கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி என்றால் என்ன?
கழிப்பறையை அல்லது “பொட்டி”யை உபயோகிப்பதற்கான பயிற்சி அல்லது என்பது பிள்ளைகளுக்கு சிறுநீர்ப்பை மற்றும் மலம் கழிப்பதைக் கட்டுப்படுத்த கற்பிக்கும் செயல்முறையாகும்.
பெரும்பாலான பிள்ளைகள் இந்த மைல்கல்லை 2 மற்றும் 4 வயதுகளுக்கிடையில் எட்டும்போது, ஒவ்வொரு பிள்ளையும் தன் சொந்த வேகத்தில் முன்னேற்றமடையும். சில பிள்ளைகளுக்கு மேலதிக உடல்ரீதியான, மேம்பாடடையும் அல்லது நடத்தை சம்பந்தமான சவால்கள் இருக்கின்றன. அதாவது அவர்களுக்கு கற்றுக்கொள்வதற்கு மேலும் அதிக காலம் எடுக்கும். கழிப்பறையை உபயோகிக்க கற்றுக்கொண்ட பிள்ளைகளுக்கும் எப்போதாகிலும் மலசல “விபத்துகள்” சம்பவிக்கலாம்.
பெற்றோர்களாக நீங்கள், வேறு பராமரிப்பளிப்பவர்கள், மற்றும் குடும்ப அங்கத்தினர் ஆகிய எல்லோருமே, உங்கள் பிள்ளை கழிப்பறையை உபயோகிக்கப் பயிற்றுவிக்கப்பட்டவனாவதற்கு உதவி செய்யலாம். பல மாதங்களுக்கு, நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும், மற்றும் உங்கள் பிள்ளைக்கு தினசரி கவனிப்பு மற்றும் உற்சாகம் கொடுக்கவேண்டும்.
கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியை ஆரம்பிப்பதற்கான சிறந்த நேரம்
உங்கள் பிள்ளை கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி எடுப்பதற்குத் தயாராக இருக்கிறானா என்பதை அவனது வயது மாத்திரம் தீர்மானிக்காது. வித்தியாசமான கலாச்சாரங்களுக்கிடையில் கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி முறைகள் வித்தியாசப்படும். பொதுவாக, கனடா நாட்டை அடிப்படையாகக் கொண்ட வல்லுனர்கள் “பிள்ளைக்குப் செளகயமானமான” அணுகுமுறையைச் சிபாரிசு செய்கிறார்கள். அதாவது, இது உங்கள் பிள்ளை தயாராக இருக்கும்போது செயற்பாடு இயற்கையாக நடைபெறுவதை உற்சாகப்படுத்துகிறது. உங்கள் பிள்ளை மனரீதியாக, உணர்ச்சிரீதியாக, மற்றும் உடல்ரீதியாகத் தயாராக இருக்கும் நேரமே, கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியை ஆரம்பிப்பதற்கான சிறந்த நேரம் ஆகும்.
கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியைக் கற்றுக்கொள்ள காலம் எடுக்கும்
பெரும்பாலும் பிள்ளைகள், பகல் நேரங்களில் தாங்கள் மலம் கழிப்பதை மற்றும் சிறுநீர்ப்பைகளைக் கட்டுப் படுத்துவதற்குக் கற்றுக்கொள்ள ஒரு சில மாதங்கள் எடுக்கும். சரியாக எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பிள்ளைகளைப் பொறுத்தது.
இரவு நேரத்தில் கட்டுப்படுத்துவது பெரும்பாலும் அதிக காலம் எடுக்கும். சில சமயங்களில் அது மாதங்கள் அல்லது வருடங்கள் கூட எடுக்கலாம்.
மேலுமான தகவல்களுக்கு, தயவு செய்து படுக்கையில் சிறுநீர் கழித்தல் ஐ வாசிக்கவும் (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்).
