VCUG என்பது, சிறுநீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குள் வடிவதைக் காட்டும் படம் என்பதன் சுருக்கமான பதமாகும். VCUG என்பது உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது என்ன சம்பவிக்கிறது என்பதைக் காட்ட, ஊடுகதிர் படம் மற்றும் கொன்றாஸ்ற் மீடியம் உபயோகிக்கும் ஒரு விசேஷ பரிசோதனையாகும்.
VCUG பரிசோதனையின் விரிவான விபரங்களுக்கு, தயவுசெய்து சிறுநீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குள் வடிவதைக் காட்டும் படம் ( VCUG) ஐ காண்க.
VCUG பரிசோதனைக்குப் பின்னர் உங்கள் பிள்ளைக்கு சில அறிகுறிகள் இருக்கலாம்
பரிசோதனைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பரிசோதனைக்கு பின்னர் முதல் அல்லது இரண்டு நாட்களின் பின்னர், பின்வரும் சாதாரண நிகழ்வுகளை நீங்கள் அவதானிக்கலாம்:
- உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர் இளம்சிவப்பு நிறமாகக் காணப்படலாம். இது சிறிதளவு இரத்தம் சிறுநீரில் காணப்படுவதன் காரணமாக நிகழ்கிறது.
- உங்கள் பிள்ளை முதல் முறையாக சிறுநீர் கழிக்கும்போது அமுக்கம் அல்லது குளவி குத்துவதைப்போன்ற வலி இருப்பதாக முறையிடலாம்.
- கதீற்றர் செலுத்தப்பட்ட பகுதியில் புண்வலியிருக்கலாம், மற்றும் உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கப்போவதை நினைத்து பதற்றப்படலாம்.
உதவிசெய்வதற்குப் பெற்றோர் என்ன செய்யலாம்
- பெரும்பாலும், அதிகளவு தண்ணீர் குடிப்பது இந்த அறிகுறிகளிலிருந்து நிவாரணமடைய உதவிசெய்யும் மற்றும் பிள்ளை வழக்கம்போல சிறுநீர் கழிக்கத் தொடங்க உதவி செய்யும்.
- பரிசோதனையின் பின்னர் 24 மணி நேரங்களுக்கு உங்கள் பிள்ளைக்கு குளியல் சோப் உபயோகிக்கக் கூடாது அல்லது நீர்க்குமிழிக் குளியல் (பபிள் பாத்) கொடுக்கக்கூடாது.
உங்கள் பிள்ளையின் மருத்துவரை எப்போது அழைக்கவேண்டும்
பின்வருவனவற்றுள் ஏதாவது நிகழ்வு சம்பவித்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள்:
- உங்கள் பிள்ளை அடிவயிற்றில் கடும் வலி இருப்பதாக முறையிடுகிறான்
- உங்கள் பிள்ளைக்கு மலவாசல் வெப்பநிலையின்படி, 38°C (101°F )க்கு மேல் காய்ச்சல் இருக்கிறது,
- உங்கள் பிள்ளையின் சிறுநீர் பிரகாசமான சிவப்பு நிறத்தில் உள்ளது.
- உங்கள் பிள்ளை 2 வயதுக்குட்பட்டவன்: கதீற்றர் குழாய் வெளியே எடுக்கப்பட்டபின் 4 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்கவில்லை.
- உங்கள் பிள்ளை 2 வயதுக்குமேற்பட்டவன்: கதீற்றர் குழாய் வெளியே எடுக்கப்பட்டபின் 6 முதல் 8 மணி நேரங்கள் வரை சிறுநீர் கழிக்கவில்லை.
பின்வரும் நிகழ்வுகளில் ஏதாவது ஒன்று சம்பவித்தால் அலுவலக நேரங்களில் உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள்:
- செயற்பாட்டின்பின் 24 மணி நேரங்களின் பின்பும் உங்கள் பிள்ளைக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கிறது.
- உங்கள் பிள்ளையின் சிறுநீர் இன்னும் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கிறது.