உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களில் அவன் எட்டக்கூடிய சில விசேஷ முக்கிய சம்பவங்களைப் பற்றி இந்தப் பக்கம் விபரிக்கிறது. ஆயினும், ஒவ்வொரு குழந்தையும் தன் சொந்த வேகத்தில் வளருகிறது, மற்றும் இங்கு பட்டியலிடப்பட்ட வயதுகளின் படிதான் இவை நடக்க வேண்டுமென்பது கட்டாயமல்ல என்பதை மனதில் வைப்பது முக்கியம். அத்துடன், நிறைமாதத்தில் பிறந்த ஆரோக்கியமான குழந்தையின் வளர்ச்சி பற்றிதான் இந்தப் பக்கம் விபரிக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இந்த விசேஷ முக்கிய சம்பவங்களை, நிறைமாதத்தில் பிறந்த ஆரோக்கியமான குழந்தைகளைவிடச் சற்றுத் தாமதமாக எட்டக்கூடும்.
முதல் மாதம்
உங்கள் குழந்தைக்கு ஒரு மாத வயதாகும்போது அவனது கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகள் பிறக்கும்போது இருந்ததைவிடப் பலமடையும், மற்றும் தன் தலையை மேலும் நன்றாகக் கட்டுப்படுத்தமுடியும். அவன் குப்பற படுத்திருந்தால், ஒரு குறுகிய நேரத்துக்கு அவனது நாடியை தரையிலிருந்து மேலே தூக்க கூடும். ஆயினும், உங்கள் பிள்ளையை நீங்கள் தூக்கிவைத்திருக்கும்போது அவனது தலையை, இன்னமும் நீங்கள், தாங்கிக் கொள்ளவேண்டும். அவன் படுத்திருக்கும் அல்லது உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து அவனைத் தூக்க முயற்சிக்கும்போது அவனது தலை தொடர்ந்து பின்னோக்கிச் சாயும். உட்கார்ந்திருக்கும் நிலையில் அவனை வைக்கும்போது அவனது முதுகு ஏறக்குறைய முழு வட்டவடிமாகும். ஓரு கண நேரத்துக்கு அவனால் தன் தலையை தூக்கமுடியலாம்.
எழுந்து நிற்கும் நிலையில் வைக்கப்பட்டால், உங்கள் குழந்தை முழங்காலில் அல்லது இடுப்பு வரை சாய்வான். தன்னிச்சையாக நடப்பது அவனுக்கு இன்னும் கடினமாக இருக்கும். அவனது பாதம் ஒரு தட்டையான மேற்பரப்பைத் தொடும்போது, அவன் ஒரு காலடி எடுத்துவைக்க முயற்சிப்பான்.
இன்னும் உங்கள் குழந்தை பெரும்பாலும் தன் கைகளை மூடப்பட்ட நிலையில் வைத்திருப்பான். அவனது விரல்களை விரித்து ஏதாவது பிடிக்கக்கொடுத்தால், ஒரு சில வினாடிகளுக்குப் பிடித்திருந்துவிட்டுப் பின்னர் கீழே போட்டுவிடுவான்.
இரண்டாம் மாதம்
இரண்டாம் மாத இறுதியில், உங்கள் குழந்தை தன் தலையைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து முன்னேறுவதை அவதானிப்பீர்கள். அவன் குப்பறப் படுத்திருக்கும்போது, சில அங்குல உயரத்துக்கு தனது தலையையும் தோளையும் தூக்கி தனது கைகளால் தன்னைத் தாங்கமுடியும். உங்கள் தோள்களுக்கு எதிராக அவனைத் தூக்கிப் பிடிக்கும்போது சிறிது நேரத்துக்கு தன் தலையை நேரே தூக்கிவைத்திருக்க அவனால் முடியும்.
உங்கள் குழந்தையை மல்லாந்து படுக்கும்படி வைத்தால், தனது முன்கைகளை தன் தலைக்குமேல் ஒரு U வடிவத்தில் உயர்த்துவான். உங்கள் பிள்ளை தன் முன்கைகளை சமச்சீர் வடிவில் உபயோகிக்கிறான் என்பதைச் இது சுட்டிக் காட்டுகிறது. இது மிகவும் முக்கியமான ஒரு சாதனையாகும். உங்கள் குழந்தை ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்ற தன் கைகளை ஒருமித்து உபயோகிக்க விரைவில் தயாராவான் என்பதை அர்த்தப்படுத்துகிறது.
உங்கள் குழந்தையை உட்கார்ந்திருக்கும் நிலையில் வைத்திருந்தால், அவனது முதுகு இன்னும் வளைந்த நிலையில் இருந்தாலும், நேராகத் தொடங்குவதை நீங்கள் அவதானிப்பீர்கள். சிறிது நேரத்துக்குத் தன் தலையை மேல் நோக்கி நேராக வைத்திருப்பதற்கு அவனால் முடியலாம்.
