குழந்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது பெரும்பாலும் சுகவீனத்தின் அறிகுறியாகும். உங்கள் குழந்தை சுகவீனமுற்றிருந்தால் அவன் அதிகம் அழலாம் அல்லது அவனுடையை செயல்ப்பாடுகளின் அளவில் மாற்றம் கொண்டிருக்கலாம்.
கீழ்க்காணும் அறிகுறிகளில் எதையாவது உங்கள் குழந்தை கொண்டிருந்தால் நீங்கள் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துவர வேண்டும்:
- அவனுக்குக் காய்ச்சல் இருக்கின்றது (3 மாதங்கள் அல்லது அதற்குக் குறைந்த வயதுள்ள குழந்தைகள்)
- ஆறுதல்ப்படுத்த முடியாத அளவுக்கு அவன் அழுகின்றான்
- அவன் மந்தமாக அல்லது சோர்வாக இருக்கின்றான்
- அவனுக்கு வலிப்பு ஏற்படுகின்றது (திடீர் வலிப்பு)
- அவனுடைய உச்சிக்குழி அதாவது தலையின் உச்சியிலுள்ள மென்மையான பகுதிவீக்கமடையத் தொடங்குகிறது
- அவனுக்கு வலி இருப்பது போல் தோன்றுகின்றான்
- அவனுக்கு நாவல் நிற சொறி அல்லது வேறு வகை சிரங்கு ஏற்படுகிறது
- அவன் வெளிறி அல்லது முகம் சிவத்திருக்கிறான்
- அவன் சுவாசிக்க சிரமப்படுகிறான்
- அவன் தாய்ப்பாலோ அல்லது புட்டிப் பாலோ பருக மறுக்கிறான்
- அவன் விழுங்குவதற்கு சிரமப்படுவதுபோல் தெரிகிறது
- அவனுக்கு வாந்தி அல்லது வயிற்றோட்டம் இருக்கின்றது
புதிதாகப் பிறந்த குழந்தைகளிலும் வயது மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் குறைந்த சிசுக்களிலும், கடுமையான தொற்றுநோய்க்கான முதல் மற்றும் ஒரே அறிகுறி காய்ச்சலாக இருக்கலாம். உடல் வெப்பநிலை சாதாரண அளவைவிட சற்று கூடியிருப்பதை நீங்கள் அவதானித்தாலும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடிய விரைவில் மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். சாதாரண உடல் வெப்பநிலை, குதவழியாக அளவிட்டால் 38°C (101°F) அல்லது கமக்கட்டின் வழியாக அளவிட்டால் 37.5°C (99.5°F) ஆகும்.
நடத்தையில் மாற்றங்கள்
குழந்தைகளில் சுகவீனத்திற்கான முதல் அறிகுறிகளில் ஒன்று நடத்தையில் மாற்றமாகும். குழந்தை அதிக அளவு அழக்கூடும் அல்லது அதன் நடவடிக்கையின் அளவில் மாற்றமேற்படக்கூடும். பொதுவாக குழந்தை விழித்திருக்கும்பொழுது அசைந்து கொண்டிருந்தால், நன்கு உணவு உட்கொண்டால், அழும்போது ஆறுதல் படுத்தக்கூடியதாக இருந்தால் நடவடிக்கையின் அளவில் சிறிய மாற்றங்கள் ஏற்படுவது அல்லது அழுவது சாதாரணமானதே. ஆனால் உங்கள் குழந்தை அதிக சோர்வடைந்தால் அல்லது சிடுசிடுப்புடன் இருந்தால் மருத்துவரைப் பார்ப்பதற்கு இது நேரமாக இருக்கலாம். அதிக சோர்வு அல்லது சிடுசிடுப்பு சுகவீனம் ஒன்றிருப்பதற்கான அறிகுறியாகும்.
