CT ஸ்கான் (CT கதிரிக்கத் துழாவற்) படம் என்றால் என்ன?
ஒரு CT ஸ்கான் படம், உங்கள் பிள்ளையின் உடலைப் படம்பிடிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு கம்யூட்டர், உடல் பகுதிகள் மற்றும் உள்ளுறுப்புகளை "சிறு துண்டுகளாகப்" படம்பிடிக்க எக்ஸ் – ரே ஊடுகதிர்களை உபயோகிக்கிறது.
CT ஸ்கான் படம் எடுப்பதற்கு எப்படி தாயாரகலாம்
CT ஸ்கான் படம் எடுப்பதற்கு தயாராவதற்கு நீங்கள், பெரும்பாலும் விசேஷமாக எதையும் செய்யவேண்டியதில்லை. ஆயினும், சில பிள்ளைகளுக்கு , CT ஸ்கான் படம் எடுப்பதற்காக, அமைதியாகப் படுத்திருப்பதற்கு மருந்து தேவைப்படலாம். உங்கள் பிள்ளைக்கு நித்திரைக்கான மருந்து கொடுக்கப்பட்டிருந்தால், CT ஸ்கான் படம் எடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு உணவு உண்பதையும் பானம் குடிப்பதையும் அவன் நிறுத்த வேண்டியிருக்கும்.
CT ஸ்கான் படம் எடுப்பதற்காக உங்கள் பிள்ளை எதை உடுத்த வேண்டும்
தலையில் CT ஸ்கான் படம் எடுக்க வேண்டிய பிள்ளைகள் தங்கள் சொந்த உடையை உடுத்தலாம். பரிசோதனைக்குமுன் எல்லா உலோக அணிகலன்களையும் அகற்றிவிட வேண்டும். உங்கள் பிள்ளை காதணிகள், ஹேர் கிளிப்புகள், ஹேர் பான்டுகள், அல்லது நெக்லேஸ்கள் போன்றவற்றை அணிய முடியாது.
மார்பு, முதுகு, அல்லது வயிறை CT ஸ்கான் படம் எடுப்பதாக இருந்தால், உங்கள் பிள்ளைக்கு உலோக கொக்கிகள் அல்லது ஸிப் இல்லாத உடைகளை உடுத்தவும்.
உங்கள் பிள்ளை உடல்நலமில்லாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்
உங்கள் பிள்ளைக்கு அதிக காய்ச்சல், மூக்கொழுகுதல், இருமல் , அல்லது தடிமல் இருந்தால், தயவு செய்து CT ஸ்கான் படப்பிரிவை, ஒரு வேலை நாளுக்கு முன் (அல்லது அதற்கு முன்பாக) அழைக்கவும்.
உங்கள் பிள்ளை வேறு மருந்துகள் எடுத்துக் கொள்பவனாக(ளாக) இருந்தால் என்ன செய்ய வேண்டும்
உங்கள் பிள்ளை வேறு மருந்துகள் எடுத்துக் கொள்பவனாக(ளாக) இருந்தால், நீங்கள் பரிசோதனைக்காக உள்ளே வருவதற்குமுன், தயவு செய்து தாதியிடம் சொல்லவும். பரிசோதனை நடத்தப்படவேண்டிய நாளில், உங்கள் பிள்ளைக்கு மருந்து கொடுப்பதற்கு முன்பாக, தயவு செய்து, CT ஸ்கான் படமெடுக்கும் தாதியை அழைத்துப் பேசுங்கள்.
கதிரியக்கத் துழாவற் படம் எடுப்பதற்கு முன் நாம் தெரித்திருக்க வேண்டிய வேறு விஷயங்கள்
- உங்கள் பிள்ளைக்கு எதாவது விசேஷ தேவைகள் இருக்கின்றனவா என்பதைத் தயவு செய்து எங்களுக்குச் சொல்லவும்.
- உங்கள் பிள்ளைக்கு நீரிழிவு நோய், இருதய நிலமை, சுவாசிப்பதில் பிரச்சினைகள், அல்லது வேறு ஏதாவது தீராத மருத்துவப் பிரச்சினைகள் இருந்தால் எங்களுக்குச் சொல்லவும்.
