ஒவ்வாமைகள்

Allergies [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒவ்வாமைகள் என்றால் என்ன?

வைரசுக்கள் மற்றும் பக்டீரியாக்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து நோய் எதிர்ப்புத் தொகுதி எம்மைப் பாதுகாக்கிறது. ஒவ்வாமை என்பது, பெரும்பாலானோருக்கு தீங்கு விளைவிக்காத ஒரு பொருளுக்கு, நோயெதிர்ப்புத் தொகுதி காண்பிக்கும் வலிமையான எதிர் விளைவாகும். இந்தப் பொருள் அலர்ஜன் அல்லது ஒவ்வாமை ஊக்கி என்று அழைக்கப்படும்.

ஒவ்வாமையுள்ள பிள்ளைகளுக்கு, உடலின் நோயெதிர்ப்புத் தொகுதி பலமாக எதிர்த்தாக்குதல் நடத்தி ஒவ்வாமை ஊக்கியை ஆக்கிரமிப்பாளராக நடத்துகிறது. இது வீரியமற்ற அசௌகரியத்திலிருந்து கடும் துன்பத்துக்கான அறிகுறியில் விளைவடைகிறது.

உணவு ஒவ்வாமைகள் உட்பட, ஒவ்வாமைக் குழப்பங்கள் பிள்ளைப் பருவத்தில் சாதாரணமானவை. அநேகமானவர்களுக்கு உணவு சகிப்புத்தன்மையின்மை இருக்கிறது. உணவு சகிப்புத்தன்மையின்மை என்பது உணவினால் தூண்டப்படும் விரும்பத்தகாத ஒரு அறிகுறி. இது நோயெதிர்ப்புத் தொகுதியை உட்படுத்தாது. ஒவ்வாமையுள்ள அநேக பிள்ளைகளுக்கு ஆஸ்துமாவும் இருக்கிறது.

ஒவ்வாமை ஊக்கிகளின் வகைகள்

காற்று வழியே பரவும் சாதாரண ஒவ்வாமை ஊக்கிகள்

பூஞ்சணம், தூசிக் கிருமிகள், மகரந்தம், செல்லப்பிராணிகளின் உரோமம் மற்றும் கரப்பான் பூச்சி விளக்கப்படம்

தூசியிலுள்ள நுண்ணுயிர்கள். இந்த நுண்ணுயிர்கள் உங்கள் வீட்டிலுள்ள வெப்பமான, ஈரலிப்பான, தூசியுள்ள பகுதிகளில் வாழும். அவை இறந்த தோல் உயிரணுக்களை உண்ணும். அவற்றின் கழிவுகள் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவுக்கு மிகப் பெரிய காரணமாகும்.

  • பூக்கள் மற்றும் வேறு செடிகளிலிருந்து மகரந்தம்
  • பூஞ்சனம் (மோல்ட்)
  • செல்லப்பிராணிகளின் செதில்கள் மற்றும் இறந்த தோல் உயிரணுக்கள்
  • கரப்பான் பூச்சிகள்

சாதாரண உணவு ஒவ்வாமை ஊக்கிகள்

முட்டைகள், உலர்பழங்கள், மீன், நண்டு, இறால் மற்றும் பால் போன்றவற்றின் விளக்கப்படம்

மிகவும் சாதாரணமான உணவு ஒவ்வாமை ஊக்கிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • நிலக்கடலை
  • ஹேஸல் நட்ஸ், வால்நட்ஸ்​​, ஆல்மன்ட்ஸ் மற்றும் கஜு போன்ற மரங்களில் விளையும் கொட்டைகள்
  • முட்டைகள்
  • பசுப்பால் தான் மிகவும் பொதுவான உணவு ஒவ்வாமை ஊக்கிகள்.

மீன், வெளியோடுடையவைகள், மெல்லுடலிகள் என்பனவும் மிகவும் பொதுவான ஒவ்வாமை ஊக்கிகளாகும்.

ஒவ்வாமையுள்ள சில சிறுவர்களுக்கு, இந்த வகை உணவுகளில் மிகச் சிறிதளவு கூட அன்னாஃபிலெக்ஸிஸைத் தூண்டக்கூடும். அன்னாஃபிலெக்ஸிஸ்தான் ஒவ்வாமை எதிர்விளைவுகளில் மிகவும் மோசமான வகை. (கீழே பார்க்கவும்). குக்கீஸ், கேக்குகள், கன்டிகள், அல்லது வேறு உணவு போன்ற சாதாரண விருந்து உணவுகளிலும் ஒவ்வாமையூக்கிகள் மறைந்திருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு ஒவ்வாமையுள்ள உணவுகள் எதாவது விருந்தில் வைக்கப்பட்டிருக்கின்றனவா என்று எப்போதும் சமையற்காரர் அல்லது விருந்தளிப்பவரிடம் கேட்கவும்.