இந்த மாதம் உங்கள் குழந்தையின், பொருட்களைப் பிடிக்க முன்வராத தன்மை குறைந்துகொண்டே வரும். பொருட்களைப் பிடிக்க முன்வராத தன்மை மறைந்ததும் உங்கள் குழந்தை பொருட்களைப் பிடிக்க தானாகவே முன்வருவான். ஒரு பொருளைப் பிடித்துக்கொள்ளும்படி அவனிடம் கொடுத்தால், அவனது விரல்கள் தானாகவே திறந்து கொள்ளும். அவனால் பொருட்களைப் பிடிக்க முடியுமானால் அதைத் தன் வாய் வரை கொண்டுவர முயற்சி செய்வான்.
மூன்றாம் மாதம்
இந்த மாதத்தில் உங்கள் குழந்தையின் கழுத்து மற்றும் தோள் தசைகள் தொடர்ந்து வலிமையடையும். மூன்றாம் மாத இறுதியில், குப்பறப் படுக்கவைத்தால், அவனது உடலின் மற்றப் பாகங்களின் உயர மட்டத்துக்கு மேலாகத் தனது தலையை உயர்த்தக்கூடியவனாக இருக்கவேண்டும். மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஒரு குழந்தையைக் குப்பறப் படுக்கவைக்கும்போது அவனது தலையைத் தானாகவே மேலுயர்த்தும் ஆற்றலானது தலையைக் கட்டுப்படுத்தும் திறமையை மிதிப்பிட உபயோகிக்கப்பட மாட்டாது.
உங்கள் குழந்தையின் முன்னங்கை மற்றும் கையைச் சேர்த்து இயக்குவது தொடர்ந்து முன்னேற்றமடையும் மற்றும் சிந்தித்து செயல்படும். பொருட்களைப் பிடிக்க முன்வராத தன்மை மறைந்துவிட்டது. இப்போது கைகள் பெரும்பாலும் திறந்த நிலையில் இருக்கும். ஒரு விளையாட்டுப் பொருளைப் பிடிக்கும்படி நீட்டினால், அவன் தன் கைகளைத் திறந்து தனது உள்ளங்கை மற்றும் விரல்களுக்கிடையே அதனைப் பிடிக்க முயற்சி செய்வான். இது முன்கை முன்னெலும்புப் பிடி என அழைக்கப்படும். தனது பெருவிரலை உபயோகிப்பது எப்படி என்பதை அவன் இதுவரை கற்றுக் கொள்ளாததினால், பொருளைப் பிடித்துக் கொண்ட சிறிது நேரத்துக்குள், பெரும்பாலும் தவிர்க்க முடியாமல் அதைக் கீழே போட்டுவிடுவான்.
உங்கள் குழந்தையை மல்லாந்து அல்லது குப்புறப் படுக்கவைத்தால், தனது கால்களைச் சுறுசுறுப்பாக உதைப்பான். தொடர்ந்து வரும் மாதங்களில், தவழுவதற்கும் நடப்பதற்கும் தயாராவதற்கு இது நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
உட்கார்ந்த நிலைக்கு அவனை இழுத்தால், அவனது தலை சிறிதளவு மாத்திரமே சாயும். உட்காரவைத்தால், அவனால் தன் தலையை நீண்ட நேரத்துக்கு மேலே தூக்கி வைத்திருக்க முடியும்.
நான்காவது மாதம்
நான்காவது மாத இறுதியில், உங்கள் குழந்தையின் முதுகுத் தசைகள் முன்பை விட மேலும் வலுவடையும். தனது கால்கள் மற்றும் கைகளின் அசைவுகளில் மேலும் நல்ல கட்டுப்பாட்டை வைத்திருப்பான். இந்தத் திறமைகளின் இணைவுப் பொருத்தங்கள் உங்கள் குழந்தையை சிறிதளவு பயிற்சியுடன் குப்பறப் படுப்பதிலிருந்து உருண்டு மல்லாந்து படுக்க அனுமதிக்கும். ஆயினும், மல்லாந்து படுப்பதிலிருந்து உருண்டு குப்பறப் படுக்கக்கூடிய வலிமை இன்னும் அவனுக்கு இருக்காது. சில சமயங்களில் இது அவனுக்கு வெறுப்பூட்டுவதாக இருக்கலாம்.
உங்கள் சிறு பிள்ளையைத் தற்போது உட்காரும் நிலையில் வைத்தால் அவனுக்கு மிகவும் நல்ல தலைக் கட்டுப்பாடு இருக்கும். அவனால் தன் தலையைத் தொடர்ந்து மேலே தூக்கி வைத்திருக்கமுடியும். ஆயினும், உங்கள் குழந்தையை நீங்கள் திடீரென அசைத்தால், அவன் தலை தள்ளாடும். அது அவனது தலைக் கட்டுப்பாடு இன்னும் முழுமையடையவில்லை என்பதைக் காட்டுகிறது.
