உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதல் வருடத்தின், இரண்டாவது அரையாண்டில் எட்டக்கூடிய விசேஷ முக்கிய சம்பவங்கள் சிலவற்றை இந்தப் பக்கம் விபரிக்கிறது. ஆயினும், ஒவ்வொரு குழந்தையும் தன் சொந்த வேகத்தில்தான் வளரும், இங்கு பட்டியலிடப்பட்டுள்ள வயதுகளின் படிதான் இது நடக்கவேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்பதை மனதில் வைப்பது முக்கியம். அத்துடன், நிறைமாதத்தில் பிறந்த ஆரோக்கியமான குழந்தையின் வளர்ச்சி பற்றித்தான் இந்தப் பக்கம் விபரிக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இந்த விசேஷ முக்கிய சம்பவங்களை, நிறைமாதத்தில் பிறந்த ஆரோக்கியமான குழந்தைகளைவிடச் சற்றுத் தாமதமாக எட்டுவார்கள்.
ஏழாவது மாதம்
உங்கள் குழந்தையின் உட்கார்ந்திருக்கும் திறன் இந்த மாதத்தில் தொடர்ந்து அதிகரிக்கும். இப்போது ஒரு சில நிமிடங்கள் அவனால் உட்கார்ந்திருக்கமுடியவேண்டும். அவன் உட்கார்ந்திருக்கும்போது அவனைத் தாங்குவதற்கு இன்னும் அவனது கைகள் தேவைப்படும். இருந்தாலும், அவனால் உட்காரும் நிலைக்குத் தானாகவே இன்னும் வரமுடியாது. அதற்கு அவனுக்கு உங்களின் உதவி தேவைப்படும்.
உங்கள் ஆதரவுடன் உங்கள் குழந்தையால் எழுந்து நிற்கவும், மேலும் கீழுமாகத் துள்ளிக் குதிக்கவும் முடிய வேண்டும். இது அவனுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தின் ஊற்றுமூலமாக இருக்கும்! மேலும் கீழுமாகத் துள்ளிக் குதிப்பது அவன் கால்களுக்கு மிகப்பெரிய பயிற்சி ஆகும்.
உங்கள் குழந்தையின் கையின் ஓருங்கிணைப்பு இந்த மாதத்தில் தொடர்ந்து முன்னேற்றமடையும். ஒரு கையில் ஒரு விளையாட்டுப் பொருளைப் பிடித்துக் கொண்டு, அதை மற்றக் கைக்குக் கடத்துவதில் திறமை பெற்றிருப்பான்.
எட்டாவது மாதம்
இந்தச் சமயத்தில், உங்கள் குழந்தையால் உட்காருவது மாத்திரமல்ல, உங்கள் உதவி இல்லாமல் தானே எழுந்து உட்காரவும் முடியும். அவனால் தானே எழுந்து நிற்கும் நிலைக்கும் வரமுடியும். ஆயினும், திரும்பக் கீழே உட்காருவதில் கஷ்டம் இருக்கலாம்.
இந்த மாதத்தில் சில குழந்தைகள் தவழக் கற்றுக் கொள்வார்கள். சில குழந்தைகளால் முடியாது. சில குழந்தைகள் தவழுவதற்குப் பதிலாக தங்கள் வயிற்றால் அல்லது புட்டத்தால் சறுக்கிப் போவதை விரும்புவார்கள். பெரும்பாலான குழந்தைகள் முன்னோக்கிப் போவதற்கு முயற்சி செய்வதற்கு முன்பு பின்னோக்கி நகருவார்கள். உங்கள் குழந்தை இதுவரை தவழ்வதற்கு கற்றுக்கொள்ளவில்லை என்றால் விரைவில் கற்றுக் கொள்வான்; அல்லது சிறிது காலத்தில் வெறுமனே உட்காருவதிலிருந்து நேரடியாக நடக்க ஆரம்பித்துவிடுவான்.
