மூச்சுநுண்குழாய் அழற்சி (புரொன்கியோலைடிஸ்) என்பது என்ன?
மூச்சுநுண்குழாய் அழற்சி என்பது சுவாசப்பைகளில் தொற்றுகின்ற ஒரு பொதுவான நோயாகும். இது ஒரு வைரஸால் ஏற்படுத்தப்படுகின்றது. இந்த நோய் சுவாசப்பைகளிலுள்ள நுண் மூச்சுக்குழாய்களை வீக்கமடையச் செய்கின்றது. இந்தச் சிறு மூச்சுக்குழாய்கள் மூச்சுநுண்குழாய்கள் என அழைக்கப்படுகின்றன.
வீக்கம் மூச்சுக்குழாய்களை ஒடுங்கச் செய்வதால் உங்கள் பிள்ளை சுவசிப்பதை கடினமாக்குகின்றது.
அநேகமான மூச்சுநுண்குழாய் அழற்சிகள் சுவாசத்திற்குரிய சின்சிஷியல் வைரஸ்களால் (RSV) ஏற்படுகின்றது. அநேக பிள்ளைகள் 2 வயதாகும்போது RSV ஐப் பெற்றுவிடுகிறார்கள். மாரி காலத்திலும் வசந்த காலத்தின் ஆரம்பத்திலுமே இந்த நோய் பொதுவாகத் தொற்றுகின்றது.
மூச்சுநுண்குழாய் அழற்சியின் அறிகுறிகள்
முதலில் உங்கள் பிள்ளை காய்ச்சைல், மூக்கொழுகுதல் அல்லது இருமலைக் கொண்டிருக்கலாம். உங்கள் பிள்ளை அதிகம் இருமக்கூடும். இது சகஜமானதே. வேறு அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
- விரைவாக, மேலோட்டமாக சுவாசித்தல்
- உயர்-சுருதியில் சுவாசிக்கும் சத்தம்( வீசிங் அதாவது மூச்சிரைப்பு)
- நெஞ்சில் விலா எலும்பிற்குக் கீழ், கழுத்துப்பட்டி எலும்பிற்கு மேல், விலா எலும்புகளுக்கு இடையே அல்லது கழுத்தில் உள்ளிழுக்கப்பட்டு காணப்படுதல். இவை பின்வாங்கல்கள் (ரீட்ராக்க்ஷன்) என அழைக்கப்படுகின்றன.
- மூக்குத் துவாரம் விரிவடைதல்
- அதிகமாக சினம்கொள்ளுதல், கோபமடைதல் அல்லது களைப்பு
- குறைவாக சாப்பிடுதல் அல்லது அருந்துதல்
- நித்திரைகொள்ள சிரமப்படுதல்
முதலில் உங்கள் பிள்ளையின் இருமல் வறட்சியானதாக, குறுகியதாக, மேலோட்டமாக மற்றும் பலவீனமாக இருக்கலாம். சில நாட்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளை இருமும்போது நிறைய சளியை (சிலேத்துமம்) வெளிக்கொனரலாம். இது உங்கள் பிள்ளையின் நிலை முன்னேற்றம் அடைகிறது மற்றும் சளியையும் நோய்த்தொற்றையும் வெளியேற்ற முயற்சிக்கிறது என்பதை அர்த்தப்படுத்தும்.
மூச்சுநுண்குழாய் அழற்சியுள்ள அநேக பிள்ளைகள் இருமல் அல்லது மூச்சிரைப்பு கொண்ட கடுமையற்ற சுகவீனத்தையே கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு விசேஷ மருத்துவ சிகிச்சை எதுவும் தேவைப்படாது. வைரஸால் ஏற்படுத்தப்படும் மூச்சுநுண்குழாய் அழற்சி வழக்கமாக 7 தொடங்கி 10 நாட்களுக்கே நீடித்திருக்கும். ஆனால் சில நேரங்களில் வைரஸ் இல்லாது போனபின்கூட இருமல் அல்லது கடுமையற்ற மூச்சிரைப்பு பிள்ளைகளில் பல வாரங்களுக்கு நீடித்திருக்கலாம்.