- உங்கள் பிள்ளை 5 வயதுக்கு மேற்பட்டவன்(ள்), ஆனால் அவன் அல்லது அவளால் 20 நிமிடங்களுக்காவது அமைதியாக இருக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து எங்களுக்குச் சொல்லவும்.
CT ஸ்கான் படம் எடுக்கும்போது அமைதியாகப் படுத்திருக்க உங்கள் பிள்ளைக்கு உதவி செய்தல்
தெளிவான படம் கிடைப்பதற்கு, CT ஸ்கான் படம் எடுக்கும் சமயத்தில் உங்கள் பிள்ளை அசையக் கூடாது. CT ஸ்கான் படம் எடுக்கும்போது அசைவது தெளிவற்ற படங்களை உருவாக்கும், அது உங்கள் பிள்ளைக்குத் தேவையான தகவல்களை மருத்துவருக்குக் கொடுக்காது. பெரும்பாலான சிறுவர்கள் அமைதியாக இருப்பதற்குக் கஷ்டப்படுவார்கள்; ஆகவே, அவர்கள் உறங்கும்போதுதான் படமெடுக்க முயற்சிப்போம்.
2 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகள்
உங்கள் குழந்தையை விழிப்புடன் வைத்திருங்கள். பரிசோதனை நேரத்துக்கு முன்பு, 3 மணி நேரம் வரை உணவு கொடுக்க வேண்டாம். ஒரு போத்தல் (தாய்ப்பாலூட்டுபவராக இல்லாவிட்டால்), உங்கள் பிள்ளைக்கு விருப்பமான போர்வை, அல்லது ஒரு ரப்பர் சூப்பி (உங்கள் பிள்ளை உபயோகிப்பவனாக இருந்தால்) என்பனவற்றை எடுத்து வாருங்கள்.
உங்கள் குழந்தை களைப்படைந்து மற்றும் பரிசோதனைக்கு சற்றுமுன் உனவூட்டப்பட்டிருந்தால், பெரும்பாலும் அவன் பரிசோதனைக்கு முன்பாக உறங்கிவிடுவான்(ள்).
4 மாதங்கள் முதல் 5 வயதுள்ள பிள்ளைகள்
உங்கள் பிள்ளை 5 வயதுக்குட்பட்டவனா(ளா)க இருந்தால், நீண்ட நேரம் அமைதியாக இருப்பது அவனு(ளு)க்கு கடினமாக இருக்கும். CT ஸ்கான் படம் எடுப்பதற்காக உங்கள் பிள்ளைக்கு நித்திரைக்கான மருந்து கொடுப்போம். இதை நாங்கள் அமதிப்படுத்தும் அல்லது மயக்க மருந்து என்றும் அழைப்போம்.
5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுப் பிள்ளைகள்
உங்கள் பிள்ளை 5 வயதுக்கு மேற்பட்டவன்(ள்), ஆனால் அவன் பரிசோதனையின்போது 20 நிமிடங்களுக்காவது அமதியாக இருக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து, பரிசோதனைக்கு முன்பு எங்களுக்குச் சொல்லவும்.
CT ஸ்கான் படம் எடுப்பதற்காக உங்கள் பிள்ளைக்கு நித்திரைக்கான மருந்து கொடுக்கப்பட்டிருந்தால்
நித்திரைக்கான மருந்து பாதுகாப்பானதாக இருப்பதற்கு உங்கள் பிள்ளையின் வயிறு வெறுமையானதக இருக்கவேண்டும். நித்திரை மருந்துக்கு முன் என்ன உணவையும் பாணத்தையும் உட்கொள்ளலாம் என்பதை விழக்க ஒரு தாதி அழைப்பார். ஒரு பிள்ளை எப்போது உண்பதையும் பானம் பருகுவதையும் நிறுத்த வேண்டும் என்பதை கீழே உள்ள அட்டவணையும் காட்டுகிறது.
