மெய்நிகர் பராமரிப்பு என்றால் என்ன?
மெய்நிகர் பராமரிப்பு என்பது தொலைபேசி, கணினி அல்லது பிற மொபைல் சாதனங்கள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைநிலை ஆரோக்கியப் பராமரிப்புச் சேவையை வழங்கும் ஒரு வழியாகும். ஒரு ஆரோக்கியப் பராமரிப்பாளர் அல்லது ஆரோக்கியப் பராமரிப்புக் குழுவுடனான ஒரு மெய்நிகர் வருகை, மருத்துவமனையில் நேரில் வருவதற்குப் பதிலாக தொலைபேசியிலோ அல்லது காணொளி தளத்திலோ நடைபெறலாம். உங்கள் மருத்துவக் குழுவுடன் நீங்கள் இணைவதற்கு இது மற்றொரு விருப்பத்தேர்வை வழங்கலாம். இந்தக் கட்டுரை மெய்நிகர் காணொளி வருகையின் போது எதிர்பார்க்க வேண்டியவை குறித்து முதன்மையாக கவனம் செலுத்தும்.
மெய்நிகர் வருகைகள் எப்போதும் நேரில் பார்வையிடுவதற்குப் பொருத்தமான மாற்றாக இருக்காது, எடுத்துக்காட்டாக, அவசர காலங்களில், அல்லது உடல் பரிசோதனை அல்லது நடைமுறை தேவைப்படும்போது. உங்கள் நியமன சந்திப்பு நேரில் நிகழ வேண்டுமா அல்லது மெய்நிகராக நிகழலாமா என்பதைத் தீர்மானிக்க உங்கள் மருத்துவக் குழு உங்களுடன் இணைந்து செயல்படும்.
மெய்நிகர் பராமரிப்பின் நன்மைகள் யாவை?
மெய்நிகர் பராமரிப்பு வசதியானதாக, குறித்த நேரத்திலானதாக மற்றும் பாதுகாப்பானதாக இருக்கலாம். தொலைபேசி, கணினி அல்லது மொபைல் சாதனம் மூலம் செய்யப்படும் நியமன சந்திப்புகள் மருத்துவமனைக்குப் பயணிக்க வேண்டிய தேவையைக் குறைக்கின்றன, மேலும் மருத்துவ நியமன சந்திப்புகளுக்கான காத்திருப்பு நேரத்தையும் குறைக்கலாம்.
மெய்நிகர் பராமரிப்பு பாதுகாப்பானதா?
உங்கள் தனியுரிமை மருத்துவக் குழுவுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு நேரடியான வருகையைப் போலவே, மெய்நிகர் வருகையின் போது நீங்கள் அவர்களுக்கு வழங்கும் எந்த தகவல்களும் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு அவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். உங்கள் மெய்நிகர் வருகையின் போது சேகரிக்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட அல்லது ஆரோக்கியத் தகவல்களும் Personal Health Information Protection Act-இன்படி உங்கள் குழந்தைக்குப் பராமரிப்பு அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் ஆரோக்கியத் தகவல்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க மருத்துவக் குழு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் அதேவேளையில், மின்னஞ்சல் போன்ற மின்னணுத் தகவல்தொடர்புகள் மற்றும் Zoom போன்ற காணொளி சந்திப்புத் தளங்கள் ஒருபோதும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்காது. மின்னணுத் தகவல்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தும் போது உங்கள் ஆரோக்கியத் தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்கு இடைமறிக்கப்படலாம் அல்லது வெளிப்படுத்தப்படலாம் என்ற அதிகரித்த பாதுகாப்பு ஆபத்து உள்ளது.
மருத்துவக் குழு உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதற்கு, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது:
- உங்களுக்குச் சொந்தமான தனிநபர் கணினி அல்லது சாதனத்தைப் பயன்படுத்தவும்.
- வீட்டில் ஒரு பாதுகாப்பான இணைய இணைப்பைப் பயன்படுத்தவும். விமான நிலையம், கடை, உணவகம் அல்லது நூலகம் போன்ற பொது இடத்தில் உள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- பணி மின்னஞ்சல் முகவரி அல்லாமல் உங்களின் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தவும், மேலும் மருத்துவக் குழுவில் உங்கள் சரியான மின்னஞ்சல் முகவரி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். மெய்நிகர் வருகைகள் மற்றும் ஆரோக்கியப் பாதுகாப்பு தகவல்களை அணுக MyChart கணக்கிற்குப் பதிவு பெறுவது உங்கள் தகவல்களைப் பாதுகாக்க உதவும் மற்றொரு வழியாகும்.
