மலேரியா என்றால் என்ன?
மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது நுளம்பினால் ஒருவரிலிருந்து ஒருவருக்குக் கடத்தப்படுகிறது. தொற்று நோயானது, குளிர் நடுக்கம், காய்ச்சல், மற்றும் ஃப்ளூ காய்ச்சல் போன்ற வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும். இதற்குச் சிகிச்சை செய்யப்படாவிட்டால் மரணத்தில் விளைவடையலாம். பெரும்பாலும் பிள்ளைகள்தான் மலேரியா நோய்க்காளாகும் ஆபத்திலிருக்கிறார்கள்.
உலகின் பின்வரும் சில பாகங்களில் மலேரியா நோய் பொதுவானதாகக் காணப்படுகிறது:
- ஆபிரிக்கா
- ஆசியா
- மத்திய கிழக்கு
- தென் அமெரிக்கா
- மத்திய அமெரிக்கா
இந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது பிள்ளைகளை தொற்றுநோய் பாதிக்கலாம். பிரயாணம் செய்யும்போது முன்கூட்டியே தயாராவது முக்கியம். தகுந்த மருந்துகளை எடுத்துச் செல்லவும்.
மலேரியா நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
பெரும்பாலும், மலேரியா நோய் தொற்றிய 6 முதல் 30 நாட்களின் பின்னர்தான் அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் வெளிக்காட்டுவதற்கு 12 மாதங்கள் வரை செல்லலாம். அறிகுறிகள் ஒரு பயங்கரமான ஃப்ளூக் காய்ச்சல் அறிகுறியை ஒத்திருக்கும். அவை பின்வருமாறு:
- காய்ச்சல்
- குளிர் நடுக்கம்
- தலைவலி
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- உச்ச அளவிலான பலவீனம்
- தசை வலி
- அடிவயிறு, முதுகு, மற்றும் மூட்டுக்களில் வலி
- இருமல்
- குழப்பம்
பிள்ளைகள் பிரயாணத்திலிருந்து திரும்பும்போது ஏற்படும் காய்ச்சல், மலேரியா நோய்க்கான ஒரு அபாயகரமான காரணமாயிருக்கும். காய்ச்சல் ஒரு அறிகுறி, ஒரு நோயல்ல. அது தொற்று நோய்க்கான உடலின் பிரதிபலிப்பு. ஒரு காய்ச்சல், எதோ மோசமான காரியம் சம்பவிக்கிறது என்பதை அர்த்தப்படுத்தலாம். அது ஒரு மருத்துவரால் கண்டுபிடிக்கப்படவேண்டும்.
இந்த அறிகுறிகளில் பலவற்றை உங்கள் பிள்ளை காண்பித்தால், உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்கவும். தகுந்த முறையில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை விரைவாக மோசமடையலாம்.
சிகிச்சையளிக்கப்பட்டால், அறிகுறிகள் பெரும்பாலும் ஒரு சில நாட்களுக்குள் மறைந்து விடும். சில பிள்ளைகள் நிவாரணமடைவதற்கு அதிக காலம் எடுக்கும்.
வேறு பல நோய்களும் மலேரியா நோய்க்கான அதே அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இது பிள்ளைகளில் நோயைக் கண்டடைய தாமதத்தை ஏற்படுத்தலாம்.
சிக்கல்கள்
கடும் சிக்கல்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:
- மூளை பாதிப்படைதல்
- கடுமையான இரத்தச் சோகை
- அதிர்ச்சி
- வலிப்பு நோய்
- சிறுநீரகம் செயலிழத்தல்
- கோமா
உங்கள் பிள்ளையின் மருத்துவர் என்ன செய்யலாம்
உங்கள் பிள்ளைக்கு மலேரியா நோய் இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், உங்கள் பிள்ளை மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருக்கலாம். இரத்தப் பரிசோதனை நோயைக் கண்டுபிடிக்க உதவலாம். என்ன வகையான ஒட்டுண்ணி தொற்றுநோய்க்குக் காரணம் என்பதை இரத்தப் பரிசோதனை தீர்மானிக்கலாம்.
சிகிச்சை
மலேரியா நோய்க்கு அன்டிமலேரியா மருந்துகளினால் சிகிச்சை செய்யப்படுகிறது. சிகிச்சையின் வகை மற்றும் காலம் பின்வருவனவற்றில் தங்கியுள்ளது:
- ஒட்டுண்ணியின் வகை
- நோயின் கடுமை
- பிள்ளையின் வயது
- பிரயாணம் செய்த பகுதியின் மருந்தெதிர்ப்பின் மாதிரி
தொற்றுநோய்களில் அல்லது வெப்ப மண்டல மருந்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவரை உங்கள் பிள்ளை சந்திக்கவேண்டும். மிக உச்சநிலையிலுள்ள மலேரியா நோயாளர்களுக்கு, ஒரு விசேஷ வகையான இரத்தமேற்றுதல் தேவைப்படலாம்.