மூச்சுநுண்குழாய் அழற்சிக்கு வீட்டில் சிகிச்சையளித்தல்
வீட்டில், உதவக்கூடிய சில குறிப்புகள் பின்வருமாறு:
- உங்கள் பிள்ளையை சரிவாக இருக்கும் நிலையில் அல்லது நிமிர்ந்திருக்கும் நிலையில் வைத்திருங்கள். இது சுவாசிப்பதை சுலபமாக்கும்.
- உங்கள் பிள்ளையை நீராகாரமருந்த, விசேஷமாக நீர் அல்லது நீர்கலந்த அப்பிள்ச் சாறு போன்ற தெளிவான திரவங்களை உட்கொள்ள உற்சாகப்படுத்துங்கள். உங்கள் பிள்ளை நீராகாரமருந்த மறுத்தால், வழக்கத்தைவிட அடிக்கடி திரவங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள்.
- குழந்தைகள் வழக்கம்போல் தாய்ப்பாலை அல்லது புட்டிப்பாலை குடிக்க வேண்டும்.
- உங்கள் குழந்தையின் மூக்கு மிகவும் அடைத்திருந்தால், மூக்கு சேலைன் உப்பு நீர்த் துளிகள் அடைப்பை எடுக்க உதவக்கூடும். இது குழந்தை மிக இலகுவாகப் உணவு உட்கொள்ள உதவும்.
- உங்கள் குழந்தை சரியாக உணவு உட்கொள்ளவில்லையென்றால், அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக உணவூட்ட முயற்சிக்கவும். இது உங்கள் குழந்தை போதுமான அளவு உணவையும் திரவங்களையும் பெற்றுக்கொள்ள உதவும்.
- உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் பிள்ளையின் சுற்றுப்பகுதியிலோ புகைக்க வேண்டாம். மற்றவர்களும் அங்கே புகைக்க அனுமதிக்காதீர்கள்.
- உங்கள் பிள்ளை செல்லப் பிராணிகள் அல்லது காற்றில் இருக்கக்கூடிய ஏனைய பொருட்களுக்கு ஒவ்வாமையுள்ளதாக இருந்தால் அவற்றை வெளியே அகற்றவும். இவை சுவாசப்பையைத் உறுத்தி மூச்சுநுண்குழாய் அழற்சியை மோசமாக்கலாம்.
மூச்சுநுண்குழாய் அழற்சி சில பிள்ளைகளில் மிகக் கடுமையாக இருக்கலாம்
பின் வரும் உதாரணங்களைப் போல, சில குழந்தைகளிலும் பிள்ளைகளிலும் மூச்சுநுண்குழாய் அழற்சி மிகக் கடுமையாக இருக்கலாம்:
- 3 மாதங்களுக்கு குறைந்த வயதுள்ள குழந்தைகள்
- வீடுகளில் புகைப்பவர்களுடன் வாழும் பிள்ளைகள்
- ஆஸ்துமா அல்லது வேறு நீடிக்கும் சுவாசப்பைப் பிரச்சனையுள்ள பிள்ளைகள்
- குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள்
- பிறக்கும்போதே சில வகையான இருதய நோயுள்ள பிள்ளைகள்
- நோயெதிர்ப்புத் தொகுதியில் பிரச்சினைகள் உள்ள பிள்ளைகள்
கடுமையான சந்தர்ப்பங்களில், மூச்சுநுண்குழாய் அழற்சியுள்ள ஒரு பிள்ளை மருத்துவ மனைக்குச் செல்வது அவசியப்படலாம்.
சுவாசிக்க சிரமப்படும் பிள்ளைகள் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும்
கீழ்க்காணும் அறிகுறிகளை நீங்கள் அவதானித்தால் பிள்ளையை அருகிலுள்ள அவசர மருத்துவப் பிரிவுக்கு எடுத்துச்செல்லவும்:
- உங்கள் பிள்ளை அதி விரைவாக சுவாசிக்கின்றது
- உங்கள் பிள்ளை சுவாசிக்கச் சிரமப்படுகின்றது. நெஞ்சில் அல்லது கழுத்தில் உள் இழுப்பு, மற்றும் மூக்குத்துவாரத்தில் விரிவு இருக்கின்றதா எனப் பார்க்கவும். பிள்ளைக்கு மூச்சிரைப்பு இருக்குமானால் இந்த அறிகுறிகள் மோசமானவைகளாகும்.