- உங்கள் வழங்குநருடனான உங்கள் கலந்துரையாடல்களை வேறு யாரும் கேட்க முடியாத ஒரு தனிப்பட்ட இடத்தைத் தேர்வுசெய்யவும்.
நீங்கள் மெய்நிகர் பராமரிப்பில் பங்கேற்கும்போது, மின்னஞ்சல், காணொளிக் கலந்துரையாடல் (Zoom, OTN முதலியன) அல்லது குறுஞ்செய்திகளை உள்ளடக்கிய மின்னணுத் தகவல்தொடர்புக் கருவிகள் மூலம் உங்களின்/உங்கள் குழந்தையின் தனிப்பட்ட ஆரோக்கியத் தகவல்களை மருத்துவக் குழுவுடன் பகிர்ந்துகொள்வீர்கள். நீங்கள் ஒரு மின்னஞ்சலை அல்லது மின்னணுத் தகவல்தொடர்பைப் பெற்றால், அது SickKids-இல் உள்ள உங்களின்/உங்கள் குழந்தையின் மருத்துவக் குழுவிலிருந்து வருகிறதா என்று உறுதியாக தெரியவில்லை என்றால், தயவுசெய்து எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யாமல், SickKids-இல் இருந்து வந்த தகவல்தொடர்பை சரிபார்க்க மருத்துவக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.
மெய்நிகர் வருகைக்கு எவ்வளவு செலவாகும்?
நேரடி வருகைகளைப் போலவே மெய்நிகர் வருகைகளையும் மருத்துவமனை நடத்துகிறது, சில சூழ்நிலைகளில் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இருப்பினும், உங்கள் சொந்த உபகரணங்களைப் பயன்படுத்தும்போது உங்கள் இணையம் அல்லது செல்லுலார் சேவை வழங்குநர்கள் உங்களிடம் கட்டணம் வசூலிக்கலாம். உங்கள் சேவை வழங்குநரிடமிருந்து கூடுதல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு உங்கள் மெய்நிகர் வருகைக்குப் போதுமான தரவு (டேட்டா) மற்றும் அலைவரிசை (பேண்ட்வித்) உங்களிடம் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். உங்கள் இணையம் அல்லது செல்லுலார் சேவை வழங்குநர்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் கட்டணம் வசூலிக்கிறார்களா என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளவும்.
உங்கள் மெய்நிகர் பராமரிப்பு வருகைக்கு முன்பு
உங்கள் மெய்நிகர் வருகையில் எவ்வாறு இணைவது என்பதற்கான அறிவுறுத்தல்கள் உங்கள் MyChart கணக்கு வழியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ வழங்கப்படும். நீங்கள் ஒரு செயலி அல்லது ஆன்லைன் தளத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டியிருக்கலாம். நீங்கள் மெய்நிகர் வருகைக்குத் தயாராக உதவுவதற்கு, மருத்துவக் குழுவிலிருந்து கூடுதல் செயற்படிகள் இந்த அறிவுறுத்தல்களில் இருக்கலாம். தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தால் உங்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்ணை உங்களின்/உங்கள் குழந்தையின் மருத்துவக் குழுவுக்கு வழங்குவதும் உதவியாக இருக்கும். உங்கள் மெய்நிகர் வருகைக்கு முன்னர் நீங்கள் செய்யக்கூடிய சில காரியங்கள் முடிந்தவரை சீராக நடைபெறுகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:
ஆயத்தமாக இருங்கள்
- மெய்நிகர் வருகையின் குறிக்கோள்களைப் பற்றி சிந்தித்து, உங்களின்/உங்கள் குழந்தையின் மருத்துவக் குழுவிடம் நீங்கள் கேட்க விரும்பும் ஏதேனும் கேள்விகளின் பட்டியலைத் தயாரிக்கவும்.
- மெய்நிகர் வருகையின் போது நீங்கள் தகவல்களை எழுதி வைத்துக்கொள்ள விரும்பினால் ஒரு குறிப்பேட்டையும் பேனாவையும் தயாராக வைத்துக்கொள்ளவும்.
- பொருந்தினால், இரத்தப்பணி அல்லது இமேஜிங் போன்ற உங்களின்/உங்கள் குழந்தையின் மெய்நிகர் வருகைக்கு முன்கூட்டியே முன்னதாகத் தேவைப்படும் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் முடிந்துவிட்டனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- உங்களின் அல்லது உங்கள் குழந்தையின் மிகச் சமீபத்திய உயரம் மற்றும் எடையின் அளவீடுகளைத் தயாராக வைத்துக்கொள்ளவும். வருகை வகையைப் பொறுத்து, உங்களின்/உங்கள் குழந்தையின் மருத்துவக் குழு பிற அளவீடுகளைக் கேட்கலாம்.