நித்திரை மருந்துக்கு முன் (அமைதிப்படுத்தும் அல்லது பொது மயக்க மருந்து) பிள்ளை எதை உண்ணலாம் அல்லது அருந்தலாம்.
செயல்பாட்டுக்கு முன்பான நேரம் | நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை |
---|---|
செயல்பாட்டுக்கு முந்திய நள்ளிரவு | திடமான உணவு எதுவும் கொடுக்கக்கூடாது. இது சூவிங்கம் அல்லது கன்டியையும் உட்படுத்தும் பால், ஓரேஞ் ஜுஸ், மற்றும் தெளிந்த திரவங்கள் போன்ற பானங்களை உங்கள் பிள்ளை இன்னும் பருகலாம். தெளிந்த திரவங்கள் என்பது, நீங்கள் ஊடாகப் பார்க்கக்கூடிய, அப்பிள் ஜூஸ், ஜிஞ்ஜர் ஏல், அல்லது தண்ணீர் போன்ற திரவங்கள். உங்கள் பிள்ளை ஜெல்-ஒ அல்லது பொப்ஸிகிள்ஸ் என்பனவற்றையும் சாப்பிடலாம் . |
6 மணி நேரம் | பால், ஃபொர்மூலா, அல்லது பால், ஓரேஞ் ஜூஸ், மற்றும் கோலா போன்ற, நீங்கள் ஊடாகப் பார்க்க முடியாத பானங்களைக் கொடுக்கவேண்டாம். |
4 மணி நேரம் | உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்துங்கள் |
2 மணி நேரம் | தெளிவான பானங்கள் இனியும் கொடுக்கவேண்டாம். இது அப்பிள் ஜூஸ், நீர், ஜிஞ்ஜர்ஏல், ஜெல்லோ அல்லது பொப்ஸிக்கிள்ஸ் போன்றவை இனிமேலும் கொடுக்க வேண்டாமென அர்த்தப்படுத்தும். |
உணவு உண்பதையும் பானங்கள் பருகுவதையும் பற்றி உங்களுக்கு மேலுமான அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றை இங்கே எழுதவும்: |
உங்கள் பிள்ளை இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியிருந்தால், உங்கள் பிள்ளைக்கு CT ஸ்கான் படம் எடுப்பது இரத்து செய்யப்படும்.
உங்கள் பிள்ளைக்கு ஊடுருவற் கதிர் சாயம் கொடுக்கப்பட்டிருந்தால்
உடலில் சில குறிப்பிட்ட பாகங்களில் மேலுமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் பிள்ளைக்கு கொன்ற்றாஸ்ட் என்றழைக்கப்படும் ஒரு விசேஷ வகை மருந்தை நாங்கள் கொடுப்போம். இது எக்ஸ்ரே டை என்றும் அழைக்கப்படும். இது, உடலின் சில பாகங்களை மிகவும் தெளிவாகக் காண்பிப்பதற்காக எல்லைக் கோடிட்டுக் காட்டும். இந்த டையானது ஊசி மூலம் நரம்புக்குள் அனுப்பப்படுகிறது. சில உடற் பாகங்களுக்கு, இந்த டையை பிள்ளையின் பானத்தில் கலந்துகொடுக்கலாம்.
பரிசோதனைக்கு முன்பு அல்லது பரிசோதனையின்போது உங்கள் பிள்ளைக்கு இந்த டையை நாங்கள் கொடுப்போம். உடலின் எந்தப் பாகத்தை படங்கள் எடுக்கின்றோம் என்பதில் இது தங்கியுள்ளது.
சில வேளைகளில் எக்ஸ் -ரே டை உஷ்ணமடைவதைப் போன்ற ஒரு உணர்வைக் கொடுக்கும். இதற்கு ஒரு விநோதமான சுவை மற்றும் வாசனையும் கூட இருக்கலாம். பெரும்பாலான பிள்ளைகள் இது வாழைப்பழம் போன்ற சுவையுடையது என்று சொல்வார்கள். இந்தச் சுவை உடனே மறைந்துவிடும்.