வேறு சாதாரண ஒவ்வாமை ஊக்கிகள்

  • பூச்சி கடி
  • மருந்துகள்
  • இரசாயனப் பொருட்கள்

ஒவ்வாமைகளின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

ஒவ்வாமை எதிர்விளைவுகளின் கடுமை, ஒவ்வாமைக்கு ஒவ்வாமை மற்றும் பிள்ளைக்குப் பிள்ளை வேறுபடலாம். நீங்கள் வசிக்கும் இடமும் ஒவ்வாமையின் வகை மற்றும் கடுமையைப் பாதிக்கலாம்.

ஒவ்வாமையின் அறிகுறிகள் வேறுபடும், ஆனால் அவை பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • சுவாசித்தலில் பிரச்சினைகள்
  • கண்களில் எரிச்சல், கண்ணீர் வடிதல், அல்லது அரிப்பு
  • விழிவெண்படல அழற்சி(கண்கள் சிவத்தல், கண்களில் வீக்கம்)
  • இருமல்
  • தோலரிப்பு (மேடாயிருத்தல், சிவந்திருத்தல், அரிப்புடன் வீங்கியிருத்தல்)
  • மூக்கு, வாய், தொண்டை, தோல், அல்லது வேறு ஏதாவது பகுதியில் அரிப்பு
  • மூக்கு ஒழுகுதல்
  • தோற் படைகள்
  • மூச்சுவாங்குதல்
  • முகம் அல்லது தொண்டையைச் சுற்றி வீக்கம்
  • அதிர்ச்சி

காற்றில் மிதக்கும் ஒவ்வாமை ஊக்கிகள்

காற்றில் மிதக்கும் ஒவ்வாமையூக்கிகள், பெரும்பாலும் தும்மல், மூக்கு அல்லது தொண்டை அரிப்பு, மூக்கடைப்பு, கண்கள் சிவத்தல் மற்றும் அரிப்பு, மற்றும் இருமல் என்பனவற்றை ஏற்படுத்துகின்றன. சில பிள்ளைகளுக்கு மூச்சுவாங்குதல் மற்றும் விரைவான சுவாசம் என்பனவும் இருக்கின்றன.

உணவு ஒவ்வாமை ஊக்கிகள் மற்றும் பூச்சிக்கடிகள்

ஒரு உணவு ஒவ்வாமை அல்லது பூச்சிக் கடிக்கு உங்கள் பிள்ளை பிரதிபலிப்பது, அந்த உணவு அல்லது பூச்சியின் உணர்திறனின் அளவில் தங்கியுள்ளது. அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • உணவு விழுங்கப்படும்போது வாய் அல்லது தொண்டையில் அரிப்பு
  • தோலரிப்பு
  • எக்ஸிமா போல தோற்றமளிக்கும் ஒரு தோற்படை
  • மூக்கு ஒழுகுதல், மூக்கரிப்பு
  • சுவாசித்தலில் சிரமம்
  • முகம் அல்லது தொண்டையைச் சுற்றி வீக்கம்
  • அதிர்ச்சிக்குள்ளாகுதல்

காரணங்கள்

தோலின் மூலம் அல்லது சுவாசித்தலினால், உணவு அல்லது ஊசிமருந்து மூலமாக ஒவ்வாமையூக்கிகள் உடலினுள் நுழையலாம்.

உடல் ஒரு ஒவ்வாமை ஊக்கியைக் கண்டுபிடித்தவுடன் இம்யூனொக்ளொபியூலின் E (IgE) என்றழைக்கப்படும் நோயெதிர்ப்புப் பொருளைச் சுரக்குமாறு நோயெதிர்ப்புத் தொகுதிக்கு சமிக்ஞை கொடுக்கிறது. இந்த நோயெதிர்ப்புப் பொருள், உடலிலுள்ள குறிப்பிட்ட உயிரணுக்கள் ஹிஸ்ரமைன்ஸ் என அழைக்கப்படும் இரசாயனப் பொருளை வெளியேற்றச் செய்கிறது. ஹிஸ்ரமைன்கள் ஒவ்வாமையூக்கி அல்லது ஊடுருவும் பொருளை எதிர்ப்பதற்காக இரத்தக்குழாய்களினூடாக நீந்திச் செல்லும்.