அதிக சோர்வு
அதிக சோர்வாக அல்லது மந்தமாக இருக்கும் குழந்தைகளுக் குறைந்த சக்தி அல்லது சக்தியே இல்லாமல் இருக்கும். அவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக தூங்குவதோடு பாலருந்துவதற்காக விழிப்பதற்கும் சிரமப்படலாம். விழித்திருக்கும்போது அவர்கள் தூக்கக்கலக்கத்தோடு அல்லது சோம்பலாக இருப்பார்கள்; விழிப்புணர்வில்லாதவர்களாக பார்வையைத் தூண்டுகின்றவைகளுக்கு அல்லது சத்தங்களுக்கு கவனம் செலுத்த மாட்டார்கள். சோர்வு சில காலமெடுத்து மெதுவாக ஏற்படலாம், மற்றும் பெற்றோர் அதை அடையாளம்காண சிரமப்படலாம்.
அதிக சோர்வு தடிமல் போன்ற சாதாரண ஒரு தொற்றுநோய் அல்லது இன்ஃப்ளூவென்சா போன்ற கடுமையான தொற்றுநோய் அல்லது மூழையுறை அழற்சி போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும். அதிக சோம்பல் ஒரு இருதய சிக்கலினால் அல்லது தலசீமியா அதாவது இரத்த அழிவுசோகை போன்ற இரத்தத்தோடு சம்பந்தமான வியாதியினால் ஏற்படுத்தப்படலாம். அதிக சோம்பலை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு காரணங்கள் இருக்கின்றன, எந்த ஒரு குறிக்கப்பட்ட நிலைமையுடனும் தொடர்புடைய கூட்டு அறிகுறிகளின் ஒரு அடையாளமே அதிக சோம்பலாகும். எனவே உங்கள் குழந்தை குறிப்பாக அதிக சோம்பலாக அல்லது மந்தமாக இருப்பதை நீங்கள் அவதானித்தால், பரிசோதனை ஒன்றிற்காக அவனை மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். உங்கள் பிள்ளையின் அதிக சோம்பல் அல்லது மந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் சிகிச்சை தங்கியிருக்கும்.
சிடுசிடுப்பு
அழுகைதான் குழந்தை பேச்சுத்தொடர்புகொள்ளும் ஒரே முறையாகும். காலம் செல்லச் செல்ல தங்களுக்கு என்ன தேவையென்பதைப் பொருத்து குழந்தைகள் வித்தியாசமான அழுகைகளை உருவாக்குகிறார்கள்: உணவு, நித்திரை, டைப்பர் மாற்றம், அல்லது ஒரு அரவணைப்பு. மெல்ல மெல்ல பெற்றோர்களும் குழந்தையின் அழுகையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயற்படுகிறார்கள். பொதுவாக குழந்தைக்கு வேண்டியதைக் கொடுத்து மற்றும் அவனை அரவணைப்பதன் மூலம் அவனைத் தேற்றுகிறார்கள். அனால் சில குழந்தைகள் தேற்ற முடியாதவாறு அழக்கூடும். இது கோலிக் எனப்படும் ஒரு நிலைமையால் ஏற்படும், இந்த நிலையின்போது தினமும் பின்னேரங்களில் குழந்தை நிறுத்தமே இல்லாமல் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு அழுவான். கோலிக் நிலைமை பிறப்பின் பின் உருவாகி முதல் 6 வாரங்களுக்கு த்தொடரக்கூடும்.