நோயைத் தடுத்தல்
மலேரியா நோயுள்ள ஒரு பகுதிக்கு நீங்கள் செல்ல விரும்பினால், தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு நீங்கள் உங்களைத் தயார்படுத்த வேண்டும். அன்டி மலேரியா மருந்துகள் தான் தொற்றுநோயைத் தடுப்பதற்கு மிகவும் பொதுவான வழியாகும். கட்டளையிட்டபடியே மருந்தை நுணுக்கமாக உட்கொள்ள வேண்டியது முக்கியம். நீங்கள் புறப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாக அது எடுக்கப்பட்டு, பிரயாண காலம் முழுவதும், மற்றும் நீங்கள் வீடு திரும்பிய ஒரு சில வாரங்களுக்குப் பின்னரும் அதை உட்கொள்ளவேண்டும்.
மலேரியா நோயைத் தடுப்பதற்கு வேறு வழிகள் பின்வருமாறு:
- பூச்சிக்கொல்லி மருந்திடப்பட்ட படுக்கை வலைகளை உபயோகித்தல்
- பூச்சி விரட்டிகளை உபயோகித்தல்
- நீண்ட சட்டைக் கைகள் மற்றும் நீளமான காற்சட்டைகள் போன்ற பாதுகாப்பு உடைகளை அணிதல்
- மாலை இருட்டு நேரம் முதல் விடியற்காலை வரை வீட்டிற்குள் இருத்தல்
- ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பதற்குப் பதிலாக, ஏர் கண்டிஷனர் கிடைக்குமானால் அதனை உபயோகித்தல்
தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள்
உங்கள் பிள்ளை தாய்ப்பாலூட்டப்பட்டும் நீங்கள் மலேரியா நோய்க்கான மருந்து எடுத்துக்கொண்டிருந்தாலும்கூட, குழந்தைக்கும் மருந்துகள் தேவைப்படும்.
சிகிச்சைக்குப் பின்னர் எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்:
பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் வழக்கமான மருத்துவரைச் சந்திக்கவும்:
- உங்கள் பிள்ளையின் காய்ச்சல் அல்லது மற்ற அறிகுறிகள், மருந்து உட்கொண்டு 1 முதல் 2 நாட்களின் பின்பும் முன்னேற்றத்தைக் காண்பிக்கவில்லை
- உங்கள் பிள்ளை பல நாட்களாக மருந்து உட்கொள்ளத் தவறிவிட்டான்
- உங்கள் பிள்ளையின் கண்கள் மஞ்சள் நிறமாயுள்ளன
பின்வரும் நிலைமைகளின் போது, உங்கள் பிள்ளையை உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து செல்லவும், அல்லது தேவைப்பட்டால், 911 ஐ அழைக்கவும். உங்கள் பிள்ளை:
- குழப்பமடைந்தவனாகக் காணப்படுகிறான்
- கடும் காய்ச்சலை, அசெட்டாமினோஃபென் அல்லது ஐபிபுரோஃபெனால் குறைக்க முடியவில்லை
- சுவாசிப்பதில் சிரமப்படுகிறான்
- கடுமையான வயிற்றுவலி இருக்கிறது
- வாயினால் உட்கொள்ளும் மருந்தை தக்கவைக்க முடியவில்லை
- கடந்த 8 மணி நேரமாக சிறுநீர் கழிக்கவில்லை அல்லது சிறுநீர் கடும் நிறத்தில் இருக்கிறது
- மயக்கமடைகிறான்
- வலிப்பு ஏற்பட்டது
- அதிக சோம்பலாக இருக்கிறான்
- உடல் நலமின்றித் தோற்றமளிக்கின்றான்
- அசாதாரணமான கண்டல்க்காயம்
- உங்களுக்கு வேறு எதாவது கவலைகள் இருந்தால்
முக்கிய குறிப்புகள்
- மலேரியா ஒரு தொற்றுநோய். அது நுளம்புகளினால் கடத்தப்படுகிறது. உலகத்தின் சில பாகங்களுக்குப் பிரயாணம் செய்யும்போது மலேரியா நோய் தொற்றிக்கொள்ளலாம்.
- அதன் அறிகுறிகள் ஒரு பயங்கரமான ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளுக்கு ஒத்திருக்கலாம்.
- உங்கள் பிள்ளைக்கு மலேரியா நோய் அறிகுறிகள் இருந்தால், உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்கவும்.
- மலேரியா நோய்க்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது மரணத்தில் விளைவடையலாம்.
- மலேரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு நீங்கள் செல்வதாக இருந்தால், தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு நீங்கள் உங்களைத் தாயார்ப்படுத்த வேண்டும்.