உங்கள் பிள்ளைக்கு, இலகுவில் தீர்த்துக் கொள்ளமுடியாத ஒரு கடுமையான மருத்துவப் பிரச்சினை இருக்கலாம். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளையின் நோயின் விளைவாக, உங்களுக்கு உணர்ச்சி ரீதியான, சமூக ரீதியான, அல்லது பணப் பிரச்சினைகள் ஏற்படலாம். நீங்கள் தனிமையாக இல்லை. ஒரு நோயுள்ளை பிள்ளையைக் கொண்டிருக்கும் அநேக குடும்பத்தினருக்கு இதே மாதிரியான பிரச்சினைகள் இருக்கின்றன.
சமுக சேவையாளர்கள் உங்களுக்கு உதவி செய்யலாம்.
சமூக சேவையாளர்கள் என்ன செய்கிறார்கள்?
சமூக சேவையாளர்கள், நோயினால் ஏற்பட்ட மருத்துவம் அல்லாத பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி செய்வார்கள். ஒரு பிள்ளையின் நோய் எப்படி முழுக் குடும்பத்தினரையும் பாதிக்கும் மற்றும் தினசரி வாழ்க்கையைக் கடினமானதாக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
நோயுற்ற பிள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது அனுமதிக்கப்படாதிருந்தாலும், நோயுற்ற பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு சமூக சேவையாளர்கள் உதவிசெய்வார்கள்.
ஒரு சமூக சேவையாளர் தொழில்ரீதியாகப் பயிற்சி பெற்றவர். உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்பில் உங்கள் சமூக சேவையாளர் ஒரு முக்கிய பாகம் வகிக்கிறார்.
சமூக சேவையாளர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அநேக வழிகளில் உதவி செய்யலாம்
சமூக சேவையாளர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அநேக வழிகளில் உதவி செய்யலாம். உதாரணங்கள் பின்வருமாறு:
- அவர்கள் ஆலோசனை வழங்கலாம். அதாவது, அவர்கள் நீங்கள் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்கலாம்; உங்களுடன் பேசலாம்; காரியங்களை முன்னேற்றச் செய்யும் வழிகளுக்கான ஆலோசனைகளை வழங்கலாம்.
- அவர்கள் பிள்ளைகள், பதின்ம வயதினர், பெற்றோர்கள், தம்பதிகள், அல்லது குடும்பத்தினருக்குக் ஆலோசனை வழங்கலாம்.
- ஆதரவளிக்கும் குழுக்கள், அல்லது இதே மாதிரியான பிரச்சினைகளுள்ள வேறு குடும்பத்தினருடன் உங்களைத் தொடர்புபடுத்தி விடலாம்.
- பண உதவி அல்லது வீட்டு உதவி போன்ற உதவிகளை உங்கள் சமுதாயத்தில் எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்பதைக் காண்பிப்பார்கள்.
- மருத்துவமனையில் மற்றும் சமுதாயத்தில் உங்களுக்காகப் பேசுவார்கள். உங்களுக்காகக் கேள்விகள் கேட்கலாம் மற்றும் உங்கள் விரும்பம் மற்றும் தேவை என்ன என்பதை மருத்துவர்கள் மற்றும் வேறு நபர்கள் தெரிந்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வார்கள்.
ஒரு சமூக சேவையாளரைச் சந்திப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன
வித்தியாசமான குடும்பங்களுக்கு வித்தியாசமான தேவைகள் இருக்கின்றன. நீங்கள் ஒரு சமூக சேவையாளரிடம் பேச விரும்புவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் கவலைப்படும் மற்றும் பேச விரும்பும் காரியங்களுள் சில பின்வருமாறு:
- உங்கள் பிள்ளையும் குடும்பத்தினரும் நோய் மற்றும் சிகிச்சையை எப்படிச் சமாளிப்பது
- நோய் மற்றும் சிகிச்சையின் காரணமாக உங்கள் பிள்ளைக்கு பாடசாலையில் அல்லது வேறு பிள்ளைகளுடன் பிரச்சினை இருந்தால்
- மன உளைச்சலை எப்படிச் சமாளிப்பது
- குற்றம், துக்கம், அல்லது இழப்பு உணர்வுகள்
- உங்களது மற்றப் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள்
- ஒரு நல்ல பெற்றோராக இருப்பது பற்றிய அக்கறைகள்
- உங்களுக்குச் சமாளிப்பதற்குக் கஷ்டமாக இருக்கும் குடும்பச் சச்சரவுகள்
- உங்கள் பிள்ளை நோயாளியாக அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் பணப் பிரச்சினைகள்
- நீங்கள் அல்லது உங்கள் பிள்ளை உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக, அல்லது பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் அபாயம் பற்றிய கவலைகள்
- உடல் நலப் பராமரிப்புக் குழுவின் மற்ற அங்கத்தினருடன் பேசமுடியாது என நீங்கள் உணர்ந்தால்
- உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டுச் சென்ற பின்னர் உங்கள் குடும்பத்துக்கு ஆதரவு
- உங்கள் பிள்ளை வெளிநோயாளியாக இருக்கும்போது, உங்கள் பிள்ளை மற்றும் குடும்பத்தினருக்கு ஆதரவு
தேவையில் இருக்கும்போது உதவி கேட்பதில் எந்த அவமானமுமில்லை என்பதை நினைவில் வைக்கவும்.
பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளில் ஒருமித்துப் பணியாற்றுதல்
சமூக சேவையாளர் உங்கள் நிலைமை மற்றும் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி உங்களுடன் பேசுவார். நீங்கள் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொள்வீர்கள். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, சமூக சேவையாளர் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவார். உங்கள் பிள்ளை வீடு திரும்பிய பின்னர் சமூக சேவையாளர் தொடர்ந்து ஆலோசனைகளும் ஆதரவும் வழங்குவார்.
ஆலோசனை வழங்குதல் வாழ்க்கையின் கஷ்டங்களைத் தீர்ப்பதற்கான மந்திர மருந்தல்ல. ஆனால் சமூக சேவையாளர்கள், அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவி செய்வார்கள்.
ஒரு சமூக சேவகரை எப்படித் தொடர்பு கொள்வது
உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழுவின் ஒரு அங்கத்தினர், நீங்கள் ஒரு சமூக சேவையாளருடன் பேசுவதற்கு ஆலோசனை வழங்குவார். அல்லது அவரது சேவையை நீங்களாகவே கேட்கலாம். உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதியுடன் பேசவும்.
முக்கிய குறிப்புகள்
- தங்கள் பிள்ளைக்கு கடுமையான ஒரு நோய் ஏற்படும்போது அநேக குடும்பங்கள் திண்டாட்டம் அடைகிறார்கள்.
- நோயினால் அல்லது மருந்துவமனையில் நீண்ட நாட்களாகத் தங்கியிருப்பதனால் ஏற்பட்ட உணர்ச்சி ரீதியாக, பண ரீதியாக, மற்றும் நடைமுறையான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு சமூக சேவையாளர்கள் குடும்பங்களுக்கு உதவி செய்வார்கள்.
- மருத்துவமனையில் இருக்கும்போதும் மற்றும் வீட்டில் இருக்கும்போதும் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு நீங்களும் ஒரு சமூக சேவையாளரும் சேர்ந்து பணியாற்றலாம்.