இதய – நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தல் (சிபிஆர்) என்றால் என்ன?
சிபிஆர் என்பது இதய- நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தல் என்பதை அர்த்தப்படுத்துகிறது. மார்பை அழுத்தி சுவாசத்தை மீட்கும் ( வாய் மீது வாயை வைத்து மீள உயிர்ப்பித்தல்) ஒரு அவசர சிகிச்சைச் செயற்பாட்டை உட்படுத்துகிறது. இதயம் செயலிழப்பதை அனுபவிக்கும் ஒருவருக்குத் தகுந்த முறையில் இதய- நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தல் சிகிச்சை கொடுக்கப்படும்போது சுவாசித்தலையும் இரத்த ஒட்டத்தையும் பழைய நிலைக்குக்குக் கொண்டுவர முடியும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் மிகப் பெரிய காயங்கள் அல்லது நோய்கள், மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மறைந்திருக்கும் இதய நோய் என்பனவற்றின் விளைவாக இதயம் செயலிழந்தும்போகலாம். வேறு காரணங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
- நீரில் மூழ்குதல்
- மூச்சுத் திணறல்
- மின்சாரம் பாய்தல்
- நஞ்சூட்டப்படுதல் அல்லது நஞ்சினால் மயக்கமடைதல்
- உயிரை அச்சுறுத்தும் ஒவ்வாமை (கடும் ஒவ்வாமை)யின் எதிர்விளைவுகள்
இதய- நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தலுக்கான பயிற்சி வகுப்புக்கள் பெரும்பாலும், உள்ளூர் பொழுதுபோக்குத் திட்டங்கள், மேம்பட்ட நீச்சல் திட்டங்கள், முதலுதவித் திட்டங்கள் என்பவற்றின் மூலமாகக் கிடைக்கும். அடிப்படைத் திறமைகள் மிகவும் எளிதானது; அதைப் பெரும்பாலும் ஒரு சில மணி நேரங்களில் கற்றுக்கொள்ளலாம்.
உங்களுடைய குழந்தைக்கு சிபிஆர் செய்தல்
உங்களுடைய குழந்தையின் மார்பை மென்மையாகத் தடவிப்பார்ப்பதன் மூலம் ஏதாவது பிரதிபலிப்பு இருக்கிறதா என்பதைச் சோதித்துப்பார்க்கவும். அவன் அசையவில்லை அல்லது சத்தம் போடவில்லை, எனின் உடனடியாக 9-1-1 ஐ அழைக்கவும். நீங்கள் தனிமையாக இல்லாவிட்டால், உங்களுக்காக அழைக்கும்படி வேறு எவரையாவது கேட்கவும்.
நீங்கள் தொடும்போது அவன் பிரதிபலிப்புக் காண்பிக்காவிட்டால், ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா எனச் சோதித்துப் பார்க்கவும். உங்களுடைய குழந்தைக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டால், எவரையாவது உடனடியாக 9-1-1 ஐ அழைக்கும்படி கேட்கவும். நீங்கள் தனிமையாக இருந்தால், நீங்கள் 9-1-1ஐ அழைப்பதற்குச் செல்வதற்கு முன்பாக, உங்களுடைய குழந்தை சுவாசிக்கிறானா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.
சுவாசித்தலைச் சோதித்துப்பார்த்தல்
அவனுடைய மார்பில் ஏதாவது அசைவு இருக்கிறதா என்பதை அவதானிப்பதன் மூலம் சுவாசித்தலைச் சோதித்துப்பார்க்கவும். அவன் சுவாசிப்பதைக் கேட்பதற்காகவும் உணருவதற்காகவும் உங்களுடைய காதையும் அவனுடைய வாயின் மேல் வைக்கலாம். உங்களுடைய குழந்தை உணர்விழந்திருந்து சுவாசிக்காதிருந்தால் உடனே 9-1-1 ஐ அழைக்கவும். நீங்கள் தனிமையாக இல்லாவிட்டால், உங்களுக்காக அழைக்கும்படி வேறு எவரையாவது கேட்கவும்.
