டொப்பைரமேட்(Topiramate)

Topiramate [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை டொப்பைரமேட் என்ற மருந்தை உட்கொள்ளவேண்டும். டொப்பைரமேட் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.

உங்கள் பிள்ளை டொப்பைரமேட் என்ற மருந்தை உட்கொள்ளவேண்டும். டொப்பைரமேட் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

டொப்பைரமேட் என்பது ஒரு வலிப்புத் தடுப்பு மருந்து. இது குறிப்பிட்ட சில வகையான வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் உபயோகிக்கப்படுகிறது. இது பெரும்பாலும், கிராண்ட் மல் வலிப்பு என்றும் அழைக்க்கப்படும் டோனிக்-க்ளோனிக் வலிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் உபயோகிக்கப்படுகிறது. இது பார்ஷல் வலிப்புகளுக்குச் சிகிச்சை செய்வதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

டொப்பைரமேட் மருந்து,இதனுடைய வர்த்தகச் சின்னப் பெயர்களுள் ஒன்றான டொபமக்ஸ் என்பதாலும் அழைக்கப்படுவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை நீங்கள் எப்படிக் கொடுக்கவேண்டும்?

டொப்பைரமேட் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • டொப்பைரமேட் மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடியே சரியாக உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும். உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தவன்(ள்) போல தோன்றினாலும் அவ்வாறு செய்யவும்.
  • ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்துக்கு டொப்பைரமேட் மருந்தைக் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளை இந்த மருந்து உட்கொள்வதைத் திடீரென நிறுத்திவிட்டால் அவன்(ள்) சுகவீனமடையக்கூடும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, இந்த மருந்தைக் கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு மருந்தை எப்போது கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள்.
  • டொப்பைரமேட் மாத்திரைகள் முழுமையாக அதிகளவு தண்ணீருடன் சேர்த்து விழுங்கப்படவேண்டும்.
  • டொப்பைரமேட் தூவும் கப்சியூல்கள் முழுமையாக விழுங்கப்படலாம். அல்லது கப்சியூல்கள் கவனமாகத் திறக்கப்பட்டு, அதனுள் இருப்பவை முழுவதும் சிறிதளவு (அப்பிள் சோஸ் போன்ற) மென்மையான உணவில் தூவப்படலாம். மருந்து உணவுடன் கலக்கப்பட்டதும் உடனேயே விழுங்கப்படவேண்டும். மெல்லப்படக்கூடாது.
  • உங்கள் பிள்ளை டொப்பைரமேட் மருந்தை உட்கொள்ளும்போது அதிகளவு தண்ணீர், பழரசம், அல்லது பால் குடிக்கவேண்டும்
  • டொப்பிரமேட் மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் கொடுக்கவும்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

உங்கள் பிள்ளை டொப்பைரமேட் மருந்தின் ஒருவேளை மருந்தைத் தவறவிட்டால்:

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும்.
  • அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு ஒரு சமயத்தில் ஒருவேளை மருந்தை மாத்திரம் கொடுக்கவும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை டொப்பைரமேட் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பெரும்பாலும் உங்கள் பிள்ளை அவற்றிற்காக ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.

உங்கள் பிள்ளையின் உடல் டொப்பைரமேட் மருந்துக்குப் பழக்கப்பட்டுவிட்டால் பின்வரும் பக்க விளைவுகள் மறைந்து விடலாம். பின்வரும் அடையாளங்கள் அல்லது அறிகுறிகள் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

  • மயக்கம் போன்ற உணர்வு அல்லது சோர்வு
  • மனதை ஒருமுகப்படுத்துவதில் கஷ்டம்
  • சிந்திப்பதில் மந்தம் அல்லது குழப்பம்
  • குமட்டல், வயிறுவலி, வயிற்றுப் போக்கு
  • ஞாபக மறதி
  • களைப்பு
  • தலைவலி
  • நடுக்கம் அல்லது கூச்சம்
  • பசியின்மை அல்லது மெலிந்து போதல்

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • வலிப்பு மாதிரியில் ஒரு மாற்றம்
  • முதுகு வலி, சிறுநீரில் இரத்தம் கலந்திருத்தல்
  • பார்ப்பதில் கஷ்டம்
  • பேசுவதற்குக் கஷ்டம்
  • சுவாசிப்பதில் கஷ்டம்
  • தோல் அரிப்பு, தோற்படை
  • உதடுகள் அல்லது நாக்கில் வீக்கம்

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

டொப்பைரமேட் மருந்து உங்கள் பிள்ளைக்கு மயக்கம் போன்ற உணர்வு, சோர்வு, அல்லது வழக்கத்துக்கு மாறாக விழிப்புணர்வுக் குறைவு என்பனவற்றை ஏற்படுத்தும். விசேஷமாக, அவன்(ள்) முதன் முதலில் மருந்தை உட்கொள்ளும்போது அவ்வாறிருக்கும். மருந்து உங்கள் பிள்ளையை எப்படி உணரச் செய்கிறது என்பதில் நீங்கள் நிச்சயமாக இருக்கும்வரை, உங்கள் பிள்ளை, மாடிப்படி ஏறுதல் போன்ற விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய வேலைகளைச் செய்யும்போது கவனமாக அவதானிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு, இந்த மருந்தை அதிகளவு தண்ணீர், பழரசம், அல்லது பாலுடன் சேர்த்துக் கொடுக்கவேண்டியது முக்கியம். அது உங்கள் பிள்ளையின் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும்.

டொப்பைரமேட் மருந்து உங்கள் பிள்ளையின் சிறுநீரகத்தில் கல்சியத்தைப் படியச் செய்யும். இதைக் குறித்து உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.

உங்கள் பிள்ளைக்கு எப்போதாவது ஈரல் அல்லது சிறுநீர்ப் பிரச்சினைகள் இருந்திருந்தால், அதை உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குத் தெரிவிக்கவும். உங்கள் பிள்ளை உட்கொள்ளும் மருந்தின் அளவை மருத்துவர் மாற்றவேண்டியிருக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் கொடுப்பதற்கு முன்னர், மருத்துவரின் மருந்துக் குறிப்பு இல்லாது வாங்கக் கூடிய மருந்துகளாயிருந்தாலும், உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

இந்த மருந்தை, மருந்தாளர் உங்களுக்குக் கொடுக்கும் கொள்கலத்தில் வைத்துக்கொள்ளவும். மருந்தை அறை வெப்பநிலையில் ஒரு உலர்ந்த இடத்தில் வைக்கவும்.

நீங்கள் உபயோகிக்காத டொப்பைரமேட் மருந்தை எப்படி எறியவேண்டும் என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு வைக்கவும்.

உங்கள் பிள்ளை அளவுக்கதிகமாக ஏதாவது மருந்துகளை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வேறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது டொப்பைரமேட் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. டொப்பிரமேட் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: October 27 2009