ஒன்பதாவது மாதம்
உங்கள் குழந்தை பொருட்களைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தன் சுட்டுவிரலை உபயோகிக்கக் கற்றுக்கொண்டு விட்டான். அவன் கையில் வைத்திருக்கும் பொருட்களை ஆராய்ந்து பார்க்க இது அவனுக்கு உதவும். இனிமேலும் வைத்து விளையாட விரும்பாத ஒரு பொருளைத் தானகவே எப்படித் தவிர்த்து விடுவது என்பதை அவன் இப்போது அறிந்திருப்பான்; இது மற்றொரு மாபெரும் சாதனையாகும். இது உங்கள் குழந்தையின் அதிருப்தியை நீக்கும் ஒரு மாபெரும் ஊற்றுமூலமாகும்.
பத்தாவது மாதம்
உங்கள் குழந்தையின் கையைப் பிடிப்பீர்களானால், அவனால் இந்த மாதத்தில் தற்காலிகமாக சில காலடிகள் எடுத்து வைக்கமுடியும். ஒரு கையால் ஒரு விளையாட்டுப் பொருளைப் பிடித்துக்கொண்டு அவனுக்கு அருகிலிருக்கும் வாளிக்குள் போட்டுவிடுவதற்கு முன்பு விழாதவாறு அதை மறு கைக்குக் கடத்துதல் போன்ற, திரும்பத் திரும்பச் செய்யும் செயல்களில் தேர்ந்தவனாகவும் இருக்கலாம்.
பதினோராவது மாதம்
இந்த மாதத்தில் உங்கள் குழந்தையால் ஒரு சில செக்கன்டுகளுக்குத் தானகவே எழுந்து நிற்க முடியும். அத்துடன், அவன் விரும்பும்போது எழுந்து நிற்கும் நிலையிலிருந்து உட்காரும் நிலைக்குத் தானாகவே அசைய முடியும்
பன்னிரெண்டாம் மாதம்
இந்த மாதம், உங்கள் குழந்தை தனது முதலாவது காலடியை எடுத்துவைப்பான். ஏற்கனவே அவன் இதைச் செய்யாதிருந்தால் அவ்வாறு செய்வான். அவனது சமநிலையை முன்னேற்றுவிப்பதற்கு உதவியாக, அவன் முதலாவது காலடி எடுத்து வைக்கும்போது தனது கால்களை அகல விரித்து வைப்பான். அவன் இதைச் செய்யும்போது மிகவும் கடினமாகத் தன் மனதை ஒருமுகப்படுத்தவேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு, அவன் நடக்க முயற்சிக்கும்போது, அவனைச் சுற்றியுள்ள பொருட்கள் தொடர்பாக தன் பாதங்கள் எங்கே இருக்கின்றன என்பதை அறிவதற்காக தனது பாதங்களை அடிக்கடி பார்ப்பான்.
இந்த நிலைமையில், உங்கள் குழந்தை ஒரு கையை விட மற்றக் கை மீது பாரபட்சம் காண்பிப்பான். இது கைப்பழக்கம் என அழைக்கப்படும். உங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் மிக ஆரம்பத்தில் கைப்பழக்கம் வராமலிருப்பது முக்கியம். உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதற் சில மாதங்களில் ஒரு கையை விட மற்றக் கை மீது அவன் பாரபட்சம் காண்பித்தால், அவனை மருத்துவரிடம் கொண்டு வரவும். இது எதாவது ஒரு பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
உங்கள் குழந்தையின் தசைகளின் சிறந்த வளர்ச்சி இந்த மாதத்தில் தொடர்ந்து முன்னேற்றமடையும். இந்தக் காலப்பகுதியில், தனது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை உபயோகித்துப் பொருட்களைப் பற்றிப் பிடிக்க அவனால் முடியும். இது இடுக்கிப் பிடி என அழைக்கப்படும். அவன் பொருட்களை அடுக்கி வைப்பதில் அல்லது ஒரு பொருளினுள் இன்னொரு பொருளை வைப்பதில் மகிழ்ச்சியடையலாம். எளிமையான புதிர்கள் (பஸ்ஸிள்ஸ்) வைத்து விளையாடவும் விரும்புவான். ஒவ்வொன்றும் சிறிய கைபிடிகளைக் கொண்ட மரத்தாலான பஸ்ஸிள்களை அதிகமாக விரும்புவான்.