- உங்கள் பிள்ளையின் சருமம் நீலமாக அல்லது வழமைக்கு மாறாக வெளிறியதாக கானப்படுகின்றது.
- உங்கள் பிள்ளை உடலில் நீர்த்தன்மை இழந்து காணப்படுகின்றது. உங்கள் பிள்ளையின் உடல் ஒழுங்காக இயங்க போதிய அளவு நீர்மம் இல்லையென்பதை இது அர்த்தப்படுத்துகின்றது. உங்கள் பிள்ளை போதிய அளவு நீராகாரத்தை உட்கொள்ளாதபோது இது ஏற்படலாம். உங்கள் பிள்ளை வழக்கத்தைவிட குறைவாக சிறுநீர் கழித்தால் அல்லது கண்கள் உலர்ந்து அல்லது தாழ்ந்து போய் தோற்றமளித்தால் இது உடலில் நீர்வறட்சி ஏற்பட்டுள்ளதைக் குறிக்கலாம்.
- உங்கள் பிள்ளை வழக்கத்தைவிட அதிகமாக தூக்கக்கலக்கம் கொண்டதாக விளையாட மனமில்லாது இருக்கின்றது.
- உங்கள் பிள்ளை ஆறுதல் அளிக்க முடியாத வண்ணம் கோபமாக அல்லது சிணுங்கியவண்ணம் இருக்கின்றது.
- உங்கள் இளம் குழந்தை உணவோ நீரோ அருந்த இயலாதவண்ணம் இருக்கின்றது.
மூச்சுநுண்குழாய் அழற்சிக்கு மருத்துவ மனையில் சிகிச்சையளித்தல்
நிதானமாக இருக்க முயலுங்கள். வைத்தியசாலை புதிய இடமென்பதால் உங்கள் பிள்ளை சிறிது பயப்படக்கூடும். அன்பான கவனிப்பின் மூலம் உங்கள் பிள்ளை ஆறுதலையும் அமைதியையும் அடைய நீங்கள் உதவலாம்.
சிகிச்சையானது முக்கியமாக உங்கள் பிள்ளை சுவாசிக்க உதவுவதற்காகவே:
- மருத்துவர்கள், தாதிகள், மற்றும் எனைய சுகநலப் பராமரிப்பு உத்தியோகஸ்தர்கள் அடிக்கடி உங்கள் பிள்ளையின் இருதயத் துடிப்பை, துடிப்பு மானியின் மூலம் கேட்பார்கள். உங்கள் பிள்ளை போதுமான அளவுக்கு சுவாசிக்கின்றதாவென அவர்கள் கேட்கும் சத்தங்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டும்.
- உங்கள் பிள்ளை மேலதிக பிராணவாயுவை சுவாசிக்க வேண்டிவரலாம். இது உங்கள் பிள்ளையின் இரத்தம் போதிய அளவு பிராணவாயுவைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த உதவும்.
- உங்கள் பிள்ளை சுவாசிக்க உதவும் முகமாக, மருத்துவர் சல்புடமோல் (வென்டொலின்), இப்ரட்ரோபியம் புரோமைட் (அட்ரொவென்ட்) மற்றும் எபினெ∴ப்ரைன் போன்ற மருந்துகளை வழங்க உத்தரவிடலாம். இந்த மருந்துகளை சுவாசிப்பது பிள்ளையின் நுண்மூச்சுக்குழாய்களை சிலவேளை திறக்கச்செய்யலாம். இது சுவாசப்பைகளுக்குள் அதிக காற்று உட்செல்லவும் வெளியேறவும் உதவலாம். இந்த சிகிச்சை உங்கள் பிள்ளை இலகுவாக சுவாசிக்க உதவினால், மருத்துவர் இது போன்ற மருந்தை வீட்டில் உபயோகிக்க மருந்துச்சீட்டை எழுதித்தரலாம்.