- இந்தத் தகவல்களை நீங்கள் மருத்துவக் குழுவுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தால், உங்களின்/உங்கள் குழந்தையின் மருந்துகளைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.
பொருத்தமான சுற்றுப்புறத்தைத் தேர்வுசெய்யவும்
- அமைதியான, நல்ல வெளிச்சமான மற்றும் உங்களுக்கு/உங்கள் குழந்தைக்கு வசதியாக இருக்கும் ஒரு இடத்தைத் தேர்வுசெய்யவும். தொலைக்காட்சி, வானொலி அல்லது பிற சத்தத்தை எழுப்பும் சாதனங்களை முன்கூட்டியே அணைத்து வைக்கவும், இதன் மூலம் நீங்களும் உங்கள் குழந்தையின் மருத்துவக் குழுவும் பேசுவதை ஒருவருக்கொருவர் தெளிவாகக் கேட்க முடியும்.
- நீங்கள் தேர்வுசெய்யும் இடம் தனிப்பட்டதாக இருப்பதை உறுதிசெய்யவும். அறையில் உங்களுடன் மற்றவர்கள் இருந்தால், மெய்நிகர் வருகையின் ஆரம்பத்தில் மருத்துவக் குழுவிடம் சொல்லுங்கள்.
- மெய்நிகர் வருகையின் போது குறிப்புகளை எடுக்க விரும்பினால், உங்களுக்கு அருகே ஒரு மேசையை வைத்துக்கொள்ளலாம்.
- வருகையின் போது மருத்துவக் குழு உங்களை/உங்கள் குழந்தையை மதிப்பீட்டைச் செய்ய வேண்டியிருந்தால், உங்களுக்கான இடத்தை நீங்கள் அமைத்துக்கொள்ள உதவ அவர்கள் முன்னதாகவே உங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவார்கள் (எ.கா., நகர்த்துவதற்கு அல்லது வசதியாக அமர்வதற்குப் போதுமான இடவசதி இருப்பது).
சரியான தொழில்நுட்பத்தையும் உபகரணங்களையும் பயன்படுத்தவும்
- நீங்கள் பயன்படுத்தும் இடத்திற்கு இணைய அணுகல் மற்றும் நல்ல தொலைபேசி சமிக்ஞை இருப்பதை உறுதிசெய்யவும் (உங்கள் மெய்நிகர் காணொளி வருகை துண்டிக்கப்படும் நிகழ்வில்).
- கேட்டொலி மற்றும் காணொளியுடன் கூடிய மடிக்கணினி, மேசைக்கணினி அல்லது கைக்கணினியை (டேப்லெட்) பயன்படுத்தவும். ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோன் வேலை செய்கிறதா என்பதையும், தேவைப்பட்டால் ஒலியளவை அதிகரிக்க முடியுமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சாதனத்தின் ஒலியளவு சத்தமாக இல்லாவிட்டால் நீங்கள் வெளிப்புற ஸ்பீக்கர்களை இணைக்க வேண்டும் அல்லது ஹெட்ஃபோன்கள்/இயர்பட்களைப் பயன்படுத்த வேண்டும்.
- மடிக்கணினி, மேசைக்கணினி அல்லது கைக்கணினிக்கான (டேப்லெட்) அணுகல் உங்களிடம் இல்லையென்றால், உங்கள் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம்.
- மெய்நிகர் வருகைக்குத் தேவையான எந்தச் செயலிகளையும் பதிவிறக்கிக் கொள்ளவும் (எ.கா., Zoom, MS Teams போன்றவை)
- மெய்நிகர் பராமரிப்பு வருகையின் வகையைப் பொறுத்து, அளவிடும் நாடா அல்லது அளவுகோல் போன்ற பிற கருவிகள் அல்லது உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கும்படி உங்கள் குழந்தையின் மருத்துவக் குழு உங்களிடம் கேட்கலாம்.
- உங்கள் மெய்நிகர் வருகைக்கு முன்பு உங்கள் உபகரணங்கள் மற்றும் கேட்டொலியைச் சோதிக்கவும்.