உங்கள் பிள்ளை கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியை பெறத் தயாராக இருப்பதைக் காட்டும் அடையாளங்கள்
உங்கள் பிள்ளை பின்வரும் நிலைமைகளின் கீழ் கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியை ஆரம்பிக்கத் தயாராயிருப்பான்:
- பல மணி நேரங்களுக்கு உலர்வாக இருக்கமுடிகிறது
- ஒன்று அல்லது இரண்டு படிகளைக்கொண்ட அறிவுரைகளை பின்பற்ற முடிகிறது
- அவனுக்கு கழிப்பறைக்குப் போகவேண்டும் என்பது தெரிகிறது
- கழிப்பறையை உபயோகிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை வார்த்தைகளில் உங்களுக்குச் சொல்கிறான் அல்லது சைகைகளில் காண்பிக்கிறான்
- கழிப்பறை இருக்கையை நோக்கி நடந்து சென்று அதின்மேல் அமர்கிறான்
- தனது காற்சட்டையை மேலும் கீழும் இழுக்க முடிகிறது
- கழிப்பறை அல்லது கழிப்பறை இருக்கையை உபயோகிக்க மற்றும் உள்ளாடையை அணிந்து கொள்ள விரும்புகிறான்
கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியின் உக்திகள்
உங்களைத் தயார் செய்யவும்
உங்கள் பிள்ளைக்கு கழிப்பறையை உபயோகிக்க பயிற்சி கொடுப்பதில், உங்களை ஈடுபடுத்துவதற்கு உங்களுக்கு நேரம் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும். மிகப் பெரிய மாற்றங்கள் இல்லாத, உதாரணமாக, ஒரு புதிய வீட்டுக்கு மாறிச் செல்லுதல் அல்லது ஒரு புதிய குழந்தையின் பிறப்பு போன்றவை இல்லாத ஒரு சமயத்தைத் தெரிவு செய்யவும். வெப்பமான மாதங்கள் மேலும் இலகுவாயிருக்கும். ஏனென்றால் இந்த மாதங்களில் உங்கள் பிள்ளை குறைவான உடைகளை அணிந்திருப்பான்.
உங்கள் பிள்ளையைத் தயார் செய்யவும்
உங்கள் பிள்ளைக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்படும்போது உங்களுக்குத் தெரிவிக்கும்படி அவனை உற்சாகப்படுத்தவும். சரியான வார்த்தைகளை உபயோகிக்க அவனுக்குக் கற்றுக்கொடுக்கவும். இலகுவாக கழற்றக்கூடிய உடைகளை, உதாரணமாக, மேலாடைகள், பட்டன்கள் மற்றும் ஸிப்பர்களுக்குப் பதிலாக எலாஸ்டிக் மற்றும் வெல்குரொ உள்ள உடைகளை அணிவிக்கவும்.
பொட்டியை பொருத்துதல் (Potty setup)
உங்கள் பிள்ளை ஏறி இலகுவாக இருக்கக்கூடியவாறு பொட்டி சரியான நிலையில் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையின் பாதங்களுக்குச் சரியான ஆதாரம் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
புதிய மார்க்கத்தை படிப்படியாகத் தொடங்குங்கள்
பொட்டியை உங்கள் பிள்ளைக்குக் காண்பிக்கவும். புதிய கழிப்பறை மார்க்கத்தை பின்வரும் எளிமையான படிகள் மூலம் விளக்கவும்:
- முதலில், உங்கள் பிள்ளையை முழுமையான உடைகளுடன் பொட்டிக்குமேல் அமரவைக்கவும்.
- அடுத்ததாக, உங்கள் பிள்ளையின் ஈரமான அல்லது அழுக்கடைந்த டயபரை அகற்றிவிட்டு பொட்டிக்குமேல் அமரும்படி உற்சாகப்படுத்தவும். நீங்கள் அழுக்கடைந்த டயபரைக்கூட பொட்டிக்குள் போடலாம். இது பொட்டி எதற்காக என்பதை உங்கள் பிள்ளை விளங்கிக்கொள்ள உதவி செய்யும்.
- ஒரு நாள் அல்லது அதற்கும் பின்பாக, ஒரு நாளில் பல முறைகள் உங்கள் பிள்ளையை பொட்டிக்கு அழைத்துச் செல்லவும்.
- கடைசியாக, ஒவ்வொரு நாளும் நீங்கள் பொட்டிக்குப் போகும்போது குறிப்பிட்ட சமயங்களை ஒதுக்குவதன் மூலம், உங்கள் பிள்ளையுடன் ஒரு புதிய மார்க்கத்தைத் தொடங்கவும். இந்த சமயங்கள் உங்கள் பிள்ளை விழித்தெழுந்த பின்னர், உணவு உண்ட பின்னர், மற்றும் குட்டித்தூக்கம் மற்றும் படுக்கைக்குப் போவதற்கு முன்பாக என்பதாக இருக்கலாம்.