ஒரு சில பிள்ளைகளுக்கு டையின் மூலமாக எதிர்விளைவு ஏற்படலாம். உங்கள் பிள்ளைக்கு ஏதாவது ஒவ்வாமை அல்லது கடந்த காலங்களில் எக்ஸ் -ரே டையினால் வேறு எதிர்விளைவு ஏற்பட்டிருந்தால் மருத்துவமனைப் பணியாளரிடம் அது பற்றிக் கலந்து பேசவும்.
உங்கள் பிள்ளையின் உடலில் ஊசிபோடப்பட்டால்
CT ஸ்கான் படம் எடுக்கும்போது, உங்கள் பிள்ளையின் உடலின் எந்தப் பகுதியையுமே அது தொடாதிருக்கும் என்பதால் அது வலிக்காது. ஆனாலும், எக்ஸ் -ரே டையிற்காக உங்கள் பிள்ளைக்கு ஒரு ஊசி அல்லதுஒரு குழாய் (IV என்றும் அழைக்கப்படும்) தேவைப்படலாம். உங்கள் பிள்ளைக்கு, பரிசோதனைக்காக நித்திரைக்கான மருந்து கொடுக்கப்படுமானால், அதுவும் ஒரு ஊசி அல்லது ஒரு IV ஊடாகக் கொடுக்கப்படலாம். ஊசி நரம்பினுட்புகும்போது அதன் முனை சிறிது வலியை உண்டாக்கலாம்.
எம்லா மற்றும் அமெற்ரோப் என்பன தோலை மரத்துப் போகச் செய்யும் "மஜிக் கிறீம்"இன் பெயர்களாகும். உங்கள் பிள்ளைக்கு IV தேவைப்பட்டால் இந்தக் கிறீம்களினால் உங்கள் பிள்ளை எந்த வலியையும் உணரமாட்டான்(ள்). இந்தக் கிறீம்களை நீங்கள் உங்கள் பிள்ளைக்கு உபயோகிக்க விரும்பினால் உங்கள் சந்திப்புத்திட்ட நேரத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக ( காலை 7:30 மணிக்கு முன்பாக அல்ல) வரவேண்டும். உங்கள் சந்திப்புத்திட்டத்துக்கு நீங்கள் வந்திருக்கும்போது, வரவேற்பாளரிடம் உங்கள் பிள்ளைக்கு எம்லா கிறீம் போடுவதற்காக, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே வந்திருப்பதாகத் தயவு செய்து சொல்லுங்கள்.
CT ஸ்கான் படம் பற்றிய தகவல்
பரிசோதனையின்போது CT ஸ்கான் படம் எடுக்கப்படும் அறைக்குள் பெற்றோரில் ஒருவரே அனுமதிக்கப்படுவார். உங்களுக்கு ஈயத்தாலான ஒரு மேலங்கி கொடுக்கப்படும். உங்கள் பிள்ளையின் கையை உங்களால் பிடித்துக் கொள்ள முடியும்.
நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால் அல்லது கர்ப்பிணியாக இருக்கக்கூடும் என நினைத்தால், CT ஸ்கான் படம் எடுக்கப்படும் அறைக்குள் போவதற்கு முன்பே மருத்துவமனை பணியாட்களிடம் தெரிவிக்கவும்.
உங்கள் பிள்ளை ஒரு குறுகிய படுக்கையில் படுக்க வைக்கப்படுவான். CT ஸ்கான் படம் எடுப்பதற்காக உங்கள் பிள்ளை மேசையில் சரியான நிலையில் படுத்திருக்கின்றானா என்பதை தொழில் நுட்ப வல்லுனர் உறுதி செய்து கொள்ளுவார். உங்கள் பிள்ளை பாதுகாப்புப் பட்டையினால் கட்டப்படுவான். தலையில் CT ஸ்கான் படம் எடுப்பதாகவிருந்தால், உங்கள் பிள்ளையின் தலை அசையாமலிருப்பதற்காக, தொழில் நுட்ப வல்லுனர் உங்கள் பிள்ளையின் காதுகளருகே சிறிய தலையணைகளையும், அவனு(ளு)டைய நெற்றியில் தலைப்பட்டையையும் வைப்பார்.