உங்கள் மெய்நிகர் பராமரிப்பு வருகையின் போது
உங்கள் குழந்தையின் மெய்நிகர் பராமரிப்பு வருகையின் போது என்ன நடக்கும் என்பது நியமன சந்திப்பை நடத்தும் மருத்துவப் பராமரிப்புத் துறை மற்றும் உங்கள் குழந்தையின் வருகைக்கான காரணத்தைப் பொறுத்து இருக்கும். பொதுவாக, பெரும்பாலான மெய்நிகர் வருகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும்:
- உங்களின்/உங்கள் குழந்தையின் மெய்நிகர் வருகைக்கான காரணத்தைப் பற்றி கலந்துரையாடு உங்களின்/உங்கள் குழந்தையின் மருத்துவக் குழுவின் உறுப்பினர்/உறுப்பினர்களைச் சந்தித்தல்
- நேரடி வருகையைப் போலவே, உங்கள் மெய்நிகர் வருகைக்கு உங்கள் குழந்தையின் மருத்துவக் குழுவில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். அவர்கள் அனைவரும் ஒரே இடத்திலிருந்து (மருத்துவமனையில் உள்ள ஒரு கருத்தரங்க அறை போன்றவை) வருகைக்காக அழைப்பில் சேரலாம், அல்லது அவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து தனித்தனியாக அழைப்பில் சேரலாம் (வீட்டு அலுவலகம் அல்லது மருத்துவமனைக்குள் இருக்கும் தனிப்பட்ட பணியிடம் போன்றவை).
- உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும்/அல்லது குடும்ப வரலாற்றைக் குறிப்பெடுத்தல்
- உங்கள் குழந்தையின் உடல் மற்றும்/அல்லது உளவியல் சார்ந்த மதிப்பீட்டை நடத்துதல்
- மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அடுத்த செயற்படிகள் குறித்து கலந்துரையாடுதல்
- நீங்கள் கேள்விகளைக் கேட்பதற்கான நேரம்
எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால் என்ன செய்வது?
உங்கள் மெய்நிகர் வருகையின் போது உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால், உங்களின்/உங்கள் குழந்தையின் மருத்துவக் குழு ஒரு மொழிபெயர்ப்பாளர் உடனிருக்க ஏற்பாடு செய்யலாம். உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால், அதற்கு ஏற்பாடு செய்ய முன்கூட்டியே சிகிச்சையகத்திற்கு நினைவூட்டுங்கள்.
நான் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொண்டால் என்ன செய்வது?
உங்கள் மெய்நிகர் வருகையின் போது தொழில்நுட்பச் சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால், தயவுசெய்து உங்கள் நியமன சந்திப்புக்கான அறிவுறுத்தல்களில் வழங்கப்பட்டிருக்கும் எண்ணில் உங்கள் குழந்தையின் சிகிச்சையகத்தை அழைக்கவும்.
உங்களின்/உங்கள் குழந்தையின் ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குநர் மெய்நிகர் வருகையைத் திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடங்க ஒவ்வொரு முயற்சியையும் செய்வார். தாமதம் ஏற்படும் என்று நாங்கள் நினைத்தால் தொலைபேசியில் உங்களைத் தொடர்புகொள்ள கூடிய மட்டும் முயற்சிப்போம், இருப்பினும், நேரடி நியமன சந்திப்புகளைப் போலவே, மெய்நிகர் வருகைகளும் 30 நிமிடங்கள் வரை தாமதமாகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
பழுதைக் கண்டறிந்து நீக்குவதற்கான உதவுக்குறிப்புகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் செயலி அல்லது ஆன்லைன் தளத்திற்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பக்கத்தையும் நீங்கள் தேட முயற்சி செய்யலாம். மேலும் பழுதைக் கண்டறிந்து நீக்குவதற்கான தகவல்களுக்கு நீங்கள் SickKids Virtual Clinic Visits பக்கத்தையும் பார்வையிடலாம்.
உங்களின் மெய்நிகர் பராமரிப்பு வருகைக்குப் பிறகு
உங்கள் குழந்தையின் மெய்நிகர் பராமரிப்பு வருகை முடிந்ததும் நீங்கள் இவற்றைப் பெறலாம்:
- அழைப்பில் உள்ள ஆரோக்கியப் பராமரிப்பாளர்கள் அனைவரின் பெயர்கள், அவர்களின் பரிந்துரைகள் மற்றும் அடுத்த செயற்படிகள் உட்பட வருகையின் விவரச்சுருக்கம்.
- இரத்தப்பணி அல்லது இமேஜிங் போன்ற கூடுதல் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கான நியமன சந்திப்புத் தேதி.
- மருத்துவப் பராமரிப்புக் குழுவுடன் பின்தொடர்தல் வருகைக்கான ஒரு நியமன சந்திப்புத் தேதி.
SickKids-இல் நடைபெற்ற வருகைக்குப் பிறகான விவரச்சுருக்கங்கள் MyChart மூலம் வழங்கப்படுகின்றன, இது நோயாளிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பாளர்களுக்கும் அவர்களது SickKids-இன் மின்னணு ஆரோக்கியப் பதிவின் பகுதிகளை அணுகுவதற்கான அனுமதியை வழங்கும் ஒரு இணையவழி நோயாளி இணையவாசலாகும்.