப்பான் இருக்கின்றதென்று நினைத்தால், ஒரு தாதியிடம் சொல்லுங்கள்

உங்கள் பிள்ளைக்கு முன்பே கொப்புளிப்பான் வந்திருந்ததென்றால் அல்லது பிள்ளை தடுப்பு மருந்தைப் பெற்றிருந்தால், பிள்ளைக்கு நோய் தொற்றாது. ஆனால் உங்கள் பிள்ளைக்கு ஒரு போதும் கொப்புளிப்பான் வந்ததில்லையென்றால் அல்லது தடுப்பு மருந்தைப் பெறவில்லையென்றால், கடந்த மூன்று வாரங்களுக்குள் கொப்புளிபான் உள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பு பிள்ளைக்கு இருந்ததென்றால், உங்கள் பிள்ளைக்கு நோய் தொற்றியிருக்கக்கூடும்.

நெருங்கிய தொடர்பு என்றால் விளையாடுதல், தொடுதல் அல்லது அருகில் அமர்தல் போன்றவையாகும்.

மருத்துவர், தாதி அல்லது பதிவாளரிடம் உங்கள் பிள்ளை கொப்புளிப்பான் உள்ள ஒருவருடன் நெருக்கமாக இருந்ததை உடனடியாகத் தெரிவியுங்கள். மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக உங்கள் பிள்ளையின் விடயத்தில் விசேஷித்த அக்கறை காட்ட வேண்டிவரலாம். தோலில் ராஷ் தோன்றுவதற்கு முன்புதான் இந்த வைரஸ் மிக இலகுவாகப் பரவுகின்றது. மருத்துவ மனையில் கொப்புளிப்பான் பரவாமலிருப்பதை நிச்சயப்படுத்துவது மிக முக்கியமாகும், ஏனெனில் அங்குள்ள சில பிள்ளைகளால் இந்த நோயை எதிர்த்துப் போராட முடியாமலிருக்கலாம்.

Last updated: டிசம்பர் 16 2009