இரத்த அழிவுச் சோகை என்றால் என்ன?
இரத்த அழிவுச் சோகை என்பது, அசாதாரண ஹீமோகுளோபின் உற்பத்தியினால் ஏற்படும் இரத்தம் சம்பந்தமான நோய்களின் ஒரு தொகுப்பு ஆகும். ஹீமோகுளோபின் என்பது, ஒக்ஸிஜனை உடலுக்குள் எடுத்துச் செல்லும் சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒரு புரதம். இரத்த அழிவுச் சோகை என்பது இரத்தச் சோகை யின் மரபு வழியாக சுதந்தரிக்கப்படும் ஒரு வடிவம் ஆகும். இது மத்தியதரை, ஆபிரிக்கா, மற்றும் ஆசியா வம்சாவளியைச் சேர்ந்த பிள்ளைகளில் மிகவும் சாதாரணமாகக் காணப்படும். இரத்த அழிவுச் சோகையில் அநேக வித்தியாசமான வகைகள் இருக்கின்றன. நோயின் கடுமை, அறிகுறிகள் இல்லாமையில் இருந்து மரணம் வரையாக வரிசைப்படுத்தப்படும். உங்களுக்கு மைனர் இரத்த அழிவுச் சோகை (டிரெயிட்) இருந்தால், நீங்கள் ஒரு நோய்க்காவியாக இருப்பீர்கள். உங்கள் இரத்தச் சிவப்பணுக்கள் வழக்கத்தைவிடச் சிறியதாக இருக்கும். ஆனாலும் நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியமுள்ளவராக இருப்பீர்கள். மேஜர் இரத்த அழிவுச் சோகை மரணத்தை விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கலாம். அல்ஃபா மேஜர் இரத்த அழிவுச் சோகையுள்ளவர்கள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிடுவார்கள். பீட்டா மேஜர் இரத்த அழிவுச் சோகையுள்ளவர்களுக்கு தொடர்ச்சியான இரத்தமேற்றுதல் தேவைப்படும். வேறு வகையான இரத்த அழிவுச் சோகைகள் கடுமையானவையல்ல.
மேலதிக தகவல்லுக்கு, தயவு செய்து "இரத்த சோகை" ஐ வாசியுங்கள்
இரத்த அழிவுச் சோகைக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
மேஜர் இரத்த அழிவுச் சோகையுள்ள பிள்ளைகள் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்தில் பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் காட்டலாம். இரத்த சோகையுள்ள பிள்ளைகளுக்கும் இதே அறிகுறிகள் இருக்கும்:
- வெளிறிய தோல்
- சோர்வு
- பலவீனம்
- விரைவான சுவாசம்
வேறு அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தக்கூடும்:
- எரிச்சலடைதல்
- தோல் மஞ்சள் நிறமாக நிறமாற்றமடைதல் (மஞ்சட்காமாலை)
- மந்தமான வளர்ச்சி
- அடிவயிறு வெளித்தள்ளிக்கொண்டிருத்தல்
- முக எலும்பு உருக்குலைதல்
- அடர்நிற சிறுநீர்
காரணங்கள்
இரத்த ஒழுங்கின்மை என்பது ஹிமோகுளோபின் உற்பத்தி செய்வதைக் கட்டுப்படுத்தும் மரபணுவிலுள்ள குறைபாட்டினால் ஏற்படுகிறது. குறைபாடுள்ள மரபணு வழக்கமான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதில் இயலாமையை ஏற்படுத்துகிறது. பிள்ளைகள் இந்த மரபணுவை பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரிடமுமிருந்து சுதந்தரித்துக்கொள்கின்றனர். ஒரு பிள்ளை தவறான மரபணுவை பெற்றோர் இருவரிடமுமிருந்தும் சுதந்தரித்துக்கொண்டால், அந்தப் பிள்ளைக்கு மேஜர் இரத்த அழிவுச் சோகை ஏற்படும். தவறான மரபணு ஒரு பெற்றோர் மூலம் மாத்திரம் கடத்தப்பட்டால் பிள்ளைக்கு மைனர் இரத்த அழிவுச் சோகை ஏற்படும். பின்பு, அந்தப் பிள்ளை குறைபாடுள்ள மரபணுவைக் காவிச் செல்பவனாக இருப்பான்.