மார்பில் அழுத்தங்களைக் கொடுத்தல்
ஒரு உறுதியான தட்டையான மேற்பரப்பில் உங்களுடைய குழந்தையைப் படுக்கவைத்து, இதய- நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தலைத் தொடங்கவும். அவனுடைய மார்பெலும்பில், முலைக்காம்பு வரிசைக்கு சற்று கீழ் உங்களுடைய இரு விரல்களையும் வைக்கவும். அவனுடைய மார்பு ஏறக்குறைய 1.5 அங்குலம் உள்ளே செல்லக்கூடியளவு கடினமாக அழுத்தி, விரைவான 30 மார்பழுத்தங்களைக் கொடுக்கவும். இந்தச் செயற்பாடு, அவனுடைய மூளைக்கும் மற்ற முக்கியமான உறுப்புகளுக்கும் இரத்தத்தைப் பாயச் செய்யும்.
சுவாசத்தை மீட்டல்
காற்றுக்குழாயைத் திறத்தல்
முதல் 30 மார்பழுத்தங்களின் பின்னர், உங்களுடைய உள்ளங்கையை உங்களுடைய குழந்தையின் நெற்றியில் வைக்கவும். உங்களுடைய இரண்டு விரல்களை அவனுடைய கீழ்த்தாடையின் நுனியில் வைத்து தலையைப் பின்புறமாக மென்மையாகச் சரிக்கவும். இது அவனுடைய காற்றுக்குழாயைத் திறக்கும்.
சுவாசத்தை மீட்கத் தொடங்கவும்
உங்களுடைய வாயை அவனுடைய மூக்குக்கும் வாய்க்கும் மேலே ஒரு மூடி போல இறுக்கமாக அடைத்து, இரண்டு மெதுவான சுவாசங்களைக் கொடுக்கவும். உங்களுடைய குழந்தையின் மார்பு மேலெழாவிட்டால், அவனுடைய தலையை முன்புபோல சரித்து மேலும் இறுக்கமாக அடைத்து திரும்பவும் முயற்சிக்கவும்.
மீண்டும் செய்யவும்
அம்புலன்ஸ் வண்டி வரும்வரை, அல்லது உங்களுடைய குழந்தை மீண்டும் சுவாசிக்கத் தொடங்கும்வரை, இந்த 30 மார்பு அழுத்தங்கள், இரண்டு சுவாசங்களின் சுற்றை ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறையாகத் திரும்பத் திரும்பச் செய்யவும்.
நிவாரணமடையும் நிலை (ரிகவரி பொஷிஷன்)
இதய- நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தலின் பின்னர் உங்களுடைய குழந்தை வாந்தியெடுப்பதும் சுவாசிக்கச் சிரமப்படுவதும் சாதாரணமானது. உங்களுடைய குழந்தையின் முகம் வெறுமனே சற்றுக் கீழ் நோக்கும் வண்ணம் நிவாரணமடையும் நிலையில் வைக்கவும். அவனுடைய முகத்தை அல்லது மூக்கை எதுவுமே அடைத்துவிடாதிருப்பதற்கு அல்லது மூடிவிடாதிருப்பதற்கு நிச்சயமாக இருக்கவும். உங்களுடைய குழந்தையின் காற்றுக்குழாயைத் திறந்து வைத்திருப்பதற்கு அவனுடைய நிவாரணமடையும் நிலை உதவி செய்யும்.
முக்கிய குறிப்புகள்
- சிபிஆர் இதய அழுத்தங்கள், சுவாசத்தை மீட்டல் (வாய் மீது வாயை வைத்து மீள் உயிர்ப்பித்தல்) இரண்டையுமே உட்படுத்தும்.
- சிபிஆர், சுவாசத்தை மீண்டும் தொடங்குவதற்கும் மூளைக்கும் மற்ற முக்கியமான உறுப்புகளுக்கும் இரத்தத்தைப் பாயச் செய்வதற்கும் உதவி செய்யும்.
- உங்களுடைய குழந்தை உணர்விழந்திருந்து சுவாசிக்காதிருந்தால் உடனே 9-1-1 ஐ அழைக்கவும்
- அவனுடைய மார்பில் ஏதாவது அசைவு இருக்கிறதா என்பதை அவதானிப்பதன் மூலம் சுவாசித்தலைச் சோதித்துப்பார்க்கவும். அவன் சுவாசிப்பதைக் கேட்பதற்காகவும் உணருவதற்காகவும் உங்களுடைய காதையும் அவனுடைய வாயின் மேல் வைக்கலாம்.
- சிபிஆர் வழங்கிய பின்பாக உங்களுடைய குழந்தையை நிவாரணமடையும் நிலையில் வைக்கவும். இது அவனுடைய காற்றுக்குழாயைத் திறந்து வைக்கும்.