உங்கள் பிள்ளையின் ஒவ்வாமை எதிர்விளைவு, உடலின் எந்தப் பகுதி ஒவ்வாமையூக்கியுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. ஒவ்வாமை எதிர்விளைவு, மிகவும் சாதாரணமாக, ஒரு பிள்ளையின் கண்கள், மூக்கு, தொண்டை, நுரையீரல் அல்லது தோல் என்பனவற்றைப் பாதிக்கும்.

கடும் ஒவ்வாமை (அன்னாஃபிலெக்ஸிஸ்)

சில ஒவ்வாமைகள், குறிப்பிட்ட உணவு ஒவ்வாமைகள் மிகவும் கடுமையானதாகவும் உயிரை அச்சுறுத்தக்கூடியதாகவும் இருக்கலாம். ஒரு ஒவ்வாமையூக்கியின் உணர்வுத்திறன் மிகவும் கடுமையானதாகவிருந்தால், அந்த ஒவ்வாமையூக்கியுடன் தொடர்புகொண்ட ஒரு சில செக்கன்டுகளுக்குள் உங்கள் பிள்ளை கடும் ஒவ்வாமையை அனுபவிக்கலாம்.

கடும் ஒவ்வாமை என்பது, ஒவ்வாமையூக்கிக்கு உடல் பிரதிபலிக்கும் விரைவான மற்றும் பலமான எதிர்ப்பாகும். இந்தப் பிரதிபலிப்பு மிகவும் கடுமையானதானால் அது ஆபத்தானதாகவிருக்கலாம். கடும் ஒவ்வாமை இருக்கும்போது பிறபொருள் எதிரிகள் வெளியேற்றப்பட்டால், அவை சுவாசிப்பதில் சிரமம், வீக்கம், அல்லது இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி (அதிர்ச்சி) என்பனவற்றை ஏற்படுத்தலாம்.

எபினெஃப்ரின் என்றழைக்கப்படும் ஒரு மருந்தின் மூலம் அளிக்கப்படும் விரைவான சிகிச்சை, இந்த பிரச்சினைகளை நிறுத்தி உங்கள் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றும். இந்த மருந்து சாதாரணமாக எபி-பென் என அறியப்பட்டுள்ளது. கடும் ஒவ்வாமை ஒரு அவசர மருத்துவ நிலை. உங்கள் பிள்ளை உடனே மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.

ஒவ்வாமைகளுக்கு உங்கள் பிள்ளையின் மருத்துவர் என்ன செய்யலாம்

உங்கள் பிள்ளையின் மருத்துவர் வழக்கமாக உங்கள் பிள்ளைக்கு உடற்பரிசோதனை செய்வார். பின்பு, உடல் நலப் பராமரிபளிப்பவர் உங்கள் பிள்ளையின் ஒவ்வாமை வரலாறு மற்றும் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் பற்றிய விபரம் என்பனவற்றைப் பற்றிக் கேட்பார். அதன் பின்பு உங்கள் பிள்ளை பரிசோதிக்கப்படலாம். பரிசோதனைகள் தோற் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, நுரையீரலில் செயற்பாடு பற்றிய பரிசோதனை, அல்லது உடற்பயிற்சி சகிப்புப் பரிசோதனை என்பனவற்றை உட்படுத்தலாம். பரிசோதனைக் கண்டுபிடிப்புகளிலிருந்து மருத்துவர் நோயைக் கண்டு பிடிப்பார். கண்டு பிடிப்புகளைப் பற்றிக் கலந்து பேசுவதற்காக வேறொரு திகதியில், மருத்துவர் உங்களையும் உங்கள் பிள்ளையையும் சந்திப்பார்.

உங்கள் சந்திப்புத் திட்டத்துக்காகத் தயாராதல்

ஒவ்வாமைப் பரிசோதனைக்காக, குறிப்பிட்ட அளவு நேரத்துக்கு முன்பாக உங்கள் பிள்ளை மருந்துகள் உட்கொள்வதை நிறுத்த வேண்டியிருக்கலாம். இந்த மருந்துகள், அன்ரிஹிஸ்ரமைன்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்க்கான வேறு குளிசைகளையும் உட்படுத்தலாம். சந்திப்புக்கு முன்பாக உங்கள் பிள்ளை மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தவேண்டுமா என உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

ஒவ்வாமையுள்ள உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

உங்கள் பிள்ளையின் மருந்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் உங்கள் பிள்ளையின் ஒவ்வாமைக்குச் சிகிச்சை செய்யவும். உங்கள் பிள்ளைக்கு தோல் அரிப்பு இருந்தால், கலமைன் லோஷன் அல்லது குளிர் ஒத்தனம் கொடுத்தல் வலி மற்றும் உறுத்தலைத் தணிக்கக்கூடும். (பெனட்றில் அல்லது குளொர்ட்றிப்போலன் போன்ற) அன்ரிஹிஸ்ரமைன்களும் வலி அல்லது அரிப்பைத் தணிக்கக்கூடும். இந்த மருந்துகள் உங்கள் பிள்ளையை நித்திரை மயக்கமடையச் செய்யலாம்.

