மெத்தொட்ரெக்ஸேட் (Methotrexate)

Methotrexate [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மெத்தொட்ரெக்ஸேட் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும்.

உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மெத்தொட்ரெக்ஸேட் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

மெத்தொட்ரெக்ஸேட் என்பது புற்றுநோய்க்கு சிகிச்சை செய்வதற்காக உபயோகிக்கப்படும் ஒரு மருந்து. ஆனால் இரு புற்றுநோயல்லாத நிலைமைகளுக்கும் உபயோகிக்கப்படலாம். இது உயிரணுக்கள் பிளப்பதை மற்றும் புதிய உயிரணுக்கள் உண்டாவதையும் தடுக்கிறது. மெத்தொட்ரெக்ஸேட் மருந்து , எலும்பு மச்சை அல்லது மூல உயிரணு மாற்று அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்படும் ‘கிராஃப்ட் வெர்சஸ் ஹோஸ்ட் நோய்’ மற்றும் முடக்கு வாதம் மற்றும் தோல் உரிந்து உலர்தல் நோய்(சொராசிஸ்) என்பவனவற்றிற்குச் சிகிச்சை அளிப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.

மெத்தொட்ரெக்ஸேட் மருந்து MTX என்று அழைக்கப்படுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மெத்தொட்ரெக்ஸேட் மருந்து மாத்திரை மற்றும் ஊசிமருந்து வடிவத்திலும் கிடைக்கிறது.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு…

உங்கள் பிள்ளை எப்போதாவது மெத்தொட்ரெக்ஸேட் மருந்துக்கு, அல்லது வேறு ஏதாவது மருந்துகள், உணவுகள், பதப்படுத்தும் வேதிப்பொருள்கள் அல்லது உணவுக்கு நிறமேற்றும் பொருட்களுக்கு மோசமான எதிர்விளைவைக் காண்பித்திருந்தால் உங்கள் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

  • தொற்றுநோய் அல்லது சமீபத்தில் தொற்றுநோயுடன் தொடர்பு (உதாரணமாக கொப்பளிப்பான்)
  • கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள்
  • வயிறு அல்லது குடல் சம்பந்தமான பிரச்சினைகள்
  • வாய்ப்புண்
  • இரத்தத்தின் அளவு(பிளட் கவுண்ட்) குறைவு

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?

மெத்தொட்ரெக்ஸேட் மருந்து ஒரு தெளிவான மஞ்சள் நிறத் திரவம் . இது பெரும்பாலும் நரம்புனூடாக (IV) அல்லது முதுகுத் தண்டுப் பகுதியினுள் (தண்டுவட உறை வழி அல்லது IT ) ஊசிமருந்து முலமாகச் செலுத்தப்படுகிறது. உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் ஊசி மருந்தை மருத்துவமனையில் அல்லது ஒரு மருத்துவத் தாதிப் பிரிவில் பெற்றுக்கொள்வான்(ள்).

மெத்தொட்ரெக்ஸேட் மருந்து வாயினால் விழுங்கப்படக்கூடிய ஒரு மாத்திரை வடிவத்திலும் கிடைக்கும். உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை மாத்திரை வடிவத்தில் உட்கொள்வதாக இருந்தால், பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • உங்கள் பிள்ளைக்கு மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடி சரியாக, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும். உங்கள் மருத்துவர் இந்த மருந்தை மாற்றும்படி உங்களுக்குச் சொன்னாலொழிய இந்த மருந்தை மாற்றவேண்டாம். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, இந்த மருந்தைக் கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.
  • உங்கள் பிள்ளைக்கு மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு ஒரு வேளைமருந்தாக எழுதிக்கொடுக்கப்பட்ட மாத்திரைகள் முழுவதையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளவேண்டும். உதாரணமாக, உங்கள் பிள்ளைக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான மாத்திரைகளை உட்கொள்ளும்படி மருத்துவர் கட்டளையிட்டிருந்தால், உங்கள் பிள்ளை எல்லா மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளவேண்டும்.
  • உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை வெறும் வயிற்றில் உட்கொள்ளவேண்டும் (உணவு உண்பதற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது உணவு உண்டபின்னர் இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னர்).
  • உங்கள் பிள்ளையால் மாத்திரைகளை முழுமையாக விழுங்கமுடியாவிட்டால், அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • உங்கள் பிள்ளை மாத்திரையை விழுங்கியவுடன் வாந்தி எடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர், தாதி, அல்லது மருந்தாளர் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி மறுபரிசீலனை செய்வார்கள்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
  • நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி நிச்சயமில்லாவிட்டால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதியைத் தொடர்பு கொள்ளவும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