நீண்ட நேர அழுகையுடன் சிடுசிடுப்பு, இலகுவில் திருப்திப்படுத்த முடியாத நிலை மற்றும் பாடுபடுத்தும் குழந்தைக்கு வலி அல்லது வியாதியிருக்கக்கூடும். குழந்தைக்கு குறுகிய நடுக்கம் அல்லது நடுக்கம் இருக்கக்கூடும். குழந்தைக்கு மலச்சிக்கல், வயிற்றுவலி, காதுவலி, வைரஸ் அல்லது பக்டீரியா தொற்றுநோய் ஆகியவை இருப்பதற்கான அறிகுறியாக சிடுசிடுப்புத் தன்மை இருக்கலாம். குழந்தையின் சிடுசிடுப்புத் தன்மைக்கு மலச் சிக்கல் காரணமாக இருக்கலாம், ஆனால் ஒரு கடுமையான நிலையின் அறிகுறியாகவும் இது இருக்கக்கூடும். உங்கள் குழந்தை சிடுசிடுப்பதோடு வழக்கத்தைவிட அதிகமாக அழும்போது அவனை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குழந்தையை சிடுசிடுப்படையச் செய்யும் நிலைமையில்தான் சிகிச்சை தங்கியிருக்கும்.
காய்ச்சல்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது ஆபத்தானதாக இருந்தாலும், குழந்தை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுள்ளதானால் காய்ச்சல் தீங்கானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். தொற்றுநோயை முறியடிக்க உடல் பயன்படுத்தும் ஒரு வழியாக காய்ச்சல் இருப்பதால் அது உண்மையில் ஒரு நல்ல விஷயமாகும்.
உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை எவ்வாறு அளவிடுவது
குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இரண்டு வகைகள் உள்ளன: மல வாசல் வழியாக அல்லது கமக்கட்டுக்கு அடியில். இரசம் நிறைந்த வெப்பமானியை உபயோகிக்க வேண்டாம். மல வாசல் முறைதான் மிகவும் துல்லியமானது; ஆனால் அநேகமான பெற்றோர் இந்த முறையை விரும்புவதில்லை. புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இதோ சில வழிகள்.
ஒரு எலெக்ட்ரோனிக் வெப்பமானியைக் கொண்டு குதவழி வெப்பநிலையை அளவிடுதல்:
- இருவர் சேர்ந்து செயற்படும்போது, குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிடுவது மிகவும் இலகுவாகும்.
- குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்து அவனது முழங்கால்களை அவனது வயிற்றுக்கு மேல் கொண்டுவாருங்கள்
- வெப்பமானி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
- வெப்பமானியை தண்ணீரில் கரையக்கூடிய ஜெலிக்குள் அமிழ்த்துங்கள்.
- உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் குதத்திற்குள் வெப்பமானியை 2.5 செ.மீ (1 அங்குலம்) வரை உட்செலுத்துங்கள்.
- வெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள். இது வழக்கமாக பீப் என்ற சத்தத்தால் குறித்துக்காட்டப்படும். வெப்பநிலையைக் கவனமாக வாசித்து ஒரு ஏட்டில் குறித்துவையுங்கள்.
- உபயோகித்தபின் வெப்பமானியை சோப்பும் நீரும் கொண்டு கழுவுங்கள்.
- குத வழியாக அளவிடப்படும் உடல் வெப்பனிலை சாதாரணமாக 36.6°C முதல் 38°C (97.9°F முதல் 101°F) வரை இருக்கும்.
கமக்கட்டிற்குள் வைத்து உடல் வெப்பநிலையை அளவிடுதல்:
- வெப்பமானியின் குமிழை, உங்கள் குழந்தையின் கமக்கட்டிற்குள் வைத்து, அவனுடையை கையை உடலின் பக்கமாக கீழேவைக்கவும். குமிழ் முழுவதுமாக கமக்கட்டினால் மூடப்பட்டிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
- வெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள்.
- கமக்கட்டிற்குள் வைத்து அளவிடப்படும் உடல் வெப்பநிலை சாதாரணமாக 36.7°C முதல் 37.5°C (98.0°F முதல் 99.5°F) வரை இருக்கும்.