ஒரு பெரிய சுரங்கம் போலிருக்கும் CT ஸ்கான் படம் எடுக்கும் கருவியினுள் படுக்கை மேலேயும் உள்ளேயும் அசையும். புகைப்படப் பெட்டி இயந்திரத்தினுள் சுற்றி அசைந்து அநேக படங்களை எடுக்கும். படங்களை எடுக்கும்போது புகைப்படப்பெட்டி சில சத்தங்களை எழுப்பும். ஆனால், உங்கள் பிள்ளையைத் தொடாது.
புகைப்படப்பெட்டி படங்களை எடுக்கும்போது உங்கள் பிள்ளை மிகவும் அமைதியாக இருக்கவேண்டும். உங்கள் பிள்ளை நித்திரை (அல்லது நித்திரை செய்வதைப்போல பாவனை) செய்யலாம். அல்லது நேரம் வேகமாகக் கடந்து போவதற்காக நீங்கள் ஒரு கதையை வாசிக்கலாம்.
CT ஸ்கான் படம் எடுக்கும்போது, தொழில் நுட்ப வல்லுனர் உங்கள் பிள்ளை பேசுவதைக் கேட்கலாம், பார்க்கலாம், மற்றும் அவனு(ளு)டனும் அவர் பேசலாம்.
நாங்கள் CT ஸ்கான் படம் எடுக்கும் உடற்பகுதியை பொறுத்து, CT ஸ்கான் படம் எடுக்கத் தொடங்கியதிலிருந்து முடிவுவரை 10 முதல் 30 நிமிடங்கள் வரை எடுக்கலாம். CT ஸ்கான் படம் எடுத்து முடிந்தவுடன் தொழில் நுட்ப வல்லுனர் அல்லது தாதி உங்கள் பிள்ளை படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வர உதவி செய்வார்.
உங்கள் பிள்ளைக்கு நித்திரைக்கான மருந்து கொடுக்கப்படிருந்தால், CT ஸ்கான் படம் எடுத்த பின் பெரும்பாலும் 1 மணி நேரம் வரை வேக்-அப் அறையில் நித்திரை செய்யலாம். நாங்கள் நித்திரைக்கான மருந்தின் வகை மற்றும் அளவை எழுதித் தருவோம். வீட்டில் உங்கள் பிள்ளையை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லுவோம்.
CT ஸ்கான் படம் எடுப்பதற்கு தயாராவதற்கு உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவி செய்வது
CT ஸ்கான் படம் எடுக்கும் இலாகா, உங்கள் பிள்ளையின் பயத்தைக் குறைப்பதற்காக, ஒரு சிநேகப் பான்மையான மற்றும் பல நிறங்கள் கொண்ட சூழலைக் கொண்டிருக்கிறார்கள். காத்திருக்கும் அறையில் வீடியோ விளையாட்டுகள், புத்தகங்கள், மற்றும் சினிமாக்கள் உள்ளன.
CT ஸ்கான் படம் எடுக்கும் இயந்திரத்தின் பருமன் சில பிள்ளைகளைப் பயமுறுத்தக்கூடும். எதை எதிபார்க்க வேண்டும் என்பதை உங்கள் பிள்ளைக்கு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் எடுத்துச் சொல்லுங்கள். என்ன நடைபெறும் என்பதையும் விளக்கிச் சொல்லுங்கள்.
இந்தச் சிறு புத்தகத்தின் அட்டையிலுள்ள CT ஸ்கான் படம் எடுக்கும் இயந்திரத்தின் படத்தை உங்கள் பிள்ளைக்குக் காட்டுங்கள். உடலின் உட்பாகங்களைப் படம் பிடிக்கும் ஒரு பெரிய புகைப்படப் பெட்டி இது என நீங்கள் விளக்கமளிக்கலாம். இது ஒரு பெரிய சுரங்கம் (அல்லது டோனட் போல) போல தோற்றமளிக்கிறது.