உங்கள் பிள்ளைக்கு ஒரு கடுமையான ஒவ்வாமை இருந்தால், ஒரு எப்பினெஃப்ரின் சுயமாக ஊசி மருந்து குத்தும் பேனாவை (எபி-பென்) உங்கள் மருத்துவர் மருந்துக் குறிப்பெழுதித் தரக்கூடும். இந்தப் பேனாவை எப்படி மற்றும் எப்போது உபயோகிக்கவேண்டும் என உங்கள் மருத்துவர் காட்டித் தருவார். நீங்கள் அல்லது உங்கள் பிள்ளை இதில் ஒன்றை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

முடிந்தளவு அதிகமாக, உங்கள் பிள்ளை ஒவ்வாமையூக்கிகளுடன் தொடர்பு கொள்வதைக் குறைக்கவும். நீங்கள் எடுக்கும் படிகள், உங்கள் பிள்ளை எவற்றிற்கெல்லாம ஒவ்வாமை உடையவளாயிருக்கிறாள் என்பதில் தங்கியுள்ளது. உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் இதைக் குறித்துக் கலந்து பேசவும்.

காற்றில் மிதக்கும் ஒவ்வாமையூக்கிகள்

காற்றில் மிதக்கும் ஒவ்வாமையூக்கிகளுடன் உங்கள் பிள்ளையின் தொடர்பைக் குறைத்துக் கொள்வதற்கான சில தெரிவுகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டாம். அல்லது உங்களுக்கு ஒரு செல்லப் பிராணியிருந்தால், அதைப் பிள்ளையின் அறைக்கு வெளியே வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை ஒழுங்காகக் குளிப்பாட்டவும்.
  • கம்பளங்கள் மற்றும் தரை விரிப்புகளை வீட்டிலிருந்து, விசேஷமாக உங்கள் பிள்ளையின் படுக்கையறையிலிருந்து வெளியேற்றவும். கம்பளங்களைப் போல, கடும் தரை மேற்பரப்புகள் தூசியை அதிகளவில் சேமித்துவைப்பதில்லை.
  • வீட்டில் ஈரப்பதனிலையைக் குறைக்கவும்.
  • படுக்கை விரிப்புகளை வெந்நீரில் கழுவவும் இது தூசியிலுள்ள நுண்ணுயிர்களைக் குறைக்க உதவும்.
  • உச்ச நிலை பருவகாலங்களில் ஜன்னல்களை மூடி வைத்திருப்பதன்மூலம் வெளியிலிருந்து மகரந்தப் பொடிகள் வீட்டுக்குள் வருவதைக் கட்டும் படுத்தவும். சிறிய துகள்களை வடிகட்டக்கூடிய வடிகட்டியுள்ள ஏர்கண்டிஷனரை உபயோகிக்கவும்.
  • தூசியைச் சேமித்து வைக்கக்கூடிய பொருட்களை வீட்டிலிருந்து அகற்றிவிடவும். இவை பாரமான திரைகள் அல்லது பழைய, அசுத்தமான தளபாடங்கள் என்பனவற்றை உட்படுத்தும்.
  • உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யவும்.
  • உங்கள் பிள்ளை தூசியிலுள்ள நுண்ணுயிர்களுக்கு ஒவ்வாமையைக் காண்பித்தால் தலையணைகள் மற்றும் படுக்கைகளை மூடி சீல்செய்யவும்.
  • குளியலறைகள் மற்றும் வேறு பூஞ்சனம் பிடிக்கக்கூடிய பகுதிகளைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்துக் கொள்ளவும்.

உணவு ஒவ்வாமைகள்

உங்கள் பிள்ளைக்கு உணவு ஒவ்வாமை இருந்தால், அவள் தவிர்க்கவேண்டிய உணவுகளைப்பற்றி அறிந்திருக்குமாறு அவளுக்குக் கற்றுக்கொடுக்கவும். நீங்களும் உங்கள் பிள்ளையும் லேபிள்களை வாசிக்கவும் பரிமாறப்பட்ட உணவுகளைப்பற்றி கேள்விகள் கேட்பதற்கும் கற்றுக் கொள்ளவும். உங்கள் பிள்ளையின் ஒவ்வாமை மற்றும் உங்கள் பிள்ளையின் எதாவது உணவுக் கட்டுப்பாடுகள் பற்றி எல்லாப் பரமாரிப்பளிப்பவர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது முக்கியம்.