இரத்த அழிவுச் சோகையுள்ள உங்கள் பிள்ளைக்கு ஒரு மருத்துவர் செய்யக்கூடியவை
நீங்கள் அவதானித்த அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை உங்கள் பிள்ளையின் மருத்துவர் பரிசீலனை செய்வார். இரத்தப் பரிசோதனைகள் மூலம் தான் நோயைக் கண்டறிந்து உறுதிசெய்யமுடியும். மைனர் இரத்த அழிவுச் சோகைக்கு சிகிச்சை தேவையில்லை. மேஜர் இரத்த அழிவுச் சோகைக்கு மாதாந்தர இரத்தமேற்றுதல் மூலமாகச் சிகிச்சை செய்யப்படும். திரும்பத் திரும்ப இரத்தமேற்றும்போது உங்கள் பிள்ளையின் உடலில் இரும்புச் சத்து, அளவுக்கதிகமாகிவிடும். இது இதயம் அல்லது ஈரலில் சேதத்தை ஏற்படுத்தும். மேலதிகமான இரும்புச் சத்தை மருந்துகளின் மூலமாக அகற்றுவதன் மூலம் இந்த வகையான சேதத்தைத் தடுக்கலாம்.
தடுத்தல்
எந்த வகை இரத்த அழிவுச் சோகையையுமுடையவர்கள் மரபியல் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். பிரசவத்துக்கு முன்னான பரிசோதனைகளும் செய்யப்படும்.
சிக்கல்கள்
இந்த வகையான இரத்த ஒழுங்கின்மையுடைய ஒரு பிள்ளைக்குப் பித்தப்பைக் கற்கள் இருக்கலாம். வேறு பிள்ளைகளுக்கு மந்தமான வளர்ச்சி இருக்கலாம். இந்த ஒழுங்கின்மைக்குச் சிகிச்சையளிக்கப்படாது விடப்படும்போது, பிள்ளைகளுக்கு இதயச் செயலிழப்பு மற்றும் தொற்றுநோய்களால் மரணம் ஏற்படலாம். சிகிச்சையளிக்கப்படும்போது, மிகப்பெரிய சிக்கல்கள் அளவுக்கதிகமான இரும்புச்சத்துடன் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன.
எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்
உங்கள் பிள்ளை இரத்த சோகைக்கான அறிகுறிகளைக் காண்பித்தால், முடிந்தளவு விரைவாக உங்கள் பிள்ளையின் மருத்துவரைச் சந்திக்கவும். உங்களுக்கு இரத்த அழிவுச் சோகைக்கான ஒரு குடும்ப வரலாறு இருந்தால், நீங்கள் ஒரு நோய்க் காவியா என்பதை அறிவதற்காக பரிசோதிக்கப்படவேண்டும்.
முக்கிய குறிப்புகள்
- இரத்த அழிவுச் சோகை என்பது ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதைக் கட்டுப்படுத்தும் மரபணுவிலுள்ள ஒரு குறைபாட்டினால் ஏற்படும் ஒரு இரத்த ஒழுங்கின்மை.
- இது மத்தியதரை, ஆபிரிக்கா, மற்றும் ஆசியா நாட்டின் வம்சாவளியைச் சேர்ந்த பிள்ளைகளை மிகவும் பொதுவாகப் பாதிக்கும், மரபுவழியாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்தச் சோகையின் ஒரு வகை ஆகும்.
- மேஜர் இரத்த அழிவுச் சோகையுள்ள பிள்ளைகள் வெளிறியவர்களாகவும் விரைவான சுவாசமுடையவர்களாகவும் காணப்படுவார்கள்.
- மாதாந்தர இரத்தமேற்றுதல்கள் மூலம் இரத்த அழிவுச் சோகைக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.