- சில சந்தர்ப்பங்களில் டெக்ஸமெதசோன் என்றழைக்கப்படும் மருந்தையும் வழங்க கட்டளையிடலாம்.
மூச்சுநுண்குழாய் அழற்சியை ஏற்படுத்தும் வைரஸ்கள் இருமுதல், தும்முதல் மற்றும் தொடுகையின் மூலம் பரவுகின்றன
இருமும்போது அல்லது தும்மும்போது நோய் உள்ள ஒருவரின் மூக்கு மற்றும் வாயிலிருந்து வரும் சிறு துளிகள் மூலம் மூச்சுநுண்குழாய் அழற்சியை ஏற்படுத்தும் வைரஸ்கள் பரவுகின்றன. நோயுற்ற ஒருவர் விளையாட்டுப் பொருள் போன்ற ஒன்றைத் தொட்டு, பின் வேறொருவர் அதே பொருளைத் தொடுவதாலும் இவை கடத்தப்படக்கூடும். பிள்ளைகள் தங்கள் மூக்குகள், கண்கள் மற்றும் வாய்களைத் தொடும்போது தாங்களே தங்களில் நோயைத் தொற்ற வைக்கக்கூடும். விளையாட்டுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்வதும் நெருக்கமாக சேர்ந்து விளையாடுவதும் நோய் பரவுவதை அதிகரிக்கின்றன.
மூச்சுநுண்குழாய் அழற்சியைத் தடுத்தல்
வைரஸ்களால் ஏற்படும் மூச்சுநுண்குழாய் அழற்சி மிகவும் பரவலானதும் தொற்றக்கூடியதுமாகும், ஆனால் உங்கள் பிள்ளையை இந்த நோய் தொற்றிக்கொள்ளும் ஆபத்தை நீங்கள் குறைக்க பல வழிகள் இருக்கின்றன.
- நன்றாகக் கைகளைக் கழுவுவதே நோய் பரவுவதைக் குறைப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
- விசேஷமாக உங்களுக்கு 3 மாதங்களுக்கும் குறைந்த வயதுள்ள குழந்தை இருக்குமானால், நோயுற்ற நபர்களிடமிருந்து தூர விலகியிருக்க முயற்சி செய்யுங்கள்.
- இளம் பிள்ளைகள் எப்போதும் விளையாட்டுப் பொருட்களை தங்கள் வாயிற்குள் வைப்பார்கள். பிறருடன் பகிர்ந்து விளையாடப்படும் விளையாட்டுப் பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
- தங்கள் சட்டைக் கையில் அல்லது முழங்கைக்குள் தும்ம அல்லது இருமப் பழகிக்கொள்வதன் மூலம் கிருமிகள் பரவுவதைத் தடுக்க பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். டிஷூ கிடைக்கப்பெறுமானால், பிள்ளைகள் அதை உபயோகிக்கலாம், உபயோகித்த டிஷூவை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு பின் தங்கள் கைகளைக் கழுவவேண்டும்.
- உங்கள் பிள்ளை டேகெயாருக்கு அல்லது பள்ளிக்கூடத்திற்கு போகிறதென்றால், உங்கள் பிள்ளை நோயின் என்ன அறிகுறிகளிக் கொண்டிருக்ன்றது என்று பராமரிப்பாளரிடம் சொல்லுங்கள்.
- உங்களால் கூடுமானால், சுலபமாக சுவாசிக்கும்வரை உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்திருங்கள்.
முக்கிய குறிப்புகள்
- மூச்சுநுண்குழாய் அழற்சி சுவாசப்பைகளின் தொற்றும் பொதுவான ஒரு வைரஸ் நோயாகும்.
- மூச்சுநுண்குழாய் அழற்சியுள்ள பிள்ளைகள் சுவாசிக்க சிரமப்படலாம்.
- உங்கள் பிள்ளை சுவாசிக்க சிரமப்பட்டால் அல்லது மிகவும் சுகவீனமாகக் காணப்பட்டால், மிக அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு உங்கள் பிள்ளையை எடுத்துச் செல்லுங்கள்.
- நன்றாக கை கழுவுதல் நோய் பரவுவதைக் குறைக்கும்.