தடுப்புமுறை

உங்கள் பிள்ளைக்கு ஒவ்வாமையுள்ள எல்லா உணவுகளையும் அவள் தவிர்க்க வேண்டும். சில பிள்ளைகளுக்கு விரைவில் ஒவ்வாமை நிவாரணமடைந்து விடலாம். மற்றவர்களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களது ஒவ்வாமையூக்கிகளைத் தவிர்க்கவேண்டும். ஒரு உணவு ஒவ்வாமையூக்கியைத் தவிர்ப்பது கடினமாக இருக்கலாம். அநேக பிள்ளைகள் அவர்களுக்கு அறியாமலேயே ஒவ்வாமையுள்ள உணவுகளைச் சாப்பிட்டுவிடுகிறார்கள். உங்கள் பிள்ளை மற்றும் அவனைச் சுற்றியிருப்பவர்களும் ஒவ்வாமை பற்றி அறிந்திருக்கவேண்டியது முக்கியம். அவர்களுக்கு எதிர்விளைவைக் கொண்டுவரக்கூடிய உணவுகளுக்கு அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பிள்ளைகளுக்கு வாசிக்கக்கூடிய வயது வரும்போது, உணவுப் பக்கேற்றுகளிலுள்ள லேபிளை வாசிக்க வேண்டும். உணவின் ஒவ்வாமை ஊக்கிகளை கண்டுபிடிப்பதற்காக, அந்த உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலைப் பார்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்.

குழந்தைகளைப்பற்றிய ஒரு வார்த்தை

பெற்றோருக்கு அல்லது சகோதரர்களுக்கு எக்ஸிமா மற்றும் ஒவ்வாமைகள் இருப்பதாகக் குடும்ப வரலாற்றில் இருந்தால், உங்கள் குடும்ப மருத்துவருடன் தாய்ப்பால் கொடுப்பதைப்பற்றிக் கலந்து பேசவும்.

மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்

உங்கள் பிள்ளைக்குப் பின்வருவனவற்றுள் ஏதாவது இருந்தா​ல், உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அவனைக் கொண்டு செல்லவும்:

  • சுவாசிப்பதில் கஷ்டம்
  • வீக்கம், முக்கியமாக முகம், தொண்டை, உதடுகள், மற்றும் நாக்கு
  • இரத்த அழுத்தத்தில் விரைவான வீழ்ச்சி
  • மோசமான தலைச் சுற்று
  • நினைவிழத்தல்
  • தோலரிப்பு
  • தொண்டையில் இறுக்கம்
  • குரல் அடைப்பு
  • லேசான தலைச் சுற்று
  • எப்பினெஃபிரின் பெற்றுக்கொள்ளப்பட்டது, எப்பினெஃபிரின் உட்கொள்ளப்பட்டு, சில மணி நேரங்களுக்குப் பின்னர் அறிகுறிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்பதால்.

முக்கிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளைக்கு கடுமையான ஒவ்வாமை இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பதற்கு அவன் பரிசோதனைகளுக்குட்பட வேண்டும்.
  • உங்கள் பிள்ளை ஒவ்வாமையூக்கிகளுடன் தொடர்பு கொள்வதைக் குறைப்பதற்காக, வீட்டைச் செல்லப்பிராணிகளற்றதாக வைத்திருக்கவும் மற்றும் கம்பளங்களை அகற்றி விடவும்.
  • உங்கள் பிள்ளைக்குக் கடுமையான ஒவ்வாமை இருந்தால், ஆசிரியர்கள் மற்றும் வேறு பராமரிப்பாளர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு நிச்சயமாயிருங்கள்.
  • அவசர மருத்துவ நிலைமைக்காக, எப்போதும் எபி-பென்னை உங்கள் பிள்ளையிடம் அல்லது பிள்ளைக்கு அருகில் வைத்திருக்கவும்.
  • வீரியம் குறைந்த ஒவ்வாமையின் அறிகுறிகளுக்கு, மருந்துக் குறிப்பில்லாத மருந்துகள் கொடுக்கப்படலாம். ஆனால் அவை உங்கள் பிள்ளைக்கு நித்திரை மயக்கத்தைக் கொடுக்கலாம்.
Last updated: مارچ 05 2010