நான்கு வயது வருமளவும் வாய்வழி வெப்பமானிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இளம் சிசுக்களுக்கும் காதுவழி வெப்பமானிகள் பயன்படுத்தப்படக்கூடாது. மிகச் சிறு குழந்தைகளில் இவ்வெப்பமானிகள் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்லை. இரண்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளில் காதுவழி வெப்பமானியைப் பயன்படுத்தலாம். பிள்ளையின் நெற்றியில் வைக்கப்படும் காய்ச்சல் பட்டிகளும் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்லை என்பதால் அவையும் பரிந்துரைக்கப்படுவதில்லை.
காய்ச்சலை ஏற்படுத்துவதென்ன?
வழக்கமாக, உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதின் அறிகுறியே காய்ச்சலாகும். நமது சாதாரண உடல் வெப்பநிலைக்கு அண்மையான வெப்பநிலைகளில் பக்டீரியாக்களும் வைரசுகளும் நன்கு வளரும். நமக்குக் காய்ச்சல் இருக்கும்போது நமது உடல் வெப்பநிலை உயர்வதால் பக்டீரியாக்களும் வைரசுகளும் தப்பிப் பிழைப்பது கடினமாகிவிடுகிறது. காய்ச்சல் நோயெதிர்ப்புத் தொகுதியை இயக்கிவிட்டு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை செயற்பட வைக்கிறது. தடிமல், தொண்டைவலி, அல்லது காதுத்தொற்றுநோய்கள் போன்ற சாதாரணமான வியாதிகளின்போதும் காய்ச்சல் தோன்றுகிறது, ஆனால் சில வேளைகளில் கடுமையான நிலையொன்றின் அறிகுறியாக இது இருக்கலாம்.
சிலவேளைகளில் காய்ச்சல் சுகவீனத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருப்பதில்லை, ஆனால் வெப்பத்தால் ஏற்படும் சோர்வு அல்லது வெப்ப அதிர்ச்சியால் இது ஏற்படுகிறது. உடல் நீர் வறட்சி, சோர்வு, பலவீனம், குமட்டல், தலைவலி, மற்றும் விரைவாக மூச்சுவாங்குதல் போன்ற அறிகுறிகளுடன்கூடிய வெப்பத்தால் ஏற்படும் ஒரு சுகவீனமே வெப்ப சோர்வு எனப்படுகிறது. வெப்ப அதிர்ச்சியென்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மருத்துவ அவசர நிலைமையாகும். இந்த நிலைமையின்போது உடல் தனது வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உஷ்ணமாகிவிடுகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்கும் குறைந்த வயதுடையதானால், நீங்களாகவே மருந்து கொடுத்து காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க முயற்சி செய்யவேண்டாம். அதற்குப் பதிலாக அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மருத்துவர், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நீங்கள் அசெட்டமினோஃபென் கொடுக்கும்படி பரிந்துரைக்கலாம், ஆனால் தேவைப்படும் சரியான அளவை அவர்தான் குறிப்பிட்டுக்கூறவேண்டும்.
இதற்கிடையில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு வழக்கம்போல தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலை நீங்கள் தொடர்ந்து ஊட்டலாம். அவன் உடல் நீர்வறட்சியின் அறிகுறிகளைக் காண்பிப்பானாயிருந்தால், பாலூட்டல்களுக்கு இடையில் அவனுக்கு எலெக்ட்ரோலைட் கரைசல் கொடுக்கப்படலாம், அல்லது பாலூட்டல்களுக்குப் பதிலாக எலெக்ட்ரோலைட் கரைசலைக் கொடுக்கவும். நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக மருத்துவருடன் பேசவும். வாயுலர்தல், நாளொன்றுக்கு ஆறுக்குக் குறைவான ஈரமான டையப்பர், கண்ணீரில்லாத தாழ்ந்த கண்கள், தாழ்ந்த தலை உச்சிக்குழி, மற்றும் வறட்சியடைந்த தோல் என்பனவற்றை உடல் நீர் வறட்சியின் அறிகுறிகள் உட்படுத்தும்.
புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தையை இளம் சூட்டு நீரைப் பஞ்சினால் ஒற்றி குளிப்பாட்டவும் நீங்கள் முயற்சி செய்யலாம். நீரை அவனுடைய தோலிலிருந்து தானாக காயவிட்டால் அது அவனுடைய வெப்பத்தைத் தணிக்க உதவும். நீருக்குள் அல்கஹோல் சேர்க்கவேண்டாம்.
புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றில் தொற்றுநோயுடன்கூடிய காய்ச்சல் ஏற்படும்போது, அது கவலைப்பட வேண்டிய பெரிய விடயமாகலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகள் மிக விரைவாக சுகவீனம் அடைந்துவிடலாம் என்பதே இதற்குக் காரணம். அதிஷ்டவசமாக, தொற்றுநோய் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதானால், சிகிச்சைக்கும் அவர்கள் மிக விரைவாக பிரதிபலிப்பார்கள். இதன் காரணமாகவே உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடியவிரைவில் மருத்துவரிடம் கொண்டுவருவது முக்கியமானது. மருத்துவர் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தொற்றுநோயிருக்கிறதென சந்தேகித்தால், உடனடியாக அவர் அன்டிபையோடிக் சிகிச்சையை ஆரம்பிக்கலாம்.
வளர்ந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை
பெரும்பான்மையான காய்ச்சல்கள் வைரசுகளால் ஏற்படுத்தப்படுவதோடு சிகிச்சையில்லாமலேயே குணமாகிவிடும். இதன் காரணமாக பல மருத்துவர்கள், 38.5°C (101.5°F) கும் அதிகமாக இருந்தாலேயன்றி ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட சிசுக்களின் காய்ச்சலைக் குறைப்பதை பரிந்துரைப்பதில்லை. இருப்பினும், சிசுவிற்கு காய்ச்சலின் காரணமாக வலியும் வேதனையுமிருக்குமானால், அவன் இன்னுமதிக செளகரியமாக உணருவதற்காக அசெட்டமினோஃபென்னை உபயோகிக்கலாம்.
காய்ச்சல் பக்டீரியாத் தொற்றினால ஏற்படுத்தப்பட்டிருப்பதாக காண்டுபிடிக்கப்பட்டால், இத் தொற்றுநோய் அன்டிபையோடிக்கைக் கொண்டு சிகிச்சையைளிக்கப்படவேண்டும். அன்டிபையோடிக் பக்டீரியாவை அழிப்பதற்காக வேலைசெய்யும்போது, காய்ச்சலைக் குறைக்கும். சிலவேளைகளில், அன்டிபையோடிக்சும் அசெட்டமினோஃபென்னும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரே நேரத்தில் உபயோகிக்கப்படுகிறது. 41.5°C (106.7°F) க்கும் அதிகமாகக்கூடிய காய்ச்சல் அரிதாகவே ஏற்படும், அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படவேண்டும்.
காய்ச்சல் வெப்பச் சோர்வினால அல்லது வெப்ப அதிர்ச்சியால் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அது அபாயகரமானதாக இருப்பதோடு உடனடியாக கவனிக்கப்படவும்வேண்டும். பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருத்தல், அவனுடைய உடையைத் தளர்த்துதல், அவனை உண்ணவும் குடிக்கவும் உற்சாகப்படுத்துதல் மற்றும் குளிர்ச்சியான குளிப்பு போன்றவற்றின் மூலம் வெப்பச் சோர்வுக்கு சிகிச்சையளிக்கலாம். வெப்ப அதிர்ச்சி ஒரு மருத்துவ அவசரநிலையாக இருப்பதோடு உடனடியாக ஒரு மருத்துவரால் சிகிச்சையளிக்கப்படவேண்டும். மருத்துவ உதவிக்காக காத்திருக்கும்போது உங்கள் பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருந்து, அவனுடையை உடைகளை அகற்றி, குளிர் நீரால் பஞ்சொற்றுக் கொடுக்கவும்.