  • குமட்டல் ( வயிற்றுக் குழப்பம்) அல்லது வாந்தி
  • முடி உதிர்தல்
  • இலேசான தோற்படை
  • வாய்ப்புண்கள்
  • இலேசான தலைவலி

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பக்க விளைவுகளில் ஏதாவது இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரை அலுவலக நேரத்தில் அழைக்கவும்:

  • வழக்கத்துக்கு மாறான பலவீனம் அல்லது களைப்பு
  • மஞ்சள் நிறத் தோல் அல்லது கண்கள்
  • முதுகின் கீழ்ப்பக்கம் அல்லது பக்கங்களில் வலி
  • பாதங்கள் அல்லது கீழ்க்கால்களில் வீக்கம்
  • மூட்டு வலி
  • உணவு உண்பது அல்லது பானங்கள் குடிப்பதில் குறுக்கிடும் வாய்ப்புண்கள்

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • காய்ச்சல் அல்லது குளிர்நடுக்கம்
  • இருமல் அல்லது தொண்டைப்புண்வலி
  • சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல்
  • கடுமையான தலைவலி
  • உடலின் பெரும்பாகத்தை மூடும் தோற்படை அல்லது வலி அல்லது தோல் உரிதல்
  • சிறுநீர், மலம், அல்லது வாந்தியில் இரத்தம் கலந்திருத்தல்
  • கறுப்பு நிற, தார்போன்ற மலம்
  • வழக்கத்துக்கு மாறான இரத்தப் போக்கு அல்லது நசுக்குக் காயம்
  • மார்பு வலி அல்லது விரைவான சுவாசம்

தண்டு வட உறைவழியினூடாக எடுத்துக்கொள்ளப்படும் மெத்தொட்ரெட்ஸேட் மருந்தினால் ஏற்படும் பின்வரும் பக்கவிளைவுகளும் மிகவும் ஆபத்தானவை மற்றும் உடனடியான மருத்துவக் கவனிப்பைத் தேவைப்படுத்துபவை. பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • கழுத்து விறைப்பு
  • வலிப்புகள் (கென்வள்ஷன்ஸ்)
  • உடலின் பாகத்தை அல்லது ஒரு பக்கத்தை அசைப்பதில் சிரமம்
  • பேச்சில் தெளிவின்மை
  • சுய நினைவின் நிலைகளில் மாற்றம்

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

அதிகளவு மெத்தொட்ரெக்ஸேட் வேளைமருந்தை நரம்பினூடாக உட்செலுத்தும்போது, மெத்தொட்ரெக்ஸேட் மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைப்பதற்காக, மேலதிக நரம்பினூடாகச் செலுத்தும் திரவங்கள் மற்றும் லெயுக்கொவொரின் என்றழைக்கப்படும் ஒரு மருந்தும் கொடுக்கப்படும்.

மெத்தொட்ரெக்ஸேட் வேளைமருந்து அதிகளவில் கொடுக்கப்படும்போது ஏற்படும் வயிற்றுக் குழப்பம் மற்றும் வாந்தியைத் தடுப்பதற்காக உங்கள் பிள்ளைக்கு மருந்து கொடுக்கப்படும். வாய் மூலமாகக் கொடுக்கப்படும் சிறிய வேளைமருந்துகள் பெரும்பாலும் வயிற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தாது.

உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது, அவன்(ள்) அதிகளவு சிறுநீர் கழிப்பதற்காக அவன்(ள்) அதிகளவு திரவங்களை உட்கொள்ளவேண்டும் என மருத்துவர் விரும்புவார். இது சிறுநீர்ப் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

உங்கள் பிள்ளை தனது தலைமுடியை இழக்கக்கூடும். உங்கள் பிள்ளை இனிமேலும் மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை உட்கொள்ளாதிருக்கும்போது முடி திரும்பவும் வளரும். அதனுடைய நிறமும் தன்மையும் மாறலாம். ஒரு வீரியம் குறைந்த ஷம்போ மற்றும் ஒரு மென்மையான தூரிகையை உபயோகிக்கவும்.

மெத்தொட்ரெக்ஸேட் மருந்தைப் பெற்றுக்கொள்ளும்போது உங்கள் பிள்ளையின் தோல் அடர் நிறமாகும்; விசேஷமாக முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் தோல் மடிப்புகளில் அவ்வாறாகும். இது சம்பவித்தால், உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை உட்கொள்வதை நிறுத்தியவுடன், அவை மெதுவாக மறைந்துவிடும்.

உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை உட்கொள்ளும்போது, மற்றும் அதற்குப் பின்பாகப் பல மாதங்களுக்கு, அவன்(ள்) சூரிய வெளிச்சத்துக்கு மிகுந்த கூருணர்வுள்ளவனா(ளா)க இருப்பான்(ள்). வழக்கத்தைவிட இலகுவாக சூரிய எரிவு அதாவது சன்பெர்ன் உண்டாகலாம். இதை தடுப்பதற்கு, உங்கள் பிள்ளை வெளியே போகும்போது, சன்ஸ்கிறீன் மற்றும் பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும்.

மெத்தொட்ரெக்ஸேட் மருந்து வாயிற் புண்களை ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளையின் வாயைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு உதவி செய்வதற்காக, அப்பச்சோடாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வாய் கழுவியினால் வாயை அலசவும். உங்கள் தாதி அல்லது மருந்தாளர் இது பற்றி உங்களுடன் பேசலாம். கடையில் வாங்கும் வாய் கழுவியைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வாயில் அதிக வலியூட்டும் மற்றும் வாயை உலரச் செய்யும்.

மெத்தொட்ரெக்ஸேட் மருந்து இரத்ததிலுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் குறைக்கும். இது உங்கள் பிள்ளைக்குத் தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை அதிகரிக்கலாம்.

உங்கள் பிள்ளை தொற்றுநோயைத் தடுப்பதற்காக, விசேஷமாக இரத்தத்தின் அளவு(பிளட் கவுண்ட்) குறைவாக இருக்கும்போது பின்வரும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம்:

தடிமல் அல்லது ஃபுளூ காய்ச்சல் போன்ற தொற்றுநோயுள்ளவர்களைத் தவிர்க்கவும்.

  • மக்கள் பெருமளவில் கூட்டமாக இருக்கும் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்
  • உங்கள் பிள்ளையின் பற்களைத் துலக்கும்போதும் நூலினால் பல்லிடுக்கைச் சுத்தம் செய்யும்போதும் கவனமாக இருக்கவும். உங்கள் மருத்துவர், தாதி, அல்லது பல் மருத்துவர், உங்கள் பிள்ளையின் வாயையும் பற்களையும் சுத்தம் செய்வதற்கு பல்வேறு வழிகளைச் சிபாரிசு செய்யக்கூடும்.
  • முதலில் உங்கள் கைகளைக் கழுவாது, நீங்கள் அல்லது உங்கள் பிள்ளை அவன(ள)து கண்களை அல்லது மூக்கின் உட்பகுதியைத் தொடக்கூடாது.
  • காய்ச்சல் இருக்கும் நிலைமையின் என்ன செய்யவேண்டும் என்பதை உங்கள் பிள்ளையின் தாதி உங்களுடன் மீளாய்வு செய்வார்.

உங்கள் பிள்ளையின் மருத்துவரின் அங்கீகாரம் இல்லாமல், உங்கள் பிள்ளை எந்த நோய்த் தடுப்பாற்றலையும் (தடுப்பு மருந்துகள்) பெற்றுக்கொள்ளக்கூடாது. உங்கள் பிள்ளைக்கு மெத்தொட்ரெக்ஸேட் மருந்துச் சிகிச்சை கொடுக்கப்படும்போது உங்கள் பிள்ளை அல்லது உங்கள் வீட்டிலுள்ள வேறு எவரேனும் வாய்மூலமான இளம்பிள்ளைவாத நோய்த் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குடும்பத்தில் எவரேனும் சமீபத்தில் இளம்பிள்ளைவாத நோய்த் தடுப்பு மருந்து எடுத்திருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். உங்கள் பிள்ளை, சமீபத்தில் இளம்பிள்ளைவாத நோய்த் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட நபரின் தொடர்பைத் தவிர்க்கவேண்டும். உங்கள் பிள்ளை எடுத்துக் கொள்ளக்கூடாத உயிருள்ள நோய்த் தடுப்பு மருந்துகள், சின்னமுத்து, கூகைக்கட்டு, மற்றும் ரூபெல்லா (MMR) மற்றும் கொப்பளிப்பான் நோய்த்தடுப்பு மருந்துகளை உட்படுத்தும்.