முன்னேற்றத்தைப் புகழவும்
உங்கள் பிள்ளைக்கு எப்போது கழிப்பறைக்குப் போகத் தேவைப்படுகிறது என்பதை உங்களிடம் தெரிவிக்கும்படி உற்சாகப்படுத்தவும். அதை உங்களுக்குத் தெரிவித்ததற்காக அவனைப் புகழவும். பொட்டிக்குப் போகும் வழியில் மலசல விபத்து நடந்தாலும் கூட அவ்வாறு செய்யவும். உங்கள் பிள்ளைக்குத் தண்டனை கொடுக்கவேண்டாம் அல்லது தண்டனை கொடுக்கப்போவதாகப் பயமுறுத்தவும் வேண்டாம். உற்சாகமும் ஆதரவும் உங்கள் பிள்ளையைத் தொடர்ந்து முயற்சி செய்யவும் அடுத்த படியை எடுத்துவைக்கவும் உந்துவிக்கும். உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தைக் கொண்டாடவும். உதாரணமாக, டயபர்களிலிருந்து காற்சட்டை போடுவதற்கான பயிற்சிக்கு மாறுதல் .
பயிற்சிக் காற்சட்டை
உங்கள் பிள்ளை பொட்டியை 1 அல்லது 2 வாரங்களுக்கு வெற்றிகரமாக உபயோகித்தால், நீங்கள் பருத்தி உள்ளாடைகள் அல்லது பயிற்சிக் காற்சட்டைகளை உபயோகிக்கத் தொடங்கலாம்.
உதாரணம் மூலம் காட்டுதல்
நீங்கள் கழிப்பறையை உபயோகிப்பதை உங்கள் பிள்ளை அவதானிக்கட்டும். நீங்கள் தாமே அந்தப் படிகளினூடாகச் செல்லவும். நீங்கள் கழிவறைக்குப் போகவேண்டும் என்பதை அவன் அறியட்டும். அதன் பின்பு கழிப்பறைக்கு அவன் உங்களைப் பின்தொடர்ந்து வரச் செய்யவும். அவன் உங்களை அவதானிப்பதன் மூலம் கற்றுக்கொள்வான்.
கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியிலுள்ள சவால்கள்
உங்கள் பிள்ளை, உங்கள் வழிநடத்துதல்களைப் பின்பற்ற அல்லது பொட்டியை உபயோகிப்பதை எதிர்த்தால், அவன் கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சிக்குத் தயாராயில்லை. பொட்டியை உபயோகிக்கும்படி உங்கள் பிள்ளையை வற்புறுத்த வேண்டாம். இது உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்குமிடையில் நீண்ட கால போராட்டத்துக்கு வழிநடத்தும் அல்லது கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியை மந்தமாக்கும். கொஞ்சக்காலத்துக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, பின்பு உங்கள் பிள்ளை தயாராக இருக்கும்போது திரும்பவும் முயற்சி செய்யவும்.
உங்கள் பிள்ளைக்கு மலச்சிக்கல் இருந்தால், கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சிக்கு அவன் எதிர்ப்புத் தெரிவிக்கலாம்.
உங்கள் பிள்ளைக்கு விசேஷ தேவைகள் இருந்தால், உங்கள் பிள்ளை கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியைத் தொடங்குவதற்குத் தயாராக இருக்கிறானா என்பதைத் தீர்மானிப்பதற்கு உங்கள் மருத்துவரிடமிருந்து மேலதிக வழிநடத்தல்கள் உங்களுக்குத் தேவைப்படலாம்.
மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்
பல மாதங்கள் கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி கொடுத்த பின்பும் உங்கள் பிள்ளை கற்றுக்கொள்ளவில்லை அல்லது கற்றுக் கொள்ள மறுத்தால், அல்லது உங்கள் பிள்ளை 4 வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தால், உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்திக்கவும்.
முக்கிய குறிப்புகள்
- பெரும்பாலான பிள்ளைகள் சிறுநீர்ப்பை மற்றும் மலத்தை கட்டுப்படுத்துவதை 2 மற்றும் 4 வயதுகளுக்கிடையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆயினும், ஒவ்வொரு பிள்ளையும் தன் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்கிறது.
- உங்கள் பிள்ளை பயிற்சியைத் தொடங்கத் தயாராவதற்கு முன்பாக மனரீதியாக மற்றும் உடல்ரீதியாக முதிர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையவேண்டும்.
- கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி பல மாதங்கள் எடுக்கலாம்.
- ஒரு பிள்ளை பகல்நேரங்களில் சிறுநீர்ப்பை மற்றும் மலத்தை கட்டுப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றபின்னர் இரவு நேரங்களில் கட்டுப்படுத்துவதில் தேர்ச்சிபெற பல மாதங்கள், அல்லது வருடங்கள் கூட ஆகலாம்.
- பிள்ளைகளுக்கு பெற்றோரிடமிருந்து பொறுமையும் உற்சாகமும் தேவைப்படுகிறது.