சாதாரண புகைப்படக் பெட்டியில் புகைப்படம் எடுப்பதற்காக நீங்கள் அசையாமல் நிற்பதைப் போலவே, இந்தப் புகைப்படப்பெட்டிக்கு முன்பும் அசையாமல் நிற்கவேண்டுமென அவனுக்கு அல்லது அவளுக்கு விளக்கிச் சொல்லுங்கள். வித்தியாசம் என்னவென்றால், இந்தப் புகைப்படப்பெட்டியில் புகைப்படம் எடுக்க மிகவும் அதிகமான நேரம் எடுக்கும் என்பதேயாகும்.
உங்கள் பிள்ளைக்காக நீங்கள் வாசிக்கும்போது அவன் மிகவும் அமைதியாகப் படுத்திருக்கலாம். ஒரு சிலையைப் போல ஆடாமல் அசையாமலிருப்பது என்ற ஒரு விளையாட்டை ஆரம்பித்து, அசையாமக்லிருக்க பிள்ளையைப் பயிற்றுவியுங்கள். இயந்திரம் படங்கள் எடுக்கும்போது நீங்கள் உங்கள் பிள்ளைக்காக வாசித்துக் காண்பிப்பீர்கள் என்பதை அவனிடம் சொல்லுங்கள்.
இயந்திரத்தின் எந்தப் பகுதியும் உங்கள் பிள்ளையைத் தொடாததினால், அது அவனுக்கு வலியை ஏற்படுத்தாது. இயந்திரம் வேலை செய்யத்தொடங்கியதும் உங்கள் பிள்ளை ஒரு விநோதமான சத்தத்தைக் கேட்பான்(ள்). பெரும்பாலான பிள்ளைகள், அது துணி துவைக்கும் இயந்திரத்தின் சத்தம் போலிருக்கிறது என்று சொல்வார்கள்.
ஸ்கான் படத்தின் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல்
கதிர்வீச்சியல் மருத்துவர் (எக்ஸ் –ரே ஊடு கதிர் மருத்துவர் என்றும் அழைக்கப்படுபவர்) முடிவுகளை உங்களிடம் தரமாட்டார். கதிர்வீச்சியல் மருத்துவர் அந்தப் படங்களைப் பார்வையிட்டபின், அந்தப் பரிசோதனையை செய்யும்படி கேட்ட மருத்துவருக்கு ஒரு அறிக்கையை எழுதுவார். பெரும்பாலும் முடிவுகள் 2 முதல் 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
முடிவுகள் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், தயவு செய்து பரிசோதனை செய்யும்படி சொன்ன மருத்துவரை அழைக்கவும். அழைப்பதற்கு முன் 5 வேலை நாட்கள் காத்திருக்கவும்.
முக்கிய குறிப்புகள்
- ஒரு CT ஸ்கான் படம், உடற்பகுதிகள் மற்றும் உள் உறுப்புகளை "சிறு-துண்டுகளை"ப் போல படம் எடுப்பதற்கு எக்ஸ் – ரே ஊடு கதிர் மற்றும் கம்ப்யூட்டரை உபயோகிக்கிறது.
- CT ஸ்கான் படம் எடுப்பதற்காக உங்கள் பிள்ளைக்கு நித்திரைக்கான மருந்து கொடுக்கப்பட்டால், பரிசோதனைக்குமுன், உங்கள் பிள்ளை என்ன உணவு உண்ணலாம் அல்லது என்ன பானம் பருகலாம் என்பது பற்றிய விதிகளை, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
- CT ஸ்கான் படம் எடுக்கும் இயந்திரம் வலியேற்படுத்தாது. அதன் எந்தப் பகுதியும் உங்கள் பிள்ளையைத் தொடாது. இயந்திரம் இயங்கத் தொடங்கியதும் உங்கள் பிள்ளை ஒரு விநேதமான சத்தத்தைக் கேட்பான்(ள்).