மெத்தொட்ரெக்ஸேட் மருந்து இரத்ததிலுள்ள பிளேட்டலேட்டுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அது உங்கள் பிள்ளையின் இரத்தப் போக்கின் ஆபத்தை அதிகரிக்கும். நீங்கள் பின்வரும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம்:

  • சவரகக் கத்தி, விரல் நகம் வெட்டும் கத்திரிக்கோல் அல்லது கால் நகம் வெட்டும் நறுக்கிகளை உபயோகிக்கும்போது உங்கள் பிள்ளையின் உடற்பாகத்தை வெட்டி விடாதபடி கவனமாக இருக்கவும்.
  • சவரம் செய்யும்போது அல்லது முடிகளை அகற்றும்போது கவனமாக இருக்கவும்.
  • நசுக்குக் காயம் அல்லது வேறு காயங்கள் ஏற்படக்கூடிய போட்டி விளையாட்டுகளை உங்கள் பிள்ளை தவிர்க்கவேண்டும்.
  • உங்கள் பிள்ளை நிரந்தரமான பச்சை குத்துதல் அல்லது வேறு ஏதாவது உடலில் துளைபோடுதலைத் தவிர்க்கவேண்டும்.

மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை கருத்தரிக்கும் சமயத்தில் அல்லது கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் உட்கொண்டால், அது பிறவிக் குறைபாட்டை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பிள்ளை பாலியலில் சுறுசுறுப்பாக இருந்தால், அவன்(ள்) மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை உட்கொள்ளும்போது ஏதாவது கருத்தடையை உபயோகிப்பது மிகச் சிறந்தது. உங்கள் பிள்ளை கர்பமானால் உடனே மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.

மெத்தொட்ரெக்ஸேட் மருந்து வேறு மருந்துகளுடன் இடைத்தாக்கம் புரியக்கூடும்; விசேஷமாக அதிக வீரியமுள்ள வேளைமருந்து கொடுக்கப்படும்போது அப்படியாகும். உதாரணமாக, பின்வரும் மருந்துகள் உடலில் மெத்தொட்ரெக்ஸேட் மருந்தின் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்:

  • பென்சிலின்கள், செஃபலோஸ்போரின்கள் மற்றும் கோர்டிமொக்ஸஸோல் (செப்ட்ரா®) என்றும் அழைக்கப்படும்) என்பன உட்பட சில அன்டிபையோடிக் மருந்துகள்
  • குறிப்பிட்ட காக்காய் வலிப்பு நோய் மருந்துகள் (உ+ம் ஃபினிட்டொயின்)
  • அஸ்பிரின் அல்லது வேறு நொன்-ஸ்ரெறொய்டல் அன்ரி-இன்ஃபிளமட்ரி மருந்துகள் (உ+ம். ஐபியூபுரோஃபென், நப்றொக்ஸென்)

உங்கள் பிள்ளைக்கு மெத்தொட்ரெக்ஸேட் மருந்து கொடுக்கவேண்டியிருந்தால், அந்த வேளைமருந்து கொடுத்துத் தீரும்வரை உங்கள் மருத்துவர், சில குறிப்பிட்ட மருந்துகளை நிறுத்தும்படி கேட்கலாம். அந்த மருந்துகளைத் திரும்பவும் எப்போது கொடுக்கத் தொடங்குவது பாதுக்காப்பானது என உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

ஃபோலிக் அசிட்டைக் கொண்டிருக்கும் மல்டி விட்டமின்களும் இந்த மருந்தின் செயற்பாட்டில் குறுக்கிடக்கூடும். உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்பதற்கு நிச்சயமாயிருக்கவும்.

மருத்துவமனை அல்லது மருத்துவரின் அலுவலகத்தில் வைக்கப்படும் எல்லா மருத்துவ சந்திப்புக்களுக்கும் ஆஜராகவும். அதன் மூலம் உங்கள் பிள்ளையின் மெத்தொட்ரெக்ஸேட் மருந்துக்கான பிரதிபலிப்பை மருத்துவர் பரிசோதிக்க முடியும். உங்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளும் வேளைமருந்துகளை அவ்வப்போது மருந்துவர் மாற்ற வேண்டியிருக்கலாம்.

உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை உட்கொள்ளும்போது, கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் இரத்தத்திலுள்ள பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதற்காக பரிசோதனைகள் செய்யும்படி கேட்கப்படக்கூடும்.

உங்கள் பிள்ளை ஏதாவது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுவதற்கு முன்பு, பல் அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் கூட, அல்லது அவசரநிலை சிகிச்சைக்கு முன்னர், உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் மருந்து உட்கொள்வதாக, உங்கள் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான மெத்தொட்ரெக்ஸேட் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது மெத்தொட்ரெக்ஸேட் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. மெத்தொட்ரெக்ஸேட் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: ஆகஸ்ட் 13 2009