உங்கள் குழந்தை தனது கைகள் மற்றும் அவற்றால் அவன் செய்யும் காரியங்களால் அவன் மிகவும் ஈர்க்கப்படுவான். பொருட்களின் பக்கமாக அவன் தன் கைகளை அசைக்கும்போது அவற்றை அவதானமாகப் பார்ப்பதற்காக அதிக நேரத்தைச் செலவிடுவான். ஆயினும், அவனது ஒருங்கிணைப்புத் திறன் தொடர்ந்து கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். தனது பெருவிரலை மற்ற விரல்களிலிருந்து சுதந்திரமாகத் தனியே அசைக்க முடியாது. ஆகவே, இந்த நிலையில் இன்னும் அவனால் விளையாட்டுப் பொருட்களைப் பொறுக்கி எடுக்கமுடியாது.
ஐந்தாவது மாதம்
உங்கள் குழந்தை மிகவும் வளையுந்தன்மையுடையவனாக இருப்பான். அவன் மிகவும் சந்தோஷமடையக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால் தனது கால்விரல்களை சுவைப்பதற்காகத் தன் வாய்க்குக் கொண்டுவருவதாகும்.
அவனது கழுத்து, தோள், மற்றும் மார்பு தசைகள் தொடர்ந்து வலுவடையும். அவன் முதுகு நேராகும். அவனது முண்டப்பகுதியிலிருக்கும் தசை முறுக்குகள் உறுதியாகும். இது அவனது மேல் உடலைத் தாங்கி ஒரு சில வினாடிகளுக்கு அவன் விழுந்து போகாமல் உட்கார்ந்திருக்க அனுமதிக்கும். இப்போது அவனால் முழுமையாகப் படுத்து உருள முடியும் -- குப்பறப் படுத்திருப்பதிலிருந்து மல்லாந்து படுக்க, பின்பு மல்லாந்து படுத்திருப்பதிலிருந்து குப்பறப் படுக்க முடியும். இப்போது அவனால் நன்றாக நடமாட முடியும்.
இப்போது, உங்கள் குழந்தையை உட்கார்ந்த நிலையிலிருந்து நீங்கள் இழுக்கும்போது, அவனது தலை கொஞ்சம்கூட த் தள்ளாடாது. இப்போது அவனது தலைக் கட்டுப்பாடு மிகச் சிறந்ததாக இருக்கும். அவன் உட்கார்ந்திருக்கும் நிலையில் அவனை அசைத்தாலும், அவன் தலை கொஞ்சம்கூடத் தள்ளாடாது.
உங்கள் குழந்தை பொருட்களைப் பிடித்துக்கொள்வதிலும் பெரிய பொருட்களைத் தூக்குவதிலும் மேம்பட்டவனாவான். அவன் பொறுக்கி எடுக்கவேண்டிய விளையாட்டுப் பொருளைச் சுற்றித் தன் கைகளை குவளைபோல அமைக்க முயற்சி செய்வான். விளையாட்டுப் பொருளை அவனால் சமாளித்து எடுக்கமுடிந்தால் அதை மேலும் முழுமையாக ஆராய்வதற்குத் தன் விரல்கள் மற்றும் வாயை உபயோகிப்பான். குழந்தைகள் பொருட்களைத் தங்கள் வாய்களில் வைக்க விரும்புவார்கள்; ஏனென்றால் அவர்களது உதடுகள் மற்றும் நாக்கு, உணர்ச்சிகள் மிகுந்தவை; புதிய பொருட்களை ஆராய்ந்து பார்க்க அவை மிகச் சிறந்த சாதனங்களாகும்.
ஆறாவது மாதம்
இப்போது, உருளுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை! உங்கள் குழந்தை தனது வயிற்றினால் நகரத் தொடங்கலாம், அல்லது தனது கைகளினால் பின்னோக்கி உந்தலாம். அந்த நிலையில் நீங்கள் அவனைத் தாங்கி நிறுத்தினால், இந்த மாதத்தில் அவன் உட்காரக் கற்றுக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அவன் சுமாராகத் தள்ளாடக்கூடும். அவன் உட்காரும்போது தன்னைத் தாங்குவதற்காகத் தன் கைகளை உபயோகிக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆதரவுடன் , ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு எழுந்து நிற்கக்கூடிய அளவுக்கு அவனது கால்கள் பலமுள்ளதாக இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில், உங்கள் குழந்தைக்கு தனது கைகளின் அசைவுகளை உற்றுநோக்கும் ஆர்வம் குறையத் தொடங்கலாம். அவனால் இப்போது அசையமுடியும் மற்றும் வேறு பொருட்களை ஆய்வு செய்யமுடியும். இது தான் இதற்குக் காரணமாக இருக்கலாம்!